நேர்காணல்:
பேரா. பழமலய்
சந்திப்பு : ப்ரதிபா ஜெயச்சந்திரன்
புதிய புத்தகம் பேசுது இதழ் சார்பாக வணக்கங்கள். நவீன தமிழ் கவிஞர்களில் தவிர்க்க முடியாத ஆளுமையாக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களது இளமைக்காலம் எப்படி இருந்தது?
வணக்கம் ப்ரதிபா, உங்களுக்கும் இதழுக்கும். நான் தமிழ்க் கவிஞர்களுள் ஒருவன். மற்றபடி ‘தவிர்க்கமுடியாத ஆளுமையாக’ நான் என்னை நினைப்பதில்லை. இளமைக்காலம் என்பதை நான் பிறந்தது (1943) அல்லது முதல் வகுப்பு முதல் முதுகலை வகுப்பு முடித்தது வரை (1966) எனக் கொள்ளலாமா?
நான் சிற்றூர் உழுகுடி, மிகவும் பின்தங்கிய வகுப்பு. எத்தனையோ என்னைப்போன்ற இளைஞர்களுள் ஒருவனாகிய எனக்கும் சொல்லிக்கொள்ளுகிறமாதிரியான சுகங்களை அனுபவித்த ஓர் இளமை என்பது இல்லை. எங்கள் தந்தையார், அந்தக் காலத்தில் நான்காவது வகுப்பு வரை படித்தவர் – என்னை ஓர் என்ஜினீயராகப் பார்க்க ஆசைப்பட்டுத்தான் உழைத்துப் படிக்க வைத்தார். நானும் உயர்நிலைப் பள்ளியில் சிறப்புக் கணிதம், புகுமுக வகுப்பில் ‘ஏ’ பிரிவு – எனப் படித்தேன். தப்பித்தோம் பிழைத்தோம் கதைதான்; சராசரி மாணவன்!
கல்லூரியில் தமிழ் இலக்கியம் கற்க வேண்டும் என்கிற ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?
அப்போது கிளை நூலகத்திலிருந்து
பெ. தூரன், கவிமணி, நாமக்கல்லார் கவிதைத் தொகுதிகளை எடுத்துப் படித்திருந்தேன். அவற்றின் ஈர்ப்பு அதிகமானது. நான் புலவர் படித்திருக்க வேண்டியவன். தமிழ் இலக்கியக் கலை வகுப்புகள் படித்தேன்.
70-களின் கடைசியில் ஸ்வரம் என்கிற ஒரு கவிதை இதழில் உங்களது கவிதை ஒன்று பிரசுரம் ஆகியிருந்தது. அக்கவிதையின் தலைப்பு, ‘உங்களைப் போன்றவர்களை’ என்று இருந்தது. தமிழ் புதுக்கவிதையின் போக்கை நவீனப் படுத்துதலில் உங்களுடைய பங்கு சிறப்பானது என்று அனைவருக்கும் தெரியும். இந்த இடத்திற்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? 80களில் இருந்த கவிதைப் போக்கிற்கும் இப்போது நிலவுகிற கவிதைப் போக்கிற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
அப்போது தமிழ் கவிதைப் போக்கு என்பது சுரதா போன்றவர்களின் மரபுக் கவிதைப் போக்காகத்தான் இருந்தது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன் வந்தார்கள்; ‘புதுக்குரல்’ என்கிற புதுக்கவிதைப்போக்குத் தொகுதி எனக்கு அறிமுகமானது. புதுக்கவிதைப் போக்கை நவீனப்படுத்துவதில் என் பங்கு என்பது, எனக்குப் பழக்கப்பட்டிருந்த எங்கள் வாழ்க்கையை நான் எழுதியதுதான். எனக்கு முன்பே ஆங்கில இலக்கியம் பயின்ற பண்ணுருட்டி பழநி என்பவர் மானுட கீதம் (1977) என்னும் தன் கவிதைத் தொகுதியில், ‘கிராமியக் கவிதைகள்’ என எழுதியிருந்தார். அவரும் ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், படையாட்சி.
80-90களில் மரபுக்கவிதைப் போக்கு, சுயமரியாதை, பொது உடைமை என்பதாகவும், புதுக்கவிதைப் போக்கு அரசியல் அற்றதாகவும் இருந்தது. புதுக்கவிதையில், புது அரசியல் இல்லாமல் இருந்தது எனக்குக் கேள்வியாக இருந்தது. புதுக்கவிதை நகரமயமாகியிருந்தது…(ஞானக்கூத்தன்…) இவற்றுள் என் கிராமத்தைத் தேடினேன். இப்போது நிலவுகிற கவிதைப்போக்கும் (நகரம் சார்ந்தது) இதுவே என்று சொல்லலாம். இளைஞர்கள் நகரத்தை அல்ல, கிராமத்தை அல்ல, பிழைப்பைத் தேடுகிறவர்கள் ஆகிவிட்டார்கள். வாழ்க்கையின் விமர்சனம்தானே இலக்கியம்! எதார்த்தம், கனவுகளாக, கற்பனைகளாக இல்லை. காதல் திருட்டில்தான் நாடகம்! அரசியலில்தான் புனைவு!
சாகித்ய அகாடமி கவிதை வாசிப்பு நிகழ்வுகளில் நீங்கள் அதிகம் பங்கெடுத்து உள்ளீர்கள். அங்கே வாசிக்கப்படுகின்ற பிறமொழிக் கவிதைகளுக்கும் தமிழில் இப்போது காணப்படுகின்ற கவிதைகளுக்கும் என்ன வித்தியாசம் இருப்பதாக உணர்கிறீர்கள்?
மலையாளக் கவிதையை பாட்டாகப் பாடினார்கள், தெலுங்குக் கவிதை சொற்பொழிவாக இருந்தது. இப்போது தொடர்பில் இல்லாத நான் பிறமொழிக் கவிதைகள் பற்றி என்ன சொல்வது? தொடர்பில் உள்ளவர்கள் சொல்ல வேண்டும்.
உங்களுடைய படைப்புகளில் பொதுவாக, ஆவணப்படுத்துவதற்கு உண்டான போக்கு அதிகமாகக் காணப்படுகிறது, இது எப்படி உங்களுக்கு இயல்பாக வந்தது?
ஆவணப்படுத்துதல் – என்பது நடப்பியல். கவிஞர்கள் கனவு காண்பவர்கள், மனவெளியில் வாழ்பவர்கள் மட்டுமல்லர். நாம் அகப்பாடல் தொகுதிகளைப்போலவே புறப்பாடல் தொகுதிகளையும் போற்றிக் காத்து வருபவர்கள். அல்லாமலும், சிற்றூர்-பேரூர் என அறிய வந்த நான் அரசியல் பேசாமல் இருக்க முடியாது. நான் செத்தாருள் வைக்கப்பட்டவன் அல்லன்; வாழ்க்கையை எதிர்கொள்பவன்; பொது நன்மைக்காகப் போராடுபவன்.
கல்லூரிக் காலங்களில் உங்களுக்கும் உங்களுடைய மாணவர்களுக்கும் இருந்த உறவுமுறை எப்படிப்பட்டதாக விளங்கியது?
வகுப்புகளில் நான் பொது அறிவையும் போதித்தவன். பாதிக்கப்படும் மாணவர்கள், நான் அரசியல் பேசுவதாக முதல்வர்களிடம் முறையிட்டிருக்கிரார்கள்; வெளியில் காவலர்கள் என்னைக் கண்காணித்ததும் உண்டு.
பொதுவாக மரபுக்கவிதைகளையே எழுதிக் கொண்டிருந்த உங்களுக்கு புதுக்கவிதை எழுதக்கூடிய நோக்கம் எப்படி வந்தது?
நம்முடைய மரபுப் பெருமிதங்கள் நமக்குத் தூக்கிச் சுழற்றமுடியாத வாள்களாக இருந்துகொண்டிருக்கக் கூடாது; கைத்துப்பாக்கிகளாக மாறவேண்டும் என்கிற புரிதல் உடையவன் நான். ‘துப்பாக்கி முருகன்’ என்றொரு புதுக்கவிதையையும் நான் எழுதினேன். மரபுக்கவிதைகள் புலமையோருக்கு உரியது. புதுக்கவிதை என்னும் உரைநடைக் கவிதை பொதுவான படிப்பாளிகளுக்கு உரியது. அமெரிக்கக் கவிஞர் வால்ட் விட்மன் வசனக் கவிதை எழுதியது, வேறு ஒன்றும் இல்லை, கவிதையை சனநாயகப்படுத்திய வேலைதான்.
இந்தியாவில் உள்ள பிறமொழி இலக்கியங்களைவிட தமிழ் மொழி இலக்கியங்கள் எவ்வாறு மேம்பட்டு இருப்பதாக அல்லது தொய்வுடன் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
இந்தியாவில் செம்மொழிகளாக அறியப்படுவன பல. வங்காளிகளும் மலையாளிகளும் புதிய படிப்பாளிகள். நாம் பழைய படிப்பாளிகள். சங்கதம் எனப்படும் சமஸ்கிருதமும் அறிந்தவர்கள் நம் கவிச்சக்கரவர்த்திகள். இன்றைக்கும் நாம் இலக்கியப் போட்டிக்களத்தில் இருப்பவர்கள்தான். தமிழ்ப்படைப்புகளுக்கு உடனுக்குடனான மொழிபெயர்ப்புகள் இல்லாதது ஒரு குறைதான்.
பரிதிமாற்கலைஞர் ‘பாசுரங்கள்’ என ஈரேழ்வரி சானெட்டுகள் எழுதினார். இன்றைக்கும் ‘அய்க்கூ’ எழுதித்தான் தமிழில் ஒருவர் கவிஞர் என்று அறிமுகமாகிறார். எதில் எப்படியோ, நாம் இலக்கியத்தில் பின்தங்கி விடாதவர்கள்.
இப்போது தமிழில் பெண் கவிஞர்கள் நிறைய எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்களாக நீங்கள் யாரை எண்ணுகிறீர்கள்? அவர்களால் சொல்ல விடுபட்டுவிட்டதாக நீங்கள் எவற்றை உணருகிறீர்கள்?
எல்லாத் துறைகளிலும்போல இலக்கியத் துறையிலும் பெண்கள் தங்கள் இடங்களைப் பிடிப்பது இயல்பானதே. அவ்வையார் என்றும், ஆண்டாள் என்றும், காரைக்கால் அம்மையார் என்றும் வரலாறு படைப்பவர்கள் அவர்கள். மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, புதிய மாதவி, இளம்பிறை, க்ருஷாங்கினி, ஆண்டாள் பிரியதரிசினி, தாமரை…யாருடைய கவிதைகளும் அரசியல் பேசுவதிலேயே ஒரு நிறைவை – முழுமையை அடைபவை.
உங்களுடைய கவிதைகள் எல்லாம் செல்ஃப் போர்ட்ரைட் (self portrait) என்பது போன்று அனைவராலும் அவதானிக்கப்படுகின்றன. இந்த உத்தியை நீங்கள் எங்கிருந்து எடுத்துக்கொண்டீர்கள்?
ஆவணம் என்பது பொதுவானது, தன் ஓவியம் என்பது தனிப்பட்டது. ஒருவர் பொது மனிதராகப் பதிவாவதைப் போலவே தனி மனிதராகவும் பதிவாக வேண்டியவர். எனக்கு என் ‘சனங்களின் கதை’யும் உண்டு, ’என் கதை’யும் உண்டு. இந்தவகை எனக்கு எங்கிருந்து வந்தது? பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்கிற வரலாற்றுப் போக்கிலான இலக்கியப் பயிற்சியால் எனக்குள் நேர்ந்தது இது. பாரதியார் ‘சுய சரிதை’ பாடினார். நாமக்கல்லார், ‘என் கதை’ எழுதினார்.
பல்வேறு மொழிகளில் எழுதும் இலக்கிய கர்த்தாக்கள் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் சுமுகமான உறவில் இருந்ததாக நாம் பார்க்கிறோம்; அப்படி உங்கள் சக கவிஞர்களோடு எந்தவகையான தொடர்பில் இருக்கிறீர்கள்?
ஏன்? யாரோடும் எனக்குப் பகை இல்லை. சுமுக உறவில் இல்லாதவர் இலக்கியக் கர்த்தாவே இல்லை. ‘யாவரும் கேளிர்’ என்றவர் கணியன் பூங்குன்றனார். ஒரு பாடல்தான். எப்படிப்பட்ட மேதை அவர்! அதிகம் பேசாதவர்! ஆழமானவர்!
வானம்பாடிகள் என்று அறியப்பட்ட கவிஞர்கள் ஓர் இயக்கமாக கவிதைகளை வளர்த்தெடுத்தார்கள்; அவர்களோடு உங்களுக்குள்ள தொடர்பு எப்படிப்பட்டதாக இருந்தது?
’வானம்பாடிகள்’ ஓர் இயக்கமாக இயங்கியதே வரவேற்புக்கு உரியது. பெருங்கவி சிற்பி தொடர்ந்து நடத்தினார். அவர்கள் ‘புரட்சி வேள்வி’ நடத்தினார்கள். எனக்குப் புரட்சி புரட்சியாக இருக்க வேண்டும். அவர்களோடு இன்றும் நல்ல தொடர்பில்தான் இருக்கிறேன். தமிழ்நாடன், இன்று ஞானி இல்லை, புவியரசு இருக்கிறார், கனல் மைந்தன் (அக்கினி புத்திரன்) இருக்கிறார். பொதியவெற்பன், நாஞ்சில் நாடன், க.வை. பழநிச்சாமி எனக் கோவையில் இருக்கிறார்கள். தருமபுரியில்- பெங்களூருவில் பிரம்மராஜன்.
உங்கள் கவிதைகளில் சங்க இலக்கியக் கூறுகளை நாம் பார்க்க முடியும்; தமிழ்ப்பேராசிரியரான உங்களுக்கு அது இயல்பாகவே வந்து வாய்க்கிறதா?
ஆமாம், சார்ந்ததன் வண்ணமாதல்.
ஆங்கிலத்தில் கவிதைகளுக்கும் கவிதை நூல்களுக்கும் இருக்கிற வரவேற்புபோல இன்றைக்கு தமிழ்க் கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதா?
ஆங்கில மொழியில் அண்மை நூற்றாண்டுகளில்தான் கவிஞர்கள். கொட்டாவி விட்டதெல்லாம் கூறுதமிழ் பாட்டு – என்றார் சொ.வி. எத்தனை தனிப்பாடல்கள்! சித்தர் பாடல்கள்! தமிழில் ஒருவர் கவிஞராக இருப்பதற்கு கம்பனை, வள்ளுவனை, இளங்கோவை வெல்லவேண்டும். ஒரு ‘யாதும் ஊரே’ பாட்டுக்கு இணையாக ஒரு பாட்டு சொல்ல வேண்டும். இன்று ஈரோடு தமிழன்பன், இன்குலாப், அப்துல் ரகுமான், பட்டுக்கோட்டை, கண்ணதாசன்… சிறுகதை, புதினம் என்று வருபவற்றிற்கும் ஈடு கொடுக்க வேண்டும், இருக்கிறார்கள்; வரவேற்பும் இருக்கிறது. தமிழ் கடல். எவ்வளவுதான் காயம் கரைக்க முடியும்!
வணிக நோக்கில் இன்று கவிதைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
இன்றைக்குப் புதியன என்றால் சிறுகதை, புதினம், குறுங்கதை. வணிகம் என்று எதிர்பார்த்து இன்று கவிதை – ஒரு அய்க்கூ தொகுதி – வெளியிட முடியாது. அன்பளிப்பாகத்தான் வழங்க வேண்டும்! கவிதை ஒரு பரிசுப்பொருள் ஆகிவிட்டது.
கவிதைகள் தவிர தர்மபுரி மாவட்டத்தைக் குறித்து விரிவாக ஆய்வுநூல் ஒன்று வெளியிட்டிருக்கிறீர்களே, அது எப்படி எழுதத் தோன்றியது?
உண்மையில் நான் உரைநடையில்தான் நிறைய எழுதியிருக்கிறேன். கவிதைகளேகூட உரைநடைக் கவிதைகள்தாமே!
ஒரு கவிஞன் – எழுத்தாளன் – மானுடவியல் ஆய்வாளனாக இல்லாவிட்டாலும் ஆர்வலனாகவாவது இருக்க வேண்டும். இந்தப் புரிதலே, நான் நீரிடங்கள், நரபலி, தருமபுரி என எழுதியதற்குத் தூண்டுதல் தந்தது. மற்றபடி அவை முழுமையானவை அல்ல; நிறைய விடுபடல்கள் உண்டு.
இலக்கியம் காலம்தோறும் அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறது. தமிழ்க் கவிதைகளின் அடுத்த கட்ட நகர்வு எப்படிப்பட்டதாக இருக்கும்?
ஈரோடு தமிழன்பன் இயங்கிக்கொண்டே இருப்பவர் – சென்ரியு, அய்க்கூ .. என வந்து நிற்கிறார். அடுத்த கட்ட நகர்வு என்றால், அது அறம் செய விரும்பு, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் – என அவ்வைப்பிராட்டியாரின் குறுகத் தறித்தலாகவே இருக்க முடியும். பிறகு வரலாறு திரும்பும்!
நவீனமயமாகிக் கொண்டிருக்கும் இந்த உலகில் கவிதைகளிலும் புதிதான படிமங்களும் சொற் பிரயோகங்களும் பயின்று வருவதை நாம் பார்க்க முடியும். அப்படிப்பட்ட புதிய போக்காக எந்தக் கவிதைகளை அல்லது யார் எழுதும் கவிதைகளை நீங்கள் சொல்வீர்கள்?
புதிய கவிதைகள் என்றால், புதிய படிமங்களும் சொல்லாட்சிகளும் இல்லாமலா? தருமு சிவராம் போன்றவர்கள் நாளைக்கும் வருவார்கள். அவற்றைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். அண்மையில் ‘மணல்வீட்டில்’ வந்துள்ள பிரம்மராஜன் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பலமுறை படித்தாலும் புரியாதவை. எழுதியவருக்கு மட்டுமே புரிவதாக – அல்லது அவருக்கும் புரியாததாக- ஓர் எழுத்து இருப்பதில் உள்ள குறை, அது, உடனடியாக யாருக்கும் பயன் தருவதாக இல்லாமல் இருப்பதுதான். எழுத்து, இலக்கியம், தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக இருக்க முடியாது. இருக்கிறதே என்றால் இருக்கிறது.
நவீனமயமாதலில் இன்றைய இலக்கியம் அறச்சிதைவுக்கு உள்ளாகியிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
ஏகாதிபத்தியம், உலகமயம், நுகர்வியம், நவீனமயம் என்பவை தவிர்க்க முடியாதவை; தடுக்க முடியாதவை. இதில் அறச்சிதைவு என்பது ஒரு துறையில் மட்டுமே நேர்வது அன்று. ஒட்டுமொத்த மனிதகுலமே எதிர்கொள்ள வேண்டியது இது. இதற்கு அறச்சீற்றம், காலந்தோறும் கற்பிக்கப்பட வேண்டிய ஒன்று. அதைக் கலை இலக்கியமே செய்ய முடியும். ஏனென்றால் இதயம் உடையவர்களாலேயே வயிற்றை அறிய முடியும்.
உங்கள் தலைமகன் மருத்துவர் லெனின் அவர்களின் இழப்பை நீங்கள் எப்படிக் கடந்து வந்திருக்கிறீர்கள்?
எங்கள் தலைமகன் மருத்துவர் லெனின் இழப்பு எதிர்பாராது நடந்துவிட்டது. எதிர்கொள்ளும் எதையும் தாங்குவதும் நான் பயின்றது. பிறகு ஏடு எதற்கு? இலக்கியம் எதற்கு? வள்ளுவன் எதற்கு? கணியன் எதற்கு? திருமந்திரம் எதற்கு? தாய்தான் பாவம்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று நம் இலக்கியங்கள் பேசுகின்றன; ஆனால் இன்றைய உலகில் சாதி சங்கங்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்துவருகிறதே… இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
சாதிகளைப் பற்றிய சரியான புரிதல் இருந்ததால்தான் அண்ணல் அம்பேத்கர் சாதி ஒழிப்பைப் பற்றிப் பேச முடிந்தது. சாதிச் சங்கங்கள், உறுப்பினர்களுக்கு இந்தப் புரிதல் உதவ வேண்டும். சாதிச் சங்கங்கள் தவறு இல்லை, தன் முன்னேற்றமே குறியாக இருக்கிற தலைமைகள்தான் பின்னடைவு. இது காலப்போக்கில் சரிசெய்யப்படக் கூடியதே.
அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தமிழில் தலித் இலக்கியம் ஒரு வீச்சுடன் வளர ஆரம்பித்தது. அதை எப்படி நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்? இதுபோல் இடைநிலை சாதிகளும் தங்களது, தங்களுக்கான இலக்கியத்தை வளர்த்தெடுத்துக்கொள்வது என்று இறங்கிவிட்டால் சமத்துவம், சகோதரத்துவம் எப்படி நிலவ முடியும்?
சாதிய சமுதாயத்தில் தலித்துகள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். பிற சாதியாரும் பாதிப்புக்கு உள்ளாகி வருபவர்கள்தாம். அவரவர் விடுதலைக்கு அவரவர் இயக்கங்களும் இலக்கியங்களும் உதவ வேண்டும். ஒட்டுமொத்த விடுதலையைப் புறக்கணித்து, ஒரு பகுதி விடுதலை என்பது சாத்தியமே இல்லாதது. அவரவர் தலை நோவு அவரவர்களுக்கு. மருந்து நஞ்சாக இல்லாமல் மருந்தாக இருக்க வேண்டும் என்பதே நம் வற்புறுத்தலாக இருக்க வேண்டும்.
இவர்களெல்லாம் தமிழ்க்கவிதையின் போக்கை மாற்றியவர்கள் என்று நீங்கள் யாரையெல்லாம் குறிப்பிடுவீர்கள்?
கவிதைகளின் போக்கு என்பதில், உருவம் உள்ளடக்கம் அடங்கும். உருவம் யாப்பு; உள்ளடக்கம் பேசுபொருள். திருவள்ளுவர் குறட்பாக்களைக் கையாண்டதும், திருநாவுக்கரசர் தாண்டகம் என்னும் விருத்தப்பாக்களை அறிமுகப்படுத்தியதும்; அருணகிரிநாதர், அண்ணாமலை ரெட்டியார் செய்தவையும் உருவ வகையிலான போக்கு மாற்றங்கள்தான். இப்படியே, நீதி, சமயம் என்பன பேசுபொருள்கள்.
உள்ளடக்க வகையிலான போக்கு மாற்றம் வள்ளலாராலும், பாரதியாராலும் நேர்ந்திருக்கின்றது. பாரதியார் அய்க்கூ செய்யவில்லை, வசனக் கவிதைகள் செய்தார். பாரதிதாசனார், சுயமரியாதை, பொதுவுடைமை எனப் புதியன விரும்பினார், பாடினார்.
அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயக்கர் என்று ஒருவர் (1799-1897) நூறு ஆண்டுகள்போல வாழ்ந்தவர். 1882-இல் ‘இந்துமத ஆசார ஆபாச தரிசினி’ என்று ஒரு நூலை வெளியிட்டார். சித்தர்கள் போக்குதான், இவரோ நவீன சித்தர்.
802 செய்யுள்கள், பாட்டுக்குப் பாட்டு சீர்திருத்தம். வள்ளலார் காலம்; வள்ளலார் மிதவாதி என்றால் இவர் தீவிரவாதி. நான் அறிந்து தமிழ்க்கவிதையின் போக்கை அதிரடியாக மாற்றியவர் இவர் ஒருவரே. புதுக்கவிதை என்றால் இன்குலாபைச் சொல்ல வேண்டும். சமரசம் இல்லாமல் எழுதியவர்.
என் கதை என்கிற சமீபத்திய உங்களது சுய சரிதை குறித்து – அதில் சொல்லப்பட முடியாத அல்லது சொல்ல விட்டுப்போன என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன என்பதைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
என் கதை என்கிற தன் வரலாறு, நான் கோவணத்தோடு நிற்பது! இதில் நான் காட்டாதது எதை என்று நான் சொல்லத்தான் வேண்டுமா?
உங்களது கவிதைகளில் கவிதைத் தன்மை வெளிப்படுவதைவிட, உரைநடைத் தன்மை அதிகம் காணப்படுகிறது. இதை உங்களுக்கான கவிதை உத்தியாக எடுத்துக்கொள்ளலாமா?
கவிதைத் தன்மை என்பது இளமை. உரைநடைத் தன்மை என்பது முதுமை என்பது, வயதைக் கடந்தவனிடம் நீங்கள் இளமையை எதிர்பார்க்கக் கூடாது. என்னிடம் இளமையிலேயே ஒரு முதுமை இருந்தது என்பதும் மெய்தான்! அது உத்தியா என்ன? வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் என்றார் கவிஞர் கண்ணதாசன். ஆயிரத்தோரு இரவுகள் என்று அரபிக் கதைகள்.
நான் என் கவிதைகளில் அப்பட்டமான (பொருள்: கலப்பற்றது, தெலுங்குச் சொல்) உரையாடலைக் கொண்டுவர முயன்றுள்ளேன். சிறுகதை, புதினத்தில் இருக்கும்போது, கவிதையில் மட்டும் இல்லாமல் இருந்தால் எப்படி? இது கவிதையை நடைமுறை வாழ்க்கையிலிருந்து தொலைவுபடுத்தியது; இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டியது இல்லையா?, செய்தேன்.
என் கவிதைகளின் கவிதைத் தன்மை பற்றியும் சொல்ல வேண்டும். எதில்தான் கதை இல்லை? குரோட்டன்சுகளோடு கொஞ்ச நேரம், புறநகர் வீடு தொகுதிகள் நான் கூறிய கதைகள்தாம். கதைகள் என்றும் நான் சில எழுதியிருக்கிறேன். ஈழ எழுத்தாளர் எஸ்.பொ. மித்ர வெளியீடாக வெளியிட்டு மகிழ்ந்தார்.
எழுத்தாளர் இராசேந்திர சோழன் என்னைத் தன் வரலாறு எழுதக் கேட்டுக்கொண்டார். அப்போது என் பதில், ‘என் கவிதைகளே என் வரலாறு தானே!’ என்பதாக இருந்தது. அந்த அளவுக்கு நான் வெளிப்படை. கவிதைதான் ஒளிவு மறைவு இல்லாததாக இருக்க முடியும். அப்படி இருப்பதே என் கொள்கை.
அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர் ஒரு விமர்சனக் கவிஞர் என்று சொன்னேன். அதை அவர் உரைநடையில் எழுதியிருக்கலாம். வெகுமக்களைச் சென்று அடைந்திருக்கும்.
நான், அம்பேத்கர், தருமபுரி கோபால் செட்டியார் எழுதிய தன் சாதியான், சேனைத் தலைவர் வரலாறு மற்றும் அவர் எழுதிய ஆதி திராவிடர் வரலாறு போன்றவற்றைப் படித்துவிட்டு, என் சாதியைப் பற்றி ‘வரலாற்றில் வன்னியகுல சத்திரியர்கள்’ எழுதத் தொடங்கி, எழுதி ஒரு மூன்று தொகுதிகளாக வெளியிட உள்ளேன். கவிஞருக்கு இந்த வேலை ஏன் என்று சிலர் புருவம் உயர்த்தலாம்.
சாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்தி வருகிறோம். அது இல்லாமல் முழுமையான சமூக நீதி இல்லை; இட ஒதுக்கீடு இல்லை. இட ஒதுக்கீட்டால்தான் இந்த அளவு முன்னேறி வந்தவன் நான். ஒரு நன்றிக்கடன் வேண்டாமா? இதில் ஒருவர் வெட்கப்பட ஒன்றும் இல்லை.
இதற்கு ஒதுக்கிய ஆண்டுகளில் நான் நிறைய கவிதைகள் எழுதியிருக்கலாம். ரசூல் கம்சதேவ் என்கிற ஆவார் மொழிக் கவிஞர், நாற்பது தொகுதிகள் வெளியிட்டுள்ளாராம். அண்மையில் (2024) பேரா. சே. கோச்சடை, ‘என் தாகெஸ்தானை’ மொழிபெயர்த்துத் தந்துள்ளார்.
இனி என் குறை காலத்தில் நான் எழுத என்ன இருக்கிறது? ஆன்ற (நிறைந்த) பிறகு அவிந்து அடங்குவதுதான் உயிரியற்கை. ஆனாலும் என்னைப் போன்றோர்கள் சும்மா இருக்க முடியாது. செயல் ஓய்வு சிந்தனை ஓய்வாக இல்லை.
யாதும் ஊரே யாவரும் கேளிர் – என்னும் கணியன் பூங்குன்றன் பாட்டில் இப்படி பத்து இருக்கின்றன. அறம் செய விரும்பு, ஆறுவது சினம் – என அவ்வையார் பாடல்.
இவை சொற்கள், ‘கடைசிச் சொற்கள்’ போன்றவை. இவை சாறு. சாறு பழமாகாது. பழந்தான் பழம். ஒன்றை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திச் சொல்வதுதான் கதை. கவிதையும் அதுவே. அதுவே, நிறமும் சுவையும் மணமும் உள்ள பழம்.
நான் ‘ஒரு படித்தவனின் குறிப்புகள்’ எனத் தொடர்ந்து எழுதி வைத்து வருகிறேன். எனக்கு மடக்கி மடக்கி எழுதும் புதுக்கவிதைக்கும் உரைநடைக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விட்டது. என் ‘நடை’ இப்படித்தான் நடந்து முடிந்திருக்கிறது.
இந்த வயதில் நல்ல வேலையை நன்றாக வாங்கிவிட்டீர்கள். மீண்டும் நன்றி. இப்போதைக்கு விடை பெறுவோம். l
