நேர்காணல்:
ஆ. இரா. வேங்கடாசலபதி
சந்திப்பு : சிவகுரு நடராஜன்
தங்களின் ஆய்வுகள் வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் ஆகிய மூன்று பேரையே சுற்றி வருவது ஏன்?
வ.உ.சி. என்ற பேராளுமையினால் ஈர்க்கப்பட்டு அறிவுலகத்தில் நுழைந்தவன் நான். மதுரை உலகத் தமிழ் மாநாடு (1981), பாரதி நூற்றாண்டு (1981–82), பாரதிதாசன் பாடல்கள் ஆகியவை எனக்குத் தமிழ் உணர்வை ஊட்டின.
வ.உ.சி.யைப் பற்றிய ஆராய்ச்சி என்பது தவிர்க்க முடியாமல் பாரதி தேடலுக்கும் என்னைக் கொண்டுசென்றது. வ.உ.சி.யோடு அரசியல் பயணத்தை மேற்கொண்டவர் பாரதி. எனவே அவருடைய செயல்பாடுகளையும் ஆராய்ந்தேன். வரலாற்று ஆராய்ச்சி என்பது தனிமனிதர்களைப் பற்றியதாக மட்டுமே சுருங்கிவிட முடியாது. அது ஒரு காலகட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியாகவே இருக்க முடியும். அந்தவகையில் தமிழ்ச் சமூகம் நவீனமடைந்த காலமாகிய பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை என்பதாக என் ஆய்வுக்களத்தை அமைத்துக்கொண்டேன்.
சிறுவனாக ஆய்வுத் துறையில் இறங்கியதால் நாயக பிம்பங்கள் என்னைக் கவர்ந்ததென்று சொல்லலாம். பெரும் சாதனையாளர்களான உ.வே. சாமிநாதையர், எஸ்.ஜி. இராமாநுஜலு நாயுடு, ஏ.கே. செட்டியார், டி.வி. சாம்பசிவம் பிள்ளை, பெ. தூரன், ம.வீ. இராமநுஜாசாரி முதலானோர் பற்றியெல்லாம் எழுதியதற்கு இதுவும் ஒரு காரணம். பொது வாசகர்களை ஈர்ப்பதற்கு இதையும் ஒரு வழியாகக் கொண்டேன் எனலாம்.
புதுமைப்பித்தன் ஈடுபாடு என்பது இலக்கிய வாசிப்பின்வழியே வந்தது. என் முதல் வழிகாட்டியான ‘முகம்’ மாமணி 1982ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதுமைப்பித்தன் கதைகளை எனக்கு அறிமுகப்படுத்தினார். புதுமைப்பித்தனின் மொழி ஆளுமையும், நவீனப் பார்வையும், நகைச்சுவையும் என்னைப் பித்துக்கொள்ளச் செய்தன. த. கோவேந்தன் அறிமுகத்தால் பழந்தமிழில் பயிற்சி கிடைத்தது. அதே சமயத்தில் சிற்றிதழ் வாசிப்பு, இலக்கிய நட்பு வட்டத்தின் பெருக்கம் ஆகியவற்றால் நவீன இலக்கிய வாசிப்பும் தொடர்ந்தது. நான் வளர்ந்த பின்னணி சார்ந்து ஆங்கில வாசிப்பும் இயல்பாக அமைந்தது.
ஆழ்ந்த இலக்கிய வாசிப்புள்ள தாங்கள் இலக்கியப் படைப்பினை செய்யாதது ஏன்?
நாவல், சிறுகதை எழுதாததையே நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய ஆய்வுகள், பதிப்புகள் அனைத்துமே படைப்பூக்கத்துடன் செய்யப்படுபவையே.
மேலும், நான் நாவல், சிறுகதை எழுதாததால் தமிழுக்கு என்ன இழப்பு ஏற்பட்டுவிட்டது! ஆனால் வரலாற்றுத் துறையில் ஒரு பெரிய வெற்றிடம் உள்ளது. அதில் ஒரு சிறிய பகுதியை நிரப்பியுள்ளதோடு மேலும் பலரை அதன்பால் கவனம் கொள்ளச் செய்திருக்கிறேன் என்று சொல்லலாம்தானே?
மொழிபெயர்ப்பும் பாப்லோ நெரூடாவுக்கு பின் தொடரவில்லையே?
ஒரு நாளுக்கு 24 மணி நேரம்தானே இருக்கிறது! 1980களிலிருந்தே தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தீவிரமாக இயங்கிவருகிறேன். 2004இல்தான் நூலாக்கம் பெற்றதென்றாலும் நெரூடாவைத் தமிழாக்கியது 1985-86இல்; அதே காலத்தில்தான் சேரனின் அனைத்துக் கவிதை களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் (இன்னும் நூலாக்கம் பெறவில்லை). 1987இல் பாரதிதாசனின் ‘அமைதி’ நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்தது. அக்காலகட்டம் முதல் ம.இலெ. தங்கப்பாவின் தொடர்பும் ஏற்பட்டது. இருபத்தைந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு தங்கப்பாவின் சங்க இலக்கிய மொழி பெயர்ப்புகளையும், முத்தொள்ளாயிரம் மொழிபெயர்ப்பையும் பெங்குவின் வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டேன். சுந்தர ராமசாமியின் ‘ஜே.ஜே.: சில குறிப்புக’ளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். ரொமிலா தாப்பரின் ‘வரலாறும் கருத்தியலும்’ (நா. வானமாமலை ‘வரலாறும் வக்கிரங்களும்’ என்று மொழி பெயர்த்த அதே நூல்) 2007இல் வெளிவந்தது. இவை தவிர ஏராளமான கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்திருக்கிறேன்.
தமிழில் மொழிபெயர்ப்பாளர்கள் பெருகி விட்ட பிறகு எனக்கு வேலை இல்லை என்று முடிவு செய்துகொண்டேன். கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியாகியுள்ள பல தமிழ்ப் படைப்புகளைப் பரிந்துரைத்ததில் என் பங்கு உண்டு என்பதையும் இங்கு சேர்த்துக் கொள்ளலாம்.
தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான எனது ஆய்வுகளைத் தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளியிடுவதிலேயே என் முனைப்பு இப்போது உள்ளது.
தாங்கள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற்ற சென்றது தற்செயலாக நடந்ததா, உங்கள் மனம் கவர்ந்த மூன்று ஆளுமைகளும் நெல்லைச் சீமையைச் சேர்ந்தவர்கள் என்பதாலா?
தற்செயலானதுதான். நினைத்த இடத்திலெல்லாம் வேலைக்குச் சேர முடியுமா என்ன? 1995ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்
கே.என். பணிக்கர் மேற்பார்வையில் பிஎச்.டி. பட்டம் பெற்றேன். தமிழகத்தின் வரலாற்றுக் கல்விச் சூழல் ஒரு பாலைவனம் என்று கருதிய பேராசிரியர் பணிக்கர் தமிழ்நாட்டுக்கு நான் திரும்புவதை விரும்பவில்லை. பாலைவனம் என்றால் உங்களிடம் பயின்ற நான் அங்கு செல்வதுதானே சரியாக இருக்கும் என்றதும், என் தர்க்கத்தை மறுக்க முடியாமல் ஒரு புன்முறுவலுடன் நல்வாழ்த்துகள் சொல்லி அனுப்பிவைத்தார்.
1990களின் இடைப்பகுதியில் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஒழிவிடங்களே இல்லை. தற்செயலாக, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் விளம்பரம் வந்தது. முதற் கோணல் முற்றிலும் கோணல் என்ற சொல்வழக்கைப் பொய்ப்பிக்கும்வண்ணம் பேராசிரியர் வே. வசந்தி தேவி அவர்கள் அப்பல்கலைக்கழகத்தைத் திறம்பட வழிநடத்திக்கொண்டிருந்தார்கள். அவர் மட்டும் இல்லையென்றால் எனக்கு அங்கு வேலை கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை.
அங்குப் பணியாற்றிய ஆறாண்டுக் காலம் எனக்கு ஒரு பெரிய கல்வியாக இருந்தது. அப்போது தென்மாவட்டங்களில் சாதியக் கலவரங்கள் உச்சத்திலிருந்தன. நகரத்து இளைஞனான எனக்கு ஏட்டுச் சுரைக்காயாக அல்லாமல் உண்மையிலேயே ரத்தமும் சதையுமாகச் சாதியத்தின் கோர முகம் தெரியவந்தது. எளிய பின்னணியில் வந்த மாணவர்கள்தானே தமிழ்நாட்டில் வரலாற்றைப் படிப்பார்கள்? அவர்களுக்குப் பாடம் எடுப்பது நல்ல பயிற்சியாக இருந்தது. ஆனந்த் செல்லையா, கோ. ரகுபதி, தளவாய் சுந்தரம், இரா. இலக்குவன் முதலானவர்கள் அப்போது அங்கே மாணவர்களாக இருந்தார்கள். தொடர்பியல் துறை துடிப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. சி.சு. மணி, கா.அ. மணிக்குமார், வே. மாணிக்கம் என்று ஒரு அறிவார்ந்த சூழலை எனக்கென உருவாக்கிக் கொண்டேன். 1998இல் தொ. பரமசிவனும் சேர்ந்துகொண்டார் (சி.சு. மணி அவர்களை ‘மகா பெரியவா’ என்றும், தொ.ப.வைப் ‘நடுப் பெரியவா’ என்றும், என்னை ‘பால பெரியவா’ என்றும் ‘நீடாமங்கலம்’ நூலாசிரியர் ஆ. திருநீலகண்டன் அப்போது நகைச்சுவையாகக் குறிப்பிடுவார்.) ஆ. சிவசுப்பிரமணியனுடனான உறவும் வலுப்பட்டது.
நெல்லைக்குக் குடிபெயர்ந்த அதே தருணத்தில்தான் கண்ணன் ‘காலச்சுவடு’ இதழையும் பதிப்பகத்தையும் கையில் எடுத்திருந்தார். ஒவ்வொரு வாரக் கடைசியிலும் நாகர்கோவில் சென்றுவிடுவேன். ஜவுளிக்கடைப் பொறுப்புகளை விட்டுவிட்டு அவருடைய வாழ்நாள் ஆசையான முழுநேர எழுத்தில் சுந்தர ராமசாமி ஈடுபட்டிருந்தார். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் காலச்சுவடு செய்துள்ள முக்கிய பணிகளுக்கான முதல் படிகள் அப்போது எடுத்துவைக்கப்பட்டவையே.
அந்தச் சில ஆண்டுகளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்—கலைஞர்கள் சங்கம் நெல்லையில் நடத்திய கூட்டங்களில் ‘நிலைய வித்வா’னாகவும் இருந்தேன். தமிழ்ச்செல்வனோடு மேற்கொண்ட விவாதங்கள், உரையாடல்கள் மறக்க முடியாதவை.
தென் தமிழ்நாட்டின் மூலை முடுக்கு களிலெல்லாம் சுற்றியிருக்கிறேன். வசந்த காலம், பொற்காலம் என்ற தொடர்களெல்லாம் நினைவுக்கு வருகின்றன. வெறும் நினைவேக்கத்தால் உண்டாகும் மாயை அல்ல அது என்றே நம்ப விரும்புகிறேன். சென்னையில் வேலை கிடைக்காமலிருந்திருந்தால் நெல்லையை விட்டு இடம்மாறியிருக்க மாட்டேன் என்றே தோன்றுகிறது.
அறிஞர் தொ.ப. அவர்களின் ‘அறியப்படாத தமிழகம்’ நூலுக்கு ஒரு சிறிய விமர்சனத்தோடு முன்னுரை எழுதி இருந்தீர்கள். நீண்ட காலத்துக்கு பிறகு அவருடைய படைப்புகளை எவ்வாறு மதிப்பீடு செய்கிறீர்கள்?
அந்த முன்னுரையின் பின்னணி பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். தொ. பரமசிவன் பற்றி நான் முதலில் அறிய நேர்ந்தது அவருடைய ‘சீடர்’, சிகாகோ பல்கலைக்கழக ஆய்வாளர், மறைந்த பேராசிரியர் பெர்னாட் பேட் (Bernard Bate) வாயிலாக. நேரில் சந்தித்தது 1995 இடைப்பகுதியில்தான். ‘அறியப்படாத தமிழகம்’ என்ற தலைப்பில் அவர் எழுதிக்கொண்டிருந்த தொடர் கட்டுரைகளைப் பற்றி உற்சாகத்துடன் எனக்கு முதலில் அறிவித்தவர் சுந்தர் காளி.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்குத் தொ.ப.வை வரவழைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ‘அறியப்படாத தமிழகம்’ கட்டுரைகளை நூலாக்குவது என்று முடிவுசெய்தேன் (துணை முயற்சியாக, மதுரைக் கோயில் நுழைவு பற்றிய அவருடைய ஆய்வுக் கட்டுரையை சுந்தர் காளி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, அது எம்.எஸ்.எஸ். பாண்டியன் ஆசிரியத்துவத்தில் வெளியான South Indian Studies ஆய்விதழில் வெளியிடச் செய்தேன்.)
அதுவரை தொ.ப. எழுதியிருந்த கட்டுரைகள் நூலாக்கப் போதுமானவையல்ல என்பதால் மேலும் சில கட்டுரைகளை எழுதுமாறு அவரை வற்புறுத்தினேன். பாளையங்கோட்டை மேடைப் போலீஸ் ஸ்டேஷன் தெருவிலிருந்த என் வீட்டிலிருந்தவாறே ‘இசுலாமியப் பாணர்’ முதலான சில கட்டுரைகளை அவர் சொல்லச் சொல்ல நான் எழுதினேன்.
அச்சுக்கு ஏற்ப கையெழுத்துப்படியைச் செப்பம் செய்வதும் வரிசைப்படுத்துவதும் மெய்ப்புத் திருத்துவதும் என் வேலை. தொ.ப.வின் குருநாதர் சி.சு. மணி தேவைப்படும் ஆலோசனைகளைக் கூறுவார். ஒளியச்சுக் கோப்பும் அச்சீடும் மதுரைத் தோழர் மாறனின் அன்பு அச்சகத்தில் நடந்தன. தொ.ப.வின் உற்ற நண்பர், கட்டபொம்மன் ஆராய்ச்சியாளர் வே. மாணிக்கம் அவர்களின் வீட்டு முகவரியிலிருந்த ‘ஜெயா பதிப்பக’ வெளியீடாக அக்டோபர் 1997இல் ‘அறியப்படாத தமிழகம்’ முதல் பதிப்பு வெளியானது.
‘காலச்சுவடு’ இலவச விளம்பரம் வெளியிட்டு உதவியது. ச. தமிழ்ச்செல்வன் தம் தனி முயற்சியில் 300—400 பிரதிகள் விற்றுத்தந்தார். 50 பிரதிகள் எடுத்துச்செல்வார். பின்னிரவில் என் வீட்டின் கதவைத் தட்டி காசைக் கொடுத்துவிட்டு, அடுத்த சிப்பத்தை எடுத்துச் செல்வார். ஆறேழு மாதங்களிலேயே அச்சடித்த ஆயிரம் படிகளும் விற்றுத் தீர்ந்தன.
‘அறியப்படாத தமிழகம்’ மேலதிகக் கவனம் பெற வேண்டும் என்று விரும்பினேன். வெறும் மறுபதிப்பு வெளியிடுவதில் அந்நாளில் காலச்சுவடு கண்ணனுக்கு ஆர்வம் இருக்க வில்லை. எனவே ‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரண்டு நூல்களையும் சேர்த்து, கட்டுரைகளைப் பொருள்வாரியாக வகைப்படுத்திப் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற புதிய தலைப்பில் செப்டம்பர் 2001இல் காலச்சுவடு பதிப்பகம் நூலாக்கியது. வாசக வரவேற்பைக் கருதி 2009 முதல் ‘அறியப்படாத தமிழகம்’ தனிநூலாகவும் வெளிவந்தது.
பதினாயிரக்கணக்கில் விற்று, தமிழ்ப் பண்பாட்டியல் நூல்களில் கிளாசிக் என்ற இடத்தைப் பெற்றுவிட்ட ‘அறியப்படாத தமிழகம்’ நூலின் பதிப்பு வரலாறு இது. இப்போது நாட்டுடைமையாகி மேலும் பல்லாயிரக்கணக்கில் விற்றுவருகிறது.
‘அறியப்படாத தமிழகம்’ கட்டுரைகளைப் படித்ததும் ஏற்பட்ட கிறக்கம் மறக்க முடியாதது. அந்தப் பரவசத்தைத் ‘தமிழியல் ஆய்வின் புதிய களங்கள்’ என்ற தலைப்பில் அந்நூலுக்கு நான் எழுதிய முன்னுரையில் காணலாம். அதே வேளையில் தொ.ப.வின் பண்பாட்டுப் பார்வையின் சில கூறுகளில் எனக்கு விமரிசனம் இருந்தது. அவருடைய மாமனார் வீடு இரண்டு தெருவுக்குத் தள்ளி இருந்தாலும்கூட தனி வீட்டுக்குக் குடிமாறும்வரை சில மாதங்கள் அவர் என் வீட்டில்தான் தங்கியிருந்தார். ஓயாமல் பேசிக்கொண்டும் விவாதித்துக் கொண்டும் இருப்போம். அதைத்தான் தொ.ப. தம் நன்றியுரையில் ‘கனிவும் கண்டிப்பும்’ மிக்க சலபதி என்று குறிப்பிட்டார். நான் அணிந்துரைகள் எழுதுவது குறைவு. கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாணியில் ‘வாழி நீ நயந்து’ என்று வாழ்த்துரை வழங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. சில விமர்சனக் கருத்துகளையேனும் நயமாகச் சொல்வேன்.
கால் நூற்றாண்டு கழித்து, 2023இல் வெளிவந்த ‘அறியப்படாத தமிழகம்’ நூலின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும் (The Sweet Salt of Tamil, நவயானா வெளியீடு) அணிந்துரை எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. நீங்கள் ‘சிறிய விமரிசனம்’ என்று குறிப்பிடும் கருத்துகளை அதில் சற்று அழுத்தமாகவே வைத்துள்ளேன்.
1990களில் உலகமயமாக்கம், மண்டல் பரிந்துரைகள், பாபர் மசூதி இடிப்பு, சோவியத் ஒன்றிய உடைவு, தலித் இயக்கத்தின் எழுச்சி, தென்மாவட்டச் சாதிய மோதல்கள், இந்துத்துவத்தின் எழுச்சி முதலானவற்றின் விளைவாக நெருக்கடிக்குள்ளாகியிருந்த தமிழ் அறிவாளர்களுக்குத் தொ.ப.வின் எழுத்து ஆசுவாசம் தந்தது; எல்லாம் நலமே என்ற நிம்மதியையும் வழங்கியது. வாசகர்களின் குதிரைத் தசையைப் பிசைந்துவிடுவதல்ல, மனசாட்சிக்குத் தொந்திரவு கொடுப்பதே ஆய்வாளர்களின் கடமை என்பது என் கருத்து. எடுத்துக்காட்டாக, முற்றிலும் ஆணாதிக்கத் தன்மை கொண்ட ஒரு சடங்கை ‘அழகியல் மிக்க பண்பாட்டு அசைவு’ என்று தொ.ப. முன்வைத்தும், தமிழ் அறிவுலகம் அதைக் கொண்டாடியதும் நெருடலை ஏற்படுத்தின.
தென்தமிழ்நாட்டின் பண்பாட்டு வரலாற்றைத் தொ.ப. விரிவாக எழுதுவார் என்ற எதிர்பார்ப்பு ஈடேறாமல் போனதில் எனக்குப் பெரிய வருத்தம் உண்டு. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் உடல்நலத்தைச் சிறிதும் பேணாமல் போனார். எந்த அறிவாளரையும் இந்த அளவுக்குத் தமிழ்ச் சமூகம் கொண்டாடியதில்லை. அது மட்டுமே ஒரே ஆறுதல்.
வாஞ்சிநாதனால் கொலை செய்யப்பட்ட ஆஷ் துரை மீது பரிவு உண்டாகும்படி ‘ஆஷ் அடிச்சுவட்டில்’ நூலில் சில பகுதிகள் அமைந்துவிட்டதே!
உங்கள் வாசிப்பை ஏற்பதற்கில்லை. மேலும், பிணங்களைத் தோண்டியெடுத்துத் தூக்கிலிடுவது வரலாற்று ஆராய்ச்சியாளரின் வேலை அல்ல. வரலாற்றுப் போக்கில் வைத்து தனிமனிதர்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வதும், புரியவைப்பதுமே அவருடைய கடமை. ‘ஆஷ் அடிச்சுவட்டில்’ கட்டுரையில் அதைச் சரியாகச் செய்ய முயன்றுள்ளதாகவே நான் நினைக்கிறேன். ஆஷ் கல்லறையில் பூமாலை சார்த்தி வீரவணக்கம் செய்பவர்களிடம் வைக்க வேண்டிய கேள்வி உங்களுடையது.
ஆய்வு எனும் தளத்தில் தங்களின் முயற்சி ஒரு புது வகை… வடிவம்… இதை சாத்தியமாக்க உண்மைத் தரவுகளை நோக்கிய தங்கள் அனுபவம்…
என் தேடலில் எதிர்ப்பட்ட தரவுகளைக் கண்டடைந்த பரவசத்தை என் வாசகர்களுக்குக் கடத்த முயல்கிறேன். கடந்த காலத்தைக் கொண்டு நிகழ்காலத்தை விளங்கிக்கொள்ள முயல்கிறேன். வரலாற்றைக் கொண்டு வாழ்வின்மீதான விசாரணையை மேற்கொள்கிறேன். இதுதான் உண்மையில் வரலாற்றாய்வாகும். அதற்கு என்னுடைய வரலாற்றுப் பயிற்சியும் இலக்கிய வாசிப்பும் துணைநிற்கின்றன. தமிழில் இதற்கு அதிக முன்னுதாரணங்கள் இல்லாததால் எனக்கு நிறைய கவனிப்பு கிடைத்துள்ளது. ஆலை இல்லாத ஊரில் சக்கரை எது என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வ.உ.சி. எனும் பேராளுமையின் பங்களிப்பு மறைக்கப்பட்டதே அவரை நோக்கிய தங்களின் தேடலா?
தமிழகம் அறிந்த ஒரு நாயகர் என்.சி.இ.ஆர்.டி.பாடநூலில் இடம்பெறாத அவலத்திலிருந்து தான் என் ஆய்வு தொடங்கியது. இதற்காக பிபின் சந்திராவையோ, ரொமிலா தாப்பரையோ நொத்துகொள்வதில் பயனில்லை. ஆங்கிலத்தில் எழுதினால்தான் அனைத்திந்திய கவனம் கிடைக்கும். அதிலும் தரமான ஆய்விதழ்களிலும் பெயர் பெற்ற பதிப்பகங்களின் மூலமாகவும் வெளியிட்டால்தான் நம்மைப் பொருட்படுத்து வார்கள். அதில் தமிழ் அறிவாளர்கள் தவறிவிட்டார்கள். அந்த இடைவெளியை நிரப்பும் முகமாகவே கடந்த பத்தாண்டுகளாக அதிகம் செயல்பட்டுவருகிறேன். The Brief History of a Very Big Book: The Making of the Tamil Encyclopaedia; Tamil Characters: Personalities, Politics, Culture; Who Owns That Song?: The Battle for Subramania Bharati’s Copyright; The Province of the Book: Scholars, Scribes, and Scribblers in Colonial Tamilnadu; In Those Days There Was No Coffee: Writings in Cultural History என்று தொடர்ச்சியாக நான் ஆங்கிலத்தில் எழுதி வருவதை என் வாசகர்கள் கவனிக்கத் தவறியிருக்கமாட்டார்கள்.
Swadeshi Steam படைப்பை உருவாக்கும் போது கிடைத்த பல தரவுகள், நெகிழ்ச்சி சம்பவங்கள் பற்றி சொல்லலாமே?
வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை எப்படி முழுமையாக எழுதுவது என்று மலைத்துப்போய் சிறு சிறு நூல்களாகவே தமிழில் எழுதிவந்தேன். கொரானா பொதுமுடக்கத்தின்போது நீர்மேல் குமிழி யாக்கை என்ற உணர்வு மேலிட்டது. எப்படியும் எழுதிவிடுவது என்று வ.உ.சி.யின் பெருஞ்சாதனையான சுதேசிக் கப்பல் கம்பெனி பற்றி முதலில் எழுத முடிவெடுத்தேன். தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள ஆங்கில வாசகர்களை இந்த உள்ளுறை ஈர்க்கும் என்றும் நம்பினேன். ஆனால் இவ்வளவு பெரிய நூலாக விரியும் என்று முதலிலேயே தெரிந்திருந்தால் எழுதத் துணிந்திருப்பேனா என்பது ஐயமே. எழுதத் தொடங்கியதும் ஏதோ ஒரு குறளி என்னுள் புகுந்துகொண்டதைப் போன்ற ஆவேசம் என்னை ஆட்கொண்டது. ஒன்பது மாதத்தில் நூலின் கரட்டு வடிவத்தை முழுவதும் எழுதி முடித்துவிட்டேன் என்றால் நம்புவீர்களா?
வ.உ.சி. பற்றி ஆய்வு Swadeshi Steam புத்தகத்தோடு நிறைவு பெற்றுவிட்டதா? மேலும் தொடருமா?
முதலில் இந்த நூலைத் தமிழில் எழுத வேண்டும். வ.உ.சி.யின் எஞ்சிய வாழ்க்கையை மேலும் இரண்டு பெருநூல்களாக எழுது வதற்கான எத்தனங்களும் நடந்துவருகின்றன. தமிழுலகம் ஆதரவு தரும் என்று நம்புகிறேன்.
l
