உலக அளவில் குழந்தைகளின் வாசிப்பு அதிர்வெண் பல மடங்கு குறைந்து விட்டதை சமீபத்திய
தி கார்டியன் செய்தித்தாள் வெளியிட்ட புள்ளிவிவரம் காட்டுகிறது.. புதிய வகை உணவு அருந்துவதிலும் புதிய இடங்களை நோக்கி பயணிப்பதிலும் புதிய செயலிகளை தங்களுடைய கைபேசிகளில் பயன்படுத்துவதில் இருக்கும் மகிழ்ச்சி, உற்சாகம் வாசிப்பில் இன்றைய குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை என்று அந்த ஆய்வு சொல்கிறது.. இது மிகவும் கவலை தரும் சூழல் ஆகும்.
மேலும் சில ஆய்வுகள் இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டுகின்றன. ஏதாவது ஒரு நுழைவுத் தேர்வு அல்லது போட்டி விஷயங்கள் தவிர வாசிப்பு என்பது ஒரு பாரமாக கருதப்படுகிறது. சில பிராந்தியங்களில் இந்த வாசிப்பு விகிதம் சற்றே அதிகமாக இருந்தாலும் பொதுவாக வாசிப்பு ஆர்வம் என்பது குழந்தைகளிடையே ஏற்படுத்த வேண்டிய அவசியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
வாசிப்பை ரசிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. சில அறிக்கைகள் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் மிகக் குறைவான அளவை இந்த வாசிப்பு இன்று குழந்தைகளிடையே அடைந்துவிட்டதாக சுட்டிக்காட்டுகிறது… புத்தக வாசிப்பு என்பது தேர்வுகளுக்கான தயாரிப்பு என்பதை தாண்டி ரசிப்புத்தன்மை..படைப்பாக்கம் போன்ற பல்வேறு தரவுகளை உள்ளடக்கியது ஆகும். பள்ளி போக ஓய்வு நேரத்தில் தினமும் புத்தகம் படிக்கும் குழந்தைகளின் சதவிகிதம் மிகக் குறைந்த அளவை இன்று எட்டியுள்ளது உலக அளவில் இதுதான் உண்மை
த கார்டியன் அறிக்கை… அதிகரித்திருக்கும் திரை நேரம் பள்ளிப் பாடங்களில் இருந்து வருகின்ற மன அழுத்தம் மற்றும் சுவாரசியமான வாசிப்பை பெறுவதற்கான பெற்றோர்களின் அணுகுமுறை இல்லாமை ஆகியவற்றை காரணிகளாகக் காட்டுகிறது.. மீண்டும் இந்த விஷயத்தில் சீனாதான் வழிகாட்டுகிறது
சீன நாட்டில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் மத்தியில் புத்தக வாசிப்பு விகிதம் உலகிலேயே அதிகமாக உள்ளது. என்று கார்டியன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது மூன்றாம் உலக நாடுகளில் உள்ள குழந்தைகளில் கணிசமான சதவீதத்தினர் தொடக்கப்பள்ளியின் முடிவில் வாசிப்பு புரிதல்கூட சிரமப்படும் அளவிற்கு கல்வியின் தரம் குறைந்து விட்டது.
பெற்றோர்களைப் பொருத்த வரையில் அவர்கள் குழந்தைகளோடு செலவிடும் நேரம் மிகக் குறைவு. கார்டியன் அறிக்கை பள்ளிக்கூடங்கள்தான் வாசிப்பு குறித்த செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று கோருகிறது. புத்தக வாசிப்பை வளர்ப்பதற்கு வயதுக்கு ஏற்ற பல்வேறு வகையான சுவாரசியமான புத்தகங்கள் கொண்டுவரப்படுவது அவசியம். இந்த அறிக்கை சுட்டிக் காட்டும் இன்னொரு முக்கிய அம்சம் பன்முகத்தன்மை கொண்டு இருக்கக்கூடிய உள்ளடக்கம் என்கிற தலைப்பில் குழந்தைகள் தங்கள் சொந்த அனுபவங்களோடு தொடர்புகொள்ளத்தக்க அவர்களது உற்சாக மனநிலையை பிரதிபலிக்கும் கதைகள் அதிகம் வர வேண்டியிருக்கிறது. நவீன காலத்துக்கு ஏற்ற கதாபாத்திரங்கள், கருப்பொருட்கள் தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் குறித்து கவனம் செலுத்தாத ஒரு சமூகம் பெரியவர்களுக்கான வாசிப்பை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதில் எந்த நியாயமும் இல்லை. அந்த முறையில் தமிழ்நாடு அரசு பள்ளிதோறும் வாசிப்பு முகாம்கள் என்கிற தன் புதிய திட்டத்தை செயல்படுத்துவதை நாம் பெருமையோடு வரவேற்கிறோம். கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் புத்தகங்கள் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று ஒரு புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவோ அத்தனை புத்தகங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கை கோருகிறது.கட்டாயமில்லை, ஆனால் கொடுங்கள் என்கிறார்கள்.
தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான பதிப்பாளர்கள் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த வாசிப்பு மாணவர் இயக்கத்திற்கான புத்தகங்களை அவர்களிடம் இருந்து புதிதாக வாங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். என்பதே நம்முடைய வேண்டுகோள். இத்தகைய வாசிப்புக்காகவே தனியாக இந்த இந்த மாதிரியான புத்தகம் தான் தேவை என்று அறிவித்தால்கூட தேவைகேற்ப புத்தகங்களை தயாரித்து வழங்கவும் நம்முடைய பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களால் முடியும்.
தமிழகத்தின் தற்போதைய அரசு புத்தக வாசிப்பை மக்களிடையே கொண்டு செல்வதற்காக எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. அவற்றோடு கண்டிப்பாக நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை என்கிற அந்தப் பிடிவாதத்தோடு செயல்படும் இந்த அரசு ஒன்றிய அரசாங்கத்தின் நிதி அவமதிப்புச் சுமைகளையும் கடந்து… இது போன்ற சமூக அக்கறை கொண்ட ஆழமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை வரவேற்கும் அதே சமயம் சிறார்பதிப்பாளர்களையும்..எழுத்தாளர்களையும் கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம் மற்றும் விண்ணப்பம்.
வாசிக்கும் நாளைய சமூகத்தை இன்றைய பள்ளிகளில் விதைப்போம்.
– ஆசிரியர் குழு. l
