பொதுவாகவே பாடல்கள் நம் அனுமதியின்றியே நம் வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றன. இன்பம், துன்பம், துரோகம், கோபம், அழுகை, ஆறுதல், காதல் என்று அனைத்து உணர்வு நிலைகளிலும் பாடல்கள் இருக்கின்றன. கோடி கோடி பாடல்கள் ஆயிரமாயிரம் மொழிகளில் இருந்தாலும் நமக்கான பாடல்களாக இருப்பவை ஒரு சிலதான். நமக்கு பிடித்த இசையைப் புத்தகத்தில் படித்து உணர்ந்து சிலாகிப்பது என்பது இதுவரை உணரா புது உணர்வு. அப்படி ஒரு அற்புதமான உணர்வை நம்முள் கடத்தும் நூல் இளம்பரிதி கல்யாணக்குமார் அவர்கள் எழுதிய ‘பாட்டுவாசி’.
பாடல்கள் குறித்து அதிக ஆர்வம் இருந்தது. ஒரு பாடல் ஒரு தனிநபரை என்னவெல்லாம் செய்கிறது, நபருக்கு நபர் எப்படி வெவ்வேறுவித நினைவாக இருக்கிறது என்பதை பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். திரைப்பாடல்கள் குறித்து ஏதேனும் புத்தகங்கள் இருக்கிறதா என்று தேடியபோது என் கண்ணில் தென்பட்ட எழுத்தாளர் இளம்பரிதி கல்யாணக்குமார் அவர்கள். இவர் ஓர் இளம் எழுத்தாளர், கவிஞர். படவரி, முகநூல் போன்ற சமூக ஊடக பக்கங்களில் தொடர்ந்து பாடல்கள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். மடைதிறந்து [2020], காலங்களில் அது வசந்தம் [2021] என்று பாடல்கள் குறித்து இரண்டு நூல்களை எழுதியுள்ளார். ‘எந்தப் பாடல் நீங்கள் இருக்கும் மனநிலையில் இருந்து அதனை முதன்முதலில் கேட்ட காலத்திற்கு உங்களை இழுத்துச் செல்கிறதோ அதுவே உங்களுக்கான பாடல்’ என்ற இந்நூலின் வரிகள் எந்தப் பாடல் கேட்டாலும் அதன் முதல் நினைவைச் சிந்திக்க வைத்தது. இந்நூலில் 35 கட்டுரைகள் உள்ளன. இந்நூலின் தனிச்சிறப்பு என்னவெனில், நூலாசிரியர் ஒரு பாடல் எடுத்துக்கொண்டு அதனை விளக்கி அல்லது திரைப்படச் சூழலோடு ஒப்பிட்டு பாடல்களை விளக்கவில்லை. இவர் பயணித்த விதமே தனித்துவமாக இருக்கிறது. ஒரு பாடலாசிரியர் பாடல்களை எப்படி கையாண்டிருக்கிறார், ஒரு பாடலின் வரிகள் கதைக்களத்திற்கு எவ்வாறு பெருந்துணையாக அமைகின்றது, பாடலின் கருத்துத்தெளிவு, பின்னணி பாடகர்களின் பங்கு, பாடலைக் காட்சிப் படுத்திய விதம், நடிகர்களின் பங்கு என பாடலின் அனைத்து அம்சங்களையும் பேசுகிறார். ‘சாகாவரம் போல் சோகம் உண்டோ’ என்ற கட்டுரையில் கமல் எனும் பேராளுமை ‘சாகாவரம்’ என்ற கருத்தை உத்தமவில்லன் மற்றும் விருமாண்டி ஆகிய இரண்டு படங்களில் எவ்வாறு கையாண்டிருக்கிறார் என்று இவர் எழுதியதை படிக்கையில் அத்தனை களிப்பு. நமக்கு பிடித்த பாடல்களின் பரிமாணங்களை அறிந்து கொள்வதுதான் எத்தனை ஆனந்தம்!
இளம்தலைமுறையினர் அதிக வாசிப்பில் ஈடுபடுவதில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் இந்த எழுத்தாளரோ தமிழ் இலக்கியச் சுவையை நன்குணர்ந்தவராய் கட்டுரைகளின் இடையில் தேவைப்படும் இடங்களில் இலக்கண இலக்கிய சான்றுகளை மேற்கோள்கள் காட்டி எழுதியுள்ளார். ‘பாடலாசிரியர் இளையராஜா’ கட்டுரை, பாடலாசிரியர் ராஜாவின் மீதான காதலை மேலும் அதிகமாக்கியது. ‘நந்தன் கதை சொல்லி போராடடா’ கட்டுரையின் வாயிலாக நந்தனின் கதையை விளக்கி பகுத்தறிந்தும் எழுதி இருக்கிறார். ‘அலை ஓசை’ படத்தில் போராடடா ஒரு வாளேந்தடா’ என்ற பாடல் இருக்கிறது. அப்பாடலில்தான் ‘நந்தன் இனமே பெறும் அரியாசனமே அந்த தினம் வருமே’ என்ற வரி இருக்கிறது. இந்தப் பாடலை அதிகமுறை கேட்டு மெய்சிலிர்த்திருந்தும் இதன் வரிகளின் அர்த்தம் இப்போதுதான் முழுமையாக அறிகிறேன். இது போன்ற கட்டுரைகளை படித்த பின்பு பாடல் வரிகளை மிகவும் இயல்பாக கடக்க மனம் முற்படாமல் சிந்திக்கிறது.
திரைத்துறையில் ஆண் பாடலாசிரியர்கள் அதிகம். பெண்களின் பாடல் வரிகளும்கூட ஆண்களால் எழுதப்பட்டிருப்பதே அதிகம். ‘தாமரை எழுதிய தாலாட்டு’ கட்டுரையில் ஆண் பாடல் வரிகளை தாமரை எத்தனை அழகாக ஆழமாக எழுதி இருக்கிறார் என்பதை பதிவிடுகிறார் நூலாசிரியர். ‘கண்கள் நீயே’ பாடலில் ‘அம்மா – மகன்’ உறவை எழுதியிருந்த கவிஞர் தாமரை அப்பா மகளுக்காக எழுதிய பாடல் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்று இரு வேறு பாடல்களின் வரிகளை விளக்கி இதமழை பொழிந்திருக்கிறார். இது போன்ற சுவை மிகுந்த சிந்தனைசார் கட்டுரைகளின் இடையில் ஆங்காங்கே கவித்துவ வரிகளையும் எழுதி கட்டுரைகளுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளார் கவிஞர். ‘பாடல்களைப் பிரித்துவிட்டு இயற்கையை முழுமைப்படுத்திவிட முடியாது’, ‘பாடல்கள் என்பவை செலவில்லாத அன்பளிப்புகள்’, ‘காதலின் வேதனை மரணவலி என்று எழுதுபவர்கள் யாரும் மரணித்த அனுபவம் இல்லாதவர்கள்தானே’, ‘தொலைத்த முகத்தை தொலைத்த உணர்வை எங்காவது யாரிடமாவது தேடிக்கொண்டு இருப்பதுதான் வாழ்க்கை’ என்று வாழ்க்கை தத்துவங்களை ஆங்காங்கே தெளித்து, ‘ஊடல் கடந்த இன்பத்தை சொல்லிக்கொடுத்த வள்ளுவன் வண்ணங்களுக்குள் அடக்க முடியாத ஆகப்பெறும் ரசிகனில்லையா?’ என்று அரசியல் கேள்வியும் கேட்கிறார். விவேகா, இளையபாரதி, கலைக்குமார், இளங்கோ கிருஷ்ணன், சிவா ஆனந்த் போன்ற பாடலாசிரியர்களை இந்நூலின் வழி அறிந்தேன். இந்நூலில் உள்ள 35 கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க கட்டுரைகள் என்று பல உள்ளன. இந்நூலை படிப்பதன் மூலமாக மட்டுமே அதை உணர முடியும். பொதுவாக புத்தகத்தை வாசித்து அதில் வசித்திருக்கிறேன். முதல் முறையாக பாட்டில் வசித்தேன்! l
previous post
