மதுரை நம்பி எழுதிய ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ முதல் பாகம் 11வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு -மலேசிய விருது பெற்றது.
சிறைத் துறையில் 36 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெற்ற தோழர் மதுரை நம்பி அவர்கள் சிறை நடைமுறைகளின் அனைத்தையும், சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வாசகர்களுக்கும் எளியமையாக புரியவைப்பதே இவரது ‘சிறை எழுத்து’ இலக்கிய வகைமைக்கு ஆதாரமாக உள்ளது.
இந்த நூலுக்கு தோழர் ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள் நல்லதொரு அணிந்துரையும். தோழர்
ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் உணர்ச்சிகரமான வாழ்த்துரையும், நூலாசிரியர் மதுரை நம்பி தன் சிறை- கட்சி அனுபவங்களை உணர்வுபூர்வமாக. என்னுரையும் வழங்கி… நம்மை ஆவலுடன் நூலுக்குள் இழுத்துச் செல்கின்றனர்.
பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்’ நூலைத்தொடர்ந்து.. இந்த நூலின் முதல் கட்டுரை ஆர்யா என்கிற பாஷயம் அவர்கள் நள்ளிரவில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திரக் கொடியேற்றிய சாகசத்துடன் கூடவே… அவர் அமீர்ஹைதர்கான், சுபாஷ்சந்திரபோஸ், புதுவை வ. சுப்பையா ஆகியோருடன் தொடர்பு கொண்டிருந்ததும், அவர் ஒரு கம்யூனிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டதையும், அவரது ஓவிய- சிற்பக்கலை திறமையையும் நிறுவுகிறது. பகத்சிங் தோழர் மகாவீர் சிங்கிற்காக மேஜர் வின்சை தனது செருப்பால், தானே வலுவாகத்தாக்கி, அதன் விளைவாக நிர்வாணமாக ரத்த வெள்ளத்தில் மிதக்கவிடப்பட்டதையும் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்துகிறார் ஆசிரியர். அமீர்ஹைதர்கான் அவர்களின் வரலாறும் முக்கிய அம்சங்களுடன் சுருக்கமாக எடுத்துரைக்கப்படுகிறது. தோழர் வருகைக்குப்பின் தென்னிந்தியாவில் தோழர்கள் பி சீனிவாசராவ், இ.எம்.எஸ்., சுந்தரய்யா போன்றோரின் பரிமாணத்தை இந்நூல் விளக்குகிறது.
1941 வேலூர் மத்திய சிறையில் ‘ஏ’ கிளாஸ் சொகுசான வசதிகளை எல்லாம் உதறிவிட்டு ஏ.கே. கோபாலன் உட்பட ஐந்து பேர் எப்படி ஓர் மழை இரவில் சிறைச்சுவரை கடப்பாரையால் துவாரமிட்டு தப்பித்தனர் என்பதை காட்சிபூர்வமாக விவரிக்கிறார் மதுரை நம்பி அவர்கள். இந்தக் காலகட்டத்தில் திருவாளர்கள் நீலம் சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, காமராஜர், நிருபன் சக்கரவர்த்தி, வி.எஸ்.அச்சுதானந்தன், பசும்பொன் முத்துராமலிங்கம், என் சங்கரய்யா, வி.பி .சிந்தன், மாயாண்டி பாரதி, இசைக்கலைஞர் குருசாமி (கே.பி. ஜானகி அம்மாளின் கணவர்) போன்ற புகழ்பெற்ற காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் கட்சியின் விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரே பிளாக்கில் இருந்தது உட்பட பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளை இச்சிறுநூல் விரிவாகவே நமக்கு அறிய தருகிறது.
சிறைகளில் பொதுவாகவே கம்யூனிஸ்டுகள் மேற்கொள்ளும் நடைமுறைகள், வாழ்க்கை முறை, மேற்கொள்ளும் தத்துவார்த்த வகுப்புகள், நூல் வாசிப்பு, கம்யூன் முறையில் தங்களுக்குள் அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல், தேவையான போது எதிர் தாக்குதலையும் வலுவாக நடத்துவது, உயிருக்கு அஞ்சாமல் சிறைக்குள்ளும் தியாகம் புரிவது, சிறையில் மனித உரிமைகள் பாதுகாப்புக்காக மேற்கொண்ட போராட்டங்கள்…சக சிறைவாசிகளுடன் தோழமை உறவு… சிறை அதிகாரிகளையும் மனிதர்களாக மாற்ற முயற்சி மற்றும் கல்நெஞ்சக்காரர்களையும் கலங்கடிப்பது… என்று பல்வேறு சாகச நிகழ்வுகளின் தியாக உணர்வையும்…மன உறுதியுடனும், வீரத்துடனும் எதிர்கொண்ட அனைத்துமே..ஒவ்வொரு கட்டுரைகளிலும்… மொத்தம் 11 கட்டுரைகளிலும் நம் கண் முன்னே பார்ப்பதுபோல… ஆசிரியரே நேரே அருகில் இருந்து கவனித்ததுபோன்ற வர்ணனையோடு விளக்குவது… ஆசிரியரின் தனித்திறமையை காட்டுகிறது!
ஏ.கே.ஜி.காலால் கன்னத்தில் அறைவது, காங்கிரஸ்காரர்களாய் சிறைக்குள் வந்த நபர்கள் கம்யூனிஸ்டுகளாக மாறி வெளியேறுவது, தனித்தனி அறையில் சிறையில் இருந்தாலும் எப்படி லாவகமாக கட்சிக் கிளைபோல செயல்படுகின்றனர் என்றெல்லாம் நூல் கம்யூனிஸ்டுகளின் இலக்கணங்களை எடுத்து இயம்புகிறது. .1945 -46 கோவை மத்திய சிறையில்… சின்னியம்பாளையத்தில் நான்கு தோழர்கள் தூக்கிலிடப்பட்ட வீர வரலாறு நம்மை மனம் கனக்கச் செய்கிறது. ரங்க விலாஸ் பஞ்சு மில்லில் பெண் தொழிலாளர்களை அணிதிரட்டிய ராஜி என்ற பெண் தொழிற்சங்கத் தலைவர் முதலாளிகளின் அடியாள் கும்பலால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார். ரவுடி மேஸ்திரி பொன்னன் குடிபோதையில் தகராறு செய்யும்போது தோழர்களால் திருப்பித் தாக்கப்பட்டு மருத்துவமனையில் இறந்து போகிறான். அவனது வாக்குமூலத்தின் காரணமாக ராமையன், ரங்கண்ணன், வெங்கடாசலம், சின்னையன் ஆகிய நான்கு பேர் 8.1.46 அன்று தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படுகிறார்கள் (வாக்குமூலத்தில் சிவராமன் பெயர் உள்ளது. தூக்குத் தண்டனை பெற்றோரில் அவர் பெயருக்கு பதில் சின்னையன் பெயர் உள்ளது).
1946இல் திருச்சி பொன்மலை பகுதியில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ரயில்வே தொழிலாளர்கள் போராடியபோது அவர்கள் மீது நடத்தப்பட்ட போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஆறு தொழிலாளர்கள் களப்பலி ஆகிறார்கள். தோழர் ஏ.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடந்த போராட்டத்தில் கைது செய்யப்படுகிறார். இவரை விடுவிக்கக்கோரி தோல் பதனிடும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தில் பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
சிறையில் கைக்குழந்தைகள் இறந்துபோவது, அதிலும் குறிப்பாக அந்தோனியம்மாள் என்ற பெண் தன் நான்கு வயதுப் பிள்ளையை பிரிந்து மூன்று மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு வெளிவந்த பின் ஆவலோடு ஓடி வந்து ”அம்மா” என்றுகட்டிப்பிடித்த குழந்தையை வாரி அணைத்த போது.. மூன்று மாதம் உயிருடன் இருந்த அந்த குழந்தை இறந்து போவது. நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது. இப்படி தியாகங்களின் வரலாறாக இந்த நூல் விரிகிறது..
சைதாப்பேட்டை சிறைச்சாலையில் பாப்பா (உமாநாத்) அவர்கள் அவருடைய அம்மா லஷ்மி அம்மாள் அவர்கள் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறப்பதும், மற்றொரு அறையில் உள்ள பாப்பா அவர்கள் போலீசின் நிபந்தனைகளை ஏற்காததால் இறந்த தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் மன உறுதியோடு இருப்பதையும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சம்பவமாக கண்ணீர்காவியமாக இருக்கிறது.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையாக வேலூர் மத்திய சிறைச்சாலை இருப்பது பற்றி விரிவாக நூல் விளக்குகிறது. தோழர்கள் எம் .ஆர். வெங்கட்ராமன், நம்பியார், மாயாண்டி பாரதி,
ப.ஜீவானந்தம், கே.டி.கே. தங்கமணி,
வி.பி. சிந்தன், ஏ.எஸ்.கே.கே.ரமணி, மருத்துவர் அண்ணாஜி, மோகன் குமாரமங்கலம், சி.ஏ.பாலன், வி.கே.கோதண்டராமன், போலீஸ் பாலு என்று 200க்கும் மேற்பட்ட தோழர்களின் சிறை வாழ்க்கை தியாகங்களை பற்றி அறிய… நம்மையும் சிறை வாழ்க்கை பற்றி புரிந்துகொள்ள- உள்வாங்க இந்த நூல் உதவும்.
சிறையில் நடைபெறும் துப்பாக்கிச்சூடுகள் அனைத்திலுமே கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் கம்யூனிஸ்டுகளாக இருப்பதைப் பார்க்கிறோம் .தோழர்கள் ராகவய்யா, உத்ராபதி கடலூர் மத்திய சிறையில் தங்கள் தலைவர்களை காப்பாற்றிட குறுக்கே விழுந்து இறந்த காட்சி நம் இதயத்தை குலுக்குகிறது. 1950 பிப்ரவரி 11 சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 22 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டது கொடுமை. சில பேரின் உடலில் 50க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் (ஓர் உடலில்) இருந்தன என்பது சுட்டவனின் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு வெறித்தனத்தை உணர்த்துகிறது. இந்த செய்தியை அன்றைய தினம் வெளியிட்ட ஒரே செய்திப் பத்திரிக்கை, தந்தை பெரியாரின் ‘விடுதலை’ மட்டும்தான் என்றும் இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது.
1951 பிப்ரவரி 22 மதுரை மத்திய சிறையில் போலீஸாக பணியாற்றிய பால்ச்சாமி என்கிற பாலு தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக இருந்ததற்காக தூக்கிலிடப்பட்டார். தன்னைப் பார்க்க வந்த கட்சியின் முக்கிய நிர்வாகியிடம்..” தோழர்.. கட்சியில நான் சேரணும்னு கேட்டப்ப. கட்சிக்கு உயிரக் கொடுக்கத் தயாராக இருக்கறவங்களத்தான் சேப்போம்ன்ங்க.. இப்ப என்னை கட்சியில சேத்துக்குவீங்களா” என பாலு தூக்குத் தண்டனைக்கு முதல் நாள் கேட்பது நம்மை அதிர வைக்கிறது…இப்படி ஏராளமான தியாகிகளின்- தியாகங்களின் தொகுப்பே இந்த நூல்.
1983இல் மதுரை மத்திய சிறையில் சிபிஎம் கிளை இயங்கியதாக பதிவு செய்கிறார் மதுரை நம்பி. தோழரிடம் கே.பி .ஜானகி அம்மாள் அவர்கள் மதுரை பாலுவின் கதையைக் குறிப்பிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியதாக பதிவு செய்கிறார். எல்லா தியாகிகளின் பெயர்களையும் அவர்களின் தியாகங்களையும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் தெரிந்துகொள்ள தோழர்கள் அவசியம் நூலை வாங்கிப் படியுங்கள். கம்யூனிஸ்டுகள் என்ன செய்தார்கள் என்று போதையில் உளறுபவர்களை திருத்த முடியாது..ஆனால், அப்பாவிகளாக அவரை தொடர்வோருக்காவது இந்த நூலை வாங்கிக் கொடுங்கள். வாலிபர் சங்கம் மதுரை சிறையில் நடத்திய 1991 போராட்டத்தின் மகத்துவத்துடன் இந்த நூல் முடிகிறது. இன்னும் நிறைய நூல்கள் வெளிவரட்டும்! l
previous post
