மனித மனங்களில் மத நம்பிக்கைகள் நிறைந்திருந்தாலும், பாகுபாடில்லாமல் பலனை எதிர்பார்க்காத அன்பினைப் பகிர்ந்து, மக்கள் நட்புடன் வாழ்வதற்கான வளங்களோடு இந்நாடு செழித்திருக்கிறது. அந்நிய நாட்டினரான ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற தேயிலைத் தோட்டங்கள் மக்களுக்கு தொழில் வாய்ப்பைப் பெருகச் செய்து இன்றளவும் அவர்களுக்கு ஆதாரமான வருமானத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பு வாழ்ந்த தென் தமிழக மக்கள், ஆங்கிலேயர்களால் இலங்கைக்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டு அங்குள்ள தேயிலைத் தோட்டங்களை வளர்த்த கதைகளையும் நாம் அறிவோம்.
அடிமைப்படுத்துதலையும் கடந்து, ஆங்கிலேயர்களால் பெற்ற வசதிகளை நினைவு கூறும் வகையில், இங்கிலாந்து நாட்டின் ராணி விக்டோரியாவின் புகைப்படங்கள், விடுதலைக்குப் பிறகும் இலங்கையில் சில அரசு அலுவலகங்களின் சுவர்களை அலங்கரிக்கின்றன. இப்படியான இத்தீவில் இன்றும் தீராமல் இருக்கிறது இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழீழ மக்களின் இனப்படுகொலை. எந்த உயிரிக்கும் இல்லாத சட்டங்களை வாழ்வதற்கான உரிமையாக மனிதர்கள் இவ்வுலகில் வகுத்துக் கொண்டிருக் கின்றார்கள். வாழும் நிலத்தில் அதனைத் தானும் பெற வேண்டுமென உரிமைகோருகின்ற தமிழீழ மக்களுக்குக் கிடைத்தது அடக்குமுறை மட்டுமே. யானைகள் நிறைந்த காட்டில் புலிகளாகப் போராடி வாழும் மனிதர்கள் தாங்கள் விரும்பாத போரை கையிலெடுத்து, எதிராளியிடம் தான் சிக்கினாலும் தனது இனத்தினர் சிக்கி விடக்கூடாது என்கிற நோக்கத்தில், தங்களது ரகசியங்களைக் காத்துக் கொள்வதற்காக சயனைட் குப்பியோடு வாழ்ந்ததை எளிய மனிதர்களால் கற்பனை செய்ய இயலாதது.
புத்தர் கோவில்கள் இருக்கின்ற இலங்கையின் நகரில் உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது என்கிற நோக்கத்தில், ஆங்கிலேயர்கள் காலத்தில் ஏற்படுத்திய சிறைச்சாலையைக் கூட இவர்கள் இன்று மூடிவிட்டார்கள். அப்படியான இத்தீவில், வாழும் உரிமையை இழந்த பூர்வீகக் குடியினரான தமிழீழ மக்களது போராட்டத்தில் விளைந்த போரில், விதிமுறைகளை மீறி இலங்கை ராணுவத்தினர் நடந்து கொண்டனர். துரோகத்தையும் ஏமாற்றத்தையுமே போராளிகளான தமிழீழப் புலிகள் சந்தித்தனர். இயக்கத்தில் இணைந்து வருமானத்திற்கு வழியின்றி குடும்பத்தினரின் எதிர்கால உரிமைக்காகப் போராடிய இளைஞர்களில் சிலர், குடும்பத்தினராலும் தனித்து விடப்பட்டு இன்னலுக்கு ஆளாகி தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். இவர்களின் உண்மையான கதைகளைப் பதிய வைக்கும் புனைவு நாவலாக “சயனைட்” நூல் அமைந்திருக்கிறது.
இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்களது நடுகல், பயங்கரவாதி ஆகிய படைப்புகளைத் தொடர்ந்து அடுத்ததாக அவர் எழுதிய நாவல் “சயனைட்” ஆகும். இதில் ஈழப் போரின் சிறு பகுதியாக சயனைட் குப்பிகளோடு வாழ்ந்து மறைந்த சில இளைஞர்களை கதாபாத்திரங்களாக முன்னிறுத்தி நெடுந்தொடரான புனைவாக இந்த நூலை வழங்கியிருக்கிறார். தங்களது கல்வியைத் தொடராமல் கனவுகளைத் தொலைத்து, இயக்கத்தில் சேர்ந்து இளமையை இழந்து, தனது தலைவனின் சொற்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்த இவர்கள், ராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டால் தங்களது இனத்தினரை காட்டிக் கொடுக்காமல் அந்த நொடியே வாயில் கடித்து மாண்டு விடுவதற்கு எப்பொழுதும் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சயனைட் குப்பிகளை மையமாக வைத்து இந்த நாவல் சுழல்கிறது. தமிழீழப் போராளிகளை நண்பர்களாகக் கொண்ட எழுத்தாளர் தீபச்செல்வன், அவர்களது உண்மைக் கதைகளை நேரடியாக அறிந்து வைத்திருப்பவர். திரித்துக் கூறப்பட்ட காரணங்கள் மெய்யென வரலாற்றில் பதிந்து விடக்கூடாது என்பதற்காக, நடந்த உண்மைகளை நாவலாகப் புனைந்து கொடுத்திருக்கிறார். இந்த நாவல் முழுவதும் விரவியிருக்கின்ற நிகழ்வுகளும் சம்பவங்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, இலங்கைத் தமிழுக்கேயுரிய கூடுதலான மொழியழகுடன் கவித்துவமான கற்பனைகளோடு இருந்தாலும், அதில் வெளிப்பட்டிருக்கின்ற காட்சிகள் யாவும் விண்ணிலிருந்து ஏவப்படுகின்ற எறிகணைகளையும், உயிரோடிருக்கும் சிதைந்த உடல்களையும் கண்முன் நிறுத்துகின்றன. அழகிய வானையே போர்க்களமாகக் கொண்டு பறக்கின்ற விமானங்களின் ஓசையைக் கேட்டவுடன் நிலமே சொந்தமில்லாத மக்கள் அடைக்கலம் புகும் பதுங்கு குழிகளை களங்களாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த உண்மை நாவலின் ஆசிரியர், எப்படி புன்னகைக்க முடியும் என்கிற பதில் எனது காதில் ஓங்கி ஒலித்தது. ஒரு படைப்பாளர் வாழும் நிலம் சார்ந்த இயல்புகளையும் உண்மைகளையும், அவரது படைப்பில் தேடுகின்ற ஒரு வாசகனது எதிர்பார்ப்பிற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் அப்படியானதொரு நாவலையே எழுத்தாளர் தீபச்செல்வன் அவர்கள் கொடுத்திருக்கிறார். உரிமைகோருகின்ற பூர்விகக் குடியினரான தமிழீழப் போராளிகளது அடையாளங்கள் இருந்த இடத்தில் ராணுவ முகாம்கள் இருந்திருக்கின்றன. இவர்கள் நாடுவது நடுநிலையாக தங்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படையான சர்வதேச நீதியை மட்டும்தான். இக்காலத்தில் கனவாகிப் போன கடிதத்தை இந்த நாவலின் முக்கியப் பாத்திரத்தின் கனவில் உயிர்ப்பித்த கடிதமாக வடித்து, அவர்களது நிலையை விளக்கமளித்திருப்பது இவரது கையிலுள்ள பேனாவின் தீவிரத்தைக் காட்டுகிறது. இலங்கையில் வாழும் சிங்கள மக்கள், தமிழீழ மக்களது கோரிக்கைகளை இவரது எழுத்தின் மூலமாகவும் புரிந்து கொள்கிறார்கள் என்பது இவரது படைப்பின் வெற்றி எனலாம்.
மறுவினாடியே சொந்தமில்லாமல் அச்சத்தோடு வாழ்ந்து அவ்வப்போது பதுங்கு குழிகளில் மறைந்து உயிரைக் காத்துக்கொள்ள முயல்பவர்களது பிள்ளைகள், பள்ளிக்குச் சென்று திரும்புகையில் விண்ணிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகள் அவர்களது உடலையும் தலையையும் வெவ்வேறாகத் துண்டித்து உடல் துடித்தாலும், உயிரோடு இருக்கின்ற மறு பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும்படி கல்வியை முக்கியமானதாகக் கருதியிருக்கிறார்கள். வெவ்வேறு களங்களில் அவ்வப்போது ஏற்படுகின்ற போர்களில் உடல்கள் சிதைக்கப்படுவதும், அதனை உரியவரே காண நேர்வதும் நடந்திருக்கிறது. காணாமல் போன ஒருவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதையே அறிந்திட இயலாமல் அவதிப்படுவது, தலைவருக்கு நேர்ந்ததாக மட்டுமல்லாமல், அவரோடு இணைந்து களத்தில் இயங்கும் இயக்கத்தினருக்கும் இருந்த நிலையாக இருந்திருக்கிறது. என்றாவது ஒரு நாள் உருவம் மாறியோ, உருகுலைந்தோ, உயிரோடு வெளிப்படலாம் அல்லது மாண்டு போயிருக்கலாம் எனும் உறுதியற்ற வாழ்வின் எதிர்பார்ப்பு, போராளிகளின் குடும்பத்தினர்களுக்கு என்றுமே நிலவியிருக்கிறது. “சயனைட் கீறியதால் கழுத்திலிருந்து நெஞ்சுப் பகுதி வரை நீலம் படர்ந்திருந்தது” என்பது போன்ற வரிகளையும், “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் முழக்கங்களையும் குறிப்பிடுவதோடு, சமூக அமைப்பிற்கு ஆதாரமான குடும்பங்கள் நீர்க் குமிழிகளைப் போல உடைவதாக எழுதியும், இறந்த உடலைப் புதைக்கின்ற வழக்கத்தை வெளிப்படுத்த, “விதையுடல்கள்” என்னும் சொல்லாடலையும் நூலாசிரியர் பயன்படுத்தி யிருக்கிறார். இரும்பு போன்ற உறுதியான இதயத்தில் ஈரம் கசிகின்ற போராளிகளுக் கிடையேயான தோழமையையும் இந்நூல் எடுத்துரைக்கிறது. பிடிபட்ட புலிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதாக ராணுவத்தினர் ஏற்படுத்திய தடுப்புச்சிறைகளில் அவர்களுக்குக் கொடுக்கின்ற உணவில் நஞ்சைக் கலந்து கொஞ்சம் கொஞ்சமாக உயிரை இழக்கச் செய்கின்ற துரோகத்தை இழைப்பதையும், தமிழீழ வைப்பகம் இருந்த இடத்தில் இப்பொழுது அதன் அடையாளமே இல்லையென்று அவர்கள் தொலைந்து போவதையும் கடந்து, “தடுப்புச்சிறையில் துரோகம் இழைக்காமல் மறுவாழ்வு அளித்தால் போராட்டங்கள் இனி துளிர்க்காமல் இருக்கலாம்” எனும் எதிர்பார்ப்பையும் இந்த நாவலில் பதிய வைத்திருக்கிறார்.
மனிதனின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்புகள் அதன் எல்லைகளைத் தொடும் நிலையில் அழிவையே சந்திக்க நேரிடுகிறது. விமானத்தை உருவாக்குகின்ற தொழில்நுட்பம் அறிந்தவர்களை போர் ஆயுதங்களைச் சுமக்கும் நிலைக்குத் தள்ளியது அவற்றைத்தான் சொல்கிறது. உலகின் எந்த மூலையிலும் நடவாத நிகழ்வாக தங்களது ரகசியங்களைக் காத்துக் கொள்ள தற்கொலை செய்து கொள்ளத் துணியும் கொரில்லாப் போர் வீரர்களான புலிகள், மறு நிமிடமே ரத்தச் சிவப்பு அணுக்களைச் சிதைத்து, உடலிலிருந்து உயிரைப் பிரிக்கும் சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்தவாறு நடமாடும் நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள். போரில் பல இளைஞர்களை இருதரப்பிலும் இழந்திருக்கிறார்கள். இங்கிலாந்து அரசக் குடும்பத்திற்கு மகுடம் சூட்டுகின்ற விலையுயர்ந்த கற்களை அளித்த வளத்தைக் கொண்ட இம்மண்ணில் உறைந்து போன இரத்தங்கள், தமிழீழ மக்களது முற்றுப்புள்ளியற்ற வரலாற்றை இன்றும் முழங்கிக் கொண்டிருக்கின்றன. சமமாக வாழும் உரிமை கொண்டு, போர் இல்லாத உலகம் யாவருக்கும் வாய்க்க வேண்டும்.” சயனைட் நாவலை வாசித்த பிறகு நமது விருப்பமாக இதுவே இருக்கிறது.
l
previous post