ஒரு நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு நீங்கள் தாமதமாகச் சென்று கொண்டிருக்கிறீர்கள்… நெரிசல் மிகுந்த மாலை நேரம். தேவையில்லாத சவாரி ஏற்றிக் கொண்டோமே என்று நொந்தபடி வாகனத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் ஊபர் செயலி மூலம் பற்றிக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர். அப்போது மெல்ல உங்கள் இதயத்தைத் திறக்கிறீர்கள், அவர் ஏற்கும்படியான உரையாடலைத் தொடுத்து, ஒரு கட்டத்தில் கவிதை ஒன்றை மனத்திலிருந்து எடுத்துச் சொல்கிறீர்கள்… அதில் அசந்து போகும் அவருக்கு மேலும் ஓரிரண்டு கவிதைகளை ரசிக்க எடுத்துக் கொடுத்துக் கொண்டு செல்கிறீர்கள். இறங்க வேண்டிய இடத்தில் உங்களுக்கு முன் இறங்கி வந்து கை குலுக்கி, தான் கேட்ட கூடுதல் காசு வேண்டாம் என்றும், இந்தக் கவிதைகளை எழுதியவர் யார் என்று கேட்டும், அவரது நிகழ்ச்சிக்குத் தான் வந்திருக்கிறீர்களா, சந்தோசம் என்றும் உங்களிடம் பேசுகிறார் என்றால், மனித்தப் பிறவியும் வேண்டுவது தானே இந்த மாநிலத்தே!
ஏப்ரல் 25 அன்று பாரி கபிலன் அவர்களது ‘அம்மாயி கும்பிட்ட சாமி’ கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்குச் சென்றடைந்த விதம் இத்தனை கவித்துவமானது. ஓர் உழைப்பாளியின் மனத்திற்கு நெருக்கமாகச் சென்றடைய முடியும் கவிதைகளின் தொகுப்பு உள்ளபடியே சிறப்பானது என்பதற்கு மற்றுமொரு சான்றிதழ் தேவையா என்ன!
‘அம்மாயி கும்பிட்ட சாமி’, ஒரு கவிஞன் தனது ஊர் மண்ணைத் தொட்டு, அதன் நீர்ப்பரப்பு, செடி, கொடி, தாவரங்கள், பறவைகள் உள்ளிட்டுப் பல்வேறு உயிரினங்களோடு தனக்கிருக்கும் உறவுகளைச் சொல்லி, நகருக்கு இடம் பெயர்ந்துவிடும் வாழ்க்கைப்பாட்டில் அதன் நெரிசல் நெருக்கடிகளோடு சமரசம் செய்து கொண்டதையும் தொழிலாளியாக சமரசம் இன்றி சமர் செய்ததையும் சொல்லி நிமிர்ந்து நிற்கும் தொகுப்பு என்று ஒரு வரியில் சொல்லலாம்.
இயற்கையோடும் இசையோடும் மனித உழைப்போடும் நெருக்கமாக இருக்கும் கவிதைகள் என்று சொல்லவேண்டும். ‘என் பாடல் செவி கேட்கும் விருந்தாகலாம் / என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்’ என்று தவப் புதல்வன் திரைப்படப் பாடலில் எழுதி இருப்பார் கவிஞர் கண்ணதாசன். ‘இனி யாருக்காகவும் / என் புல்லாங்குழல் வாசிப்பை / நிறுத்திக் கொள்ளப் போவதில்லை / எங்கோ யாரோ ஒருவர் / இதனால் பசியை மறக்கக்கூடும்’ என்கிறார் பாரி கபிலன். வேறொரு கவிதையில் ‘இசையெழுப்பும் என் துளைகளை அடைத்து விடாதே’ என்று தன்னையே புல்லாங்குழலாக்கிப் பேசுகிறார். ‘நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’ என்பது தான் அந்த விசனம்.
பூட்டும் சாவியும் தேவைப்படாத கூடுகள், அவற்றைக் கட்டுவிக்க அயலார் உதவி தேவைப்படாத பறவைகள் என்று வியக்கும் கவிஞர், குருவி பறந்து போய்விட்டிருக்க விழுந்து கிடக்கும் நார்க்கூடு ஒன்றில் தானே குடியிருக்கக் காண்கிறார். விடுதலையின் குரல்களாக விரியும் வரிசையில் கை கால்கள் ஏதுமற்று நிற்கவும் நடக்கவும் பறக்கவும் சுழலவுமான காற்றையும் கொண்டாடுகிறது ஒரு கவிதை. குழந்தைப் பருவத்தின் நெருக்கமான பறவைகளில் காகம் மறக்க முடியாதது. காகத்தின் ரசிகராகும் பாரி கபிலன், போர்க்குரல் எழுப்பும் காகத்தின் குறில் நெடிலான மொழி என்று தொடங்கி, ‘யாரையும் அநாவசியமாக அச்சுறுத்துவதில்லை / அநாதையாக செத்துக் கிடப்பதுமில்லை’ என்று முடிக்கிற இடத்தில் மரபுக் கவிதையில் பயின்றுவரும் வேற்றுமை அணி போல, மனித வாழ்க்கையின் அவலச் சுவடுகளைத் தொட்டு விடுகிறார்.
தனது முதல் தொகுதியான ‘களத்து மேடு’ கவிதைகளின் நீட்சியாகவே உழைப்புக்குத் தலை வணக்கம் செய்யும் கவிதைகளில் ஒன்றில், வீட்டில் வாங்கி வைத்திருக்கும் கூடை ஒன்றில், ‘மூங்கில் கூடை பின்னி விற்றவளின் குரலோசை’ கேட்கிறது. தொழிலாளியின் சட்டை எனும் தலைப்பிலான மூன்று கவிதைகளும் முத்தானவை. நிறங்களையெல்லாம் ஒன்றாக்கி விடுகிறது சட்டை என்கிறது ஒன்று. எல்லாக் கடனுக்கும் சட்டையின் பாக்கெட் சொல்லும் பதில் பத்தாம் தேதி என்கிறது மற்றொன்று. ஒன்று கூடி நிற்கும் தொழிலாளர்கள், காலரைத் தூக்கி விட்டுக் கொண்டால் கலவரம் என்கிறார்கள் என பளீர் என்று முடிகிறது மூன்றாவது.
‘தொழிலாளியால் என்ன செய்ய முடியும் என்று கேட்கிறாய், நான் கேட்கிறேன், தொழிலாளியின்றி எதைச் செய்ய முடியும்’ என்று சீறுகிறது வேறொரு கவிதை. இடையறாது எந்திரங்கள் அருகே நின்று கொண்டே இருக்கச் சொல்லும் கீழ்த் தரமான உத்தரவுக்குக் கீழ்ப்படியாமல் ‘நடக்கத் தொடங்கிவிட்டேன்’ என்கிறது ஒரு கவிதை. ‘நீ யாருடைய முகம்’ என்று நாற்காலியை நறுக் என்று கேட்கிறது பிறிதொரு கவிதை. தொழிலாளி என்ற வார்த்தையை வாசித்தாலே நாசி நெருடுகிறது என்று நெளியும் தூய இலக்கியவாதிகளைப் பார்த்து இந்த இலக்கியத்தில் எங்கே இருக்கிறது பிரச்சார வாடை என்று கேட்கும் கவிதைகள்.
ஆட்டோ தொழிலாளியின் உள்ளத்தைத் தொட்டது, வெங்காயம் கவிதை. வெங்காயத்தின் விலை உயர்வைக் கேட்ட நாடாளுமன்றத்திற்கு, நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று அகந்தையோடு பொருத்தமற்ற பதிலைக் கொடுத்த மாண்புமிகு நிதி அமைச்சரது அரசியலை அம்பலப்படுத்தும் கவிதை அது. ‘வெங்காயம் தெரியாது என்றால் வேறென்ன தான் தெரியும், மதமும் சாதியும் தெரியும், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனில், அதை வைத்துக் கொண்டு தான் அத்தனையும் செய்கிறோம்’ என்று பேசுவோரின் முகமூடியைக் கிழித்தெறிகிறது கவிதை.
ஏர் உழவர்களின் வேளாண் புரட்சியைப் பேசும் கவிதை, விளைநிலங்கள் தேவை எனில் நகரத்தை உழலாம் என்கிறது. ‘மண் வெட்டிக் கூலி தின்னலாச்சே, எங்கள் வாள்வலியும் தோள்வலியும் போச்சே’ என்று மறவன் பாட்டை எழுதினான் மகாகவி. மண்வெட்டிகளோடு மாநகரத்தில் வேலைக்கு அன்றாடம் விடியலில் சாலையோரத்தில் காத்திருக்கும் புலம் பெயர்ந்த குடியானவ மக்களின் பாடுகளை எடுத்துப் பேசுகிறது ஒரு கவிதை.
வறுமையை, இல்லாமையைப் பேசும் கவிதைகள் ஏன் கவித்துவமாக அமைந்து விடுகின்றன எனில், சொந்த அனுபவத்தில் துடிக்கும் உள்ளத்தின் உண்மையொளி வாக்கினிலே ஒளியாக உண்டாவதன் ரகசியம் அன்றே வேறென்ன! மரமேறுதல் கவிதையின் கொண்டாட்ட வரிகள், வீடு சேர்ந்தால் வழுபட்ட கீறல்களைத் துண்டால் மறைத்தாலும் காயங்களை மறைத்துப் போட ஒற்றைச் சட்டைத் துணி கிடையாது வீட்டில் என்று முடிகின்றன. கருகருன்னு இருட்டிக் கொண்டே வரும் வானம், நடம்மா வயல்வரப்பு எட்டிப் பார்த்து தவிக்கிறாள், தான் வீடு போய்ச் சேரட்டும் என்ற பரிதவிப்பு, தனக்கு இருக்கும் ஒரே கால்சட்டையும் நனைந்துவிடக் கூடாது என்று!
எளிய மக்களின் வீட்டு விறகடுப்புகளும் அவர்களது வாழ்க்கையைப் போலவே புகைந்தபடியே தான் எரிகின்றன என்கிறார் கவிஞர். பெருவெளியின் மண்ணையே சுமந்த தங்களால் மாநகரின் கடையில் வாங்கிய ஒரு கிலோ அரிசியை சுமக்க முடிவதில்லை எனும் கவிதை அரசின் பொருளாதார அராஜகக் கொள்கைகளால் வயல்களிலிருந்து வெளியேற்றப் பட்ட மக்களின் வேதனைக் குரலாக ஒலிக்கிறது. பசியில் திரியும் மனிதனைப் பேசுகிறது ஒரு கவிதை. அனிதாவின் தற்கொலையை, அநீதிக்காரர்களுக்கு எதிரான காறி உமிழ்தல் என்று வகைப்படுத்துகிறார் வேறொரு கவிதையில்.
அம்மாயி பற்றிய கவிதைகளில் அவளது பாசம் மட்டுமல்ல, அந்த உழைப்பாளியின் கம்பீரமும் மிகுந்து ததும்புகிறது. அவள் ஊற்றிய கூழ் இன்னும் மிதக்கிறது கிணற்றில் என்கிறார். அண்டை வயல் வரப்புகளுக்கும் அவளது கனைப்பே காவல் என்கிறார். ‘அடுத்த பொங்கலுக்கு இருப்பேனோ மாட்டேனோ, வந்து வச்சிக்கடா’ என்று நெற்றியில் அவள் பூசும் நீறு, அவளது முரட்டுப் பாசத்தின் சாறு!
மழை குறித்த ரசனை தொகுப்பில் ஆங்காங்கு இலக்கியச் சாரல் அடித்துக் கொண்டே இருக்கிறது. நாங்கள் எங்கே நனைந்தோம், நாங்கள் தான் நனைத்தோம் மழையை என்கிறார் கவிஞர். மழையின் ஒவ்வொரு துளியிலும் ஒரு நதி, ஒரு கடல், ஓர் ஆகாயம் மற்றும் நானும் உண்டு எனும் வரி அபாரம். அலையெழுப்பி அலையெழுப்பிக் குளிக்கும் கிணறை ரசிக்கும் கவிஞர் பிறிதோர் இடத்தில் அழகென்பதே இதயத்தால் ஆனது என்கிறார். மரணத்திற்குப் பிறகே பேசத் துடிக்கிறோம் அவர்களிடம் எனும் மரணத்தைப் பற்றிய கவிதை வாழ்க்கையை உற்று நோக்கும் அனுபவங்களில் ஒன்று.
வாசிக்க வாசிக்க நுண் உணர்வுகளைத் தூண்டும் இந்தத் தொகுப்பில் மிகவும் பாதித்தது, ‘என் சிறு வயது’ எனும் தலைப்பில் அமைந்திருக்கும் கவிதை! மரங்கொத்தியின் ரசிகன் என்று தொடங்கும் அந்த சொந்த அறிமுகம், கிராமத்துப் பறவைகளின் தோழன், தோள் துண்டைத் திரையாக்கி நடித்துக் காட்டிய சினிமா பைத்தியம், பாட்டுப் பிரியன் என்றெல்லாம் வளர்ந்து, ‘பள்ளிக்கூடத்தில் அந்தவொரு வாத்தியாருக்கு மட்டும், தான் படிக்கக் கூடாத சாதி’ என்று முடிகிற இடத்தில் சமூகத்தின் கன்னங்களில் ஓங்கி அறைகிறது.
தனது வாழ்க்கைப் பாதையில் உதவியவர்கள் அனைவருக்கும் நன்றி மறவாமையை ஆழப் பதிவு செய்திருக்கும் கவிஞர் பாராட்டுக்கு உரியவர். அடுத்தடுத்த தொகுப்புகளுக்கான வேட்கையை ஏற்படுத்தும் கவிதைகளின் அருமையான தொகுப்பு. l
previous post