நமது அண்டை வீட்டாரான கன்னட இலக்கிய உலகிலிருந்து சமீபத்தில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வந்திருக்கும் புத்தகம் ‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்பது. இது ஒரு கட்டுரைத் தொகுப்பு. ஆசிரியர் வசுதேந்த்ராவின் பால்ய கால நினைவுக் குறிப்புகளின் தொகுதி எனவும் கொள்ளலாம். கர்நாடக மாநில சாகிதிய அகாதமி விருது பெற்றது. தமிழில் மொழி பெயர்த் திருப்பவர் கே. நல்லதம்பி. இந்த நூலைப் பதிப்பாசிரியராக இருந்து ‘Two Shores Press’ பதிப்பகம் மூலம் வெளிக் கொணர்ந்திருப்பவர், மற்றொரு சிறந்த மொழிபெயர்ப்பாளரான கண்ணையன் தட்சிணாமூர்த்தி!
கன்னட இலக்கிய உலகில் முன்னணி எழுத்தாளரான வசுதேந்த்ரா, பெல்லாரி மாவட்டத்தின் சன்டூர் என்ற ஊர்க்காரர். இருபது ஆண்டுகள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங் களில் பணி செய்தவர். தற்போது பெங்களூரு நகரில் ‘சந்தா புஸ்தகா’ என்னும் பதிப்பகத்தைத் தொடங்கி, கன்னட மொழியின் இன்றைய இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு பிரசுரிக்கிறார். இவருடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை என ‘மோகனசாமி’, ‘ரேஷ்மி பட்டே’ போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.
‘அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்ற இந்தத் தமிழ்ப்பதிப்பின் மூலக் கன்னடப்பிரதிக்கு 2006இலும், ‘தேஜோ – துங்கபத்ரா’ நூலுக்கு 2019 இலும் கர்நாடக சாகித்ய அகாதமியின் விருதுகளைப் பெற்றுள்ளார்.
கே. நல்லதம்பி கன்னட மொழியிலிருந்து தமிழ் மொழிக்கும், தமிழ் மொழியிலிருந்து கன்னட மொழிக்கும் 50–க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தனது சொந்தப் படைப்பு களையும் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘யாத் வேஷம்’ என்ற கன்னட மொழி நூலின் தமிழ் மொழிபெயர்ப்புக்காக 2022 –ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது பெற்றிருக்கிறார். புத்த மணியோசை, அப்பா சாகேப், அத்தர் என இவரின் நூல்களின் பட்டியல் மிக நீளமானது. வசுதேந்த்ராவுக்குத் தன் அம்மாவை ஏன் மிகவும் பிடித்திருக்கிறது என்பதை அறிய இப்போது நாம் அவரின் நினைவுக் குறிப்புகளுக்குள் கொஞ்சம் பயணம் செய்து திரும்புவோம். நூலின் பின் அட்டைக் குறிப்பைப் பெருமாள் முருகன் எழுதி இருக்கிறார். புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டதால் நானும் பெருமாள் முருகனின் கருத்துகளை அப்படியே வழிமொழிகிறேன்.
மொத்தம் 23 கட்டுரைகள். நல்லதம்பியின் தமிழ் மொழிநடை நேரடியானது. எளிமை மிக்கது. சாதாரணப் பேச்சு வழக்குச் சொற்களையே சர்வ சாதா ரணமாகப் பயன்படுத்தி இருக்கிறார். நூலின் தலைப்பைத் தாங்கிய முதல் கட்டுரையின் முதல் இரண்டு வாக்கியங்களிலேயே இப்படி வருகிறது: “எந்தக் கூச்சமும் இல்லாமல் சொல்லி விடுகிறேன்: சிறு வயதில் நான் ‘பீய்க்குண்டி’யாகத்தான் இருந்தேன்” என்று தொடங்கும் கட்டுரையின் பால்ய கால நினைவு படிக்கப் படிக்கச் சிரிப்பை வரவழைக்கிறது. மலம் கழிக்கக் காலையில் கக்கூசுக்குப் போனாலும் அங்கே முடிவதில்லை. காரணம்? பெல்லாரியின் அந்த ஊரில் கடுமையான தண்ணீரப்பஞ்சம். நீர் போதிய அளவுக்கு இல்லாமற் போனால் கக்கூஸ் நாறி விடும்தானே? ‘கெட்ட நாற்றம் அடிக்கும் அந்தக் கக்கூசை சின்ன வயசில் எப்படிச் சகித்துக்கொள்ள முடியும், சொல்லுங்கள்?’ என்று கேட்கிறார் வசுதேந்த்ரா.
இந்த நூலின் பல கட்டுரைகளில் அந்த ஊர்த்தண்ணீர்த்தட்டுப்பாட்டைப் பற்றிய நினைவுக்குறிப்புகளில் நீரில்லை; ஆனால், நகைச்சுவை நிரம்பித் தளும்புகிறது. விடுதலை பெற்று 75 ஆண்டுகளாகிவிட்ட பின்பும் இன்னமுங்கூடத் தண்ணீர் வசதியில்லாத வறண்ட கிராமங்கள், நெடுந்தொலைவு போய்த் தண்ணீர் சுமந்துகொண்டு வருவதிலேயே வாழ் நாளின் பெரும்பகுதியைக் கழித்துக் கொண்டிருக்கும் பெண்கள், கழிப்பறைகள் இல்லாததால் திறந்த வெளிக் ‘கக்கூஸ்’களுக்குப் போய் வரும் மக்கள்- இப்படியான எதார்த்தநிலை பற்றிய விமரிசனங்கள் சிரிப்புக்கிடையே போகிற போக்கில் சொல்லப்படுகின்றன. சிரிப்பதற்கு மட்டுமன்றி, சிந்திப்பதற்கும், அழுவதற்கும், ஆராய்வதற்கும், பகிர்வதற்கும் ஏராளமான செய்திகள் உள்ளன. கீழ் நடுத்தர வர்க்கத்துப் பிராமணக் குடும்பங்களின் பெற்றோர்களின், பிள்ளைகளின் சந்தோஷங்களை யும்,சோகங்களையும் பேசுகிற குறிப்புகள் இவை. அதே சமயம், ஒட்டுமொத்த மனித சமூகத்தின் நலங்களுக்குப் பயன்படும் வகையில் சுயவிமர்சனங்களும் முன்வைக்கப்படுகின் றன என்பதே இந்த நூலின் சிறப்பு!
“அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே“
இசையரசர் இளையராஜா அவர்களின் புகழ் பெற்ற எண்ணற்ற பாடல்களுள், நட்சத்திரப் பாடல்களுள் ஒன்று இது. இதேபோல,
எம்ஜிஆரின் படப்பாடல்கள் பலவற்றிலும் தாயின் புகழ் பல்வேறு விதங்களில் திரும்பத் திரும்பப் பாடப்பட்டு வந்திருப்பதை நாம் இன்றும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். இன்று மாறிக் கொண்டே வரும் உலகக் கண்ணோட்டமும், விரிவும் – ஆழமும் பெற்று வளர்ந்து வரும் பெண்ணியப் பார்வையின் அடிப்படையில் அமைந்த நவீன அணுகுமுறையும் மேற்கண்ட ‘தாய்மை + மேன்மை + தெய்வீகம் + வணங்கிப் போற்றுதல்’ போன்ற கருத்தாக்கங்களை ஏற்பதில்லை. “இவையெல்லாம் பெண்களை வணங்குவதாகப் புகழ்வதன் மூலமே அவர்களைத் தொடர்ந்து ஏமாற்றி அடிமைப்படுத்தும் வேலைகள்தாம்“ என நிராகரிக்கின்றனர்.
ஆசிரியரின் பார்வையில், ‘தாய் என்பவள் தெய்வமல்ல’ என்னும் கருத்து, இதே தலைப்பிலான கட்டுரையில் மட்டுமன்றி, வேறு பல கட்டுரைகளிலும் வெவ்வேறு வார்த்தைகளில் முன் வைக்கப்படுகிறது. “இந்தியாவில் அம்மாவின் அன்பு, தியாகங்களை மிகைப்படுத்தி அவளைக் ‘கடவுள்’ ஆக்கி விட்டோம். கணவனையும், பிள்ளைகளையும் பராமரிப்பது அவள் கடமை என்கிறோம். ஆனால், ‘தேவதை’யான அவள் செய்யும் சிறு தவறுகளை மட்டும் நாம் மன்னிக்கத் தயாராக இல்லை. அப்பாக்கள் செய்யும் எல்லா தவறுகளையும் ஆணின் இயல்பான குறைகள் என்று எண்ணிக் காலப்போக்கில் அவரை மன்னிக்கும் நாம், அதே மாதிரித் தவறுகளை அம்மா செய்தால் அவளைத் தூற்றுகிறோம். வாழ்க்கை முழுவதிலும் அவளை மாடுபோல உழைக்க வைக்கும் நாம், அவள் இறந்த பின் பெரிய படத்தை வீட்டில் மாட்டி வைத்து, மணக்கும் பூ மாலையைப் போட்டு விடுகிறோம்” என வசுதேந்த்ராவின் விமர்சனங்கள் கூர்மையாகத் தொடர்கின்றன. இளமைக்கே உரிய இயல்பான ஆசையினால் அம்மா ரேணுகை மற்றோர் ஆணை மனதளவில் விரும்பினாள் என்ற அற்பக் காரணத் திற்காக அம்மாவின் தலையைக் கொய்த பரசுராமனின் கருணையற்ற செயலைக் கண்டிக்கிறார் ஆசிரியர். “ஒருவேளை அவனின் அப்பா ஜமதக்னி வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்திருந்தால் பரசுராமன் இதேபோன்ற ஒரு கொடூரமான செயலைச் செய்திருப்பானா?” என்றும் கேள்வி எழுப்புகிறார்.
கடவுள் நம்பிக்கையில் உறுதியாக இருந்தவர் அம்மா. புதிய வீடு கட்டுவதற்கு மகன் இடம் தேடும்போது, “நாம் பெல்லாரியில் சந்து-பொந்துகளில் வாழறவங்க. நம்ம வீட்டுக்குள் காற்று – வெளிச்சம்கூடச் சரியாக இருக்காது. ஆனாலும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தோம். நமக்கு இந்த வாஸ்து – கீஸ்து அதெல்லாம் கிடையாது. அதெல்லாம் பணக்காரர்கள் பகட்டு” என்று மகனிடம் உறுதியான குரலில் சொல்லியனுப்பும் அளவிற்கு, அந்த அம்மாவுக்குத் தெளிவு இருந்ததென்று வசுதேந்த்ரா வியப்படைகிறார். அதே சமயம், அந்தப் புதிய இடத்தை வாங்குவதற்குக் கடன் பெற்றாக வேண்டும் என்ற நிலையில், “கூடவே கூடாது. என மகன் கடங்காரனாவதை என் உயிர் இருக்கும் வரை அனுமதிக்கவே மாட்டேன்!” என்று அம்மா பிடிவாதம் பிடிக்கிறார்! அதனால் ஏற்படும் பணநஷ்டத்திற்காக அம்மாவைப் பல முறை திட்டித் தீர்க்கும் ஆசிரியர் பிற்பாடு அதைப்பற்றி சுய விமர்சனம் செய்து கொள்கிறார்.
‘வேண்டாத பரிவு’ என்ற கட்டுரையில், ‘வீட்டிலோ, வெளியிலோ நடக்கும் நிகழ்வுகளில் அன்பின் பங்கைப் பார்க்காமல், வறண்ட தர்க்கவாதம் செய்து பழகி விட்டோம்; அவ்வாறு செய்யும்போது நம் விழுமியங்கள் கட்டாயம் சரிந்து விடும்’ என்கிறார் ஆசிரியர். இந்த இடத்தில், இன்றைய உலகின் போர் வெறி மிக்க சூழலில் நாம் முன் வைக்க வேண்டிய ஒரு முக்கியமான சிந்தனையை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்: “பரிவு என்றால் இன்னொருவரின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவரைப் போலச் சிந்திப்பதாகும். மற்றவர்களின் சுக துக்கங்களை அவர்களுடைய பார்வையின் வழியாகவே புரிந்துகொள்ளும் மனிதன், ஒரு போதும் கொடுஞ்செயலில் இறங்க மாட்டான். வன்மத்திற்கும், கொலைக்கும் ஆளாகும் ஒரு நபரின் சங்கடத்தை உணர்ந்துகொண்டால், கொடுமை செய்ய நாம் துணியவே மாட்டோம். உலக அமைதிக்குத் தேவை, பரிவும் இரக்கமும்தாம்! பரிவு நம் இயல்பில் ஒருமுறை கலந்துவிட்டால் போதும், உலகம் அழகானதாகத் தெரியத் தொடங்கும்”.
இதை விளக்குவதற்காக ஓர் அழகான எடுத்துக்காட்டை ‘ஹம்ஸ கீதை’ என்னும் புகழ் பெற்ற கன்னட நாவலிலிருந்து ஒரு மேற்கோளை ஆசிரியர் தந்திருக்கிறார். அதையும், இவ்வளவு தூரம் பரிவை வலியுறுத்தும் இவர், கட்டுரையின் தலைப்பை ஏன் ‘வேண்டாத பரிவு’ என வைத்திருக்கிறார் என்பதையும் அறிய, புத்தகத்தைப் படியுங்களேன்! l
