வட்டார வழக்கு படைப்புகள் வரிசையில் உயிர்ப்பான புதிய வரவு, ‘உயிர் சுருட்டி’ புதினம். வேதாரண்யம் பகுதியின் அசலான வாழ்க்கையை மண்சார்ந்த மொழியில் படைத்தளித்துள்ளார் நூலாசிரியர் கனிமொழி. வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் புகையிலை வேளாண்மையைக் கருவாகக்கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. புகையிலை காரமானது என்றாலும் அதனைப் பயிர் செய்யும் வேளாண் மக்களது வாழ்வியல் சூழலும் பாடுகளும் கசப்பும் உவர்ப்பும் மிகுந்த தாகவே உள்ளது என்பதை அம் மக்களது இயல்பான மொழி நடையிலேயே நம்முடன் உரையாட வைக்கிறார் நூலாசிரியர். கதைப் போக்கும் காட்சிகளும் வேதாரண்யம் பகுதியின் முழுமையான சமுதாயச் சித்திரிப்பாக அமைந்துள்ளன.
பூவெடுத்தல், புகையிலை பயிரிடல் என அமையும் இந்தப் பகுதியின் வேளாண் நடவடிக்கைகளில் தொழிற்படும் சமூக, பொருளாதாரப் பின்னணிகள் – நிலவுடைமை, நிலமற்றோர் புகையிலை பயிரிட நிலத்தைப் பெறும் முறை, விதைப்பு, விதைப்புக்கு முந்தைய செயற்பாடுகள், விதைப்புக்குப் பிந்தைய பராமரிப்பு, அறுவடை,தொழிலாளர்களின் நிலை, விளைச்சலைச் சந்தைப்படுத்துதலில் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், கடன் பெறுதல், கடனை அடைத்தல், இவற்றில் பெறும் இலாப நட்டங்கள், அவற்றின் தாக்கங்கள் என அனைத்து உள்ளூர் அம்சங்களும் துலக்கமாகக் காட்சிப் படுத்தப்பட்டிருப்பது நாவலின் தனிச்சிறப்பு.
இந்த நாவலில் இடம்பெறும் முருகையன், சீதா, ஆனந்த், பாலு, வேலு, கண்ணு, வியாபாரி, பெரிய வாத்தியார், சின்னப்ப வாத்தியார், கண்ணாடி வாத்தியார், ஆனந்தின் நண்பர்களான ராஜூ, அருண், சித்திரம், அவன் மனைவி மகள், கருப்பசாமி, ஊர்த் தொழிலாளிகள் முதலான பலரும் நாம் அன்றாடம் காணும் சராசரியான எளிய வாழ்க்கையை நகர்த்துவதற்கே அல்லல்படும் அசல் மனிதர்களின் பிரதிகளாகவே கதையோட்டத்தில் பயணிக்கின்றனர்.
எளிய, அழகிய சொலவடைகள், உவமைகள், ஆரவாரமற்ற எதார்த்தமான மொழிநடை, கதையை எடுத்துரைக்கும் பாங்கு ஆகியவை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகப் பிணைந்து நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருவதுடன் வாசகனை எளிதில் கதையோடு ஒன்றவும் செய்கின்றன.
குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்த வாழ்க்கையைப் பேசும் படைப்புகளுக்கு நம்பகத்தன்மையையும் மண்சார் அடையாளத்தையும் தருபவை அந்தந்த வட்டாரம் சார்ந்த வாழ்வியல் கூறுகள்தாம். இந்த வகையில் வேதாரண்யம் வட்டாரம் சார்ந்த நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், வழிபாடுகள், தெய்வங்கள், கலீத்தையா வழிபாடு, திருவிழா, திருவிழாச்சந்தை, ஆடல்பாடல், சாப்பாட்டுக் கடைகள், பேய் குறித்த நம்பிக்கை, மரங்கள், செடிகொடிகள், குளங்கள், தோப்புகள் முதலான பல வாழ்வியல் கூறுகள் கதையோட்டத்தில் பொருத்தமான இடங்களில், மிக எதார்த்தமாகவும் உயிர்ப்புடனும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புகையிலை வேளாண்மைசார்ந்து விரிவாகப் பேசினாலும், புகையிலையை அதிகமாகப் பயன் படுத்தும் தனி நபர்கள் படும் துயரங்களையும் உச்ச பச்சமாக ஏற்படும் இழப்பையும் நாவல் பேசுகிறது. நாவலின் தலைப்பே ஒரு குறியீடாக அமைந்துள்ளது. தான் பார்த்துப் பழகிய மனிதர்கள், வாழ்ந்த மண் என்பனவற்றைத் தன் படைப்பு நோக்கால் ஒரு புனைவாகப் படைத்தளித்துள்ளார் படைப்பாளி. வாசகர்களுக்கு தான் கடத்த விரும்பிய செய்தியைப் பிரச்சாரமின்றி, மண்சார்ந்த மொழியில் வேதாரண்யம் பகுதியின் அசலான வாழ்க்கையின் ஊடாகச் சித்திரித்துள்ளார் நூலாசிரியர். வேதாரண்யம் மண்ணின் உப்பின் கைப்பு, புகையிலையின் காரம், எளிய மக்களின் வாழ்வியல் கசப்பு ஆகியவற்றின் கலவையை நமக்கு அளித்திட்ட நூலாசிரியரைப் பாராட்டுவோம். l
previous post
