இந்த நாவலின் கதையும் களமும் அருமை. அதை நமக்கு சொந்தமான பேச்சு வழக்கு முறையில் எழுதி இருப்பது எனக்கு மிக நெருக்கமாக உணர வைத்தது. இதுவரையில் கேள்விப்பட்டிருந்த (Coffta) காஃப்டா சடங்கை கண்முன்னே காண்பதுபோல எழுத்தில் நிகழ்த்தி காட்டிவிட்டார் எழுத்தாளர் சிலம்பரசன். இது இவரது முதல் நாவல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நாவலில் படித்து அறியும் நிகழ்வுகள் கண்முன்னே படமாக ஓடுகின்றன. நானும் அதனுள் வாழ்வதாகவும் எனக்கும் வலிப்பதாகவும் உணர வைக்கிறது. கண்முன்னே ஒரு கொடுமை நடக்க… அதைத் தடுக்க முடியாத ஒரு பார்வையாளனாய் என்னை உணர வைக்கிறது இந்த நாவல்.
கதையின் நடை எளிதில் பிடிபட்டு வாசிக்கும் வேகத்தைத் தடையின்றி இட்டுச் சென்றது. இது கொங்கு வட்டார பேச்சுவழக்கு. ஆனால் கதை நடக்கும் இடம் காஸா என்ற ஆப்பிரிக்க ஊர். ஆப்பிரிக்க கண்டத்தில் சோமாலியா போன்ற நாடுகளில் பெண்ணுறுப்பைச் சிதைப்பதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் பழக்கமுடைய கருப்பினத்தவரின் பண்பை இந்நாவலில் அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர். அதன் மூலம் தமிழுக்கு அந்நிலத்து பண்பாட்டை இடம் பெயர்த்திருக்கிறார். கொங்கு தமிழும் ஆப்பிரிக்காவில் நிலவும் மூடநம்பிக்கை பற்றிய கதையும் ஒன்றிணைந்து புனையப்பட்ட சித்திரம் இந்த நாவல்.
காஃப்டா என்றும் கத்னா என்றும் நிலத்திற்கொரு பெயர். எந்தப் பெயரிலிருந்தால் என்ன? பெண்ணை ஒழுங்குபடுத்துகிறோம் என்ற பெயரில் அவரது பெண்ணுறுப்பை அறுத்தோ, வெட்டியோ தைத்து, அதைப் பூட்டி வைத்த பெட்டிபோல பாதுகாத்து மணப்பவனின் கையில் திறக்கவும் செய்வித்தால் அதுதான் காஃப்டா.
இந்தக் கதை நமக்கு பல கேள்விகளை முன் வைக்கிறது. பல காலமாய் ஆப்பிரிக்க மண்ணில் பல இனக்குழுக்களுக்கு இடையே இருந்து வந்துள்ளது காஃப்டா. இப்படி ஒரு மூடத்தனம் எப்படி இத்தனை இனக்குழுக்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கும்? அதுவும் ஆப்பிரிக்காவின் பல்வேறு வகை நிலத்தில் வாழும் இனக் குழுக்களால்?
சரி, இது ஆப்பிரிக்காவில் மட்டும்தான் உள்ளதா? பல்வேறு நாடுகளில் பலரும் இதைச் சத்தமே இன்றி நடத்துகின்றனர். வெவ்வேறினம் வெவ்வேறு பெயர் என்றாலும் இதை நடத்துவது ஒரே சரடுதான். அதுதான் ஆணாதிக்கம். ஆணுக்கு சாதகமான சமூகச் சூழலை, பெண்ணுறுப்பைச் சிதைத்து தைத்து சுத்தமாக்கி வைப்பதன் மூலம் பிறன் கைப்படாத பெண்ணுறுப்பை ஒருவன் அடைய முடியும். இது ஆணாதிக்கம் இன்றி வேறென்ன? ஆணாதிக்க சிந்தனையை சடங்கு என்று சொல்லி, அதற்கு கடவுள் நம்பிக்கையை சாயம் பூசி மறுப்பவருக்கு ஒழுக்கம் என்ற கற்பிதத்தையும் பூசுகிறார்கள். இதை திருவிழாவாகவும் கொண்டாடுகிறார்கள்.
அதேநேரம் இவ்வளவு பெரிய சமூக இடரை, தன்னுடைய வலியை ஆப்பிரிக்க மண்ணைத் தாண்டி உலகிற்கு சொன்னவர் வாரிஸ் டைரி என்ற சோமாலிய நாட்டுப் பெண். ஒரு நடிகையாக திரையில் தோன்றிய பின், ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் வாரிஸ் டைரி தனது இனத்தின் கட்டுப்பாட்டை உடைத்து முதல்முறையாக தனக்கு ஏற்பட்ட அநீதியை, காஃப்டா சடங்கைப் பற்றி வெளிப்படையாகச் சொல்கிறார். அந்த நேர்காணல் வெளியாகி இப்பிரச்சினையை உலகினருக்கு சொன்ன போதுதான் பலரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. உலக அளவில் பல தலைவர்களைப் பேச வைத்தது. இந்த நேரத்தில் அவர் தனது சுயசரித நூலை எழுதி வெளியிட்டார். ‘வாரிஸ் டைரி’ என்ற பெயரிலான அந்நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது (வாரிஸ் டைரி: பாலைவனப் பூ – எதிர் வெளியீடு). இந்நூலில் தன் வாழ்வில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் வெளிப்படையாக எழுதியிருந்தார். அவரது வாழ்வியல் அனுபவங்கள் எப்படியிருந்தது என்பதை அந்நூலில் தெரிந்துகொள்ளலாம்.
அதன் பின்னர், ஐ.நா. சபையில் இது குறித்து பேசப்பட்டு தீர்வை நோக்கி நகர வைக்கப்பட்டது. ஆப்பிரிக்க கண்டத்திற்கு ஒரு தூதுவராக வாரிஸ் டைரி நியமிக்கப்பட்டார். ஆப்பிரிக்க மக்களிடத்தில் காஃப்டா என்ற மூடப்பழக்கத்தை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி வாரிஸ் டைரி கேட்டுக்கொள்ளப்பட்டார். இன்னும் முழுமையாக எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இதில் வாரிஸ் டைரியும் இல்லையெனில் இந்த சமூக மூடத்தனம் வெளியில் சரியாகக்கூட தெரிந்திருக்காது.
அக்கினி என்ற குழந்தைக்கு காஃப்டா சடங்கு நடைபெற இருக்கிறது. ஆனால் அங்கே ஒயித்தா மாமிகள் அக்கினியிடம் என்ன செய்வார்கள் என்ற ஆவலில் மறைந்திருந்து இந்த உறுப்பு சிதைப்பை காண்கிறாள் எல்லா என்ற சிறுமி. அவள் கண்ட காட்சியில் இதயமே நின்றுவிடும் போலிருக்க, அப்போதே தனக்கு இந்த சடங்கு வேண்டாம் என்று முடிவுகட்டுகிறாள் எல்லா. ஆனால் அதே வேளை இச்சடங்கை பெண்களுக்கு நடத்தக் கூடாது என்று சட்டம் இயற்றியிருப்ப தாகவும் இனி இப்படி செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போலீஸ் தரப்பில் ஊருக்குள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இப்படிபட்ட சூழலில் எல்லாவின் பெற்றோர் தங்கள் நம்பிக்கையின் பேரில் எல்லாவுக்கு சடங்கை செய்தார்களா, இல்லையா? அச்சடங்கு நடத்துவதற்கு யாரெல்லாம் துடிக்கிறார்கள்? யாரெல்லாம் தடுக்கிறார்கள்? அவர்களுக்கு ஏன் தடுக்கவேண்டும்? என்பதெல்லாம் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
கதையில் ஒரு குருட்டுக் கிழவியும் ஒரு பெயரற்ற கதாப்பாத்திரமும் வருகின்றனர். அவர்கள் வேறு எதுவுமல்ல, நமது மனசாட்சிதான். நாம் அக்கதைக்குள் இருந்தால் என்ன செய்ய நினைப்போமோ அதைத்தான் அவர்களும் செய்கின்றனர். அவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை நாவலைப் படித்து அறிவதே நலம்.
‘எம்பொண்ணு சுத்தமாயிட்டாளா?’ என்று அக்கினியின் தாய் ஜெனிஃபர் கேட்கிறாள். கத்னா முறை அங்கே காஃப்டா என்ற பெயரில் திருவிழாவாக நடத்தப்படுகிறது. இதனால் ஏற்படும் இழப்பும் வலியும் பெண்களுக்கு மட்டுமே அதிகம் நடக்கிறது.
வாசிக்கத் தொடங்கிவிட்டால் இடைநிறுத்த மனம் ஒப்பாத கதையோட்டம். எளிமையான நடை. நம் சொந்த மொழியில் வெளிநாட்டு மக்களை எழுதுவது என்பது சற்று சிரமமான வேலை. இவர்களது பண்பாட்டை ஆராய வேண்டும். தரவுகள் வேண்டும். அது சமீபத்தியதாக இருக்க வேண்டும். அப்படி பெறப்பட்ட தரவுகளின் மீது எழுந்த சமூக அக்கறையுள்ள படைப்பிது. l
previous post