பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களால் குமுதம் குழும இதழ்களில் ஒன்றான “தீராநதி”யில் ஜனவரி 2017 முதல் ஜூலை 2022 வரை ‘நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்’ எனும் தலைப்பில் எழுதிய அரசியல் மற்றும் இலக்கியத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இவ்விரண்டு நூல்களாகும். இந்நூலின் முதல் பாகத்தில் 38 கட்டுரைகளும், இரண்டாம் பாகத்தில் 39 கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான பேரறிஞர் சாத்தனாரின் மணிமேகலை காப்பியமானது, பதினாறு கிளைக்கதைகளை உள்ளடக்கி, 4758 வரிகளில் முப்பது அத்தியாயங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. இம் மணிமேகலை காப்பியமானது, மையக்கதை, பெளத்த சிந்தனைகளை விளக்கும் பதினாறு உட்கதைகள், சில பெளத்த தத்துவக்கோட்பாடுகள் என, மூன்றும் இணைந்து பொருந்தி அமைக்கப்பட்ட ஓர் அழகிய ஆபரணமாக தமிழ் இலக்கிய மரபில் தனிச் சிறப்புடன் விளங்குவதனை பேராசிரியர் கண்டறிந்ததுடன் நில்லாது, அக்காப்பியத்தினுள் பொதிந்திருக்கும் பெளத்தம், சமணம், வைதீக மதம், பக்தி இலக்கியம், அசோகர், சிறைச்சாலை, மார்க்ஸியம், முரண்பாடு, பின் நவீனத்துவம், தமிழ்மொழி, மனித உரிமைகள் சார்ந்த கருத்தியல்களையும் வெளிக்கொணர்ந்து அதனை ஓர் உரையாடலாக மாற்றியிருக்கிறார். அவற்றினைப்பற்றி சுருக்கமாகக்கீழே காணலாம்.
மணிமேகலைக்காப்பியத்தின் இன்னொரு பெயர் ‘ மணிமேகலைத்துறவு’ என்பதாகும். கணிகையர் குலத்தில் பிறந்த ஒர் இளம்பெண் பிறவியால் தொழிலும், வாழ்வும் நிர்ணயிக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் நின்று எவ்வாறு அந்தச்சமூக நியதிகளை வென்றதோடு, எதிர்கொள்ளும் எல்லாத்தடைகளையும் கடந்து இறுதி உய்வின் ஒரு முக்கியப் படியாக துறவு நிலையைச் சென்றடைகிறாள் என்பதைச் சொல்லுவதுதான் மணிமேகலைக் காப்பியத்தின் அடிப்படை அமைப்பாகும்.
2500 அண்டுகளுக்கும் மேற்பட்டு விரிந்து கிடக்கும் தமிழ் இலக்கிய வரலாற்றில், சங்க காலத்தை ‘வீர யுகம்’ எனக்கூறுவதுண்டு. அதுபோல ஆறாம் நூற்றாண்டுக்குப்பிந்தைய சைவ, வைணவப் பாசுரங்காலத்தை ‘பக்தியுகம்’ எனச்சொல்வதுண்டு. இவையிரண்டிற்கும் இடைப்பட்ட ஐம்பெருங் காப்பியக் காலத்தை ‘அறயுகம்’ எனக்கூறுவதுண்டு. பாசுரங்கள் அறத்தின் இடத்தில் இறைபக்தியையும், இறையடியார்களுக்கு செய்யும் சேவையையும் முன்நிபந்தனையாக்கின. அறநூல்களோ அறம் சார்ந்த வாழ்வைமட்டுமே முதன்மைப்படுத்தின. சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக மணிமேகலையைக் கூறுவதுண்டு. ஆனால் சற்றே ஆழ்ந்து வாசிப்போர் மணிமேகலைக் காப்பியம் பல்வேறு அம்சங்களில் சிலம்பிலிருந்து வேறுபட்டு நிற்பதை உணர முடியும். சிலப்பதி காரத்தின் இறுதியில் வெளிப்படுத்தும் அறச்சீற்றம் தவிர, பிற அம்சங்களில் கண்ணகி வெறும் காவிய நாயகி மட்டுமே. ஆனால், மணிமேகலையோ ஒரு காவிய நாயகி மட்டுமல்ல அறக்கோட்பாடுகளை மக்கள் முன் வைத்தவளாவாள். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டிலும் முக்கியக் கதாபாத்திரங்கள் ஒன்றாக இருந்த போதும், சாத்தனாரின் பெளத்த அணுகல்முறை என்பது இளங்கோ அடிகளின் சமணப் பார்வை யிலிருந்து வேறுபட்டிருப்பதை அறியமுடியும்.
வடமொழிக்காப்பியங்களைவிட தமிழ் காப்பியங்கள் பெரிதும் வேறு பட்டுள்ளன. வடமொழிக் காப்பியங் களானது, அறம், பொருள், இன்பம், குறைகளற்ற நாயகன், விரிவான போர்க் களக்காட்சிகள், முடிசூடல் அல்லது திருமண வைபவத்தினை உள்ளடக்கி யிருக்கும். தமிழ்க் காப்பியங்களோ, அகம், புறம், மற்றும் திணை, துறைக் கோட்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும். சமஸ்கிருத இலக்கியக் கோட்பாடுகளும், இறுக்கமாகப் பின்பற்றப்படவில்லை, வைதீக மதிப்பீடுகளும் ஏற்றுக்கொள்ளப் படவில்லை என்கிற காரணங்களுக்காகவே பக்தி இலக்கியத்திற்கு முந்தைய சிரமண இலக்கியங்கள் தமிழ்ச்சூழலில் புறக்கணிக்கப்பட்டன. வைதீக மரபினை முன்னிருத்தும் இலக்கியங்களைவிட, சிரமண மரபு இலக்கியங்களான மணிமேகலை, நீலகேசி, குண்டலகேசி ஆகிய மூன்றிலுமே பெண்கள் துறவுநிலை அடைவது முக்கியப் பாடுபொருளாக இருக்கின்றது. இம்மூவருமே மாற்றுத்தத்துவங்களில் வல்லவர்களாக உள்ள ஆடவர்களை வெல்லுவதாக புனைவுகளின் வழியாக படைக்கப்பட்டுள்ளது. சமண, பெளத்த நூல்கள் யாவுமே பெண்களின் ஞானத்தேடலுக்கும், ஆன்மிக நாட்டத்திற்கும் தங்களது கதவுகளைத் திறந்தே வைத்துள்ளன.
மணிமேகலைக்காப்பியத்தில்கூட, ஒரு இளம்பெண்ணுக்குரிய அனைத்து ஆசைகளையும், வேட்கைகளையும் படிப்படியாகத்துறக்கும் வரலாற்றினை சொல்லும் ஊடாக பெளத்த நெறிகளை விளக்குவதே நூலின் நோக்கமாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் கோவலன் அநீதியாகக் கொலை செய்யப்பட்டு மதுரை எரிக்கப்பட்ட செய்தி அறிந்த உடனேயே மாதவியும், தனது மகள் மணிமேகலையும் துறவுக்கோலம் பூண்டதையும் மேற்குறிப்பிட்ட வற்றிற்குச் சான்றாகக்கூறலாம். மணிமேகலைக் காப்பியமானது, ஓர் இளம் பெண்ணின் துறவை நோக்கிய இயக்கத்தைச்சொல்வதாக அமைந்திருந்த போதிலும், கூடவே அது ஒரு தத்துவ விவாத நூலாகவும் அமைந்துள்ளது. எல்லாம் மாறிக் கொண்டும், இயங்கிக்கொண்டும் இருக்கின்றன. எதுவும் நிரந்தமில்லை. எல்லாம் இயங்கிக் கொண்டு மட்டுமல்ல அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தும் உள்ளன என்பன பெளத்த அடிப்படைகளில் ஒன்று.
மணிமேகலைப் பிரதி இதனைத்தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருக்கிறது. இப்படி, பெளத்த அடிப்படைகள் நுணுக்கமாக வெளிப்பட்டுக்கொண்டே இருந்தாலும் மணிமேகலைக்காப்பியத்தின் மிக அடிப்படையான கரிசனம் யாதெனில், பசிப்பிணி அகற்றுவது, எல்லாராலும் கைவிடப்பட்டோருக்கு ஆதரவாக அமைவது என்பவைதான். ஏழை எளியோருக்கு பசிப்பிணியாற்றும் நிகழ்வானது, உலக இலக்கிய வரலாற்றில் வேறெங்கும் கண்டிராததுமாகும். எளியமக்களின் பசியை மட்டுமல்ல, சக உயிர்கள் அனைத்தின் பசியையும் நீக்கும் கடமை நமக்குண்டு என அறிவுறுத்துகிறது மணிமேகலைக்காப்பியம். இப்படி அள்ள அள்ளக்குறையாத அமுதசுரபியை அண்டித்துயருற்ற உயிர்கள் அனைத்தும் பசியாறும் கற்பிதத்தை ஒரு பெளத்தக்காவியமே நிகழ்த்திக்காட்டியிருக்கிறது. பசி ஆற்றுதல் என்பது பெளத்தத்தின் ஒரு தீவிரமான கோட்பாடாகும். அது அதன் பிரிக்க இயலாத ஓரங்கம். நோய்களிலேயே கொடிது பசி என்றார் புத்தபிரான். விவாத முறையும், தர்க்க மரபும் புத்தார் காலத்திலிருந்தே தொடங்குகிறது. மணிமேகலைக் காவியத்தினுள் பதிக்கப்பட்ட கிளைக்கதைகள் யாவும் வெறும் காப்பிய அழகுக்காகவன்றி, பெளத்த கோட்பாடுகளை விளக்கும் முகமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. தவிரவும், அவை பெளத்த அறவழியை முன்னிறுத்துவதோடு அல்லாமல், மிக நுணுக்கமாக வைதீக அணுகல் முறைகளையும், நம்பிக்கைகளையும் வெளிப்படையாகவும், தீவிரமாகவும் மறுப்பதாகவும் உள்ளது. உதாரணத்திற்குக்கூறுவோமாயின், பிறவியினால் யாரும் பிராமணரும் ஆவதில்லை. தீண்டத் தகாதவரும் ஆவதில்லை. இடைப்பட்ட நிலைகள் என்று எதுவுமில்லை. பிராமணர் என்பதை ஓர் உயர்நிலை எனக்கொண்டோமே யானால் உயிர்க்கொலை புரியாது, அறவாழ்வை மேற்கொள்பவர்கள் எவரும் பிராமணர் ஆகலாம். புத்தரின் காலத்தில் முக்கிய விவாதப்பொருளாக இருந்தவை ஆன்மா, பிரும்மம், கர்மவினை, வருணம், வேள்விகள் முதலானவற்றின் இருப்பு மற்றும் நியாயப்பாடுகள்தான். புத்தர் இவை அனைத்திலும் அன்றைய வேத விற்பன்னர்களின் கருத்துகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நின்றார். அவருடைய அணுகல் முறை என்பது நேரடியாகச்சென்று வாதுக்கு அழைத்து அவர்களைச் சிந்திக்கச்செய்து சரியான திசைக்கு திருப்புவதாக இருந்தது. பிறவிப்பெருங்கடலைக் கடப்பதற்கு ஒரேவழி அறவாழ்வே எனவும், கொல்லாமை உள்ளிட்ட பெளத்த சீலங்களைக் கடைபிடித்தொழுகுதல் மட்டுமே வினை தீர்க்கும் வழி எனக் சொல்லுவதனூடாக பெளத்தமானது பக்தியின் இடத்தில் அறத்தினை முன்வைக்கிறது.
பிறவியினால் வருணங்களும், தீண்டாமை முதலியவையும் தீர்மானிக்கப்படுதல், வேள்விகள் மூலம் உயிர்க்கொலைகள் புரிந்து ஒருவர் விடுதலையடைதல் என்பன போன்ற இரண்டு அடிப்படையான வைதீக நெறிகளையும் எதிர்த்து நின்ற வகையில் பெளத்தம், சமணம், ஆசிவகம் முதலான அவைதீக நெறிகள் வைதீகத்திலிருந்து வேறுபட்டு நின்றன.
மானுடர்கள் கடைபிடிக்கவேண்டிய நான்கு அறங்களை பெளத்தம் முன்வைக்கிறது.
1. உலகம் முழுவதும் துக்கத்தால் (திருப்தியின்மை) விரவியுள்ளது. 2. பற்று, அடங்காத ஆசையே திருப்தியின்மைக்கு காரணம். 3. வாழ்விலிருந்து இயலாததாக அமைகிற இந்தப்பற்றுக்களிலிருந்து விடுபடுவது. 4. பற்றறுப்பது அல்லது அறவாழ்வு மேற்கொள்வது என்பதாகும். ஆக, பெளத்தத்தைப் பொருத்தவரை, தொழுகை, இறை அச்சம், இறைவணக்கம், புனித முழுக்கு முதலான எதுவுமே விடுதலைக்கான வழியல்ல. மக்களைப் பல்வேறு குலங்களாகப்பிரித்து நிறுத்தி, அவை ஒவ்வொன்றிற்கும் ஒரு மரபை வரையறுப்பது மட்டுமின்றி அந்த மரபு குறித்த பெருமையை அவர்களுக்கு ஊட்டுதல் என்பதில்தான் வருண சாதி அடிப்படையிலான குலமரபுகள் இங்கே மக்களின் ஒப்புதலுடன் பேணப்பட்டு வருகின்றன. ஆனால், பெளத்தமானது குல மரபுகளை ஏற்க மறுக்கிறது. குலமரபைப் புறந்தள்ளி துறவற வாழ்வை ஏற்கும் மணிமேகலை அந்தக்குல மரபுப்பழியோடு வாழ நேரவில்லை. அவள் ஏற்ற பெளத்தம் அவளை அந்தப்பழியிலிருந்து காப்பாற்றுகிறது.
பெளத்தம் வடக்கிலிருந்து வந்த ஒரு மதமாயினும் அதற்கு உள்ளூர் தன்மையை ஏற்கும் முகமாகவே சாத்தனார் உருவாக்கியுள்ளார். சோழ மன்னனை ஒரு பாத்திரமாகவும், புகார், வஞ்சி, காஞ்சி ஆகிய நகர்களை கதைக் களங்களாகவும் கட்டமைப்பதைக் காணலாம். அதேநேரத்தில் பெளத்தம் இன்னும் விரிவானது என்பதைச்சொல்ல அவர் இலங்கையிலுள்ள மணிபல்லவம் முதல் இந்தோனேஷியாவிலுள்ள சாவகம் (ஜாவா) வரை செல்லுகிறார். பெளத்த புண்ணியஸ்தலங்களாக உள்ள புத்தகயாவையோ அல்லது லும்பினியையோ சாத்தனார் இங்கே முதன்மைப்படுத்தவில்லை. மாறாக, தென்கிழக்கு ஆசியப்பகுதிகளை இணைத்து வேறொரு பெளத்த பிரபஞ்சத்தை முன்வைக்கிறார். பாலி அல்லது சமஸ்கிருத மொழிக்குப்பதிலாக தமிழையே பிரபஞ்சத்தின் இலக்கிய மொழியாக உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழுக்கு அப்பாலிலிருந்த இலக்கிய மூலங்களை தமிழ்க்காப்பிய உருவாக்கத்திற்கு பயன்படுத்தும் முகமாய்த்தோன்றிய முதல்நூல் மணிமேகலை யாகும். அதன்பிறகே பிறமொழி இலக்கியங்கள் தமிழுக்கு வரலாயின. பிறமொழி இலக்கியங்கள் தமிழுக்கு வருவதற்கு பெளத்த, சமண மதங்கள் முன்னோடியாக இருந்திருக்கின்றன.
பெளத்த, சிரமண மதங்களின் மதிப்பீடுகள் தமிழ்ச்சூழலில் பெருந்தாக்கம் விளைவித்ததற்கும், அதே நேரத்தில் பழந்தமிழர் மரபான கற்பு முதலான மதிப்பீடுகளை ஏற்று, தன்னிலும் சில மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டதற்கும் மனிமேகலைக்காப்பியம் ஒரு சான்றாக உள்ளது. அதேநேரத்தில் இன்னொருபக்கம் பத்தினி வழிபாட்டை ஏற்காததன் விளைவாக அது சிலம்பிலிருந்து தன்னை வேறுபடுத்தியும் கொள்கிறது.
பெளத்த அறிஞர்கள் பிறரை வாழ்த்தும்போது ‘அறிவு உண்டாக’ எனக்கூறுவது வழக்கம். பெளத்தம் துறவை மட்டும் போதிக்கும் மதமல்ல. திறன் சார்ந்த வாழ்வு என்பதையும் அது வலியுறுத்துகிறது. அறஞ்சார்ந்த வாழ்வே திறன் சார்ந்த வாழ்வாக இருக்க முடியும் என்பதையும் அது முன்வைக்கிறது. ‘உபய கவுசல்ய’ என்பது ஒரு பெளத்த கருத்தாக்கம்.
அதாவது, சூழலுக்குத்தகுந்த உபாயம். அவ்வப்போது எதிர்கொள்ளும் சூழலுக்குத் தகுந்தவாறு தங்கள் அறிவின் துணைகொண்டு அறத்தின் வழிநின்று உபாயங்களை தீர்மானித்துக் கொள்ளவேண்டும் எனவும் கூறுகிறது. எதையும் அதன் இயல்பில் அறிந்துகொள்வதற்கு எல்லாவற்றையும் முற்றுண்மையானது (Non – Nominal Truth) என அணுகும் பார்வை தடையாகிறது. எந்த முன் முடிவுகளும், நம்பிக்கைகளும், அறிதலுமற்ற நிலையை அடைவதுதான் Nominal Truthஐ அறிந்துகொள்ளும் வழியாகும். இதைத்தான் புத்தர் ஒளிபெற்ற நிலை என்கிறார். மணிமேகலைக் காப்பியக் காலத்தில் தமிழ்மக்கள் மத்தியில் பத்துவகை மதங்களான, பிரமாணங்கள், சைவம், பிரமவாதம், வைணவம், வைதீகம், ஆசிவகம், நிகண்டவாதம், சாங்கிய வாதம், வைசேடிகம், பூதவாதம் பேசப்பட்டிருக்கின்றன. பிராமணக் கல்வி முறைக்கும், சிரமணக் கல்விமுறைக்குமான வேறுபாடுகளைப்பற்றி கூறும்போது, பிராமணம் போலச் சிரமணம் புறச்சடங்குகளுக்கும், இதர புறவினைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்ப தில்லை. அகப்பயிற்சிக்கே அது முதன்மை அளித்தது. நலவாழ்வு, திறன் சார்ந்த வாழ்வு, அறம் சார்ந்த வாழ்வு ஆகியவற்றையே பெளத்தம் கல்வியின் நோக்கங்களாகக் கொண்டிருந்தது. அறவாழ்வு, ஆழ்நிலை, உள்நோக்குச்சிந்தனை, ஞானம் ஆகியன கல்வியின் உள்ளடக்கங்களாக இருந்தன. கல்வியினை ஆன்மிகப்பயிற்சி என்பதாகச் சுருங்காமல் உடல், ஒழுக்கம், அறிவு, சிந்தனை ஆகியவற்றினை உள்ளடக்கிய முழுமையான ஆளுமை வளர்ச்சியை அது நோக்கமாகக் கொண்டிருந்தது.
ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் நகரங்கள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதுபற்றி இளங்கோவடிகள் விவரிக்கும் காவிரிப்பூம்பட்டினத்தையும், சாத்தனார் விவரிக்கும் வஞ்சி நகரத்தையும் ஒப்பு நோக்கும் போது, இரு நகரங்களிலும் செழித்திருந்த பல்வேறு தொழில்களைக் காணமுடிகிறது. பல்வேறு தொழில் செய்தவர்களும் ஓரிடத்தில் குவிந்திருந்தனர். இவ்வாறு ஒரேதொழில் செய்தோர் ஓரிடத்தில் குவிந்திருந்ததும், தொழில்ரீதியாக மக்கள் குறிப்பான பெயர்களில் அடையாளங்காணப் பட்டதும் செய்தொழில் அடிப்படையில் சாதிகள் கட்டமைக்கப்பட்டதை அறியமுடிகிறது. இரண்டு நகரங்களிலும் காணப்பட்ட வேறுபாடுகளைப்பற்றி குறிப்பிடும் போது, புகார் நகரில் யவனர்கள் குடியிருப் பென்பது இருந்திருக்கிறது. வஞ்சிநகரில் அவ்வாறாக ஏதும் இல்லை என்பதையும் காணமுடிகிறது. அரிஸ்ட்டாட்டில் தொடங்கி மேலை நாட்டு பாரம்பரியம் வரை முரண்பாடு களின் இருப்பை அங்கீகரிப்பதில்லை. அவர்களைப்பொருத்தவரை உண்டு அல்லது இல்லை என்கிற இருமை எதிர்வுக்குள் அடங்கி விடுகிறது. பெளத்தத் தத்துவப்போக்குகளில் ஒன்றான மகாயான பெளத்தமரபில் ’நான்கு மூலைகள்’ எனும் கருத்தாக்கம் உண்மை, பொய், உண்மையாகவும் இருக்கலாம், பொய்யாகவும் இருக்கலாம், உண்மையாகவும் இல்லாமலும் இருக்கலாம், பொய்யாகவும் இல்லாமலும் இருக்கலாம் என்கிறது. எல்லா வற்றையும் இருமை எதிர்வுக்குள் அடக்கிவிட முடியாது. இரண்டிற்கும் இடைப்பட்ட சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன. நவீன இயற்பியல் முதல் மார்க்ஸியம் வரை இதனை ஏற்கின்றன.
கடவுளாக ஒருவரை ஏற்பது; அருளப்பட்ட புனித நூலாக ஒன்றைத் தொழுவது; புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வது; சமூக ஏற்றத்தாழ்வுக்கு ஏற்பு வழங்குவது; நோன்பு முதலான வடிவங்களில் உடலை வருத்தச்செய்து பாவங்களைப்போக்கிக்கொள்வது ஆகியவற்றையே உலகத்துயர்களிலிருந்து மட்டுமின்றி பிறவித்துயரிலிருந்தும் விடுபடும் வழிமுறைகளாகவே உலக மதங்கள் யாவும் கூறிவந்துள்ளன. இத்தகைய முட்டாள் தனங்களை பெளத்தம் மறுப்பதால்தான் அதனை ஒரு மதமாக ஏற்பதில் பிரச்சினைகள் வந்து விடுகின்றன. பெளத்தம் ஒரு மதமல்ல. அது ஒரு ‘தம்மம்’, ’வாழ்நெறி’ அவ்வளவுதான்.
சமண, பெளத்த மரபுகள் அறவாழ்வை வற்புறுத்துபவை. பக்திமரபு என்பதில் அறத்தைக்காட்டிலும் பக்தியே முதன்மையான வாழ்வு நெறியாக அமையும். சமண, பெளத்த காப்பியங்கள் தமது இலக்கணத்தை மீறாமல் இந்த அறவாழ்வை வலியுறுத்தும் பாங்கு குறிப்பிடத்தக்கதாகும்.” அறம் எனப்படுவது யாது எனக்கேட்பின் மறவாது இது கேள் மண்ணுயிர்க்கெல்லாம் உண்டியும், உடையும், உறையுளும்..” – சாத்தனார்.
l
previous post