இஸ்லாமிய மக்களின் கதைகளைச் சொல்லும் பல புத்தகங்களை படித்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக என்று துவங்கி எழுத்தாளர்கள் பெயர்களை குறிப்பிடுவதை வேண்டுமென்றே தவிர்த்து விடுகிறேன். இஸ்லாமிய சமூகத்தைப் பற்றியும் அம்மக்களைப் பற்றி பொதுவாக மேலோட்டமாக எழுதுவதுதான் தற்போது வரை பெரும்பாலான எழுத்தாளர்களால் கடைப் பிடிக்கபட்டு வருகிறது. “எவ்வளவு நேரம் தான் திண்ணையிலே இருப்பீங்கோ, செருப்ப கழட்டீட்டு வீட்டுக்குள்ள வாங்கோ” என்பது போல் கதைக்களத்தை வீட்டிற்குள் வைத்திருக்கிறார் எழுத்தாளர் ஆமினா முஹம்மத்.அந்தவகையில் நிகாடு புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் என்னைச் சார்ந்த கதைகள் என்பதைவிட நான் கண்ணால் கண்டு காதால் கேட்டு பக்கத்துவீட்டு பெண்களுடன் முக்காடுகளால் வாயை மூடி கதைத்த கதைகள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
பெண்களின் உளவியல் என்பது கணிக்க முடியாத ஒன்றாகும், இது மரபியல் மற்றும் கலாச்சாரம் முதல் தனிப்பட்ட அனுபவங்கள் வரை பல காரணிகளால் பாதிக்கப்படுகிறது. பெண்களின் உளவியலை முழுவதுமாக ஒரே புத்தகத்தில் சுருக்குவது சாத்தியமற்றது என்றாலும், அவர்களின் தனித்துவமான சிந்தனை, உணர்வு மற்றும் நடத்தை முறைகளை வடிவமைக்கும் பல முக்கியக் கூறுகளை இந்த புத்தகம் எடுத்துக் கூறுகிறது. இந்த சிறுகதைகளின் எழுத்தாளர் பெண் என்பதால் 95 சதவீத இட ஒதுக்கீடு பெண்களுக்கே கிடைத்திருக்கிறது. ‘நிகாடு’ மொத்தம் ஒன்பது சிறுகதைகள். ஒன்பது முடிச்சுகளையும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டால் நிகாடு என்பதன் பொருள் புலப்பட்டு விடும். அத்தனையும் துயரம் நிறைந்த கதைகள். பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் தங்களின் உரிமைக்காகவும் அவர்கள் போராடுகிறார்கள். ஒரு கட்டத்தில் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டுகிறார்கள். இன்னொருபுறம் தயவு தாட்சண்யம் இன்றி பழி வாங்குகிறார்கள்.
ஒன்பது கதைகளும் நம்மை ஏதாவது ஒரு நிகழ்வில் இணைத்து பிரதிபலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒவ்வொரு பெண்ணும் வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள். எப்படி இவளுக்கு இது தோன்றியது? இது நல்லா இருக்கே! என்று வாசிக்க வாசிக்க எனக்குள் தோன்றியது. ஓர் எழுத்தாளரைப் பிடிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்கள் எழுதுவது புரிய வேண்டும். அந்த வகையில் எளிமையான உரைநடையைக் கொண்டுள்ளது இந்த புத்தகம். மேலும் இக்கதைகள் வட்டார வழக்கில் இருப்பதால் உள்ளங்கையில் பொத்தி வைத்த ரகசியத்தை பூப்போல சலாம் சொல்லும் விதமாக உணர்வுகள் கசிந்து விடாமல் நம் கைகளுக்கு மாற்றி விடுகிறார் ஆசிரியர்.
பொதுவாக ஆங்கிலத் திரைப்படங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் யுக்தி இங்கேயும் தென்படுகிறது. நிகாடு அர்த்தம் தெரியவில்லை என கடைசிவரை குழம்பி தவிக்க வேண்டாம் வாசகர்களே என்று முதல் கதையில் முதல் பக்கத்திலேயே புத்தகத்தின் சாராம்சத்தை சொல்லிவிடுகிறார். “கரு இதுதான் மக்களே; இனி கதை இன்னா. தொடர்ந்து இணைந்திருங்கள்” என்று சொல்வதாகத் தோன்றியது. ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்நாளில் ஒரு முறையேனும் தற்கொலை எண்ணம் வராமல் இருந்திருக்காது. உப்புச் சப்பில்லாத காரணங்கள் கூட இருக்கலாம். இந்தக் கதைகளில் வரும் பெண்களும் தற்கொலை செய்ய முயல்கிறார்கள். பிறகு தன்னுணர்வோடு அந்த எண்ணத்தைக் கைவிடுவதாக எழுதியிருக்கிறார். “நான் ஏன் சாகணும்?” என்ற ஒலி, ஒவ்வொரு கதையின் பின்னணியாக ஒலிக்கிறது. நான் ஏன் சாகணும் என்னும் போது அவர்கள் வாழத்துவங்குகிறார்கள். கதையில் வரும் முக்கியமான ஒருசில எனக்கு பிடித்த வாசகங்களை கூறுகிறேன்.
- வைகையால் உறிஞ்சப்படாத உயிர்.
பாவம் “நெய் சோற்றுக்கு எப்பேர்ப்பட்ட மனுஷனுக்கும் தூக்கம் கண்ணக் கட்டதானே செய்யும்” அங்க பஞ்சாயத்து அலறிட்டு கிடக்கு. அந்த நேரம் இந்த வரிகள் வரவும் வேறென்ன சிரிப்புதான். வைராக்கியமான பெண் கனியம்மா எங்க போய் எங்க வந்தாலும் இங்க தானே வரணும் மச்சான். வாங்கோ, வரவு-செலவு கணக்கோட வட்டிக் கணக்கும் இருக்கு என்று நினைத்ததாக எனக்குத் தோன்றியது. - உசுரு கருப்பட்டி
“வாழவும் முடியாம சாகவும் வாய்க்காத இயலாம ஆக்ரோசமா வெளிவந்தது சாபமா மாறுச்சு!” பாவத்துக்கு பயப்படாத மனுஷங்க சாபத்துக்கு பயப்படுறாங்க. “பயந்து சாகுங்க எனக்கென்ன அப்படிங்குறாங்க கச்சம்மா”. - பிடாரியம்மாள்
ஊர் ஜமாத் பேசி முடிவு எடுக்குறாங்க “தங்கம்மா செத்தா மையவாடில இடமில்லை” “நா செத்த பொறவு நடுத்தெருல என்னைய வீசினாதான் எனக்கென்ன.. நாறி புழுத்துப் போயி நா கெடந்தாதான் எனக்கென்ன.. அதெல்லாம் உங்க பாடு..” என்கிறாள் தங்கம்மா. ‘ஆமால்ல, அப்படினு தோணிச்சு..’ - அம்மு
‘எப்படிப்பட்ட பழிவாங்கல் நிகழ்வைக் காலம் எளிதாக அநீதிக்குள்ளாக்கப்பட்டவர் களுக்குத் தந்துவிடுகிறது.’ “அநீதி இழைக்கப் பட்டவனுடன் இறைவன் இருக்கிறான்” என்னும் வாசகம் நினைவுக்கு வந்தது. - மாமனாரின் ஆவி
மூத்த மருமகளிடம் இத்தா இருக்கும் மாமியார் பின்வருமாறு சொல்கிறாள். “ஒன் மாமனாரு கபுருக்குள்ள போயும் என்னைய நெனைக்கிறாட்ருக்கு” மூத்த மருமகள் உள்ளுக் குள்ளேயே சிரித்திருக்கக்கூடும் என்று ஆசிரியர் கூறுகிறார். நான் நிதர்சனத்தை நினைத்து சத்தமாகவே சிரித்து விட்டேன். - சாஜிதா மாமி கேஸ்
கடைசி வரியில் “எப்படியும் வாழ்வாள்” வாழணும்னு முடிவு பண்ணீட்டா எப்படியும் வாழ்ந்து விடலாம் இல்லையா? - அசனம்மாளின் தன்(காப்பு) கொலை.
- அவளுக்கென்று உலகம் இல்லை. அவளுக் கென்று ஆசைகளும் இருந்ததில்லை.
- எந்தச் செயல்பாடுகளின் மீதும் அவளுக்கு கேள்வியோ, சுயக்கருத்தோ இருந்ததில்லை.
முற்றிலும் எதன்மீதும் பற்றில்லாத ஒருத்தியின் மனநிலை இது. நாம் நம் வாழ்நாளில் இந்த நிலையை ஒருமுறையேனும் அடைந்திருப்போம் இல்லையா?
- இரகசிய அறை
மகள் அம்மாவிடம் சொல்கிறாள்: “எத்தன தடவ நா சாக நெனச்சிருக்கேன் தெரியுமா?” அம்மா அதிரவே இல்லை “என்னை விட கம்மிதான், பேசாம தூங்குடி” என்றாள். ஒரு நகைச்சுவை படித்த மாத்திரத்திலேயே புரிந்துவிட வேண்டும். இல்லையெனில் நடுராத்திரியில் அந்த வரிகள் அர்த்தம் புரிந்து சிரிக்க நேரிடும். நல்லவேளை எனக்குப் படித்ததும் புரிந்து விட்டது. - லூடோ
“நாந்தான் சொன்னேன்ல, அவ்ளோ நல்லவ இல்லை நானுன்டு! ஆனா நா ஒன்னும் மலக்கு இல்லேயே ? சில விஷயம் புத்திக்கு ஒரைக்கும்.இதை செய்யாதன்னு சொல்லும். ஆனா இந்த மனசு இருக்குல? அது பொல்லாதது. சந்தர்ப்பம் வாய்க்கிறப்ப கொட்டிடும்.” எனக்கு தோன்றியது; எவ்வளவு நிதர்சனமான உண்மை இது. உருவமே இல்லாத இந்த மனதுக்குள் தான் எத்தனை எத்தனை! ஒவ்வொரு கதையும் ஒரு பெண்ணின் உண்மை உணர்வுகளின் ஒலிப்பதிவு போல் ஒலிக்கிறது . ஒருசில நேரங்களில் கோபமாகவும், ஒருசில நேரங்களில் துயரமாகவும்.
இது மரபியலை மீறியும், சமூக கட்டமைப் புகளையும் தாண்டி பெண்ணின் உளவியலைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்குகிறது. பெண் எழுத்தாளரின் பார்வையில் பெண் வாழ்க்கையின் துயரம், போராட்டம், விழிப்பு ஆகியவை எவ்வளவு நிஜமாக பேச முடியும் என்பதை இந்த நூல் உணர வைக்கிறது. முடிவாகச் சொன்னால்; நிகாடு வாசிப்பே, ஓர் உளவியல் பயணம் என்றுதான் சொல்ல வேண்டும். வாசிக்க வேண்டிய, சிந்திக்க வைக்கும், மறக்க முடியாத கதைகள். நிகாடு – சபிக்கப்பட்ட நாட்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
l
