‘களிநெல்லிக்கனி’: ஒளவையின் கவித்துவத்துவத் திரட்டு கவிஞர் இசை நமக்கு முதலில் நவீனக் கவிதை மூலமே தான் அறிமுகமானவர். இவர் இதுவரை ஒன்பது கவிதை நூல்களையும் ஏழு கட்டுரை நூல்களையும் வெளியிட்டுள்ளார். இந்தக் ‘களிநெல்லிக்கனி’ இவரது எட்டாவது கட்டுரை நூலாகும். “நீலி மின்னிதழுக்காக ஒளவை பற்றிய ஒரு கட்டுரை என்ற அளவில் தொடங்கப்பட்ட பணி ஒரு முழு நூலாக இழுத்துச் சென்றுவிட்டது” என இவர் இந்நூலின் தன்னுடைய ‘என்னுரை’வழி குறிப்பிட்டுள்ளார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஔவையின் பாடல்கள் இவரின் ரசனைசார்ந்தும், காலத்தின் தேவைசார்ந்தும் தொகுத்து ஆராயப்பட்டுள்ளன எனலாம். இந்நூலின் நோக்கம் ஒளவைகள் குறித்த தகவல்களை ஆராய்வது அல்ல; அவர்களின் கவித்துவத்தில் தோய்வதே என்கிறார் இவர். காலங்காலமாக ஔவை என்றால் நரைமுடியுடன், கையில் கோல் ஊன்றிய, முதுமை தாங்கிய பெண்தான் முதலில் நம் மனக்கண் முன் தோன்றுவர். ஆனால், ஒளவை என்பவள் ஒருவள் அல்லள்; ஔவை என்ற பெயரில் எட்டிற்கும் மேற்பட்டோர் தமிழில் பாடல் புனைந்துள்ளனர் என்ற செய்தி இந்நூலை வாசிக்கும்போது வாசகர்களுக்கு வியப்பை உண்டாக்குகிறது.
இசையின் கவிதைகள், கட்டுரைகளில் தொடர்ந்து ஒளவை என்கிற படிமம் தடம்பதித்துக் கொண்டே வருகிறது என்பதை இவரின் கவிதைகளையும் கட்டுரைகளையும் வாசிப்பதன் மூலம் அறியலாம். ’ஒரு பெண்கவி இன்னொரு பெண் கவியைத் தன் பாடலில் வைத்து எழுதியது போல், ஆண் கவிகள் யாரேனும் இன்னொரு கவியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்களா’ என்பதை ஆய்வு மாணாக்கர் ஆராய்ந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என ஆய்வு மாணாக்கரையும் வாசிக்கத் தூண்டுகிறது இந்நூல். இத்துடன், ’பேய் கண்ட கனவின்’ எனும் ஒளவையின் வரிக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் மற்றும் புலியூர் கேசிகன் ஆகியோரின் உரைகளையும் எடுத்துக்காட்டி, அவ்வரியை மிகவும் விரிவும் ஆழமுமாக விளக்கியும் உள்ளார் இசை. மேலும், ‘ஊரன்’ என்ற சொல்லிற்கு ’ஊர் மேய்பவன்’ என்று இணையத்தில் பொருள் கூறியுள்ள ஓர் உரையைச் சுட்டிக்காட்டி ’ஒரு வேளை இது ஒட்டுமொத்தச் சங்கத் தலைவன்களின் மீதான நுட்பமான விமர்சனமாக இருக்கக்கூடும்’ என்றும் இக்கவிஞர் கூறியுள்ள இக்கருத்து எத்தரப்பு வாசகர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமைந்துள்ளது. இத்துடன், ‘கரபுரநாதர் புராணம்’ என்கிற நூலில் ஒளவையும் அதியனும் உடன்பிறந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளதையும் இந்நூலில் எடுத்துக்காட்டியுள்ளார். மற்றோர் இடத்து ஒளவையின் பாடல்களில் ஒன்றான கையது வேலே; காலன புனை கழல்; மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்… என்பதற்கு முதலில் உரை கூறிவிட்டு, முடிவில் ’கொழந்தை சார் அது..!’என்று இசை கூறியுள்ளதை நோக்கும்போது, இவரின் மென்மை வாய்ந்த உள்ளுணர்ச்சி எவ்வித வாசகர்களுக்கும் சென்றுசேரும் என்பதில் ஐயமில்லை.
‘களிநெல்லிக்கனி’ என்னும் இந்நூலில் கவிஞர் இசை ஔவையின் வெறும் கவித்துவத்தை மட்டும் எடுத்தியம்பவில்லை; ஒளவையின் புகழ்மிக்க வரிகளில் ஒன்றான ‘எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே’ எனும் இவ்வரியைத் தேர்ந்து கொண்டு, சமீபத்தில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 12 வயதுச் சிறுமி ஒருத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, அவள் ரத்தம் சொட்டச் சொட்ட வீதியில் நடந்து வந்தபோது, ஆடவன் ஒருவன் ‘இங்கே வராதே, போ’ என்று விரட்டியடிக்கிறான் என்கிற வரியோடு ஒப்பிட்டு எழுதியிருப்பது அன்றைய காலத்தில் நிகழ்ந்ததையும், இன்றைய காலத்தில் நிகழும் சமூகச் சீர்கேடுகளையும் ஒப்பிட்டு நோக்க ஏதுவாக உள்ளது.
மறவன் ஒருவன் போர்க்களத்தில் தன் முகத்தை மறைத்துக்கொண்டு சண்டையிட்ட காட்சியைக் கூறும் ஒளவை, அவனுடைய கண்கள் நெருப்பு, அதைத் தாங்கும் வலிமை எதிரிக்கு இல்லை என்று அக்காட்சிக்குப் பொருள் கூறியிருப்பதை, உள்வாங்கிக்கொள்ளும் இசை, இன்றைய ‘ஆக்சன் ஹீரோக்கள்’ புறநானூற்றிலிருந்துதான் வருகிறார்கள்போல என நகைச்சுவைத் ததும்பக் கூறியுள்ளமை உவப்பூட்டுவதாக உள்ளது.
இசையின் இந்நூலில் இவர், ஔவை குறித்துப் பேசியுள்ள கி.வா. ஜகன்நாதன், ராஜ் கௌதமன், க.மோகனரங்கன் ஆகியோரின் கருத்துகளையும் இணைத்துள்ளமை என்பது இவரின் பரந்துபட்ட வாசிப்புத் திறனை வெளிக்காட்டுவதாக உள்ளது. ஔவையின் காலத்தில் ‘கள்’ என்பது உணவின் ஒரு பகுதியாக இருந்ததையும், நடப்புக்காலத்தில் மறுத்து ஒதுக்கப்பட்ட மது வகையின் ஒன்றாக அது மாறிப் போய் இருப்பதையும் மனக் குமுறலாக்கி வெளிப்படுத்தியிருப்பது தனித்துவமாகப்படுகிறது.
“வாழ்விலா சங்கடத்தில் சாதலே நன்று” எனக் கூறும் ஒளவையிடமே “சாவு அதுவாய் வரட்டும் பாட்டி, அதுவரை சங்கடத்தில் உறங்கிச் சங்கடத்தில் விழிக்கிறேன்; சங்கடத்தில் உழல்கிறேன்”. “பாதியிலேயே ஆட்டத்தில் இருந்து விலகிக்கொண்டால் அது ஏமாந்து போகாதா என்ன?”
என்று கேள்வியும் கேட்கிறார் இசை. “எல்லாம் ஊழ்” என்று சொல்லும் ஒளவை, ஏன் இவ்வளவு நீதிகளை உரத்துச் சொல்ல வேண்டும்?
ஊழின்படிக் கஞ்சனாக இருப்பவனை, இவள் ஏன் ஈயச் சொல்லி இப்படி வற்புறுத்துகிறாள்? ஊழின் காட்டாறில் அடித்துச் செல்லப் படுபவர்களைக்கண்டு, ஏன் குய்யோ முறையோ என்று இவள் கதறுகிறாள்? என்று கேள்விகளையும் எழுப்பியுள்ளார் இசை. இந்தக் கேள்விகள் ஒளவையை நோக்கித் தொடுக்கப்பட்டவை அல்ல; வாசகர்களாகிய நம்மை நோக்கித் தொடுக்கப்பட்டவையேயாகும் எனலாம். இந்த மானுட வாழ்வு என்பது ஓர் ஒழுங்கில் இல்லை; ஆனால், இதை ஒருவித ஒழுங்குக்குள் இழுக்கிறாள் நம் பாட்டி என்று இசை கூறுவதிலிருந்து, எந்தக் காலத்துப் பாட்டியாக இருந்தாலும் சரி; ஒருவிதக் கட்டுப்பாட்டை ஏற்படுத்தி, அந்தக் கட்டுக்குள் நம்மை இழுப்பதையே நோக்கமாக வைத்திருப்பதென்பது வாசிப்பில் புலனாகும் செய்தியாகிறது. ‘களிநெல்லிக்கனி’ எனும் இந்நூலில், வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நூல்கள் மட்டுமல்லாமல், ஒளவையின் பெயரில் இடம்பெற்றுள்ள, ஏனையோர் இதுவரை படித்திராத,என்றுமே அறிந்திராத பற்பல நூல்களும் இடம்பெற்றுள்ளன என்பது கவனத்திற்குரியது. இத்துடன், இந்நூலின் பின்னிணைப்பில் இவரது கட்டுரைகளின் உட்பகுதியில் எடுத்தாளப்பட்டுள்ள பாடல் வரிகளின் முழுவடிவமும் இடம்பெற வைக்கப்பட்டுள்ளன. மேலும், பின்புற அட்டையில், எழுத்தாளர் பெருமாள் முருகனின் இந்நூல் குறித்த கருத்துநிலைப் பகுதியும் இடம்பெற்றிருப்பது மேலும் இந்நூலுக்கு வலுசேர்ப்பதாக உள்ளது.
’இது அதியன் ஒளவைக்கு அளித்த கனி அல்ல; ஒளவை நமக்கீந்த கனி. களிநெல்லிக்கனி’ என இசை அவர்கள் நூலின் என்னுரையில் கூறியிருப்பது சரியே என்று இந்நூலை ஆழ்ந்து வாசிக்கிற வாசகர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை எனலாம். l
previous post
