நூலகத்திற்கான அனைத்து இலக்கணங்களும் அமையப்பெற்ற நூலகங்கள் ஒவ்வொரு தனி மனிதனுடைய கல்வித் தகுதியையும் மேம்படுத்த உதவுகின்றன. அத்தோடு நல்ல நூலகங்கள் மனிதர்களைத் தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்தும் சிறந்த சேவை மையங்களாகவும் செயல்படுகின்றன. அங்குள்ள சிறந்த நூலகங்களோ சிறந்த சமூகங்களை உருவாக்கும் பணியில் முன்னணியில் நிற்கின்றன.
- ஜார்ஜ் லூயி போர்ஹேஸ் (எழுத்தாளர், அர்ஜன்டீனா)
இன்றைய சமூகம் தங்களுக்குத் தேவைப்படும் தகவல்களைப் பெற கூகுளையும் சாட்-ஜீபிடியையும் சார்ந்திருக்கிற சமூகமாக வேகமாக மாறிக் கொண்ட இருக்கிறது. ஆனால் இப்போதும் கூட ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னது போல ‘எனது பணப் பையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு விஷயம் என்று ஒன்று இருக்க முடியும் என்றால் அது ஒரு நூலக அட்டையாகத்தான் இருக்க முடியும்’ என்பதை நினைவுகூர்கையில் ஒரு சமூகத்தின் தரத்தை முன் அறிவிப்பதாக அந்த வாக்கியம் அமைந்திருப்பதை உணர முடிகிறது. ஒரு நூலகமானது தகவல்கள், அவற்றிற்கான ஆதாரங்கள் மற்றும் அறிவு வளங்களின் தொகுப்பாக இன்றைக்கும் விளங்குகிறது. வரையறுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கான அறிவார்த்த அடையாளம் என்பது அந்தப் பகுதியில் அமைந்துள்ள நூலகம்தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இருக்க முடியாது…
அதை மனதில் கொண்டுதான் நம் தமிழக அரசு அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம்… இவற்றைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் அறிவின் கருவூலங்களாக விளங்கக்கூடிய பிரம்மாண்டமான நூலகங்களை உருவாக்குவோம்.. என்று அறிவித்திருப்பது. இது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. சமீபத்திய முக்கிய சிலிர்ப்பு நம்முடைய ‘புத்தகம் பேசுது’ இதழின் தலையங்கத்தில நாம் குறிப்பிட்டிருந்த முக்கிய அம்சங்களை வாசித்துவிட்டு உடனடியாக நூலகத்துறை களத்தில் இறங்கி பதிப்பாளர்களின் துயர் நீக்கத் தேவையான அவசர கால நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதற்காக அந்த துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் அனைவரையும் மனமாரப் பாராட்டுவதோடு நம்முடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எழுத்தாளர் சிட்னி ஷெல்டன் குறித்த செய்தி ஒன்றை சமீபத்தில் வாசித்தேன். தான் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் அவர் நூலகத்தில் அமர்ந்து தான் எழுதியிருக்கிறார். ‘நூலகங்கள் கற்பனையைத் தூண்டும் ஆற்றலைத் தன்னுள் சேமித்து வைத்திருக்கின்றன. தன்னை நாடி வருபவர்களுக்காகத் தன் ஜன்னல்களைத் திறந்து அது ஒரு மனிதனை ஆராயவும் சிந்திக்கவும் சாதிக்கவும் ஊக்குவிக்கின்றன. இதன் மூலம் அவை அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கியப் பங்களிப்பை செலுத்துகின்றன’ என்று அவர் குறிப்பிடுகிறார்.
இந்திய அளவில் பொது நூலகளுக்கான தரவரிசைப் பட்டியலின்படி தமிழகம் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது. அதிக எழுத்தறிவு பெற்றவர்கள் விகிதம் மற்றும் வலுவான பொது நூலக அமைப்பு இவற்றிற்குப் பெயர் பெற்ற கேரளத்தில் கணிசமான எண்ணிக்கையில் நூலகங்கள் உள்ளன. அங்கே இரண்டு வார்டுகளுக்கு ஒரு நூலகம் அமைந்துள்ளது என சமீபத்திய ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மகாராஷ்டிராவை ஆண்ட முந்தைய அரசுகள் மேற்கொண்ட தீவிரமான வாசிப்பு இயக்கங்கள் காரணமாக அங்கே பொது நூலகங்கள் அதிகம் உள்ளன. ஆனால் அவை தற்போது சரிவரப் பராமரிக்கப்படுவதில்லை என்கிறார்கள்.
திடீரென்று விழித்துக்கொண்டு இருமொழிக் கொள்கையே எங்களுக்குப் போதும், இந்தி தேவையே இல்லை என்று சொல்லும் தற்போதைய கர்நாடகாவில் கன்னட புத்தகங்களை வாங்குகின்ற நூலக அமைப்புகளை ஒரு ஒழுங்குமுறைக்குள் கொண்டுவந்து கன்னட நூல் வாசிப்புக்கென்றே அரசாங்கம் தனி இயக்கங்களைத் தற்போது உருவாக்கி வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. RRRLF என்கிற ராஜாராம் மோகன் ராய் நூலக அறக்கட்டளை இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொது நூலகங்கள் பற்றிய தரவுகளையும் தகவல்களையும் ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது. இதில் மாநில வாரியான பல புள்ளி விபரங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இந்தப் புள்ளிவிவரங்களை நுணுக்கமாக ஆராயும் பொழுது மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா இவற்றுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் (2010 கணக்கீட்டின்படி) இருந்தது. நம்முடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு பதவியேற்ற பிறகு நூலகங்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மிக வேகமாக அதிகரித்து உள்ளது. மாவட்டம் தோறும் நடத்தப்படுகின்ற புத்தகத் திருவிழாக்கள் சமூகத்தில் வாசிப்பை மேம்படுத்தப் பல வழிகளில் ஊக்கப்படுத்துகிற செயல்பாடாக உள்ளன.
4622 பொது நூலகங்களைக் கொண்ட தமிழகத்தின் வருங்கால திட்டம் இந்த எண்ணிக்கையை 10,000 நூலகங்களாக மாற்ற வேண்டும் என்பதுதான். அந்த இலக்கை நோக்கி தமிழக அரசு வேகமாகப் பயணிக்கிறது என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அதேசமயத்தில் பொது நூலக இயக்ககம் நவீன காலத் தேவைகளை மனதில் கொண்டு அதற்கு ஏற்றவகையில் புத்தகங்கள் வாங்குவதற்கான புதிய முறையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த முறை பெரும்பாலான பதிப்பாளர்களால் வரவேற்கப்படுகிறது. காரணம் இது வெளிப்படை தன்மையுடையதாயும் எல்லாருக்கும் இதன் பலன் சென்றடையக் கூடிய ஜனநாயகத் தன்மையுடைய தாயும் உள்ளது. சென்ற ஆண்டில் 11,000 புத்தகங்கள் பதிப்பாளர்களால் மாதிரியாகக் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றில் 8630 புத்தகங்கள் மட்டுமே தேர்வுக்கு உகந்தவை எனக் கண்டறியப்பட்டு அவற்றிலிருந்து 7016 நூல்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மகத்தான எண்ணிக்கை தான். ஆனாலும் ஏறக்குறைய 10 சதவீத நூல்கள்… வெளியீட்டாளர்களை நேரடியாக அழைத்துப் பேச அழைத்தநிலை நிலை (NEGOTIATION) யிலேயே – காத்திருக்கும் பட்டியலில்தான் இதுவரை உள்ளன. இந்த 10 சதவீதத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஏனைய பதிப்பாளர்களுக்கு புத்தக ஆணை வழங்க இன்னும் தாமதமேற்படும் என்று கருதி அரசு சம்பந்தப்பட்ட பதிப்பாளரகளின் ஒரு சில நூல்களை நிலுவையில் வைத்து மற்ற நூல்களுக்கு ஆணைகளை வழங்கி உள்ளது. புத்தகத்தின் தயாரிப்புத் தரம், தரமான மொழியாக்கத்திற்காகும் செலவு, வண்ணப் பக்கங்கள் இவை ஒரு புத்தகத்தின் விலையை முடிவுசெய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நியாயமான விலை நிர்ணயித்து கூடிய விரைவில் இவற்றிற்கும் ஆணை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
அரசு, வாசகர்கள் அதிகம் பயன் பெறக் கூடிய அவர்கள் விரும்பக்கூடிய நூல்களை அவர்களைக் கொண்டே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டிருப்பது வரவேற்கத் தக்கதாகும். அதே நேரத்தில் எந்தெந்த அளவு கோல்களின் அடிப்படையில் அவர்கள் புத்தகங்களைத் தேர்வுசெய்திருக்கிறார்கள். நூலகத்துறை அவர்களுக்கு இது சம்பந்தமாகக் கொடுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள் என்னென்ன என்பதையும் வெளிப்படையாகத் தெரிவித்தால் சிறப்பு.
நூல்களைக் கொள்முதல் செய்வதற்கு அரசு நடைமுறைப்படுத்தியிருக்கும் இந்தத் திட்டம் இந்தியாவுக்கே முன்னுதாரணமான ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. இதில் ஒரே இடத்தில் நூல்களை ஒப்படைத்தல், மொத்தமாகப் பட்டியல் தொகையைப் பெறுதல் என்ற மிக மிக நல்ல பல அம்சங்கள் இருக்கின்றன என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் இது இன்னும் சிறப்பாக செயல்படு வதற்கான கருத்துகளைக் கேட்டுப் பெற ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தக் கருத்துகளில் நியாயமானவற்றை அவசியம் நடமுறைப்படுத்த வேண்டும். தமிழகமெங்கும் உள்ள முக்கிய நகரங்களில் கூடுதல் வசதிகளோடு கூடிய நவீன நூலகங்களை அமைக்க வேண்டும் என்று வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப் பட்டிருக்கிற அறிவிப்பு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. இந்த அறிவிப்பை மனதார வாழ்த்து கிறோம், வரவேற்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளாக நூலகத்திற்குப் புத்தகம் வாங்கப்படாத ஒரு சூழ்நிலையில் புத்தகங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை போதுமானதாக இல்லை என்பதை அந்தத் துறை சார்ந்த அதிகாரிகள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். இது நூற்றுக்கு நூறு உண்மையும்கூட. இதை அரசு கட்டாயம் பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தின் நூலகத்துறை தனது பொற்கால வளர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
-ஆசிரியர் குழு.