தற்போதைய மனித வாழ்க்கை வரலாற்றுக் கட்டமைப்புகளினாலும் கற்பிதங்களாலும் பிறழ்ந்து கிடக்கிறது என்ற எண்ணம் கல்லூரி வந்த நாட்களிலிருந்து தோன்ற ஆரம்பித்தது. குறிப்பாக பெண்கள் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற எல்லா விஷயங்களும் என்னை முதலில் பெரும் குழப்ப நிலைக்குள் தள்ளின. கேள்விகள் நிறைய எழுந்தன. பதில்களுக்கான தேடலில் பல்வேறு புதிய புரிதல்கள் கிடைக்கப்பெற்றன. நீண்ட நெடுங்காலமாக என் நெஞ்சின் ஆழத்தில் எனக்கே தெரியாமல் புதைந்து கிடந்த பல கேள்விகளுக்கு பதில் அளித்தது ச. தமிழ்ச்செல்வன் அவர்களின் ‘பெண்மை என்றொரு கற்பிதம்’ நூல்.
உயிரியல்ரீதியாக, சமூகவியல்ரீதியாக, உடலியல்ரீதியாக, பண்பாட்டுரீதியாக, வரலாற்றுரீதியாக பெண் மீது திணிக்கப்பட்டிருக்கின்ற கற்பிதங்களை கட்டுடைக்கிறது இந்நூல். வெறுமனே எதுவும் சொல்லிவிடாமல் பொது அறிவுடன் எல்லாவற்றையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்நூலில் மொத்தம் பதிமூன்று கட்டுரைகள் ( ‘செம்மலர்’ இலக்கிய இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகள்) இருக்கின்றன. கணக்கில் கேள்விகளுக்கான பதில் கேள்விக்குள்ளேயேதான் இருக்கும் என்பர். அதுபோலத்தான் கற்பிதங்களுக்கான கட்டுடைப்புகளும் கற்பிதங்களை மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்குவதாலும் வாசிப்பதாலும் விவாதிப்பதாலும் கிடைக்கின்றன.
நூலாசிரியர் பல இடங்களில் நகைச்சுவை பாணியில் நெத்திப் பொட்டில் அறைந்தார்போல் எழுதியிருப்பது சிரிப்பினூடே சிந்திக்கவும் வைக்கிறது. வாசிப்பு அனுபவம் இல்லாதவர்கள் இந்நூலை படித்தாலும் புரிந்துகொள்ளும் அளவிற்கு விளக்கமாகவே எல்லாவற்றையும் எழுதி இருக்கிறார். ‘ஆ’ண் நெடில் ‘பெ’ண் குறில் என்ற சினிமா வசனங்களை கேட்டு சிரித்ததுண்டு. ‘ஆளுமைத் தன்மை உடையவன், ஆள்கிறவன் என்கிற பொருளில்தான் ஆண்மை அவனுக்கு உரியதாயிற்று. (பெடை, பெட்டை, பேணுகை, பாதுகாப்பு, அன்புபோன்ற பொருள் தரும்) பெட்பு என்ற சொல்லினடியாக தோன்றிய பெண்மை அவளுக்குரியதாயிற்று. சொற்களே இவ்வித பாலியல் பாகுபாட்டுடன் இலங்குகின்ற சூழலில் நாம் வாழ்கிறோம் என்னும் வரிகளைப் படிக்கையில் மிகவும் கவலையாகவே இருந்தது.
இவர்களுக்கெல்லாம் என்னதான் பிரச்சனை என்று சிந்திக்கையில் அதற்கும் விடை இருக்கிறது நூலில். என்ன? ஆதிக்க மனநிலை தான். சாதி, மதம், நிறம், வர்க்கம், இனம், நாடு என்று எதில் வேறுபட்டு அடித்துக்கொண்டாலும் ‘பெண்’ என்கிற தலைப்பின்கீழ் அனைவரும் ஒன்றுகூடி கும்மியடித்துவிடுகிறார்கள். உச்சந்தலை முடி முதல் உள்ளங்கால் நகம் வரை ஒரு பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இவர்களின் வசதிக்கேற்ப வகுத்து அதற்கு ‘பெண்மை’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். ஓட்டைப் பிளந்து வெளியே வந்ததும் கூண்டுக்குள் தனது வாழ்வைத் தொடங்கிய பறவைக்கு பெருவனத்தில் விட்ட போது பறக்கத் தெரியவில்லை என்பதுபோல ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கட்டமைப்புகளுக்குள் மூழ்கிக் கிடக்கும் பல பெண்களுக்கு தாங்கள் அனுபவிக்கும் எல்லாம் வரலாற்று மோசடி என்பது புரியவில்லை. இந்நூலில் ஆசிரியர் கூறியிருப்பதைப் போலவே பெண்மை என்ற கற்பிதத்தை பெண்கள் பெருமிதத்துடன் பறைசாற்றுகின்றனர்.
‘இயற்கை’ என்பது இருக்கிறது. ஆனால் அதன் ‘படைப்பு’ என்று எதுவும் இல்லை. பாலின வேறுபாடு இருக்கிறது. அதனால் எந்த வேறுபாடும் இல்லை என்பதை ஆழமாக புரிய வைக்கிறார் ஆசிரியர். படிக்கையில் சில இடங்களில் முரண்பட நேர்ந்தது. மறுவாசிப்பு செய்ய செய்ய தெளிவான புரிதல்கள் கிடைக்கின்றன. சங்கப் பாடல்களை வியந்து வியந்து பேசியவர்களையே அதிகம் பார்த்திருக்கிறேன். ஆனால் ஆசிரியர் பெண்ணிய நோக்கில் சங்கப் பாடல்களை அணுகி எழுதியுள்ள கருத்துகளை எவராலும் மறுக்க முடியாது. எத்தனை அழகியலோடு நாசூக்காக பெண்மை என்றொரு கற்பிதம் வாழைப்பழத்தில் ஊசி இறக்குவது போன்று திணிக்கப்பட்டிருக்கிறது?
‘வரலாற்றைப் போதிக்கும்போது அதில் நிகழ்ந்துள்ள பெண் புறக்கணிப்பு பற்றிச் சொல்லியாக வேண்டும். இலக்கியம் போதிக்கும் போது அது பெண்ணியப் பார்வையோடு மறுவாசிப்புச் செய்யப்பட வேண்டும் அறிவியலில் மறைந்துள்ள ஆணாதிக்கப் பார்வையை அடையாளம் காட்ட வேண்டும். இதுபோன்ற வேலைகளைக் கையில் எடுக்கும் கல்விதான் நமக்குத் தேவை’ என்கிறார் ஆசிரியர். இது காறும் அது போன்றொரு கல்வி நமக்கு கற்பிக்கப்படவில்லை. இனிமேலும் ‘இல்லை’ என்று சொல்லும் நிலை இருந்துவிடக்கூடாது என்பது எனது பேராசை.
‘பெண்மை’ கற்பிதத்திற்குள்ளாகும் பெண்கள், எப்படி தங்களைப்போன்றே அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றனர்? அது ஏன்? எப்படி? என்பதை ஆசிரியர் தெளிவாக விவரித்திருக்கிறார். மார்க்சியப் பார்வை, பொதுப் பார்வை, வாசகப் பார்வை, பெண்ணியப் பார்வைபோன்ற பார்வைகளில் நின்று எழுதியிருக்கிறார். பெண்மை என்பது எப்படி ஒரு கற்பிதமோ அதேபோன்றுதான் ஆண்மை என்பதையும் முன்மொழிகிறார். வரலாற்று நிகழ்வுகளான தோள் சீலை போராட்டம், 1949 முதல் 1951 வரையிலும் நீடித்த தெலுங்கானா போராட்டம், அறிவொளி இயக்கம் போன்றவற்றை மேற்கோடிட்டு எழுதி இருக்கிறார். பெண் கவிஞர்களின் கவிதைகளில் வெளிப்படும் பெண்ணின் உண்மையான உணர்வுகளை திரையிட்டு பெண்களின் மீதான ஆண்களின் எழுத்துகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்.
‘அன்பின் பேராலும் பாசத்தின் பேராலும் தான் ஆணாதிக்கம் நம் சமூகத்தில் அமலாகிக் கொண்டிருக்கிறது’ என்று உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார். ‘எனக்கு எதிராக போராடு என்று என் மனைவியை நான் தூண்டவில்லையானால் நான் ஓர் ஆணாதிக்கவாதி தான். எனக்கு எதிராக போராட என் மகளை நான் தயார் செய்யவில்லையானால் நான்தான் குற்றவாளி’ என்று ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடப் பெண்களை ஆண்கள்தான் தயார் செய்ய வேண்டுமென்கிறார். இதை எல்லாம் படித்த பின், இல்லாத ‘பெண்மை’ இத்தனை யுகங்கள் நம்மை அதன் மாயப்பிடியில் பிடித்து வைத்திருக்க முடியுமெனில் அதற்கு முன்னிருந்த இருக்கின்ற ‘உண்மை’ ஏன் ஆழப்பதியவில்லை என்ற கேள்வி எழுகிறது. இந்நூலின் முதல் பதிப்பு 2008ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இன்றைய காலகட்டத்திலும் உலகத்தார் அனைவரும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்று உரக்கச் சொல்வேன்.
பெண்ணியச் சிந்தனையாளர்களுக்கும் செயல்பாட்டாளர்களுக்கும் இந்நூலின் கருத்துகள் போனஸ் பாய்ன்ட். எதிர்ப்பாளர்கள் அறிவிருந்தால் தாங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்ற எல்லா ஆதிக்கவாதச் செயல்களையும் எண்ணி கூனிக் குறுகுவார்கள். புரியாதவர்கள் பொங்கி எழுந்து எல்லாமே தவறென்பார்கள். புரிந்துகொள்ள நினைப்போர் நிறைய படிக்கவும் உரையாடவும் நினைப்பார்கள். நம்மீது செலுத்தப்படுவது அன்பின் அணைப்பன்று, ஆதிக்கக் கணை என்று உணரா பெண்களை நினைக்கையில் நெஞ்சம் வலிக்கிறது. எனவேதான் சொல்கிறேன் இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டும் என்று.
இதனைத் தொடர்ந்து உரையாடி, எழுதி மனிதர்களின் மனங்களில் தாக்கங்களை உருவாக்க வேண்டும். தாக்கங்கள் தொடர்ந்து இருந்து வந்தால் மட்டுமே சமூகத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். இந்நூல் பெருந்தாக்க விதை. l
previous post
