நாட்டுப்புறவியல் குறித்த சிந்தனை தொன்மையானது. நாட்டுப்புறவியல் என்பது உலகளாவிய கவனம் பெறும் ஓர் அறிவுசார் துறையாகவும் சமூகவியல், மானிடவியல், பண்பாட்டியல், மொழியியல், உளவியல், தொல்லியல் எனப் பல துறைகளோடும் உறவுடைய ஒரு முக்கியத் துறையாகவும் தனித்துவத்துடன் விளங்குகிறது. தமிழக நாட்டுப்புறவியல் அறிஞர்களுள் ஒருவராக விளங்குபவர் பேராசிரியர் ஆ. திருநாகலிங்கம்.
நாட்டுப்புறவியல் குறித்து பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டிருக்கும் அவரது தற்போதைய படைப்பு “உலகப் புகழ் பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்”. நாட்டுப்புறவியல் குறித்த விளக்கமாக பன்னாட்டு அளவில் மேலை நாட்டு அறிஞர்கள் ஆங்கிலத்தில் எழுதிய புகழ்மிக்க மூன்று கட்டுரைகளது தமிழாக்கமாக மலர்ந்திருக்கிறது இந்நூல்.
1846ஆம் ஆண்டு வில்லியம் ஜான்தாமஸ் என்பவர் ‘Folklore’ எனும் சொல்லைப் பயன்படுத்தியதிலிருந்து ’நாட்டுப்புறவியல்’ தனி கவனம் பெறும் ஒரு துறையாக உலகளாவிய நிலையில் வளரத் தொடங்கியது. எந்த ஒரு அறிவுப் புலமானாலும் அடிப்படையில் அந்தப் புலத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாக்கம், அது சார்ந்த வரையறைகள் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தவை. நாட்டார்களின் வாழ்வியல் பாடுகளை, நிர்ணயிக்கப்பட்ட கோட்பாடுகளின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான ஆய்வுக்கு உட்படுத்துவதே ‘நாட்டுப்புறவியல்’ என்ற ஆய்வுத் தளத்தின் முதன்மை நோக்கம். ஆனால் அடிப்படையில் நாட்டுப்புறத்தார் என்பவர் யார் என்பதை அடையாளம் காண்பதிலேயே ஆய்வுக்களத்தில் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன என்பதே நடைமுறை உண்மை.
‘நாட்டுப்புறவியல்’ குறித்து பல ஆய்வுநூல்களும் கட்டுரைகளும் வெளிவந்து விட்டன; நாட்டுப்புறவியல், நாட்டார் பண்பாடுகள், நாட்டார் இலக்கியங்கள் என்று கல்விப்புலத்தில் பெரிதும் பேசப்படுகிறது மற்றும் விவாதிக்கப்படுகிறது; இத்துறையில் பல ஆய்வுக் கோட்பாடுகள் உருவாக்கம் பெற்றிருக்கின்றன; உலகளாவிய நிலையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன; இவ்வளவு பெரிய தாக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும், ’நாட்டுப்புறவியல்’ தளத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படும் உண்மையான அல்லது தகுதியான நாட்டுப்புறத்தார் என்பவர் யார் என்பதை அடையாளம் காண்பதில் ஒரு திட்டவட்டமான நிலை எட்டப்படவில்லை.
‘Folkloreஇல் உள்ள ‘FOLK’ என்பது வேளாண்பணிகளை மேற்கொள்ளும் எளிய மக்களைக் குறிப்பது என்றும் ஆதலால் ’FOLK’ என்பது, வேளாண்மையில் ஈடுபட்டுள்ள எளிய மக்களிடையே காணப்பெறும் வழக்காறுகளைப் பற்றிப் பேசக்கூடியது என ஒரு சாராரும்; அது, படிக்காத பாமரர்களின் வழக்காறுகளைப் பற்றிப் பேசக்கூடியது – எளிய மக்களின் வாழ்வியல் மரபுகளைப் பற்றியது என ஒரு சாராரும்; அது, பழங்குடியினரின் வழக்காறுகளைக் குறித்துப் பேசுவது என ஒரு சாராரும்; இப்படிப் பலரும் பலவாறு விளக்கம் அளித்து வந்தனர். ஆய்வுகளும் அவரவர்களுக்கு உடன்பாடான கருத்தியல் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
Folk என்ற சொல்லாட்சி குறித்து ஆய்வாளர்களிடையே விவாதங்கள் எழுந்ததன் நீட்சியாக, மேலைநாடுகளில் இந்தப் பொருண்மை குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு பலரும் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டனர். அதன்படி, அமெரிக்க நாட்டுப்புறவியல் அறிஞரான ஆலன்டண்டிஸ் (Alan Dundes) என்பவர் எழுதிய ‘Interpreting Folklore’ எனும் நூலில் இடம் பெற்றுள்ள – ‘Who are the folk?’ என்னும் கட்டுரை – உலக அளவில் மிகச்சிறந்த நாட்டுப்புறவியல் அகராதியாகக் கருதப் பெறுவதும் மரியா லீச் (Maria Leach) என்பவரால் பதிப்பிக்கப்பட்டதுமான, ‘Standard Dictionary of Folklore Mythology and Legend’ என்னும் நூலில் இடம் பெற்ற ‘Folklore – Definitions by the contributors’ என்னும் தலைப்பிலான ஒரு கட்டுரை – மற்றொரு நாட்டுப்புறவியல் அறிஞரான ஆர்.எஸ். போக்ஸ் (Ralph Steele Boggs) என்பவர் எழுதிய ‘நாட்டுப்புறவியல் வகையும் வகைப்பாடும்’ (Types and classification of Folklore) என்னும் தலைப்பிலான கட்டுரை – ஆகிய மூன்று ஆய்வுக் கட்டுரைகளைத்தான் இந்நூலாசிரியர் தமிழாக்கம் செய்துள்ளார்.
நூலாசிரியர் துறை சார்ந்த அறிஞர் என்பதாலும், தமிழ் ஆய்வுத்தளத்தின் தேவைகளை நன்கு உணர்ந்தவர் என்பதாலும், கட்டுரைகளின் மூலத்தை அப்படியே வரிக்கு வரி மொழி பெயர்ப்பு செய்யாமல். அக் கட்டுரைகளின் பொருண்மையை ஆழமாக உள்வாங்கி, தேவையான குறிப்புகளுடன், மூலக் கட்டுரைகளின் சாரத்தைத் தமிழாக்கம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நூலின் முதல் கட்டுரையாக அமைந்திருப்பது, ஆலன்டண்டிஸின் கட்டுரை. இக்கட்டுரையில் பல்வேறு செய்திகளை எடுத்துரைக்கும் ஆலன்டண்டிஸ், பத்தொன்பதாம் நூற்றாண்டு அறிஞர்கள் Folk என்பதற்குத் தந்துள்ள விளக்கங்களாக,
- காட்டுமிராண்டிக் கால மக்கள் அல்லது பழைமையான மக்கள் அல்லது எழுத்தறிவற்ற மக்கள் தொடர்புடையது;
- நாட்டுப்புறமக்கள் அல்லது விவசாயிகள், கல்வியறிவற்ற மக்கள், கிராமப்புற மக்கள், கீழடுக்கு மக்கள்;
- நாகரிகமான மக்கள் அல்லது உயரடுக்கு மக்கள், கல்வியறிவுள்ள மக்கள், நகர்ப்புற மக்கள்,மேலடுக்கு மக்கள்.
என அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டியும் மற்றும் பல தரவுகளைத் தீவிர விவாதத்திற்கு உட்படுத்தியும் நாட்டுப்புறத்தாருக்கான விளக்கத்தையும் வரையறையையும் பின்வருமாறு விவரிக்கிறார். நாட்டுப்புறத்தார் (Folk) என்ற சொல் குறைந்தபட்சம் ஒரு பொதுவான காரணியைப் பகிர்ந்து கொள்ளும் எந்தவொரு குழுவையும் குறிக்கலாம்; இணைக்கும் காரணி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அது ஒரு பொதுவான தொழில், மொழி அல்லது மதமாக இருக்கலாம் – ஆனால், இன்றியமையாதது என்னவென்றால், நாட்டுப்புறத்தாராக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஒரு குழு, தனக்கே சொந்தமானது என்று சொல்லக் கூடிய சில தனித்துவமான மரபுகளைக் கொண்டிருப்பது அவசியம். கோட்பாட்டளவில் ஒரு குழு என்பது குறைந்தபட்சம் இரண்டு நபர்களையாவது கொண்டிருக்க வேண்டும் – அதிகபட்சமாக எத்தனை உறுப்பினர்கள் வேண்டுமானாலும் இடம் பெற்றிருக்கலாம் – குழுக்களின் உறுப்பினர்கள், அந்தக் குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர்களையும் அறிந்திராமல் கூட இருக்கலாம் – ஆனால், குழுவிற்குச் சொந்தமான தனித்துவம் மிக்க பொதுவான மையத்தை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
இந்த வரையறையின்படி, குறைந்தபட்சம் இரண்டிற்கும் மேற்பட்டோரைக் கொண்டதும், சாதி, சமயம், தொழில் முதலான காரணிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் ஒரு பொதுவான மரபைக் கொண்டு இணைக்கப் பெறும் எந்த ஒரு குழுவும் Folk (நாட்டுப்புறத்தார்) என அழைக்கப்படலாம். மிக எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் ஆலன் டண்டிஸின் நெகிழ்வான இந்த வரையறை மிகுந்த கவனம் பெறுகின்றது. ஆலன்டண்டிஸின் இந்த வரையறை தமிழ்ச்சூழலில் புழக்கத்திற்கு வந்த பின்னரும் கூட, நாட்டுப்புறவியல் என்பது கிராமப்புற மக்களின் வாய்மொழி இலக்கியங்கள் குறித்து ஆராயும்துறை என்னும் புரிதலே கல்விப் புலத்திலும் பொதுத் தளத்திலும் நிலவிவரும் இன்றைய சூழலில், ஆலன்டண்டிஸின் கட்டுரையைத் தமிழில் மொழி பெயர்த்துள்ள பேராசிரியர் ஆ. திருநாகலிங்கத்தின் பணி, இத்துறையின் இன்றைய அவசியத் தேவைகளில் ஒன்றாக பரிணமிக்கிறது.
‘நாட்டுப்புறவியல் பங்களிப்பாளர்களின் வரையறைகள்’ எனும் இரண்டாவது மூலக் கட்டுரை மரியஸ்பார்பியூ, வில்லியம் ஆர்.பாஸ்கம், பி.ஏ. போட்கின், ஒளரோலியா எம்.எபினோசா, சாஜ் எம்.பாஸ்டர், எம்.கார்மன், மெல்வில் ஜெ.கெர்க்ஸ்கோவிட்ஸ், ஜார்ஜ்ஹெர்சாக், ஆர்.டி.சாம்சன், கெர்ட்ரூட்பி.குடித், மேக்எட்வர்டுலீச், கேத்தரின் லுவொமாலா, ஜான் எல்.மிஷ், சார்லஸ் பிரான்சிஸ் போட்டர், மரியன்ட பிள்யூஸ்மித் ஆர்ச்சர் டெய்லர், ஸ்டித்தாம்சன், எர்மினிடபிள்யூ வோல்ஜெலின், ரிச்சர்டு எ. வாட்டர்மேன் என இருபத்தோரு அறிஞர்கள் நாட்டுப்புறவியலுக்குத் தந்துள்ள வரையறைகளைப் பதிவு செய்துள்ளது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள வரையறைகள் நாட்டுப்புறவியல் எத்துணை முக்கியமான துறையாக இருக்கிறது என்பதையும் இத்துறை சார்ந்து அறிஞர்கள் பலர் சிந்தித்துள்ளதையும் புரிந்துகொள்ள உதவுகின்றன. இந்த இருபத்தோரு வரையறைகளில் ஸ்டித்தாம்சனின் வரையறை நாட்டுப்புறவியலின் முழுப் பரிமாணத்தையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளதை இங்குக் குறிப்பிட்டுக் கூற வேண்டியுள்ளது.
இவ்வாறே ஆர்.எஸ்.போக்ஸின் ‘நாட்டுப் புறவியல் வகையும் வகைப்பாடும்’ எனும் மூன்றாவது கட்டுரையும் நாட்டுப்புறவியல் துறையினர் அவசியம் படித்தறிய வேண்டிய கட்டுரை எனலாம். இக்கட்டுரையில் முதன்மைவகை(Groups), முதன்மை வகையும் பிரிவுகளும் (Groups and categories), முதன்மைவகையும் பிரிவுகளும் உட்பிரிவுகளும் (Groups, categories, types, forms, divisions and sub-divisions) எனும் மூன்றுநிலைகளில் நாட்டுப்புறவியலை நுணுக்கமாக, ஆழமாக வகைப்படுத்தியுள்ளார் போக்ஸ்.
பேராசிரியர் ஆ. திருநாகலிங்கம் மொழிபெயர்த்துத் தந்துள்ள மேற்குறித்த மூன்று கட்டுரைகளும் நாட்டுப்புறவியல் குறித்துப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான கட்டுரைகள் ஆகும். குறிப்பாக, ஆலன் டண்டிஸின் Folk குறித்த கட்டுரை நாட்டுப்புறவியல் என்றால் என்னவென்று அறிந்துகொள்ளப் பெரிதும் பயன்படும் கட்டுரை. மற்ற இரு கட்டுரைகளும் நாட்டுப்புறவியல் புலத்தில் நிகழ்ந்த தொடக்ககால ஆய்வு முயற்சிகளை அறியப் பெரிதும் பயன்படும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாட்டுப் புறவியல் துறையில் ஆய்வுகளை மேற்கொள்வோர் பெரும்பான்மை தமிழ் இலக்கியம் படித்தவர்களே ஆவர். இந்த நிலையில் இவர்கள் உலகளாவிய – மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுகளை மூல மொழியில் படித்தறிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. இந்த அடிப்படையில் இத்தகைய ஆய்வுகளைத் தமிழுக்குக் கொண்டு வருவது மிக முக்கியமானப் பணி எனலாம். இந்தப் பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன், கடுமையாக உழைத்து நிறைவுசெய்துள்ள பேராசிரியர் ஆ. திருநாகலிங்கம், தமிழ் நாட்டுப்புறவியலுக்கு முக்கியமான கையளிப்பைச் செய்துள்ளார். மூலக் கட்டுரைகளை வரிக்கு வரி மொழி பெயர்க்காமல், கட்டுரைகளின் பொருண்மையை ஆழமாக உள்வாங்கி, தேவையான குறிப்புகளுடன் மொழி பெயர்த்துள்ள பேராசிரியரின் உழைப்பு போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. பணி ஓய்வுக்குப் பின்னரும் தமிழ்நாட்டுப் புறவியலுக்குத் தொடர்ந்து பங்களிப்பு செய்துவரும் பேராசிரியர் ஆ. திருநாகலிங்கம் இம்மாதிரியான முக்கிய பங்களிப்பை மேலும் மேலும் வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன் அவரை வாழ்த்துவோம். l