‘உனைத்தானே அழைத்தேனே’ என்னும் நாவல் அழகிய தேனிரும்பில் செய்யப்பட்ட இறுகிய வார்ப்பிரும்பு என்றே சொல்லத் தோன்றுகிறது. வரலாற்று நாவலாசிரியர் புவனா சந்திரசேகரன் அவர்கள் சங்ககாலத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று நாவல்களை எழுதுபவர். ஆனால் இந்த நாவல் சற்று அதிலிருந்து முன்னோக்கிப் பயணித்து நவீன காலத்தின் ஆரம்பத்தை நவீன காலத்துடன் இணைத்த வரலாற்று நாவலாக எழுதியுள்ளார். அதாவது, தமிழகத்தில் குறிப்பாக மதுரையில் மன்னராட்சியின் கைகள் வீழ்ந்திருக்கும் நேரத்தில் உள்ளே புகும் ஆங்கிலேயர்கள், அவர்களை எதிர்க்கும் தமிழ் மன்னர்கள், அதில் ஒரு கோயிலுக்கு உண்டாகும் பாதிப்பு, அதன் தொடர்ச்சியாக தற்காலத்தில் உள்ள அந்தக் கோயிலை பாதுகாக்கும் ஒரு குடும்பம், அந்தக் குடும்பத்தில் நிகழும் மர்மங்கள் என்பதாக கதைக்களம் அமைகிறது. இதை நிகழ்காலத்தில் நிகழ்த்தி கதையை முழுமை செய்துள்ளார். மேலும் நாவலாசிரியரின் கவித்திறமையை ஒவ்வொரு அத்தியாயத்திலும் காணக்கிடப்பது சிறப்பான ஒன்று.
கதையின் நாயகனான வெற்றி என்னும் வெற்றிச்செல்வன் வைஷ்ணவி தேவி கோயிலின் தரிசனத்திற்காக பனி சூழ்ந்த காஷ்மீர் மலையில் ஏறிக்கொண்டிருக்கிறான். வெற்றியின் தாயான அம்பிகாவிற்கு இந்த துர்காதேவிதான் இஷ்ட தெய்வம். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அன்னையால் வர முடியவில்லை என்பதினால் வெற்றி மட்டும் கோவிலுக்கு சென்று வருகிறான். அவன் திரும்பி வந்து தில்லியில் உள்ள தனது தாய், தந்தையை சந்தித்து தரிசனத்தை பற்றிக் கூறி, பிரசாதத்தை வழங்குகிறான். மேலும், அவர்களுடன் பேசும் உரையாடல்கள் மிக மிக அழகாக, பாசமிகு கொஞ்சலாக வர்ணிக்கப்பட்டுள்ளது. வெற்றிச்செல்வனை பற்றிய தகவல்கள் மிக நேர்த்தியாக பேசப்படுகிறது. அவன் தாய், தந்தையை ஏதோவொரு கலக்கம் சூழ்ந்துள்ளது என்பதை இலைமறையாகக் கூறி, அதனால் அவர்கள் தமிழகத்திற்கு செல்லாமல் இருப்பதாக மர்மத்துடன் நாவல் துவங்குகிறது.
வெற்றிச்செல்வன், தான் புதிதாக வாங்கிய புத்தகத்தை புரட்டிக் கொண்டிருக்கிறான். அதில் என்ன உள்ளது என்று அவன் தாய் கேட்கிறாள். அவன் குறிஞ்சிவனம் என்ற ஊரைப் பற்றியும் அங்கு உள்ள முருகக் கடவுளைப் பற்றியும் கூறியவுடன் அவன் தாய் மயங்கி கீழே விழுகிறாள். வெற்றியும் அவன் தந்தையும் விரைவாக அபிகாவை தூக்கி நிறுத்துகின்றனர். வெற்றியின் தந்தை பரமன் தங்களது கடந்த காலத்தை பற்றிக் கூற ஆரம்பிக்கிறார். அவர் கூறி முடித்தவுடன் வெற்றி ஆவேசமும் அவசரமும் கொண்டவனாக மதுரைக்கு சென்றே ஆக வேண்டும் என்று மதுரைக்கு வந்து இறங்குகிறான். வழியில் சந்திக்கும் இளம்பெண், அவளுடைய குறும்புத்தனம், அவளால் கிடைக்கும் உதவி, அவள் பெரியப்பாவின் உதவி செய்யும் பெருந்தன்மை, நூலகராக வரும் செம்பியன் என்னும் கதாபாத்திரம் என்று கதை நகர்கிறது. நூலகர் செம்பியன் கொடுத்த புத்தகத்தை வெற்றி படிக்கத் துவங்குகிறான். நாவலாசிரியர் இன்னும் வரலாற்றைத் தொடவில்லையே என்ற எனது ஏக்கத்தை இந்த இடத்தில் நிறைவு செய்கிறார். அந்தப் புத்தகத்தில் மதுரையை மையமாகக் கொண்டு ஆண்ட விஸ்வநாத நாயக்கரின் வரலாற்றைப் பற்றி படிக்கிறான்.
மதுரையில் ஆங்கிலேயர்கள் நுழைந்திருந்த சமயம். படை பற்றாக்குறையின் காரணமாக மலைவாழ் மக்களை தனது படையில் சேர்ப்பதற்காக விஸ்வநாத நாயக்கன் பயணப்படுகிறார். அங்கே மலைவாழின மக்களின் தலைவன் திண்ணன் என்பவன் உதவி செய்கிறான். தனது குழுவிலேயே ஒரு பெண்ணைப் பார்த்து விஸ்வநாத நாயக்கனுக்கு திருமண ஏற்பாடு செய்து வைக்கிறான். அவள்தான் குறிஞ்சி. விஸ்வநாதன் நாயக்கனை மணமுடித்த குறிஞ்சி, இல்லறத்திலும் அரசியலிலும் சமமாக பங்கெடுத்துக்கொள்கிறாள். பாளையத்தில் உள்ள முருகன் கோயிலை செப்பனிட குறிஞ்சி ஆவல் கொள்கிறாள். அந்த முருகன் கோயிலுக்கு ஆங்கிலேயர்களால் பாதிப்பு வரலாம் என ஒற்றன் மூலம் தகவல் வருகிறது.
எதிரிகளின் படை எப்போது வேண்டுமானாலும் பாளையத்தை தாக்கலாம் என்ற நிலை. குறிஞ்சி தன்னுடைய மலைவாழ் படைகளைக்கொண்டு போரை எதிர்கொள்ளத் தயாராகிறாள். போர்க்களத்தில் வீர மகவை பெற்று எடுத்து மீண்டும் களமிறங்குகிறாள். வீரபாகு என்னும் போர்ப் படைத் தளபதியின் உதவியைக்கொண்டு தனது அறிவுக்கூர்மையாலும் வீரதீரத்தாலும் பாளையத்தைக் காப்பாற்றி போரில் வெற்றி பெறுகிறாள். அதனால்தான் அந்த ஊருக்கு குறிஞ்சிவனம் என்ற பெயர் வந்தது. அந்த ஊருக்கு, தான் தற்போது வெற்றி வந்து, நூலகத்தில் இதைப் படித்துக் கொண்டிருக்கிறான். அவன் படித்தது உண்மைதானா அல்லது கற்பனையா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறான். இதற்கிடையில் இவனுக்கும் மதுரையில் பார்த்த பிரகதி என்ற பெண்ணிற்கும் அவளது பெரியப்பா திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். அதில் இருவருக்கும் ஏற்படும் தயக்கமும், வெற்றி தனது தாய், தந்தையிடம் பிரகதியின் பெரியப்பாவைப் பற்றிக் கூறும்போது அவர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சியும், பிரகதியின் பெரியப்பா வெற்றியின் தாய், தந்தையை ஊருக்கு அழைக்கும்போது அவர்கள் காட்டும் தயக்கமும் என கதை அலையில்லா கடலில் மிதக்கும் ஓடம் போல மெதுவாக நகர்கிறது.
கதையில் புதிதாக தோன்றும் ஒரு மர்ம நபர், அந்த நபரால் வெற்றிக்கு உண்டாகும் பாதிப்பு, அவரால் கதையில் ஏற்படும் திருப்பம், அவருக்கும் வெற்றியின் குடும்பத்திற்கும் என்ன தொடர்பு, அவருக்கும் நூலகர் செம்பியனுக்கும் என்ன உறவு என்று கதை மர்மமாக பயணிக்கிறது. கதையில் உண்டாகும் மர்மங்களுக்கு நாவலாசிரியர் விடை கொடுக்கும்விதம் அழகானது. எப்போதுமே ஒரு கடினமான முடிச்சைப் போட்டு அதை மிக அழகாக அவிழ்ப்பார். வாசகர்களை நெற்றி சுருங்கச் செய்து புன்சிரிப்பை தவழ விடுவதில் இவருக்கு நிகர் இவரேதான். கதையில் ஆங்காங்கே தேவசேனா என்ற கதாபாத்திரத்தைப் பற்றிய பேச்சுகள் வந்து போகின்றன. அவர் யார் என்பதை நோக்கியே கதையின் பெரும்பாலான இடங்கள் பயணப்படுகின்றன. கோவிலுக்கு குழந்தைகளை நேர்ந்து விடும் ஒரு நிலையை கதையின் ஊடாக ஆசிரியர் சொல்லிச் செல்கிறார். அதைப் படிக்கும்போதே நெஞ்சம் பதறும் சம்பவமாக உள்ளது. மேலும் பிரகதி யார் என்ற உண்மையை தெரிவிக்கும் தருணம் மிகச்சிறந்த பாசப்போராட்டமாக பேசப்பட்டுள்ளது.
கதையின் ஓட்டத்தில் உள்ளே அறிமுகமாகும் இன்னொரு முக்கிய கதாபாத்திரம் உன்னதன் என்னும் ஊர் முக்கியஸ்தர். அவர் மனைவி தையல்நாயகி. அவர்களுக்கு உன்னதி என்ற ஒரு பெண். அந்தப் பெண்ணுக்கும் நூலகர் செம்பியனுக்கும் ஏற்பட்ட காதல். இவர்களை சேர்த்து வைக்க பிரகதியும் வெற்றியும் எடுக்கும் முயற்சி. உன்னதியின் மனவளர்ச்சி குன்றிய தம்பி. அவனை அந்த ஊர் முக்கியஸ்தர் பிரகதிக்கு திருமணம் செய்து வைக்க போடும் சதி என கதை நீழ்கிறது. மேலும் கதையின் இடையிடையே வந்து சென்ற தேவசேனா என்ற கதாபாத்திரத்தின் ஆரம்பகால நிகழ்வுகள் எடுத்துக் கூறப்படுகின்றன. அதில் சதிர் நடனத்தைப் பற்றிய ஆசிரியரின் அலசல் வித்தியாசமான ஒன்று. தேவரடியார் என்னும் பழங்கால முறை தற்காலம் வரை வழக்கத்தில் இருந்ததை ஆசிரியர் நாவலில் மிகத்தெளிவாகப் பேசியுள்ளது சிறந்த விழிப்புணர்வு கையாடலாகப் பார்க்க முடிகிறது. கதையின் கடைசி அத்தியாயங்கள் திடுக்கிடும் நிமிடங்களாக நகர்கின்றன. கதையில் நல்ல கதாபாத்திரமாக இதுவரை கடந்து வந்த ஒருவரை திடீரென எதிர்மறை கதாபாத்திரமாக காட்டிய போது அதிர்ச்சி மேலோங்கியது. அம்பிகாவின் மகன் வெற்றி என்று கூறிவந்து, இறுதியில் அவர் யாருடைய மகன் என்ற உண்மை தெரிய வரும் இடம் அதிர்ச்சியானது. மேலும் பல பல திருப்பங்களை இறுதி அத்தியாயத்தில் வைத்து நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டுவந்து விடுகிறார் நாவலாசிரியர்.
கதையின் முடிவு மிக அழகான காதல் கவிதை கொண்டு நிறைவு செய்யப்பட்டுள்ளது. நாவலாசிரியர் இயல்பிலேயே ஒரு சிறந்த கவிஞர் என்பதற்கு இந்நாவல் ஒரு சரியான எடுத்துக்காட்டு. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அழகான ஒரு கவிதையை புனைந்து தனது கவித்திறமைக்கு சான்று பகர்கின்றார். மொத்தமாக நாற்பது கவிதைகள் கொண்டு அத்தியாயங்களை நிவர்த்தி செய்துள்ளார். ஒரு தனி நூலே வெளியிடும் அளவிற்கு மிகத் தேர்ந்த கவிதைகள். மேலும் நாவலின் தலைப்பைப் போலவே, இந்த நாவலும் ஓர் அழகிய கவிதைபோன்று நீலவானில் நகரும் மேகம் போல நமது கையில் தவழ்கிறது. l
previous post
