பிறப்பு தொடங்கி இறப்பு வரை வாழ்க்கை அனைவருக்கும் பொதுதான். எப்போதது சாதனையாகிறது..? முதல் முயற்சி, ஓயா உழைப்பு, முன்னோடி அனுபவங்கள், கசப்பு, துவர்ப்புகளைக் கடந்து சுவைக்கும் வெற்றியின் இனிப்பு என அனைத்தும் கலக்கையில்தான் சாமானியர் சரித்திரராகும் அரிய வாய்ப்பு உருவாகிறது. அத்தகையதோர் வரலாற்று ஆவணமாக தமிழ்நாட்டின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாக உருவான திருமதி திலகவதி ஐபிஎஸ் அவர்களின் நேர்காணல், எளிய குடும்பத்தில் பிறந்த பெண் ஒருத்தி சற்றும் மனந்தளராத முயற்சிகளின் மூலம் வெற்றிக் கோட்டினைத் தொட்டுவிட முடியும் என்பதை அவர் மூலமாகவே, அவர் வார்த்தைகள் வழியாகவே நேர்காணலாய் பதில்களாய்ப் பெற்று சுடுதலும் குளிரும் உயிருக்கில்லை எனும் நூலாக வழங்கி இருக்கிறார்கள். இந்த நூல் வியப்புக்குரிய வீராங்கனை திலகவதி ஐபிஎஸ்: காவல் துறை பணிகளின் அனுபவத் தொகுப்பு உள்ளூர் முதல் உலக இலக்கியம் வரை: இலக்கிய அனுபவங்களின் தொகுப்பு பெண்களும் பலவிதமான பிரச்சனைகளும்: பெண்ணியச் செயல்பாட்டாளராக திலகவதின் சமூக அனுபவங்கள் -என பிரிக்கப்பட்டுள்ளது
இன்றைய சூழலில் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் என்பதெல்லாம் தொடர்ந்த பயிற்சியின் வழியாக பெறக்கூடியவைதான். பெரும்பாலான ஊர்களில் பயிற்சிக்கான மையங்கள் தொடங்கப்பட்டு சமகால தலைமுறை தம்மை அவற்றுள் இணைத்து வெற்றி காண்பதெல்லாம் சகஜமாக பார்க்க முடிகிறது.
தருமபுரி மாவட்டம் இன்றும்கூட கல்வியில் பின்தங்கிய மாவட்டம்தான் என உறுதிப்படச் சொல்லலாம். குமாரசாமிப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர் கல்லூரிப் படிப்புக்கு வேலூர் வர வேண்டும். முதுநிலைக்கல்வி எனில் 1970களில் சென்னைதான். முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்று, ஐபிஎஸ் ஆக தேர்ந்தெடுக்கப்படுவது பெரும் சாதனை. இதுபோன்ற வெற்றிகளுக்கு அடிப்படையாக தன்னம்பிக்கையூட்டும் சொற்களைத் தூவி வளர்க்கும் ஒளி மரங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்கும். திலகவதிக்கு அவரது ஆசிரியர்கள்..! அவரது தாயின் சுயமரியாதைக் கொள்கைகளும் இணைய வெற்றிக்கான விதை திலகவதியின் பள்ளிப்பருவ பால்யத்திலேயே ஊன்றப்படுகிறது.
3000 பேர் விண்ணப்பத்தில் 70 பேர் மட்டுமே குடிமைப் பணி பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட அவர்களில் ஒருவராக திலகவதியும் ஒருவர்
[ப 24] பெண்ணுடல் என்பது இன்றும் காட்சிப் பொருளாய், காமத்தின் அடையாளமாய் பார்க்கப்படுகிற சூழலில் பொதுவெளியில் பெண்டிர் ஆடை மாற்றுவது எவ்வளவு கடினம் என்பதை உணர்தல் மிக முக்கியம். இவ்வளவு கடினங்களை விழுங்கி 06.04.1979 அன்று காவல்துறையில் உதவிக் காவல் கண்காணிப்பாளராக [ASP] பணியில் இணையும்போது திலகவதிக்கு தெரியாது, காவல்துறை என்பது ஆண்களின் உலகம் அவமானங்களை செரிக்கப் பழக வேண்டுமென..!
காலம் முழுதும் கசப்பே தொடர்ந்தாலும் இப்பணியின் மூலமாக ஆற்றக்கூடிய மறக்க முடியாத சேவை நிகழ்வுகள், துவர்ப்பு, கசப்புகளை துடைத்து எறிந்து விடுவதும் நிகழத்தான் செய்கிறது. பெண்களுக்கென்று தனிக்கழிவறைகூட இல்லாத காவலர் பயிற்சிப் பள்ளியில் கழிவறை மற்றும் குளியலறைபோன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்துகிறார். இன்று காவல்துறையில் பெருவாரியாக பேசப்படுகிற கண்காணிப்பு கேமராவை முதன்முதலாக தமிழ்நாடு காவல்துறைக்கு அறிமுகப்படுத்துகிறார். திலகவதியின் காவல் வாழ்வில் இளம்பெண் ரீட்டாமேரி வழக்கு குறிப்பிடத்தக்கது.பாதிக்கப்பட்டவருக்கு புனர்வாழ்வு அளிப்பது வரை காவல் அதிகாரி பணி அல்ல என்றாலும், ஒரு பெண்ணின் மன உளைச்சல், உணர்வுகளை உணர்ந்து தாயுள்ளத்தோடு அப்பெண்ணுக்கான மறுவாழ்வு ஒளியை ஏற்றி வைக்கிறார். சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் தமிழகத்தின் புராதான செல்வங்களை அயல்நாடுகளுக்கு கடத்தும் WHITE COLLAR CRIMINALS அயோக்கியர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் பிடியில் நிறுத்துகிறார். இவை காவல்துறையில் இருந்த போது நிகழ்ந்த சில மட்டுமே.
பணி வெற்றிகளில் தம்முடன் குழுவாக இணைந்து செயல்பட்டவர்களின் பெயர்களை
திலீப், ஜாங்கிட், திருப்பாத்தி ஆய்வாளர் காதர்பாஷா, ஜீவானந்தம் மறவாமல் குறிப்பிடும். திலகவதி எந்த இடத்திலும் காவல் பணிகளில் தன்னை மனதளவில் காயப்படுத்தியவர்களை அவமானப்படுத்தியவர்களை அடையாளம் காட்டவில்லை. அவர்களுடைய பெயரையோ, பணிகளையோ பதிவிடவில்லை என்பது திலகவதியை ஒரு பண்பட்ட மனிதராக காட்டுகிறது. “ஓய்வு பெறும்போது எனக்கு வருத்தமாக இருந்தது. ஏனெனில் நான் பணியில் சேரும்போது இருந்த எனது நோக்கங்கள், எவ்வாறான செயல்பாடுகளில் என்னை எப்படி எல்லாம் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கின்ற எனது எண்ணம் அதற்கான வாய்ப்புகளை அனைத்துமே மறுக்கப்பட்டன” [ப.66] என வருத்தத்தோடு பதிவு செய்யும் திலகவதி ஐபிஎஸ், ASP என்னும் உதவிக் காவல் கண்காணிப்பாளர் பணியில் தொடங்கி DIG [DIRECTOR OF INSPECTOTR GENARAL] என சிகரப் பதவி வரை உயர்கிறார்.
35 ஆண்டுகளில் அவரின் பணி வரை கோடுகள் [work Graph] வளர்ந்துகொண்டே செல்வதே How she has executed her duties..! என்பதை நிரூபிக்கும். திலகவதி ஐபிஎஸ் அவர்களின் இரு சிறப்புகள் யாதெனில் ‘தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் மற்றும் காவல் துறை இயக்குனர் பதவியை அடைந்த முதல்தமிழ்ப்பெண்’ என்பவையாகும்.
“காவல்துறை பணியில் செயல்பட விடாமல் முடக்கப்பட்டேன் என்பது ஆறாத வடுவாக மனதில் இருக்கிறது. ஆனால் அந்த காலங்களில் முடக்கப்பட்டவளாகவே ஒதுங்கி விடாமல் வேறு விஷயங்களை தேடிக் கொண்டேன். அது எழுத்துத்துறை“ உண்மையில் இலக்கியமும் கலையும் நல்லதொரு உளவியல் மருந்து. திலகவதி நல்லதொரு ஒளடத்தை தேர்ந்தெடுக்க, தமிழுக்கு பல நூல்கள், ‘அம்ருதா’ எனும் இலக்கியச் சிற்றிதழ் ‘அம்ருதா’ எனும், பொக்கிஷங்களைப் புத்தகமாக்கித் தரும் பதிப்பகம் என இன்றளவும் தொடர்ச்சியாக செயல்பட வைக்கும் ஊக்க மருந்தாக இலக்கியம் திலகவதிக்கு அமைகிறது.
“ஒரு முழு நேர இலக்கியவாதியாக இருக்க வேண்டும் என்பதே எனக்கு மிகவும் ஆவலாக இருந்தது ‘[ப.74] எனக் குறிப்பிடும் அந்த ஆவலை [DESIRE] செயல்படுத்தியும் காட்டி சாகித்ய அகாடமி விருதுவரை வென்றுள்ளார் என்பது, தான் எடுத்துக் கொண்ட முயற்சிகளில், தன்னை எந்த அளவுக்கு ஈடுபடுத்திக்கொள்வார் என்பதற்கு எடுத்துக்காட்டு. திலகவதியின் படைப்பாக்க வழிகாட்டல்கள் இன்றைய தலைமுறைக்கு பயன்படுபவை:
புகழ்பெற்ற தேவதாஸ் நாவலின் கதைநாயகன், நாயகனுக்குரிய [HERO] உயர்பண்புகள், குணநலன்கள் என எதுவும் இல்லாதிருந்தும், வாசகர்கள் நேசிக்கும் கதைத்தலைவனாக சரத்சந்திரர் படைத்த விதத்தை வெகு நுட்பமாகவும் ஆழ்ந்த வாசிப்போடும் ஆராய்ந்து விமர்சிப்பது ஒரு வகை எனில், எந்தக் கரு சிறுகதைக்கானது, எந்த உள்ளடக்கம் புதினத்துக்கானது என்ற தெளிவும் கள ஆய்வு விருதுகள் பல கண்ட வெற்றிகரமான படைப்பாளியாக திலகவதியை மாற்றுகிறது.
படைப்பாளியாக கதை, கவிதை எனப் பயணிப்பவரே மொழிபெயர்ப்பில் மிளிர்வது ஆச்சரியமூட்டுவது , ஏனெனில் படைப்பாக்கமும், மொழிபெயர்ப்பும் இரு வேறு திசைகள். கூடுதலாக, மொழியாக்கம் அதிகமாய் கால அவகாசங்களைக் கோருவது. தலித் இலக்கியம் குறித்த திலகவதியின் தொகுப்பு நூல், பல படைப்பாளிகளை ஒரே இடத்தில் சந்திக்கும் தமிழின் மிக முக்கிய ஆவணம். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் ஏராளமான இடைவெளி வைத்திருக்கும் படைப்பாளிகள் மத்தியில் “காவல்துறைப் பணியின் காரணமாக எழுத்து மேன்மையுற்றது; எழுத்தின் காரணமாக காவல் பணி மேன்மையுற்றது” [ப.94] என்னும் திலகவதி ஐபிஎஸ்-ன் உணர்தல், படைப்பாளிகள் பார்வையில் மிக முக்கியமானது.
“சிக்கலில் சிக்கிக்கொண்டு சங்கடத்தில் இருக்கக்கூடிய பெண்கள், ஆண்கள் என எல்லாரிடமும் மிகவும் அழகிய மனதோடு இலகுவாக நடந்துகொள்வதற்கு இலக்கியம் எனக்கு கற்றுக் கொடுத்து இருந்தது” [ப.95] என்பது மிக முக்கியமான புரிதல்; வாழ்வுமுறை..! “தலித் வாழ்க்கையை வாழ்கிற யாருமே அதை எடுத்துச் சொல்கின்ற எழுத்து வன்மையுடையவர்களாக இருப்பது கிடையாது” என்கிற தலித் இலக்கியம் குறித்த திலகவதியின் கருத்துகள், ஆய்வுக்கும் விமர்சனத்திற்கும் உரியது; சற்று மேட்டிமை மனநிலை கொண்டது.
“படைப்புகளின் பெருமை பக்க எண்களில் இருப்பதாக நினைத்து, ஆயிரக்கணக்கான பக்கங்களில் தங்கள் படைப்புகளைத் தருவது தங்கள் மேதைமையின் அடையாளம் என்ற எண்ணமும் நம் காலத்தின் துயரம். இன்று படைக்கப்படும் நாவல்கள் பெருத்து பருமனாகும் [OBESITY] பிணியால் பீடிக்கப்பட்டவையாக இருக்கின்றன” [ப.114] என்னும் திலகவதியின் சொற்களில் உண்மை இல்லாமல் இல்லை. வெறும் வர்ணனைகள் பக்க நிரப்பியாகி நாவலில் பதிவாகும் பெரும்பத்திகள், வாழ்வியலில் இருந்து வாசகனை அப்புறப்படுத்தி விடுகிற அபாயமும் உள்ளது. “மனிதன் மாண்பு கொண்டவனாக வாழ்வதற்கான மாதிரிகளை படைத்தளிப்பது, இன்றைய இலக்கியவாதிகளின் பொறுப்பு” [ப.118] என அறுதியிட்டுக் கூறும் திலகவதியின் கூற்று படைப்பாளிகளுக்கான நற்பாதை சமைக்கும் வழிகாட்டல். இந்நூல் தன்வரலாறல்ல..! அதேசமயம் விடுவித்த வினாக்களின் அடிப்படையில் தன் காவல்துறைப் பணி, இலக்கியம், வாழ்வியல் அனுபவங்களை பதிலாக தந்திருக்கிறார் திலகவதி ஐபிஎஸ். சமகால சரித்திரம்.
சின்னச்சின்னப் பதில்களுக்குள் சொலப்பட்டிருப்பது மிகச்சிறப்பு.,புதிய உள்ளடக்கம், புதிய வடிவம், கோபப்படுத்தாத விவரம் கூறும் கேள்விகள், நேர்காணலாய் வரையப்பட்ட ஆளுமையின் கோட்டோவியமாய் உருவாக்கப்பட்ட இந்நூல் கவிஞர் கிருஷாங்கனிக்கும் படைப்பாளர் பிரேமாவுக்கும் டிஸ்கவரிக்கும் பெருமை சேர்ப்பது. உண்மையில் இந்நூல் பள்ளி, கல்லூரிகளில் மற்றும் பயிற்சி மையங்களில் பாடமாக வைக்கப்பட வேண்டிய நூல். ஏனெனில் வேகச் சிறகுகளைக்கொண்டு விண்ணில் பறக்க விரும்பும் இளையதலைமுறைக்கு வழிகாட்டும் நூலென உறுதிபடக் கூறலாம். l
previous post
