நம்மை நமக்குள் இருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக்கோடரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும். -ஃபிரான்ஸ் காப்கா
இலங்கையில் மயிலட்டி என்ற சிறு கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தலித் குடும்பத்தில் பிறந்த புஷ்பராணி, ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவர். ஈழத்தில் நடந்த ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் முதலாவதாக சிறை சென்ற இரு பெண் போராளிகளில் ஒருவர். கல்யாணமாகாத இளம் பெண்கள் அரசியலுக்கு வருவதையும் ஆண் தோழர்களோடு ஊர் ஊராகச் சுற்றித் திரிவதையும் நினைத்துப் பார்க்க முடியாத அந்தக் கால கட்டத்தில் விடுதலைப் போராட்ட லட்சியத்தால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் அவர். புத்தக வாசிப்புப் பழக்கம், தமிழ் தேசிய அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த அவரது குடும்பச் சூழல் போன்றவை அவரை படிப்படியாக அரசியலை நோக்கி நகர்த்தின. அந்தக் காலத்தில் அவரது அரசியல் ஈடுபாட்டுக்கும், அதனால் சிறை செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தபோதும் அவரது குடும்பம் அவரைக் கைவிடாமல் அவருக்குத் துணையாக நின்றதை இன்றைக்கும் மிகப்பெரிய விஷயமாகப் பார்க்க வேண்டியதிருக்கிறது.
ஈழப் போராட்ட இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்களுடனும் பின்னாளில் தலைவர்களாக ஆனவர்களுடனும் அவர்கள் அந்தப் பொறுப்புக்கு வரும் முன்னரே அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர். ஈழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க கால அமைப்புகளான தமிழ் இளைஞர் பேரவையிலும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திலும் (TLO) இயங்கிய புஷ்பராணி, தமிழ் இளைஞர் பேரவையின் மகளிர் பிரிவு அமைப்பாளராக இருந்தவர். ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’ என்ற நூலை எழுதிய போராளி சி. புஸ்பராசா அவரது இளைய சகோதரர். 1986இல் பாரீசுக்குப் புலம் பெயர்ந்த புஷ்பராணி, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி தனது 75ஆவது வயதில் மறைந்தார். ``தலைமறைவுப் போராளிகளுக்குச் சோறிட்டு வீட்டுக்குள் தூங்க வைத்துவிட்டு, பட்டினியுடன் வீட்டு வாசலில் காவலிருந்த ஒரு போராளிக் குடும்பத்தின் மூத்த பெண் பிள்ளை” என்று குறிப்பிடும் எழுத்தாளர் ஷோபா சக்தி, ``தனக்குச் சரியெனப்பட்டதை எந்த சபையிலும் சந்தர்ப்பத்திலும் எதற்கும் அஞ்சாமல் துணிந்து பேசிக்கொண்டிருக்கும் கலகக்காரி” என்கிறார். இளமைக் காலத்தில் இருந்த புத்தக வாசிப்புப் பழக்கம் காரணமாக, எழுதத் தொடங்கிய அவர், மலரரசி என்ற புனை பெயரில் சுதந்திரன், லண்டன் முரசு பத்திரிகைகளில் கட்டுரைகள், கவிதைகள் எழுதியிருக்கிறார். இலங்கை வானொலிக்காகவும் எழுதியிருக்கிறார். போராட்ட இயக்கங்களுக்குள் பெரும் கசப்புகளைச் சந்திக்க நேரிட்ட அவர், பிற்காலத்தில் இயக்க அரசியலிலிருந்து ஒதுங்கிய சூழ்நிலையில், அவரது ஈழப் போராட்ட நினைவுக் குறிப்புகள் 'அகாலம்' என்ற தலைப்பில் 2012இல் புத்தகமாக வெளிவந்தது. மூன்று சிறுகதைகள், சில புத்தக அறிமுகங்கள், புலம்பெயர் தேசத்திலும் மக்காத பிளாஸ்டிக்காக இருந்து வரும் சாதிய நச்சு, பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள்போன்ற சமூகத்தில் நிலவும் சம காலப் பிரச்சினைகள் போன்றவை குறித்த சில கட்டுரைகள், ஈழப் போராட்டத்தில் தனது அனுபவங்கள் குறித்த இரண்டு நேர்காணல்கள்போன்ற புஷ்பராணியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகள் அவரது மறைவுக்குப் பிறகு தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது. கேரளத்தின் நக்ஸலைட் போராளி அஜிதாவின் நினைவுக்குறிப்புகள் புத்தகம் ஏற்படுத்திய தாக்கம், ஈழப் போராட்ட நினைவுக்குறிப்புகளை புத்தகமாக எழுதத் தூண்டியதாக புஷ்பராணி கூறியுள்ளார். பெரும்பாலும் சமூக, அரசியல் போராட்டங்களில் ஈடுபட்ட சாமானியர்களின் பங்களிப்பு வரலாற்றில் பதிவு செய்யப்படுவதில்லை. அதிலும், குறிப்பாக பெண்களின் பங்களிப்புகள் பதிவு செய்யப்படுவது என்பது மிகக் குறைவாகவே உள்ளது. அந்த வகையில், ஈழப் போராட்டத்தின் தொடக்கக் காலத்தில் அவரைச் சுற்றி நிகழ்ந்த அரசியல் வரலாற்று நிகழ்வுகள் குறித்து புஷ்பராணியின் தன்வரலாற்றுப் பதிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. “அகாலம் என்ற இந்தப் போராட்ட நினைவுக்குறிப்புகள் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அவலங்களைச் சந்தித்த ஒரு பெண்ணின் வரலாறு, ஒரு குடும்பத்தின் வரலாறு, ஒரு சமூகத்தின் வரலாறு, ஓர் இனத்தின் வரலாறு எனப் பலவிதமாக உணரப்பட வேண்டியது” என்று இந்தப் புத்தகத்தின் அணிந்துரையில் கருணாகரன் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். “மிகுந்த நம்பிக்கையுடன் எண்ணிடலடங்கா அர்ப்பணிப்புகளுடன் தொடங்கப்பட்ட ஒரு நியாயமான போராட்டத்தை நாங்கள் தோற்றுவிட்டு நிற்கின்றோம்” என்ற வாசகங்களுடன் தொடங்குகிறது அந்தப் புத்தகம். தான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை குறித்த விவரங்களுடன் அவரது இளமைக்கால அனுபவங்கள், ஈழ விடுதலைப் போராட்டத்தில் அரசியல் ஈடுபாடு, அந்தக் காலகட்டத்தில் தன்னையும் தன்னைச் சுற்றிலும் நிகழ்ந்த நிகழ்வுகள் போன்றவற்றை தனது பார்வையில் பதிவு செய்கிறார். ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு உதவுவதற்காக, 1976இல் புலோலி வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கொழும்பில் சென்று தனது தோழி கல்யாணியுடன் சென்று கொடுக்கும் பணியை மேற்கொண்டதற்காகக் கைது செய்யப்பட்டு. யாழ்ப்பாணம் கோட்டைக்குள் இருந்த கிங் ஹவுசில் விசாரணைக் கைதியாக இருந்தபோது அவருக்கு நேர்ந்த சித்திரவதைகளையும் கொடுமைகளையும் மிகையில்லாத அவரது வார்த்தைகளில் படிக்கும்போது அனைவரையும் கலங்க வைத்துவிடுகிறார். அதன்பின், அரசியல் கைதியாக வெலிக்கடைச் சிறைக்கு வந்த பிறகு, அங்கு சக கைதிகளாக இருந்த ஜேவிபி இயக்கத்தைச் சேர்ந்த தோழியர்களுடனான சந்திப்பு குறித்து நெகிழ்ச்சியுடன் பேசுகிறார். ``பயங்கரவாதி, கொலைகாரி, கொள்ளைக்காரி, பாலியல் தொழிலாளி, திருடி,சாராயம் விற்பவள், ஏமாற்றுக்காரி என்ற பல்வேறு பெயர்களில் அரசாங்கத்தாலும் நீதியாலும் நாங்கள் வகைப்படுத்தப்பட்டாலும் நாங்கள் கைதிகள் என்ற உணர்வு எங்களை இணைத்தே வைத்திருந்தது. அந்த இணைவிலிருந்து அன்பைத் தவிர வேறெதுவுமே சுரக்கவில்லை” என்று சிறைச்சாலை நினைவுகளில் அமிழ்ந்து போகும் புஷ்பராணி, ``வெலிக்கடைச் சிறையில் நான் சந்தித்த ஒவ்வொரு பெண்ணும் முப்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகும்கூட என் ஞாபக அடுக்குகளில் அழியாத சித்திரங்களாக இருக்கிறார்கள்” என்கிறார். ஈழப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் பங்கேற்ற பல தோழியர்களையும் தோழர்களையும் பற்றி மறக்காமல் இந்தப் புத்தகத்தில் நினைவுகூர்ந்துள்ளது முக்கிய வரலாற்று ஆவணம். “போராட்டப் பாதையின் அரசியல் தத்துவார்த்த சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்த்து ஆயுதங்களின் மேலே கொண்ட அதீத மோகமே, சுத்த இராணுவவாதமே எங்களது தோல்விக்கான முதன்மைக் காரணி” என்று கூறும் புஷ்பராணி, “பல்வேறு தரப்புகளின் தவறுகளை மனம் வெந்து சுட்டிக்காட்டுவது அவர்களைப் பழிக்கும் நடவடிக்கையோ அல்லது அவர்களை அவதூறாக்கும் முயற்சியோ அல்ல. தவறுகளைச் சுட்டிக்காட்டுவது வெறுமனே குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கும் வேலையுமல்ல. இந்தத் தவறுகளிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இந்தத் தவறுகளை நாங்கள் எங்களிடமிருந்து வேரோடு களைய வேண்டியுள்ளது” என்று குறிப்பிடுகிறார். இதுபோல, போராளிகள் குழுக்களின் செயல்பாடுகள் குறித்து அவரது விமர்சனங்கள் மீது மாறுபாடுகள் கொண்டவர்கள் இருக்கலாம். ஆனாலும், அவர் கூறுவதைக் கவனிக்காமல் கடந்துவிட முடியாது. சிறையிலிருந்து விடுதலையான பிறகு, இயக்கச் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிய பிறகும் அவரது துயரங்கள் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் அவலம். ``கொள்ளைக்காரி என்றும் பொலிஸாரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவள் என்றும் கதைகள் உலாவித் திரிந்த காலமது. அந்தக் கதைகளை நம்பாமல் வந்த மாப்பிளைகள் கேட்ட சீதனமோ அவரது குடும்பத்தாரால் கொடுக்கக்கூடிய தொகையாக இருக்கவில்லை.” அதனால், 31 வயது வரையிலும் அவருக்கு திருமணமாகவில்லை. 1981இல் புஸ்பராசாவின் நண்பருடன் அவருக்குத் திருமணம் நடைபெற்று, 1986இல் புலம்பெயர்ந்து, பாரீசில் வாழும்போதும் கணவரின் சித்திரவதைகள் அவரைச் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி, அவரது வாழ்வில் அழியாத வடுவை ஏற்படுத்தி விட்டது.அகந்தை கொண்ட ஓர் ஆணின் அத்துமீறலால் இன்னலுக்கு ஆளான’ அவரால் இருபது ஆண்டுகளுக்கு மேல் எழுத முடியாமல் போனது எழுத்துலகிற்கு ஏற்பட்ட இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
அவரது வாழ்வில் ஏற்பட்ட துயரங்கள், ஏமாற்றங்கள், கசப்பு உணர்வு அனுபவங்கள் அவரது சிறுகதைகளிலும் பிரதிபலிப்பதைப் பார்க்க முடியும். புகை, மரியா, தங்கமயில் ஆகிய கதைகளில் பெண்கள் படும்பாடுகளையும் வலிகளையும் இயல்பான போக்கில் சொல்லி இருக்கிறார்.
புலம்பெயர்ந்து வந்த பிறகும் சாதித் திமிர் அடங்காமல், சாதியென்றால் என்னவென்றே தெரியாத புகலிடத்தில் வாழும் குழந்தைகளுக்கு சாதிப் பிரிவுகளைச் சொல்லி வளர்க்கிறார்களே என்ற சமூக ஆவேசத்தை அவரது எழுத்துகளில் தொடர்ந்து பார்க்க முடியும். ஈழத்திலிருந்து புலம் பெயரும்போது உறவுகள், சொத்துகள், வீடு வாசல்கள், அழிக்க முடியாத பல நினைவுத் தடங்கள் என்று எல்லாவற்றையும் தடாலடியாக அங்கேயே விட்டுவிட்டு வந்தவர்கள் நம்மவர்கள். ஆனால் சாதியை விட்டுவிட முடியாமலும் வீணாய்ப்போன கலாசாரங்களையும் மேலோங்கிய எண்ணங்களையும் முன்பிருந்ததைவிட மிக அதிகமாகவே புதையல்போல பொத்திக் கொண்டும் வந்தார்கள். தாம் தஞ்சமடைந்த நாடுகளிலும் அவற்றைப் பேணி வளர்க்கும் அநாகரிகத்தை மிக உன்னதமாக நினைத்துப் பெருமை வேறு கொள்கிறார்கள்” என்பதை `முள்வேலி’ கட்டுரையில் குறிப்பிடுகிறார். எஸ். பொன்னுதுரையில் `நனவிடைதோய்தல்' பற்றி எழுதும்போது, அந்தப் புத்தகத்தின் சுவாரசியமும் பகடியும் அவரையும் தொற்றிக் கொள்கிறது. மு.நித்தியானந்தனின் `கூலித்தமிழ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள கணிகையர் குலத்தில் உதித்த முத்துப்பழனி, அஞ்சுகம் போன்ற பெண் ஆளுமைகளின் அறிவாற்றல், கரை கடந்த கல்வித்திறன் ஆகியவற்றை சிலாகித்து எழுதியுள்ள அவர், அஞ்சுகம் எழுதிய `உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு' என்ற வரலாற்று நூல் அவரது தமிழ் புலமைக்கு எடுத்துக்காட்டு என்கிறார். என்.கே.ரகுநாதன் எழுதிய ஒரு `பனஞ்சோலை கிராமத்தின் எழுச்சி’ என்ற புத்தகம் குறித்து எழுதும்போது, “சாதி என்ற பூதம் எம்மவர் மத்தியில் வேரூன்றி இருப்பதை யாரும் மறுக்காதீர்கள்! அது மாற்று மருந்தில்லாத கொடும் வியாதிபோல் எம்மவர் எங்கு சென்றாலும் காவப்படுகிறது...! எங்கேயும் எல்லாரிடமும் ஊன்றிவிட்ட இந்த அநாகரிகம் என்றுதான் ஒழியப் போகிறதோ?” என்று கவலை கொள்கிறார். அகதி வாழ்க்கையைக் கடக்கும்போது அனுபவித்த வலிகளையும் அவதிகளையும் எழுதியுள்ள செல்வம் அருளானந்தத்தின் எழுதித் தீராப் பக்கங்கள் புத்தகத்துக்கு எழுதியுள்ள அறிமுகக் கட்டுரையில்,புலம் பெயர்ந்து வாழ்வோரால் மட்டுமே உணர்ந்து கொள்ளக்கூடிய வாழ்க்கை அனுபவங்கள் இன்னுமின்னும் எழுதப்பட வேண்டிய தீராப் பக்கங்களாக நம்மிடையே மறைத்தும் மறைந்தும் கிடக்கின்றன’’ என்று குறிப்பிடுகிறார்.ஸ்வர பேதங்கள்’ என்ற புத்தகத்தில், டப்பிங் துறையில் பின்னணிக் குரல் கலைஞராக நாற்பது வருடகாலப் பணியில் பாக்கியலக்ஷ்மியின் சாதனைகளையும் அவரது வாழ்வின் துன்பியல் பகுதிகளைப் படிக்கும்போது அதில் கரைந்துபோய் உடைந்துவிடும் புஷ்பராணி,``குடும்ப அமைப்பு சிதறக்கூடாது என்று ஆரம்பத்தில் பாக்கியலக்ஷ்மி தயங்கியதுபோலவே அதிகமான பெண்கள் தங்களது திறமைகள் அனைத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு சித்ரவதைகளைத் தாங்கிக் கொண்டே தம் வாழ்நாட்களைத் துயரத்தோடு முடித்துக்கொள்வது பெரும் சோகம்’’ என்கிறார். சமூகத்தில் இனரீதியாகவும், சாதி ரீதியாகவும், பாலினரீதியாகவும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வலியை, அவர்களது துயரத்தை, தான் வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் வாயிலாக பதிவு செய்வது இவரது எழுத்துகளை முக்கியத்துவம் வாய்ந்ததாக்கி விடுகிறது. ஜெயகாந்தன் புஷ்பராணியின் ஆதர்ச எழுத்தாளர் என்பதைப் பதிவு செய்கிறார். ``எம்மை ஊடுருவி, எம்மோடு இரண்டறக் கலந்த இயல்பான எழுத்து நடையால் மனதைச் சிறகடிக்க வைத்த எழுத்தாளர்களையும் மிகச் சிறந்த கலைஞர்களையும் அவர்கள் உயிரோடு இருக்கும் காலங்களில், கண்ணெடுத்துப் பார்த்து புகழ மறக்கும் நாம், அவர்களது மறைவுக்குப் பின்னரே தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு எழுந்தவர்போல அவர்தம் நினைவுகளையும் அவர்கள்மேல் நாம் கொண்ட உண்மையான நேசிப்பையும் உணரத் தலைப்படுகிறோம். பேசவும் புறப்படுகிறோம்” என்றுஉலர்ந்திடாத நினைவுகள்’ கட்டுரையில் புஷ்பராணி குறிப்பிடுகிறார். இவ்வளவு ஆண்டுகள் காலம் தாமதமாகவேனும் அவரது எழுத்துகள் மூலம் புஷ்பராணி என்ற அந்தப் போராளியைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது மரணம் உதவி இருக்கிறது.
புஷ்பராணியின் அகாலம்’ என்ற தன்வரலாற்று பதிவைப் புத்தகமாகக் கொண்டு வந்த பதிப்பாசிரியர் ஷோபா சக்திக்கும், அந்தப்புத்தகத்தை அவரது வாழ்நாளிலேயே வெளியிட்டகருப்புப் பிரதிகள்’ பதிப்பகத்தைச் சேர்ந்த தோழர்கள் நீலகண்டன், அமுதா ஆகியோருக்கும் இந்த தமிழ் சமூகம் கடமைப்பட்டிருக்கிறது. புஷ்பராணியின் மறைவுக்குப் பிறகு அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிகளை தற்போது புத்தகமாக்கி வெளியிட்டுள்ளதற்கும் நன்றி.
“அவர் (ஜெயகாந்தன்) தன்னுடைய சிறுகதையொன்றில் நாம் கிழிக்கும் தேதிகள் நம் காலடியில் குவிந்து குவிந்து பெருகி நம்மையே மூடிக்கொள்கின்றன. பிறகு நாம் அவற்றைக் கிழிப்பதேயில்லை. நம்மைப் பொருத்தவரை நாம் மூழ்கிப்போன பிறகு தேதிகளால், நாட்களால் நமது வாழ்நாள் மூழ்கடிக்கப்பட்ட பிறகு நமக்கும் தேதிக்கும் சம்பந்தமே அற்றுப் போகிறது.
நாம் கிழித்தெறிந்த தாள்கள் உதிர்ந்ததுபோல நாமும் உதிர்ந்து போகிறோம் என்று குறிப்பிட்டதுபோல அவர் உதிர்ந்து போய்விடவில்லை. எம் நினைவுகளில் என்றும் பொலிவோடு வீற்றிருப்பார்” என்கிறார் புஷ்பராணி. இது அவருக்கும் பொருந்தும். புஷ்பராணியை வரலாறு மறக்காது. l
