அமுதா ஆர்த்தியின் கதைகளை வாசிக்கையில், சமகால எழுத்துலகில் ‘மனிதர்’ குறித்த அக்கறையுடன் எழுதப்பட்டிருக்கிற சிறந்த தொகுப்பாகவே உணர்கிறேன். சிறுகதை வெளியீட்டு உத்தியில், மரபு ரீதியான கதை சொல்லல், அதற்குப்பின் நவீனக் கதைமொழி, பிறகோ பின் நவீனத்துவம் என பல உண்டெனினும் அமுதாவின் கதைகள், எதார்த்த வகை எழுத்துகளுக்கும் நவீன வகை எழுத்துகளுக்கும் இடைப்பட்டதாக இருப்பதைக் காணலாம்.
பந்தயம் தொகுப்பில் 12 சிறுகதைகள். ஒவ்வொரு கதையும் தன்னளவில் தனித்துவம் வாய்ந்தது. கதைகளில் நடமாடுபவர்கள் நேற்று இன்று சற்றுமுன் என நாம் சந்தித்த,சந்திக்கிற மனிதர்கள். எளிய மனிதர்கள் அமுதாவின் பலமே ஸ்தூல மனிதர்களை பேனா மற்றும் கணிப்பொறிக்குள் நுழைத்து மறுபக்கத்தில் மறக்கவியலாப் பாத்திரங்களாக வாசகன் பார்வைக்கு தரும் எழுத்து திறன் தான்! தொகுப்பின் மிகச்சிறந்த கதை ரயிலை துரத்தும் இரவு. விருத்தாசலம் சந்திப்பிலிருந்து கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாளில் முன்பதிவேதும் செய்யாமல் எக்ஸ்பிரஸ் இரயிலின் பொதுப்பெட்டியில் பெண் குழந்தையோடு நாகர்கோவில் செல்ல வேண்டிய இளம் பெண்ணின் மனப்போராட்டம் தான் கதை. யாரோ ஒரு ரயில்வே போலீஸ்காரர் மூலமாக டிடிஆர் பெட்டியில் இடம் வாங்கி கொடுக்க, விடியும் வரை அந்த பெட்டியில் ஓர் இரவை கடத்துவதும், கழிப்பதுமே கதையோட்டம், என்றாலும் பயணத்தின் பரபரப்பும், தனிமையின் பலவீனமும், மனித குணங்களின் தூய்மையும் அழுக்குகளும் என எல்லாம் கலந்து நேர்த்தியான கதையாக உருவாகியுள்ளது. சூரிய நிர்வாணம் – மனப்பிறழ்வு மனிதர் ஒருவரைப் பற்றிய கதை. கசடான மனிதர் இருக்கும் உலகில் தான் அசலான மனிதரும் இருக்கிறார்கள்! பணம் நிலம் வீடு போன்ற சொத்து குடும்பம் உறவுகளுக்கு இடையே புகுந்து சொத்துமாற்றத்துக்காக ஆடும் சித்து விளையாட்டை, மனிதர்களின் வேறு வேறு முகங்களை எளிய மொழியில் சொல்லி செல்கிறது கதை. மனப் பிறழ்வுக்காளான பெண்மணி ஒருத்தியின் தனிமை மனநிலையே உப்பு நீர் கதை. ஐம்பதை நெருங்கும் வயதில் இரண்டு மகன்களும் ஒரு மகளும் துணையாய் கொண்டும் பயனிலா வாழ்க்கை. பால்யத்தில் அல்லது அதற்குரிய வயதில் கிடைக்காத… நிறைவேறாத ஆசைகளை ஏதோ ஒரு வயதில் நிறைவேற்றி ஆசை தணிப்பதை மனப்பிறழ்வு என்றா சொல்ல முடியும்? ஆனால் தன்னை அலங்கரித்து அழகுபடுத்திக் கொண்ட இக்கதையின் அம்மாவுக்கு கிடைத்தது பைத்தியக்காரி பட்டம் “ஒன்னு ஒழுங்கா இரு இல்ல இறங்கி எங்கயாவது எங்க கண்ணு காணாம போய் சாவு” ஒரு மகனின் நாக்கு இது. “நாங்க மேலும் வந்து செத்து உண்டாக்கிக் கொண்டு வாறோம். நீ வீட்டுல இருந்து மினிக்கிக் கெடக்கியா.. பைத்தியம்னா இப்டியொரு பைத்தியத்தப் பாக்கல“ மற்றொரு மகனின் நாவடு மனித மனம் தான் எவ்வளவு விசித்திரமானது! பிறழ்வுக்கும் இயல்புக்கும் இடையிலான கடலலை மன நிலையை உப்புநீர் – எனும் கதையாக்கி வெற்றியடைந்துள்ள அமுதா.
காகிதப்பொதி கதை ஒரு சிறுவனின் பழைய சைக்கிள் ஆசையை படம்பிடிப்பதோடு, பெரியோர்களாக வளர்ந்தவர்களின் மனத்தில் கசடும் அழுக்கும் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதை எதார்த்த மொழியில் சொல்லி இருப்பது. அமுதாவின் வர்ணனைகள் ஊடாக வழியும் கவிதை பூசிய வரிகள் வாசகனை அந்தந்த இடத்திலேயே கட்டிப் போட வைப்பவை. மணிப்பூரில் பல ஆண்டுகளுக்கு முன் இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் பெண்கள் தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாகக் கொண்டனர் என்பது வரலாறு. நேசர் உணவகம் – கதையின் முடிவும் மனப்பிறழ்வு கொண்ட பெண் ஒருத்தி கொடுமனம் கொண்டதைக் கணவன் பாத்திரத்துக்கு ‘தன் பாவாடையை தூக்கி நிர்வாணத்தை காட்டுகிறாள்’. ஒரு ஆண் தோற்கும் இடம் எஃதென புரிந்தவள்..! சற்றே நீண்ட நெடுங்கதை வடிவத்தில் எழுதப்பட்ட கதையில் வயிற்றுக்கு உணவும், வாழுமிடப் பாதுகாப்பும் இல்லை எனினும் ‘ஆண்’ என்கிற மமதை கணவன்களாகிய கொடுங்கோலியாத்களிடம் வியாபித்திருப்பதை விரிவாய் காட்சிகளுடன் காண்பிக்கும் கதையில், வர்ணனைகள் கூட கதையமைப்போடு பொருத்தமாக சொல்லி யிருப்பது சிறப்பு. “சூடாகி புகை வந்த தோசைக்கல்லில் மாவை வேகமாக ஊற்றி சுற்றினான், ‘சுரீர்’ என்றது அவளுக்கும்.” கதையின் போக்கில் அமுதா, மதம் பிடித்த மதத்தின் மீது ஒரு குட்டு வைக்கிறார்: “ஆலயத்தில் போதகனின் போதனை கேட்டது.ஸ்த்ரீகளே உங்கள் சொந்த புருஷர்களுக்கு கீழ்படிந்திருங்கள். புருஷர்கள் வார்த்தைகளால் வதைத்தாலும் சொற்களால் சூடு வைத்தாலும் தோசைத்திருப்பிகளால் காயம் ஏற்படுத்தினாலும் இந்த கீழ்ப்படியாமை மட்டும் குறையாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறது மதம்.
பந்தயம் – கதையில் ஒரு காட்சி: ‘ஒரு பக்கம் பிரசங்கிமார் கூடிநிற்க, இரண்டு பிரசங்கியார் குனிந்து இறந்த உடலுக்கு உயிரூட்டியபடி இருந்தனர். ஒரு பிரசங்கி, இரண்டு மீட்டர் நீளமுள்ள குளுக்கோஸ் டியூப்பை இழந்தவரின் வாயில் திணித்தான். இன்னொரு பிரசங்கி, பிணத்தின் வாயை மூடிப் பிடித்திருந்தான். ஒருவன் காற்றை டியூப் வழியாக ஊத, வெளிக்காற்று வாயில் உள்ளே புகுந்து விடாதபடி இன்னொருவர் பிடித்திருந்தார். மனைவியோ, கணவர் மயக்க நிலையில் இருக்கிறார் என்று மிகுந்த பிரயாசத்துடன் ஜெபத்தில் மூழ்கி இருந்தாள். பிணத்தின் வயிற்றினுள் காற்று நிரம்பியுடன் டியூப்பை வெளியே மெல்லமாக உருவி எடுத்தார்கள். வயிற்றிலுள்ள காற்று வெளியே போகும் போது அவர் மூச்சு விடுவது போன்று இருந்தது (ப.31)’ கூட்டத்தில் ஒரு பெண் பதிலாகிறாள்:
“ஆஸ்பத்திரியில தான் சொல்லியாச்சுல்ல, பொறவு என்ன செய்யுது இவனுவோளுக்கு . அந்த உடம்பை வச்சி வித்தகாட்டியானுவ, இப்டி ஒருக்க கடவுளு இருக்காருன்னு நினைக்க வைக்கணுமாக்கும் ..அவரு ஒரு வாக்குல இருந்துட்டு போட்டுமே யார் வேண்டான்னு சொன்னா (ப.32)” ஒரு நிகழ்வு ஓர் உரையாடல் மூலமே மொத்தக்கதையையும் சொல்லிவிடுகிற சாமர்த்தியம் அமுதாவுக்கு உண்டு. பேருந்து என்னும் மாயம் கிராமங்களின் நுழைந்தபோது பெரியவர்கள் மட்டுமல்லாமல் சிறார்களையும் ஈர்த்தது. அந்தப் பின்னணியில் சிறுவர் மனநிலையில் சூலிக்குட்டி என்னும் சிறுமியின் பேருந்துப் பயணம் எனும் பெருங்கனவை இயல்பான மொழியில் சொல்லும். சற்று தாவித்தாவி வேறு திசைகளுக்குள் பயணித்தாலும் சூலிக்குட்டியாக வாசகர் மாறும்போது கதை தன் போக்கில் இழுத்துக் கொள்கிறது, பிறகென்ன கயிற்றைப் பிடித்தபடி கற்பனை பஸ் பயணம் தான் நட்சத்திரச்சிவப்பு – கதையும் மனப்பிறழ்வுக்காளான ஒருவனைப் பற்றிய கதை. சற்றேறக்குறைய ‘சூரிய நிர்வாணம்’ கதைக்கு நெருக்கமான உள்ளடக்கம். மனநிலை சரியில்லாதவனை சகிக்கும் வீடு, குடும்பம் இயல்பாக ஏற்றுப் பழக, அவன் வளர்க்கும் ஆடு, கதையில் காதலின் ஒரு குறியீடாக அமைந்து வாசக வரவேற்பை பெறுகிறது. “வீடு எந்த சோகத்தையும் தேக்கி வைக்கவில்லை அது அதன் இயல்பிலேயே இருந்தது. [ப.117]” என்ற வரிகளின் வழியாக கதையின் போக்கை, குடும்பத்தினர் இயல்பை எளிதாக வாசனுக்குக் கடத்துகிறார் அமுதா. நேசமிகு சுவர்கள் – கதை இரு பள்ளிச் சிறுமிகள் குறித்தது. சிறுமிகளின் தந்தையர் குறித்த ஒப்புமை கதையாக நகர்ந்தாலும், சுரத்தில்லா உரைநடை தன்மையால், வாசக ஆதரவை பெறுவதில் தவறுகிறது. செம்மண் – இரு வேறு சாதி/ வர்க்கத்தின் [HAVE AND HAVE NOT] பிரதிநிதி மனிதர்களான ரெட்டியார் மட்டும் பாவாடையனின் முறுக்கல்களை, மனவிகாரங்களை, உடல் ரீதியான துவந்த யுத்தத்தை நேர் கோட்டில் சொல்லும் கதை என்றாலும், இக்கதையமைப்பில் நாடக ஆக்கத்திற்கான கூறுகள் நிரம்பி இருப்பதாகவே நம்புகிறேன். தென்னம்பஞ்சு – கதை மிக சாதாரண பின்னணி. அமுதாவின் உணர்வு தாங்கிய கதாமொழியால் வாசக மனங்களை ஈர்க்கிறது. சற்றே நீண்டு, குறுநாவலின் வாசம் வீசினாலும் சிறுகதைக்குள் இருக்கும் உணர்வுத்தீட்டல் இக்கதையின் சிறப்பு. தாயைப் பிரிந்த சிறுமி அம்மையை சந்திக்கும் உணர்வு பொங்கும் தருணத்தை இரவுக்கு அம்மாவின் சாயல் -கதை வழியாக கடத்தியிருக்கிறார் அமுதா.
அமுதாவின் கதாபாத்திரங்கள் ஏன் தோல்வியை மட்டுமே சந்திக்கின்றன? ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை கசப்பும் துவர்ப்புமான வாழ்க்கை? கேள்விகளை எழுப்புவது தானே படைப்பாக்கத்தின் பணி! பதிலாக முகிழ்க்கிறது அமுதா ஆர்த்தியின் என்னுரை: “பெருங்காட்டில் தனித்து விடப்படுகிற மனநிலையே கடந்த காலம். வாழ்க்கையில் பயம் மட்டுமே தொற்றிக்கொள்ள, காலம் அதன் போக்கில் அடையாளம் கண்டது. ஒவ்வொருவருக்கும் ஏராளமான கதைகள் உண்டு. அக்கதைகள் சொல்வதில் வேறுபடுகின்றன. அவற்றை எழுதி முடித்ததும் இலகுவான மனநிலை உருவாகிறது. இந்த மனநிலைக்காகவே மீண்டும் மீண்டும் கதைக்குள் கதையாக இருக்க விரும்புகிறேன்” “எழுத்தை விட வாழ்க்கை நுட்பமானதாகவும் புதிர்கள், எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. வாழ்க்கையின் முன்னெழுத்து பாவம் போல் இருக்கிறது” என்பார் தோழர் ச.தமிழ்ச்செல்வன். வாழ்க்கை போலவே மனித மனங்களும் மனிதர்தன் செயல்பாடுகளும் வெளிப்படுத்தும் நாமொழியும், உடல் மொழியும் புதிர்களாய், விடை தெரியாத விடுகதைகளாய்தான் நிரவித் தெரிகின்றன. அவற்றிலிருந்து நிகழ்வுகளைத் தேடிப்பிடித்து, சேகரித்து, கதைகளாய்க் கோர்த்துத் தருவது, பெரும் சவால். ஆனால் அத்தகைய சவாலை அமுதா ஆர்த்தி அனாயசமாகக் கையாண்டிருக்கிறார் என்பதற்கு பந்தயம் தொகுப்பு நிரூபணம்.
l
previous post