தஞ்சாவூர் மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய திரு. சிவகுமார் அவர்கள் தன்னுடைய ஆளுகையின் கீழ் உள்ள மாவட்டத்தின் ஆசிரியர்களை வாசிக்க வைப்பதற்காக எடுத்த பெருமுயற்சியில் விளைந்திருக்கிறது ஒரு வாசிப்பு இயக்கம். இவர் ஆரம்பித்து வைத்த வாசிப்பு இயக்கம், ஆசிரியர்களை முதலில் சிறந்த வாசகர்களாக்கிப் பின்னர் சிறந்த படைப்பாளிகளாக உருவாக்கி யிருக்கிறது. தங்களால் சிறந்த சிறுகதைகளை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை விதையை இவர்களுடைய மனங்களில் விதைத்துள்ளது.
இந்தத் தொகுப்பில் பதினைந்து சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள எந்தக் கதையுமே நேரத்தைக் கடத்துவதற்காக வாசிக்கும் பொழுபோக்குக் கதையாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது என்றும் சமூக அக்கறையோடு எழுதப்பட்ட கதைகள் இவை என்றும் உறுதியாகக் கூறி, இந்த நூலுக்கு வாழ்த்துரை வழங்கியுள்ளார் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள்.
முதல் கதையின் தலைப்பு, “கண் தேடும் கனா” என்று இருந்தது. கதையின் ஆசிரியர் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி. யோகேஸ்வரி. சிறந்த கருவை எடுத்துக் கொண்டு மிகவும் இயல்பான நடையில் கதையைப் புனைந்திருக்கிறார். காடாமங்கலம் இரயில்வே கேட்டைக் கடக்க முடியாமல் வாகன நெரிசலில் திண்டாடும் மக்களின் குறையைத் தீர்க்க மேம்பாலம் கட்டுவதே சரியான வழியென்று புரிந்து கொண்டு போராடும் இளம்பெண்ணின் கதை. எத்தனை தடங்கல்கள்! எத்தனை தலையீடுகள்! இறுதியில் தனது போராட்டத்தில் நாயகி ஆதர்ஷினி வெற்றி பெறுகிறாளா என்று தெரிந்துகொள்ளப் படித்துப் பாருங்கள்.
அடுத்ததாக மோனெம்வாசியா என்கிற கதை. மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரியும் மகிழ்நதி என்கிற வி. ராஜகோகிலா அவர்கள் எழுதிய கதை. முற்றிலும் வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக இருந்தது. கிரீஸ் நாட்டைச் சேர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் குட்டித்தீவு தான் மோனெம்வாசியா. இந்தத் தீவில், விவான் என்கிற சிறுவனின் வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்களை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்துக் கூறுகிறார் ஆசிரியர். கிரீஸ் நாட்டின் கலாசாரம், மக்களின் வாழ்க்கை பற்றிய தகவல்கள், பண்டிகைகள், வீடுகளின் அமைப்பு பற்றிய தகவல்கள் என்று அனைத்தையும் கதையினூடே அழகாகத் தந்திருக்கிறார் ஆசிரியர். வேறுபட்ட கதைக்களத்தில் புகுந்து புதிய தகவல்களைத் தந்துள்ள ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
அடுத்த கதை ஆரஞ்சு மிட்டாய் என்கிற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. அறிவியல் ஆசிரியரான சு. மாரியப்பன் அவர்கள் எழுதியது. இரண்டு வேறுபட்ட சூழல்களில் வளரும் குழந்தைகளான மாதேஷ் மற்றும் ராஜாவின் தினசரி வாழ்க்கை பற்றிய கதை. ராஜா, தந்தையை இழந்து தாயால் வளர்க்கப்படும் சிறுவன். வீட்டு வேலை செய்து குடும்பத்தைச் சமாளிக்கும் தாயின் குறைந்த வருமானம், தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதில்லை என்பதால் ஏழ்மையான சூழ்நிலை ராஜாவின் வீட்டில். பள்ளியில் சத்துணவு உண்ணும் ராஜாவும், பிரியாணி, ஆம்லெட், ஆப்பிள் என்று மதிய உணவிற்கு எடுத்துச் செல்லும் மாதேஷும் இரண்டு எதிரெதிர் துருவங்களாக நம்முடைய கருத்தைக் கவர்கிறார்கள். இருவருடைய பிறந்தநாள் ஒன்றாக இருந்தாலும் தினசரி வாழ்க்கையில் எவ்வளவு முரண் என்பதைக் கதை அழகாக எடுத்துக் காட்டுகிறது. மனதைப் பிசைகின்ற அழுத்தமான எழுத்து.
ஸ்டார்ட், கேமரா, ரோலிங், ஆக்ஷன் என்கிற தலைப்பில் அடுத்ததாக வந்துள்ள கதையை எழுதியவர், வேதியியல் முதுகலை ஆசிரியராகப் பணிபுரியும் திரு. ச. கதிரேசன் அவர்கள். அறிவியல் கலந்த பின்புலத்தில் முற்றிலும் மாறுபட்ட கதை என்று அதிக ஈடுபாட்டுடன் படித்துக் கொண்டே வந்தால் இறுதியில் பயங்கரமான திருப்பம். நல்ல நகைச்சுவையான முடிவு. மிஸ்டர். மயிலுக்காக டைரக்டர் கூறிய பான் இந்தியா திரைக்கதை எனக்கென்னவோ பிடித்திருக்கிறது. நாங்களும் மனுஷங்க தான் என்ற தலைப்பில் தொகுப்பில் உள்ள கதையை எழுதியவர் பட்டதாரி ஆசிரியரான திருமதி. சி. க. வசந்தலட்சுமி அவர்கள். கணவன், மனைவியின் இயல்பான உரையாடலில் ஆரம்பிக்கும் கதை, மிகவும் அழுத்தமான ஒரு கருவை நமக்கு முன்னால் வைத்துவிட்டு ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டிவிட்டுவிட்டு முடிகிறது. திருநங்கைகளின் நிலைமை பற்றி நம்மை யோசிக்க வைக்கிறது. இறைவனின் படைப்பில் நேர்ந்த பிழையினால், ஒதுக்கப்பட்ட இனமாகத் திகழும் இவர்களை சமுதாயம் என்றுதான் ஏற்றுக் கொண்டு மதிக்கப் போகிறதோ தெரியவில்லை.
மூன்றாம் உலகப்போர் என்கிற கதை இடைநிலை ஆசிரியரான இரா. சங்கீதா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதுவும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் சிறப்பான கருவை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. துரித உணவுகள், நமது மனிதகுலத்தை எப்படி அளித்து வருகிறது என்பதை ஒரு குழந்தையின் மூலமாகச் சொல்ல வைத்துக் கதைக் கருவை அழகாகக் கையாண்டுள்ள ஆசிரியருக்கு எனது பாராட்டுகள்.
அடுத்ததாக நிலாவின் வேலுநாச்சியார் என்கிற கதையை எழுதியிருப்பவர் கணித ஆசிரியையான திருமதி. ந. சங்கீதா. தந்தை கொஞ்சம் கூட மகளின் மீது பாசம் காட்டாத நிலையில், வீட்டின் அத்தியாவசியச் செலவுகளைச் சமாளித்து, நெருங்கிய உறவுகளின் கடன் பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டு தன் மகளை வளர்க்கிறாள் அவளுடைய தாய் நிலா. தன்னுடைய மனத்திற்குப் பிடித்த வீராங்கனை வேலுநாச்சியார் போன்று தன் மகளை வளர்த்து ஆளாக்க எவ்வளவு தூரம் நிலா போராடுகிறாள் என்பதைக் கதையினூடே அழகாகக் கொண்டு போகிறார் ஆசிரியர். குழந்தை நாச்சியா, தனது வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டின் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றித் தெரியவரும்போது மனம் இளகிப்போகிறது. தாய், மகள் மற்றும் தந்தையின் மனங்களில் சதிராடும் உணர்ச்சிகளைக் கதையில் அழகாகக் காட்டியுள்ள ஆசிரியருக்குப் பாராட்டுகள். முதுகலை ஆசிரியரான திரு. தி. தாஜுதீன் அவர்கள் எழுதிய பெரிய யானை கதையை வாசித்து முடித்தபோது நல்லதொரு நீதியை உள்ளடக்கிய அருமையான கதையைப் படித்த நிறைவு மனத்தில் நிறைந்தது. வயலில் வேலை செய்யும் கூலித் தொழிலாளியின் மகன் படிப்பில் ஆர்வம் காட்டுவதை வாசிக்கும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னுடைய தந்தை செய்யும் வேலையின் அருமையை மகன் புரிந்துகொள்வதாக ஆசிரியர் கதையை அமைத்திருந்த விதம் பொருத்தமாக இருந்தது. பெரிய யானை யார் என்று தெரிந்து கொள்ளக் கதையை வாசித்துப் பாருங்கள். மீள்கதிர் என்கிற கதையைக் கணித ஆசிரியையான திருமதி. ரெ. வனிதா அவர்கள் எழுதியுள்ளார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டும் கதை. அதுவும் சமுதாயத்தில் வறுமையான சூழ்நிலையில் வளரும் பெண் குழந்தை, கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொள்ளாமல் தடுமாறும்போது அவளுடைய ஆசிரியை எடுக்கும் முயற்சி எப்படி அவளுடைய மனத்தை மாற்றி, வாழ்க்கையில் முன்னேறுவதற்குக் கல்வி கற்பதே சிறந்த வழி என்று புரிய வைக்கிறது என்பதை இந்தக் கதையினூடே தருகிறார் ஆசிரியர். நல்ல சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ள அற்புதமான கதை. காகேசிலாயிடுகள் என்கிற தலைப்பு என்னைக் கவர்ந்ததால் அடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். கணிப்பொறி ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி. க. சுமித்ரா சத்யமூர்த்தி அவர்கள் எழுதிய கதை, எதிர்காலத்தில் நடக்கப் போகிற கற்பனைக் கதை. அதாவது கி. பி. 2050 ஆம் ஆண்டில் இப்படி நடக்கலாம் என்று தன்னுடைய கற்பனையில் சுவாரஸ்யமாகத் தந்திருக்கிறார். பறவை ஆர்வலரான மிஸ்டர். கே, அவருடைய உதவியாளர்களான யாழ், மது இருவருடன் மிட்வே தீவிற்குச் செல்கிறார். ஜப்பானுக்கும் அமெரிக்காவுக்கும் நடுவில் பசிபிக் கடலில் இருக்கக்கூடிய லட்சக்கணக்கான தீவுகளில் ஒன்று. அதனுடைய பெயர்க் காரணம் கதையில் விளக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், பல்வேறு புதிய தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. பிரமாண்டமான அல்பட்ராஸ் பறவை பற்றிய தகவல்கள், இரண்டாம் உலகப்போரின் போது நடந்த சில சம்பவங்கள், அழிந்து போன தீவுகள் பற்றிய மனத்தைச் சங்கடப்படுத்தும் தகவல்கள் இவற்றோடு மனித நேயமும் அழகாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை, கற்பனை யாகவே இருந்தாலும் மனத்திற்கு இனிமையாக அமைந்துள்ளது.
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளுமே ஆசிரியர்களால் எழுதப்பட்டிருப்பதால் கல்வியின் மகிமையையும் முக்கியத்துவத்தையும் தவறாமல் வலியுறுத்துகின்றன. கல்வியின் மகத்துவத்தோடு மற்ற பல சமூகப்பிரச்சினைகளையும் தங்களுடைய கதைகளின் மூலம் அலசி ஆராயும் ஆசிரியர்களின் முயற்சி பாராட்டப்படவேண்டியதே ஆகும். திருநங்கைகளின் பிரச்சினைகளைப் புரிந்து செயல்பட வேண்டிய அவசியம், பெண்கல்வி, மாணவர்களுடன் எப்படி நட்புடன் பழகுவது, வறுமையில் வாடும் குழந்தைகளின் கல்வி தடைப்படாமல் இருக்க எடுக்கவேண்டிய முயற்சிகள், பாரம்பரிய உணவு வகைகளின் சிறப்பு இவை அனைத்தையுமே இந்தக் கதைகளில் ஆசிரியர்களின் கருத்துகளாக நம் முன் வைக்கப்படுகின்றன. புரிந்துகொண்டு செயல்பட வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. நகைச்சுவை மற்றும் அறிவியல் நோக்கு சில கதைகளில் காணப்பட்டன. இந்த நூலை வாங்கி வாசிப்பதே நாம் தரக்கூடிய மிகப்பெரிய ஆதரவு. நல்ல எழுத்தை வாசிப்போம். இந்தக் கதைகளில் பொதிந்துள்ள நல்ல நோக்கத்தைப் புரிந்துகொண்டு செயல்படுவோம். l
previous post
