தத்துவம் முன்சுருக்கம்:
தத்துவம் என்பது யோசனைகள் மற்றும் சிக்கல்களின் முறையான ஆய்வு. மனிதர்களை உயர்நிலைக்கு அழைத்துச் சென்று உண்மைகள் மெய்மைகள் பற்றிய அறிவினைக் கொடுக்கின்றது. மனித நாகரிகத்தின் ஆரம்பத்தில் தொடங்கிய ஓர் ஒழுக்கம். மனித விவகாரங்கள், அமைப்புகள் மற்றும் அவற்றிற்கு இடையேயான உறவுநிலைகள் என ஒவ்வொரு சிக்கலான முடிச்சுக்களை அவிழ்க்கும் அறிவியல் சிந்தனை. இது ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித விழிப்புக்கான முதல் படியாக உருப்பெற்று வருகின்றது. அறிவியல் ரீதியான இன்றைய உலக வளர்ச்சிக்கு அன்றைய நாளில் யாரோ ஒருவரின் சிந்தனைகளும், தத்துவக் கோட்பாடுகளும் உருக்கொடுத்துள்ளன என்றால் மிகையல்ல.
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்:
முபீன் சாதிகா அவர்களின் இத்தொகுப்பு அமெரிக்க ஐரோப்பிய சிந்தனையாளர்களின் குறிப்புகள் மற்றும் கோட்பாடுகள் பற்றிய சிறந்த தொகுப்பு. இது மொழிபெயர்ப்பு நூல் இல்லை. தமிழில் இத்தகைய நூல்களின் வருகை என்பது அரிதான நிகழ்வுதான். இந்நூலில் பதினெட்டு சிந்தனையாளர்களின் குறிப்புகள் மற்றும் கோட்பாடுகள் ஒவ்வொரு அலகாக பகுத்து தொகுத்து வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கூறியவற்றின் சாராம்சங்களை உள்வாங்கி தமிழில் சரியான முறையில் சொல்லியமைக்கு வாழ்த்துகள். தொகுப்பின் உள்ளே பெண்ணியம், மெய்யியலும் இருத்தலியமும், குறியியலும் பயன்பாடும், அரசியல் மற்றும் அறிவியல் என்ற தலைப்புகளில் ஒவ்வொரு சிந்தனையாளரும் சரியாக உள்வாங்கப்பட்டுள்ளார்கள். ரோஸா லக்ஸம்பர்க் குறித்து சிறு அறிமுகம் மட்டுமே கொடுத்துள்ளார். அதற்கான காரணமாக தமிழில் அவர்குறித்து சில மொழிபெயர்ப்பு நூல்கள் வெளி வந்திருப்பதாக கூறுகிறார். இது கூறியமை கூறுதல் என்ற திரும்பச் சொல்லுதல் முறைமை தவிர்க்கப்பட்டிருப்பது சிறப்பான செயல்தான்.
தன்னிலை – மற்றமை – பெண்ணியம்:
“தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறிய தனக்கு ஒரு கேடில்லை. தன்னை அறியும் அறிவை அறிவால் அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானிருந்தேனே” – திருமூலர் தன்னிலை அறிதலுக்கு திருமூலரின் இந்தப் பாடல் ஒரு சிறந்த உதாரணம், பகுத்தறிவு எனும் அறிவியல் இதற்கு உதவுகிறது. தன்னிலை, மற்றமையின் கட்டுப்பாடுகள் மற்றும் பெண்ணியத்தின் மீது மற்றமை கட்டமைக்கும் ஆண்டான்தன்மை என்பவற்றை பெண்ணியலாளர்களின் குறிப்புகள் வழி இங்கு காண்போம். லிங்க மையமே எல்லா பாலியல் இன்பங்களுக்கும் மூலமாகும் என சிக்மண்ட் ஃப்ராய்ட் நிறுவ முனைவதையும், அதனை இரட்டை தற்காதல் என லக்கான் குறிப்பிடுவதையும், ஓரினச்சேர்க்கையிலும் இந்த அதிகாரமே முதன்மையாகிறது என்பதையும் ஜுடித் பட்லர் விளக்குகிறார். மேலும் பால், பாலினம் என்ற தன்னிலைக்குள் பல்வேறு விளக்கங்களைக் கொண்டதனை தீவிரமாக அறிய வேண்டும் என்கிறார். ஈடிபஸ் சிக்கல்களும் உறவு முறைகளின் விதியைப் பேணவைப்பதும் விவாதிக்கப்படுகிறது.
ஆண் மேலாதிக்கம் செய்பவனாகவும் பெண் ஒடுக்கப்பட்டவளாகவும் உருவாகியிருக்கும் இந்தச் சொல்லாடலின் வரலாறு உயிரியலிலும் இல்லை உளவியலிலும் இல்லை. கருப்பை, நிலம், தொழிற்சாலை, வங்கி என்ற அணிக்கோவை, முதலீடு என்ற விதையைப் பெற்று முளைக்க வைத்து, வளர்த்து, தொடர் உற்பத்தி செய்யும் எந்திரத்தில் ஒன்றாக பெண்ணை முதலாளித்துவச் சமூகத்தின் மதிப்புகள் உருமாற்றி இருக்கின்றன என்கிறார் லூச் இரிகரை. இவர் நான் ஃப்ராயிடில் தொடங்கி ப்ளாட்டோவில் முடிக்கிறேன் என்கிறார். இது ஒருவகையில் பின்னாலிருந்து போவதாக உள்ளது. ஆனாலும் பெண்ணைக் குறித்த கேள்விகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறார். தாய்வழிச் சமூக வழிபாடு ஆண் தெய்வங்களால் பதிலீடு செய்யப்பட்டது போலவே மொழியும் மாறி வருவதாகவும் கூறுகிறார்.
பெண்கள் தங்களை எழுதுவதன் மூலம் பிரதியிலும் வரலாற்றிலும் தங்களை நிரப்பவும், அதுவொரு சுய இயக்கமாக பதிவாகும் என உறுதிபடக் கூறுகிறார் ஹெலன் சிக்ஸூஸ். மேலும் அவர் பெண்ணியக் கல்வி குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு ஆண்கள் எழுதிய நூல்களைத்தான் நான் வாசிக்க முடிந்தது. எனது முனைவர் பட்ட ஆய்வை ஜேம்ஸ் ஜோய்ஸ் எழுத்தில்தான் செய்ய முடிந்தது என்கிறார். மறைபொருளாக ஆணாதிக்கம் எந்த அளவில் அனைத்துத் தளங்களிலும் பரவி இருக்கிறது என்பதை குறிப்பால் உணர்த்துகிறார். ஆண், பெண் என்பதற்கு அப்பால் இருபால் தன்மை குறித்து எழுத வேண்டியிருப்பதையும் சுட்டிக் காட்டுகிறார். மூவரின் சிந்தனையில் இருந்தும் பால், பாலினம், பாலியல் என்ற சொல்லாடல்களின் பின்னுள்ள ஆணாதிக்கச் செயல்பாடும், அதனோடு இயைந்த உளவியல் தாக்குதலும் அதனினின்று விடுதலை பெற வேண்டிய அவசியங்களையும் காணக் கூடியதாக உள்ளது.
மெய்யியலும் இருத்தலியமும்:
“இருப்பதற்கென்றே வருகிறோம் இல்லாது போகிறோம்” – நகுலன். இருத்தலியம் குறித்துப் பேசும் அற்புதமான கவிதை இது. எல்லாரும் ஏதோவொரு காரண காரியங்களோடுதான் இங்கு வருகிறோம். ஆனால் இடையில் காணாமலே போய்விடுகிறோம் என்பதைப் போலவே ரெனே தெகார்த்தும், மார்டீன் ஹைடெக்கரும் மெய்யியல் மற்றும் இருத்தலியம் குறித்துப் பேசுகிறார்கள். ஐரோப்பிய சிந்தனை உலகையே புரட்டிப் போட்ட வாசகமாக அல்லது ஒரு கோட்பாடாக தெகார்த்தின் இந்த வார்த்தைகள் அமைந்தன. “நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்” என்பது கார்ட்டீசியக் கோட்பாட்டுக்கு வழிவகுத்தது எனலாம். நகுலனின் கவிதையில் இருத்தலியத்தின் எதிர்மறை (Negativity) அம்சமாக இருக்கிறது. ஆனால் தெகார்த்தின் வாக்கியத்தில் நேர்மறைத் (Positivity) தன்மை பொதிந்துள்ளது. ஆனாலும் இரண்டும் இருத்தலியத்தின் முக்கிய பொருளாம்சமாகவே இருக்கிறது. இருத்தலியம் என்ற தத்துவ வாதத்தை உருவாக்கியவர்களில் மார்டீன் ஹைடெக்கர் முதன்மையானவராக உள்ளார். “இருப்பு” என்ற வார்த்தையின் பொருளாம்சம் இப்போது மாறிவிட்டது என்கிறார். குறிப்பாக மறக்கப்பட்டு விட்டது என்கிறார். ஹிட்லரின் நாஜி அரசுக்கு உதவியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டும் ஹைடெக்கர் மீது இருக்கிறது. காலத்தை அடியொற்றியே இங்கு இருப்பு என்பது விளக்கக் கூடியதாக உள்ளது என்கிறார். கடவுளற்ற காலத்தில் கடவுளுக்காகக் காத்திருத்தல்தான் மனிதனால் முடியக் கூடியது என்கிறார் ஹைடெக்கர். இதனை நாம் அவரது ஆகச்சிறந்த மெய்யியல் சிந்தனையாகக் கொள்ளலாம். உலகளாவிய பெருந்தொற்றான கொரோனா காலத்தில் இருப்பு குறித்து நம்மில் பலருக்கும் இருந்த ஐயத்துக்கு காலத்தின் பதிலாக இதனைக் கொள்ளலாம்.
குறியியலும் பின்னமைப்பியலும்:
அறிவியல் ஒரு வாழும் வரலாற்றுத் தனித்துவமாகும். அறிவியல் சார்ந்த மனிதர்கள் மற்ற எல்லா மனிதர்களையும் விட சிறந்தவர்களாக இருக்கிறார்கள் எனும் சார்ல்ஸ் சாண்டர்ஸ் பர்ஸ் மிகையான நல்லொழுக்கம் அறிவியல் முன்னேற்றத்திற்கு சாதகமானதல்ல என்கிறார். ரீம், டிசன்ட், லெஜிசைன் என்ற மும்மைத் தன்மைகளை வைத்து பத்து வகையான குறிகள் உருவாகுவதை சுட்டிக் காட்டுகிறார். குறியியலில் ஆழமான ஆய்வைச் செய்த பின்நவீனத்துவவாதி ரோலண்ட் பார்த் புராணங்களை மறுவாசிப்புக்கு உட்படுத்துவதன் மூலமாக அது குறிக்கும் பொருளைக் கண்டடைய முடிவதாகக் கூறுகிறார். சசூருக்குப் பிறகு யாரும் தொடாமல் விட்ட இடத்தை பார்த் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். சர்ச்சைக்குரிய உளவியலாளராக அறியப் பட்டவரும், சர்ரியலிச இயக்கத்துடன் இணைந்து பணியாற்றியவரும், பிரபல ஓவியர் பிக்காஸோவுக்கு மனநல ஆலோசகராக இருந்தவருமான ஜாக் லக்கான் மொழியை அறிதல் என்பது இடிபஸ் சிக்கலை அறிதலாகும் என்கிறார். மனிதர்களின் பாலியலானது மீகற்பனையால் கட்டமைக்கப்பட்டது என்கிறார். ஆலன் போ எழுதிய திருடப்பட்ட கடிதம் சிறுகதை வாயிலாக நனவிலி குறித்து விளக்குகிறார். தன்னிலையை உருவாக்கும் பாதையின் தொடர்ச்சியாக நனவிலி உள்ளது என்கிறார். நம் அனைவருக்குள்ளும் இந்த நனவிலி இருப்பதாகவும் சொல்கிறார்.
எந்த ஒரு மொழியியல் அலகும் இரண்டு உறுப்புக்களைக் கொண்டது. ஒன்று நடைமுறை சார்ந்தது. மற்றொன்று அறிவார்ந்தது. ஒன்று குறிப்பான், மற்றொன்று குறிப்பீடு. ஒன்றுக்கு மற்றொன்று தேவை. கட்டுடைப்பு என்ற சொல்லை கூறினாலே ஜாக் டெரிடா என்ற பெயர் இயல்பாகவே வந்துவிடும். அந்த அளவுக்கு அவர் எல்லாத் துறைகளிலும் இந்த விமர்சன முறைமையை பயன்படுத்தியுள்ளார். இந்த யுகத்தை மனித இருப்பு விட்டு விலகுவதே இல்லை. மேலும் அதன் முடிவைக் குறித்து எப்போதும் எதிர்பார்த்திருப்பதுதான் என மொழியின் வரிவடிவத்தின் பொருளாம்சம் குறித்து இப்படி மொழிகிறார். அறிவும் நுகர்வும் என்ற ழான் ஃப்ரான்ஸுவா லியோடாவின் இந்த வாக்கியம் மிகவும் முக்கியமான கவனக் குவிப்பை தற்காலத்தில் உற்றுநோக்கச் செய்கிறது. எதிகாலம் இத்தகைய அறிவு நுகர்வுகளின் வழி சர்வதேச அளவிலான ஒரு அதிகாரப் போட்டியாக உருவெடுக்கும் பேராபத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
மதம்-மொழி-அரசியல்:
எங்கும் இருக்கும் கடவுளுடன் எந்தத் தீங்கும் இழைக்காத பல்லாயிரம் கோடிப் பேர் இன்னும் ஏன் இத்தனை துயரத்துடன் இருக்கிறார்கள் என்பதற்கான பதிலை எந்த மதமும் தரவில்லை. மத அடிப்படைவாதிகள் மத நம்பிகையற்ற வர்களைக் கண்டு அச்சப்படுவதின் பின் உள்ள உளவியலான தங்களின் சபலத்துடன் போரிட முடியாமையின் அல்லது இயலாமையே காரணமாகிறது. அதேபோல் பிரித்தானிய காலனியாதிக்கத்தில் இருந்து இந்தியாவை விடுவித்ததின் வாயிலாக இரண்டு விடுதலைகள் சாத்தியமானதாகவும், ஒரு புதிய சமாதானமாக ஆங்கில மொழியுடனான சமாதனம் சாத்திய மாகியதையும் ஸ்லோவாய் ஜிஜெக் முன்வைக்கிறார். மத அரசியலும், மொழி அரசியலும் காலம் காலமாக இரட்டைகளாகவே பயணிக்கின்றன. ஜார்ஜிஜோ அகம்பென் பயன்படுத்தும் புனித மனிதன் எனும் சொல்லாடல் மனித வாழ்வும் மரணமும் இறையாண்மையின் அதிகாரத்தால் ஆளப்படுகின்றன. அதாவது குடிமக்களை பாதுகாப்பதும் இல்லை, சாகடிப்பதும் இல்லை. சிறைக்கும் முகாமுக்கும் அதிக வேறுபாடு இருப்பதை அகம்பென் சுட்டிக்காட்டுகிறார். முகாம் என்பதை அகம்பென் வெளிப்படுத்த முடியாத மௌனமான எல்லா வன்முறைகளும் நடக்கும் இடம் என்கிறார். சாலப் பொருத்தமான வார்த்தை.
முடிவுரை:
தத்துவங்களும் கோட்பாடுகளும் மனித விழிப்புக்கு முதன்மையாக அமைந்துள்ளன. ஸ்டாயிக்குகள் வகுத்த இயற்கையின் சட்டமும், மனித சமத்துவக் கோட்பாடும் 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தன. பொதுவுடைமை சிந்தனையாளர் பேராசான் கார்ல் மார்க்ஸ் பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் ஒன்றாக இணைத்து மனித வரலாறு மற்றும் சமூகம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கினார்.
தமிழில் தத்துவங்களும் கோட்பாடுகளும் எந்த நிலையில் இருந்தன அல்லது இருக்கின்றன என்று நான் தேடியபோது அது சங்ககாலத்தை நடுவாக வைத்து சங்ககாலத்துக்கு முன்பும் சங்ககாலத்துக்குப் பின்பும் என தமிழில் தத்துவங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. பக்திக் காலங்களில் தோன்றிய தத்துவங்கள் ஒரு வகை என்றால் அதற்குப் பிற்பாடு தோன்றிய சித்தர் மரபுகளின் தத்துவங்கள் பிறிதொன்றாக அமைகின்றன.
சமண, பௌத்த சமயங்களின் தத்துவங்கள் பகுத்தறிவு சிந்தனைகளை வேத மரபுக்கு மாற்றாக நிறுத்துகின்றன. சாங்கியம் என்ற தத்துவம் தமிழின் முதல் தத்துவமாக இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் ஜே. கிருஷ்ணமூர்த்தி, பிரமிள் என கலை, மெய்யியல் என்ற தத்துவங்கள் வழி அறியக்கூடியவர்களாக இருக்கின்றனர். (எனது தேடலுக்கு உட்பட்டு). செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப காலத்தில் தத்துவங்களும் கோட்பாடுகளும் எத்தகையதாக இருக்கும் என்ற கேள்விக்கு பழைய மொந்தையில் ஊறிய புதிய பானமாக ஒன்றை பதிலீடாக முன்வைக்க மாட்டார்கள் என்பதை உறுதிபடச் சொல்லலாம். முபீன் சாதிகா போன்ற சிந்தனை யாளர்கள் இத்தகைய நூல்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும்வரை தமிழ்ச் சிந்தனை மரபும் புதிய தத்துவ கோட்பாடுகள் தளிர் பரப்பி வளரும். l
previous post