பதினேழு கட்டுரைகள் கொண்ட இந்நூல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அஃகேனம்போல மூன்று புள்ளிகளைத் தொட்டு மூவரையும் ஆயுத எழுத்து போன்று இணைக்கிறது.
‘சிலேட்டுக்குச்சி’ என்ற கட்டுரைப் புத்தகத்தின் தலைப்பே நம்மில் பலரை நம் பால்யம் நோக்கிப் பின் நகர்த்துகிறது.
புத்தக ஆசிரியர் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர். தாய் சகுந்தலா மற்றும் தந்தை கருப்பசாமி ஆகியோரின் ஆதி எழுத்தை தன் முதல் எழுத்தாக்கிக் கொண்டுள்ள மனத்தார். மாற்றுக் கல்விச் செயல்பாடுகளில் ஆர்வமுடையவர் என்கிறது பதிப்பகம். ‘என்ன சிரிப்பு வேண்டியிருக்கு’ என்ற முதல் கட்டுரையில் இன்றைய ஆசிரியர்கள் மாணவர்களிடம் எவ்வகையில் கண்டிப்புடன் நடந்து கொள்ளலாம் என்று தொடங்கி, ஆசிரியர் பணியில் பட்டப்பெயர்களின் பங்கு, ஆசிரியக் கதாநாயகனாக வலம் வந்த பன்னீர் சாருக்கென இரு தனித்த மற்றும் சிறப்பான கட்டுரைகள், தமிழய்யாபோல் அய்யா என்றழைக்கப்பட்ட அறிவியல் ஆசிரியர், வகுப்பறை ஒரு வட்டம் என்ற வகையில் சமப்படுத்தப்பட்ட வகுப்பே கற்றலுக்கு அழகு, ‘டீச்சர்… ஒண்ணுக்கு’ என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள பதினேழு வருட இடைவெளியிலான இரு சம்பவங்கள் மற்றும் அதன் வலு எனக் குறிப்பிட்டுள்ளார் முதல் ஏழு கட்டுரைகளில்.
மாதவன் அய்யா, சாந்தியக்கா மற்றும் நூலகர் ராமு ஆகிய மூவருடன் பிரபஞ்சனும் சுந்தர ராமசாமியும் ‘கதைகளுக்கு மரணமில்லை’ என்ற அடிப்படையில் வாழ்வதும், ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற வாக்கியத்தைப் பொய்ப்பித்து ஆசை அவசியம் என்ற பாணியில் ஒரு ஆசை கட்டுரையும், ஆணுக்குள் இருக்கும் பெண்மை என்ற தொனியில் XY குரோமோசோம் பற்றிய அறிவியலினை நாசூக்காகவும், தாயுமானவனாக மாறிய ஆசிரியர் ஒருவரைப் பற்றிய ‘ஆணுக்குள் ஒரு எக்ஸ்’ என்றொரு கட்டுரை என மேலும் ஏழு கட்டுரைகளாக மொத்தம் பதினேழு கட்டுரைகளிலும் ‘கற்றலும் கற்பித்தலும்’ பூட்டும் சாவியும் என்கிறார் நூலாசிரியர் சக. முத்துக்கண்ணன்.
பிட்டு பேப்பர், யானை, வீட்டுப்பாடம் எத் தொடரும் கட்டுரைகளும் குறிப்பிடத் தக்கவை. ‘மணல் கடிகாரம்’ மிக ஆழமாக யஷ்பால் வரிகளில் தொடங்குகிறது. “நீங்கள் வகுப்பில் ராம் என்பவருக்கு அறிவியல் போதிக்கும் ஆசிரியர் என்றால் உங்களுக்கு அறிவியல் மட்டும் தெரிந்தால் போதாது. ராம் பற்றியும் தெரிய வேண்டும்.” -யஷ் பால்.
‘நான் வாத்தியாரில்லை’ கட்டுரையை ஓர் உளவியல் பார்வையாகப் பார்க்கலாம். கதை வடிவிலான கற்பித்தலுக்கும், கடிதங்கள் மூலம் அறிந்துகொள்ளுதலுக்கும் ‘கடவுளுக்கு ஒரு கடிதம்’ என்ற கட்டுரை சீரான வேகம் கூட்டுகிறது.
கல்வி என்பது மாணவ மனோபாவ அணுமுறையாக இருக்க வேண்டும் என்று இறுதிக் கட்டுரையான ‘அவன விட்ருங்க பாஸ்’ எடுத்துரைக்கிறது.
ஆசிரிய – மாணவ வாழ்வோடு கட்டுரைகள் பிணைந்து இருப்பதும், சமூகக் கருத்துகளை எடுத்துச்சொல்லக் கூடியதுமான கட்டுரைகளும் இந்நூலின் சிறப்பாகும். அசைப்போட்டு ஆனந்தம் அடைதல் என்பதுபோல் அனைவரையும் காலத்தில் பின்னோக்கி அவரவர் பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் செல்கிறது அனைத்துக் கட்டுரைகளும். பல கட்டுரைகளில் இடம் பெறும் சம்பவங்கள் நாம் நேரில் பார்ப்பது போல் இருப்பது கட்டுரைகளின் சுவாரசியம். மாணவர்களின் ஈர மனதைப் பகிர்ந்துகொள்ளும் பதிவாகவும் இந்நூல் விரிகிறது.
வணிக மயமாகிவிட்ட இன்றைய கல்விச் சூழலில் நல்ல பண்பாளர்களை உருவாக்க ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகம் என்று அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதை நேர்த்தியாக அதே சமயம் சுருங்கச் சொல்லியும் இருக்கிறது இந்நூல். ஆசிரியர்கள் அனைவரும் இதுபோன்று தங்கள் ஆசிரியர் வாழ்வியல் அனுபவங்களை எழுதத் தூண்டும் நூலாகவும் இருப்பது இந்நூலின் வெற்றி. l
previous post
