வரலாற்று நாவலாசிரியர் புவனா சந்திரசேகரன் அவர்களின் பராந்தகப் பாண்டியன், காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன் நாவலைத் தொடர்ந்து நான் வாசிக்கும் அவர்களின் மூன்றாவது நாவல் பங்கயச்செல்வி மங்கையர்க்கரசி. பொதுவாக ஓர் ஆசிரியர் ஒரே தளத்தில் நாவல்களை எழுதும்போது அதை வாசிப்பவர்க்கு ஒன்றுபோலவே இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் கதைக்கு கதைக் களம் ஒன்றாக இருந்தாலும் அதில் தமது கற்பனைத் திறனையும், காட்சி அமைப்புகளையும் வேறுபடுத்திக் காட்டி, படிப்பவர்க்கு புது அனுபவத்தை கொடுப்பதில் இந்த நாவலாசிரியர் கைத்தேர்ந்தவராக இருக்கிறார். மீண்டும் மீண்டும் அதே போர் முறை, உடை அமைப்பு, உணவு வகை என வாசிப்பவர்க்கு சலிப்பு தட்டிவிடாமல் பார்த்துக்கொள்ள நாவலாசிரியர் முயன்றிருப்பது பாராட்டுதற்குரியது.
எழிலும் மறமும் ஒருங்கே அமையப்பெற்ற மதுரை மாநகரிலிருந்து தோரணவாயில் திறக்கிறது. மதுரை மாநகரத்தின் அழகையும், மீனாட்சி அம்மனின் அருளையும் வர்ணித்துக் கொண்டே கதை துவங்குகிறது. பாண்டிய மன்னர் மாறவர்மன் அரிகேசரியின் பட்டத்து ராணி மானிதேவி மீனாட்சி அம்மனின் முன்பு கண்ணீருடன் வேண்டிக்கொண்டிருக்கிறாள். அங்கு வரும் அமைச்சரான குலச்சிறையாரிடம் தம் மனத்தை அழுத்திக்கொண்டிருக்கும் கவலையை அமைச்சர் என்ற முறையை விடுத்து பாசமிகு அண்ணன் என்ற முறையில் வருந்துகிறாள். தமது கணவர் சமயத்துக்கு எதிராக விதித்திருக்கும் சட்டங்களை எண்ணி கவலை கொள்வதாக அமைச்சரிடம் தனது மனக்குமுறலைக் கொட்டுகிறாள்.
இருவருக்கும் இடையேயான உரையாடலுக்கு மத்தியில் வரும் இளம் சிறுமி, அவளது குணம், அவளைப் பற்றிய விளக்கம் ஆகியவை அழகாக பேசப்படுகிறது. மேலும், திருமறைக்காடு கோவிலைப் பற்றிய வரலாறு, பாண்டிய மன்னன் சமண மதத்தின் மீது கொண்ட ஈடுபாடு, அதன் மூலம் சமணர்களுக்கு கிடைக்கும் ஆதரவு, பாண்டிய மன்னர்களின் பரம்பரை வரிசை, கல்வி பயிலும் இடம் பள்ளி என அழைக்கப்பட்டதன் ஆரம்பம், சமணர்கள் தென் திசைக்கு வந்த காரணம், திருநீறு அணியக்கூடாது என்ற சட்டம், அதன்மூலம் மதுரையில் சைவ சமயம் அழிவுநிலைக்கு சென்ற தருணம் என வரலாற்றுத் தரவுகளோடு கதை நகர்கிறது. சங்க இலக்கியத்தில் தோழி தலைவி கூற்றுகள், விளையாட்டுகள் எவ்வாறு பேசப்பட்டனவோ அதை மிக அழகாக விவரித்து வர்ணித்துள்ளார். இந்திர விழாவை மணிமேகலை காப்பியம்கூட இந்த அளவிற்கு விளங்கும் விதத்தில் கூறி இருக்குமா என்பது ஐயம்தான், அவ்வளவு நேர்த்தியாக இந்திர விழாவை விவரித்து புரியும் விதத்தில் ஆசிரியர் கூறியுள்ளார்.
மேலும், அன்று செயல்பட்ட ஐம்பெரும் மன்றங்களான வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் நின்ற மண்டபம், பூதச் சதுக்கம், பாவை மன்றம் ஆகியவற்றைப் பற்றி தெளிவான தரவுகளோடு விளக்கியுள்ளார். சேரருக்கும் பாண்டியருக்கும் இடையே நடைபெறப்போகும் போருக்கு முன்பாக செய்யும் ஆயத்தங்கள் ஒரு நிஜப் போர் யுத்தியை நம் கண் முன்னே கொண்டு வருகிறது. மேலும், முதலையின் வாய்ப்பொறி, தேளின் வடிவத்தில் அணிவகுத்து நிற்கும் படை, ஆறு கால்களாக புரவிப்படை, புலியை கொன்ற பெருங்காளையின் தோலால் செய்யப்பட்ட முரசு, பலவித போரிசைக் கருவிகள், அவற்றைப் பற்றிய விளக்கங்கள், களிரோடு களிர் மோதும் காட்சி, பாண்டிய வீரர்களின் தோற்றங்களை வர்ணித்த இடங்கள், பல இன வீரர்களை காட்சிப்படுத்தி இருப்பது போன்ற வற்றை நாவலாசிரியர் விளக்கியிருப்பது உண்மையிலேயே ஒரு போர்க்களத்திற்கு நம்மை அழைத்துச் சென்றதைப்போன்ற உணர்வைத் தருகின்றது. மணிமுடிச் சோழனும் நெடுமாற பாண்டியனும் பாசவுணர்வோடு மல்யுத்தம் புரியும் இடங்கள் நெகிழ்ச்சி யானது. நெடுமாற பாண்டியனுக்கும் மணிமுடிச் சோழனின் மகளான மானிதேவிக்கும் திருமணம் இனிதே நடைபெற்றது. நெடுமாறன் சமணத்தின் மீது பற்று கொண்டவனாக உள்ளான். மானி தேவியோ சைவத்திற்காக தன்னையே அர்ப்பணம் செய்தவள். இந்த நிலையில் நெடுமாறன் சமணர்களை சந்திக்க மானி தேவியை அழைக்கிறான். ஆனால் தேவியோ, தமது கணவர் மனம் புண்படாத வகையில், தான் சைவ மதத்தின் மீது கொண்ட காதலை எடுத்துரைக்கிறாள். மேலும், நெடுமாறனும் மானியும் ஒரு பயணம் மேற்கொள்கையில் இடையூறு ஏற்படுகிறது. அதை ஒரு சிவன் கோயிலின் மணியோசை தீர்த்து வைப்பதாக மானி நம்புகிறாள். அதை நெடுமாறன் இல்லை என மறுத்து, இது உன்னுடைய மனப்பிறழ்வு. இங்கு எந்தக் கோயிலும் இல்லை என்று கூறுகின்றான்.
இப்படியாக சைவத்திற்கும் சமணத்திற்கும் உண்டான விவாதங்களும், அவர்களின் பயண இடையூறுகளும் தொடர்ந்து கொண்டே போகின்றன. கூன் பாண்டியன் என வரலாற்றில் நாம் படித்த பாண்டிய மன்னன் தான் இந்த நெடுமாற பாண்டியன். அவனுக்கு எவ்வாறு கூன் விழுந்திருக்கும் என்று கற்பனை வளத்தைக் கூட்டி அழகாக கதை புனைந்து நம் முன்னே விவரிக்கிறார் நாவலாசிரியர். வஜ்ரநந்தி என்னும் சமண முனிவர் நெடுமாறனை முழுமையாக சமணப் பற்றாளராக மாற்றிவிட்டார். மதுரை நகர் முழுக்க யாரும் திருநீர் பூசிக்கொண்டு வெளியே நடமாடக்கூடாது என்னும் அளவிற்கு அவன் மனம் மாறிவிட்டது. அப்படி சட்டத்தை மீறி நடமாடுபவர்களை கழுவில் ஏற்றிக் கொல்லும் அளவிற்கு நெடுமாறன் போய்விட்டான். இப்படி அந்தக் காலத்தில் சமயம்சார்ந்து நடந்த விவாதங்கள், இயற்றப்பட்ட சட்டங்கள், கொடுக்கப்பட்ட தண்டனைகள் போன்றவற்றை தெளிவாக மற்றும் சான்றுகளோடு ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சிவ அடியார் ஒருவரின் கதாபாத்திரத்தின் ஊடாக நாவுக்கரசர், சம்பந்தர் போன்றவர்களின் வரலாற்றைக் கதையோடு இணைத்துக் கூறியுள்ளார். மேலும், நிக்கோலஸ் என்னும் யவனனின் மூலம் கதையை நகர்த்திச் செல்லும் விதம் புதுமையானது.
மதுரையில் வீற்றிருக்கும் அங்கயர்கண்ணி தெய்வத்தை மானிதேவி இருபத்து மூன்று அடைமொழி கொண்டு போற்றி வேண்டிய இடங்கள் சிலிர்க்க வைத்த ஒன்று. சம்பந்தரும் அப்பரும் கதாபாத்திரங்களாக உரையாடுவதைப் போன்ற கற்பனைப் படைப்பு நாவலின் தரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. மதுரையில் நலிவுற்று வரும் சைவ மதத்தைக் காக்க சம்பந்தர் மதுரைக்கு வருகிறார். சிவ பக்தியில் மூழ்கி இருக்கும் மானிதேவியை மங்கையர்க்கரசி என பெயர் சூட்டி அழைக்கிறார். சம்பந்தரை சந்தித்ததும், அவர் தன்னை மங்கையர்க்கரசி என பெயர் சூட்டி அழைத்ததையும் எண்ணி எண்ணி மானிதேவி மனம் மகிழும் இடங்கள் நெகிழ்ச்சியானவை. நெடுமாற பாண்டியனுக்கு வெப்பு நோய் தாக்கி விடுகிறது.
சொல்ல முடியாத அளவிற்கு வலியில் துடிக்கிறான். இங்குதான் நாவலில் மிகப்பெரிய திருப்பம் உண்டாகிறது. மன்னனின் வெப்பு நோயைப் போக்க பல இடங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டும் எந்தப் பயனும் அளிக்கவில்லை. அப்போதுதான் திருஞானசம்பந்தர் வரவழைக்கப்படுகிறார். சமணர்கள் இதை ஏற்கவில்லை. இதனால் மன்னன் இடது பக்கம் சமணர்களும் வலது பக்கம் திருஞானசம்பந்தரும் சிகிச்சையை மேற்கொள்ள கூறுகின்றான். திருஞானசம்பந்தரின் சிகிச்சை பலனளிக்கவே மன்னன் வெப்பு நோய் நீங்கி குணமடைகிறான்.
இதுபோக சம்பந்தருக்கும் சமணர்களுக்கும் அனல்வாதம் புனல்வாதம் நடந்ததை விரிவாக கதையின் ஓட்டத்தினூடாக நாவலாசிரியர் கூறிச் செல்கிறார். வல்லாளன் என்னும் ஆபத்துதவியும், அபிநந்தன் என்னும் சீடனும் கதையின் பெரும்பாலான இடங்களில் வருகிறார்கள். இதில் வல்லாளனை மிகவும் விசுவாசமுள்ள ஒருவனாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார். இங்கே அபிநந்தன்தான் கதையின் திருப்பு முனையாக வருகிறான். அபிநந்தன் என்பவன் யார்? அவன் வரலாறு என்ன? அவனுடைய உண்மையான பெயர் என்ன? அவன் எந்த மன்னர் குலத்தைச் சார்ந்தவன்? எந்த மதத்தைச் சார்ந்தவன்? எதற்காக பாண்டிய நாட்டில் வாழ்கிறான்? அவன் செய்த ஊழல்கள் என்னென்ன போன்ற அத்தனை முடிச்சுகளுக்கும் விடை கிடைக்கும் இடங்கள் திடுக்கிட வைப்பவையாக இருக்கின்றது. அபிநந்தன் இளம் சிறுமியை கொல்லத் துணியும் நேரத்தில் குறுக்கே புகுந்து தனது உயிரைப் பணயம் வைத்து அச்சிறுமியை காக்கும் யவனன் நிக்கோலஸ், கதையில் நெகிழ்ச்சியின் உச்சம்.
இறுதியாக பாண்டிய நாட்டுக்கும் சாளுக்கிய நாட்டுக்கும் கடுமையான மோதல் ஏற்படுகிறது. மீண்டும் ஒரு போர்க்களம் நம் கண் முன்னே விரிகிறது. பாண்டிய நாட்டு ஆறுகால் புரவிகள் வீரத்துடன் போரிட்டு சாளுக்கியப்படைகளை முறியடித்தது. நெடுமாறனின் மகனான கோச்சடையன் அபிநந்தனின் தலையைக் கொய்து வெற்றியை உறுதி செய்வதாக கதை நிறைவுறுகிறது. இந்த நாவலை ஒரு சங்க இலக்கிய விரிவுரைபோல காண முடிகிறது. எடுத்துக்காட்டாக, தோழி, தலைவி உரையாடல்கள், விளையாட்டுகள், தலைவி கொள்ளும் நாணம், தோழி தலைவியை செய்யும் கிண்டல், தலைவியின் மனமாற்றத்தால் பெற்றோர் வருந்துவது, அதனால் ஜாதகம் பார்ப்பது, தலைவி ஓர் ஆடவனைக் கண்டவுடன் அது காதல்தானா என்று எண்ணி மனத்துக் குள்ளேயே புலம்பிக் கொள்வது, பின் பசலை நோய் தாக்குவது என்று ஒவ்வொரு விடயங்களும் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இதில் மிகவும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருந்தது, ஒவ்வொரு அத்தியாயம் முடியும் போதும் அதில் கூறப்பட்டிருக்கும் வரலாற்று விடயங்களின் ஆதாரங்கள், அதைப் பாடிய புலவர்கள், அவர்களின் வரலாறு, செப்பேடுகளில் இருந்து எடுத்த செய்திகள் என்றால் அந்தச் செப்பேட்டின் விவரங்கள், கல்வெட்டின் விவரங்கள் என்று ஒரு நேர்த்தியான ஆய்வு நூலைப் படிப்பதைப் போன்ற ஓர் உணர்வை தருகிறது. வரலாற்று நாவலை படிக்கும் ஆர்வலர்களுக்கு மட்டுமல்லாமல் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்பவர்களுக்கும் இந்த நூல் பெரிதும் விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.l
previous post