கணேசன் என்கிற அரசு ஊழியரின் வாழ்க்கையில் நடக்கும் யதார்த்தமான நிகழ்வுகள். ஒரு மனிதன் நேர்மையாகவும், பொறுப்போடும் செயல்பட வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் வேலை பார்க்கிறான். அவன் சந்திக்கும் போராட்டங்களையும் சவால்களையும் இயல்பாகச் சொல்லிக்கொண்டே போகிறார் ஆசிரியர். கதை முழுவதும் கணேசன் என்கிற தனி நபரின் கோணத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.
கல்வியே சுமையாகப் போய்விட்ட நிலையில் தனது ஒரே மகனிடம் அவனுடைய கடமைகளை வலியுறுத்த வேண்டிய தகப்பனாகத் தன்னுடைய இயலாமையை எண்ணி, நாயகன் தடுமாறும் காட்சியில் கதை ஆரம்பிக்கிறது. வேலைக்குச் செல்லும் மனைவி, பதவி உயர்வை ஏற்றதால் வெளியூர் போஸ்ட்டிங் கிடைத்து தினமும் நீண்ட தூரம் இரயில் பிரயாணம் என்று செல்கிறது கணேசனின் வாழ்க்கை. இரயில் சிநேகிதர்களும், கணேசனின் புத்தகங்களும் அவனுக்கு ஆறுதல் தருகின்றன. அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஊழியர்களில் சிலர் ஒத்துழைத்தாலும் சிலர் தொந்தரவு தருகிறார்கள். இந்தத் தொந்தரவுகள் ஆசிரியர் அமைக்கும் சில காட்சிகளால் தெளிவாகக் காட்சிப்படுத்தப் படுகின்றன. தனக்குக் கீழே வேலை செய்வோரிடம் பரிவோடு பேசி, தேவையான சமயங்களில் அதிகாரத்தை உபயோகித்தும் வேலை வாங்கத் தெரியவேண்டும் என்பதோடு உயர் அதிகாரிகளை அனுசரித்துப் போகவேண்டியதும் சேர்ந்துகொள்கின்றது. இரண்டுமே பெரிய தலைவேதனை தரும் செயல்கள்தான். இருந்தாலும் நீரில் வாழும்போது நீந்தத் தெரிந்துகொண்டே ஆகவேண்டிய கட்டாயம் இருக்கிறதல்லவா? அதே போல கணேசன் தேவையான இடங்களில் விட்டுக் கொடுத்துச் சில குறைபாடுகளைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொள்வதோடு அதே சமயத்தில் தனது நெறிமுறைகளில் பிறழாமலும் வாழ முயற்சி செய்கிறான். கணேசனின் வாழ்க்கையில் தினம் தினம் எத்தனை எத்தனை பிரச்சினைகளை அவன் எதிர்கொள்ள நேரிடுகிறது! இருந்தாலும் பொறுமையாகக் கையாள்கிறான். உதாரணமாக அவர்கள் வீடு இருக்கும் பகுதியில் தவறான நோக்கத்தில் இயங்கும் ஒரு வாடகை வீட்டில் வசிப்பவர்களை எப்படிக் காலி செய்ய வைப்பது என்கிற பிரச்சினை. எப்படி எப்படியெல்லாமோ தீர்வை யோசித்துத் தடுமாறிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத திசையில் இருந்து வரும் உதவி, பிரச்சினையைத் தீர்த்துவைக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல் திண்டாடும் நாயகனின் தவிப்பை ஆசிரியரின் எழுத்து சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.
அதேபோலத் தந்தைக்கு உடல்நலம் குன்றுவதால் திடீரென விடுமுறை எடுத்துக் கொண்டு செல்லும் கணேசனின் மனம் பாசத்துடன் உருகுகிறது. அண்ணன் வீட்டில் இருக்கும் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக் கொள்ள முடியவில்லை என்கிற குற்ற உணர்வு அவனை வதைக்கிறது. வேலைக்குப் போகும் மனைவி இருப்பதால் அவர்களைத் தன்னால் கவனித்துக்கொள்ள முடிவதில்லை என்கிற சமாதானத்தை மனம் கூறினாலும் குற்ற உணர்வு குறைவதில்லை. தந்தையைப் பற்றி நினைக்கும் போது அவனுடைய நினைவுகளில் எழுகின்ற நண்பனான கணபதியின் அனுபவம் அவனுடைய வருத்தத்தை இன்னமும் அதிகமாக்குகிறது. தன் தந்தையால் எவ்வளவோ சங்கடங்கள் எழுந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு அவரைத் தன்னுடன் வைத்துப் பார்த்துக்கொண்ட கணபதியின் குணத்தை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்தக் காட்சிகளின் ஊடே வருகின்ற சில கருத்துகள், முதியோர் இல்லங்கள் பற்றிய ஆசிரியரின் சிந்தனையைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஒரு நாள் உணவு முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்கிறான் கணேசன். அந்த சமயத்தில் அங்கே அவன் கவனிக்கும் சில சம்பவங்களை மிகவும் இயல்பாகவே காட்டியுள்ளார் ஆசிரியர். இன்றைய காலகட்டத்தில் முதியோர் நிலையினைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது கதையின் இந்தப் பகுதி. ஹபிபுல்லாவின் கிளைக்கதை ஒரு பக்கம் மனதைச் சங்கடம் செய்கிறது. இரண்டு மனைவிகளுடன் அவன் படும் கஷ்டங்கள், இறுதியில் ஹபிபுல்லாவின் மரணத்திற்குப் பிறகு பணத்துக்காக அலையும் இரண்டாம் மனைவியின் மகனின் நடவடிக்கைகள் எரிச்சல் மூட்டுகின்றன. அடுத்ததாக அண்ணாச்சியின் கதை நம்மைக் கலங்க வைக்கிறது. ஒழுக்கமாக வாழும் மனிதரின் வாழ்வைச் சீரழிக்க அவருடைய நடுத்தர வயது சபலத்தைக் குறிவைத்து ஒழுக்கம் பிறழ வைக்கிறார்கள் அவருடைய எதிரிகள், தங்களுடைய முயற்சியில் வெற்றியும் அடைகிறார்கள். அண்ணாச்சியின் முடிவும் பரிதாபமாகவே முடிகிறது. பதவி உயர்வுடன் சொந்த ஊருக்கே திரும்பும் கணேசன், அந்த அலுவலகத்திலும் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி நேர்கிறது. இருந்தாலும் மனைவி சுசீலா மகிழ்ச்சி அடைகிறாள். அந்த மகிழ்ச்சியும் குறுகிய காலத்திலேயே முடிவடைந்து மீண்டும் வெளியூர் போஸ்ட்டிங். புதிய அலுவலகத்தின் புதிய சூழ்நிலைகளில் வேறுவிதமான சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது. இருந்தாலும் இரயில் பயணத்தில் பழைய நண்பர்களைச் சந்திக்கப் போகும் மகிழ்ச்சியுடன் புதிய சவாலைச் சந்திக்கத் தயாராகிறான்.
இடைஇடையே சில கதாபாத்திரங்கள் சுவாரசியத்தைக் கூட்டின. மருது பாத்திரத்தின் தமிழ்ப் பற்று என்னுடைய கவனத்தை ஈர்த்தது. தமிழாசானின் மகனாகப் பிறந்து வளர்ந்தாலும் தாமதமாகவே அவருக்கு வரும் தமிழ் ஈடுபாடு சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல பியூனாக வரும் இலட்சுமணன் கதாபாத்திரம் எனக்குப் பிடித்தது. இலட்சுமணன் மற்றும் கணேசனின் உரையாடல்கள் சுவாரசியமாகவே அமைக்கப்பட்டிருந்தன.
இலட்சியங்கள் நிறைந்த பாதையில் பயணிக்கும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையின் ஒரு சாதாரண தினத்தில் ஆரம்பிக்கும் கதை அதேபோன்று ஒரு சாதாரண தினத்தில் முடிவடைகிறது. நடுநடுவே அந்த மனிதனின் அலுவலகங்களில் நடக்கும் நிகழ்வுகள், இல்லத்தில் நடக்கும் நிகழ்வுகள், அவருடைய பெற்றோர் பற்றி அவனுடைய உணர்வுகள், அவனுடைய இரயில் பயண நண்பர்கள் என்று பலவற்றையும் கலந்து நமக்கு ஒரு நாவலாகப் படைக்கிறார் ஆசிரியர். ஒரு சாதாரண வாழ்க்கையை அசாதாரணமாகக் காட்டுகிறது ஆசிரியரின் எழுத்துத்திறன். பல்வேறு கோணங்களில் மனித உணர்வுகளையும், மனப்பிறழ்வுகளையும், உறவுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளையும் அலசி இருக்கிறார் ஆசிரியர். அதுவும் இலட்சியவாதியான அந்த மனிதன், தன்னால் முடிந்தவரை தனக்கு நம்பிக்கையுள்ள கொள்கைகளில் இருந்து பிறழாமல் எப்படித் தன்னுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறான் என்று கதையினூடே காட்டுவதன் மூலம் உலக வாழ்க்கையில் நமக்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். ஓர் அரசு அலுவலகத்தில் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கை என்னவெல்லாம் பிரச்சினைகளை எதிர்நோக்கும் என்று நமக்குத் தெரிய வருகிறது. ஓர் அரசு அலுவலகம் இப்படித்தான் இயங்கும் என்றும் நமக்குப் புரிந்து விடுகிறது.
கதாசிரியரின் சொற்களையே இந்த சமயத்தில் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். பரந்துபட்ட சமத்துவ மனிதநேய சிந்தனைகளை உள்ளடக்கிய நாவல் இது. லட்சியவாதம் தோற்றுவிட்டது என்றும் காலாவதியாகிவிட்டது என்று எண்ணுவோருக்கும் லட்சியவாதம் என்றும் காலாவதி ஆவதில்லை என்றும் அதுவே மனித சமுதாயத்தைத் தூக்கி நிறுத்த உதவும் தத்துவ யதார்த்த நடைமுறை என்றும் நம்பிக்கை தீபம் ஏற்றி வைக்கிறது இந்தக் கதை. குறிப்பிட்ட காலகட்டத்தின் யதார்த்த வாழ்வியல் நடைமுறை சார்ந்த கண்ணோட்டத்தில் மற்றும் புரிதலில் இந்த நாவலை அணுக வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார் ஆசிரியர்.
இந்த யதார்த்தம் வாசகர் மனதைக் கட்டிப்போட்டு நிச்சயமாக நிலைபெறும் என்று நம்புகிறார். அவருடைய நம்பிக்கைக்குத் தலை வணங்குகிறேன். அதே நம்பிக்கையுடன் மீதமுள்ள வாழ்க்கையைத் தொடர என்னை ஊக்குவிக்கிறது இந்த வாசிப்பு. ஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். தரமான நாவலைப் பிரசுரித்து நல்ல எழுத்தாளர்களுக்கு ஆதரவு தரும் பாரதி புத்தகாலயத்திற்கும் எனது வாழ்த்துகள். l
previous post
