நான் அண்மையில் (2024) என் தன் வரலாற்று நூலை ‘என் கதை’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். இதன்படி ஒன்றை பேரா. சே.கோச்சடை மூலமாக பெற்ற என் அருமை நண்பர் பேரா. அரச முருகுபாண்டியன், நூலைப் பொருட்படுத்திப் படித்து எனக்கு மடல் ஒன்றை விடுத்துள்ளார். ‘‘தங்கள் இணையர் திருவாட்டி. சு.உமா பற்றிய குறிப்புகள் நான்கு பக்கம் இருந்தாலும் மிகுந்த அர்த்தமுடைய ஆழமான உள்ளன்போடு கூடிய வரிகள்.’’ நண்பர் மடல் எழுதியதோடு, தன் அன்பு மனைவியார் பேரா. சித்ரா அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எனக்கு அனுப்பியுள்ளார். படித்து முடித்தேன். இதயம் கனத்து விட்டது. நண்பருக்கோ நூலை அறிமுகப்படுத்தி நான் எழுத வேண்டும். எதையென்று எழுதுவது? எவ்வளவோ எழுதலாம். எழுத்துலகில், எழுதுபவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றிப் போதுமான அளவு எழுதுவதில்லை என்கிற குறை உண்டு. பேரா. சித்ரா ஓர் அறச்செல்வி. அவரை அறிந்தவர்கள் அவரைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அணுக்கமாக இருந்து அறிந்தவரான அவருடைய கணவர், பேராசிரியரும் சமூக செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான அரச முருக பாண்டியன், ஒரு கடமையை என்று மட்டும் அல்ல, வரலாற்றுக் கடமை ஒன்றை செய்துள்ளார் என்றே சொல்லலாம். இந்த நூலை நான் பக்க கோடிட்டுப் படித்தேன். மீண்டும் ஒரு முறை புரட்டினேன். இப்போதும் புரட்டினேன். புழுக்கம், புழுக்கம், மனப்புழுக்கம்.
நான் என் மன ஓசையை ஓரளவாவது வெளிப்படுத்த வேண்டும். நான் என் அய்ம்பது வயது தலைமகனை இழந்தவன். மனைவியை இழந்து இருப்பது கொடுமையானது. ‘என் தூங்கும் என் கண் சித்ரா’ – என்பது வள்ளுவர் பெயரால் வழங்கும் ஒரு வெண்பா. சித்ரா அவர்கள் முனைவர், பொருளாதாரப் பேராசிரியர் . முருகுபாண்டியன் வணிகவியல் பேராசிரியர். (பொறையாறு) இவர்கள் சம்பாதித்தார்கள்; பள்ளத்தூரில் மனை வாங்கி பெரிய வீடாகக் கட்டினார்கள்; கார் வாங்கினார்கள். மகள் இளவெயினி பொறியியல், மகன் அம்பேத்கர், சட்டம் படிக்க வைத்தார்கள். நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விருந்தும் வேண்டிய பண உதவியும் செய்தார்கள். எதிர்காலத்தில் ஒரு பள்ளியைத் தொடங்கி நடத்த இடமும் வாங்கினார்கள். இவையெல்லாம் பெரியன இல்லை. தன் முயற்சியாலும் இட ஒதுக்கீட்டு உரிமையாலும் புதிய பணக்காரர்கள் ஆவோர் செய்வனதாம். இவர்களுள் சிலர் புதிய பார்ப்பனர்கள் ஆகிவிடும் கொடுமையும் நிகழ்வனதான்.
இவர்களுள் இருந்து சித்ரா. முருகு பாண்டியன் எங்கே வேறுபடுகிறார்கள்? பொறுப்புள்ளவர்களாக வாழ்ந்து காட்டுகிறார்கள்? பிறருக்கு எடுத்துக்காட்டுகளாக இருக்கிறார்கள்? இவற்றைப் படிக்கவும் பயிலவும் உதவுதான் இந்த அரிய வாழ்க்கை வரலாற்று நூல். சித்ரா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க அமைப்பாளராகவும் செயல்பட்டவர். இல்லத்திற்கு ‘பாணர் குடில்’ என்று பெயரிட்டவர். வீட்டில் பெரிய அம்பேத்கர் சிலை வைத்தவர். நாக்பூர் சென்றிருந்த போதும் அண்ணனுடைய சிலைகளை வாங்கி வந்தவர். இவர்கள், அம்பேத்கர் புகழ் பரப்பியவர்கள். மகன் பெயர் அம்பேத்கர். சித்ரா அம்மையார் தன் பணி நிறைவுக்கு முன்பாகவே இறக்க நேர்ந்தது. (2022) நுரையீரல் புற்று! குடும்பத்தில் இருந்திருக்கிறது. பாண்டியன் படிப்பவர்களுக்கு வற்புறுத்துவது இது பற்றிய முன்னெச்சரிக்கை.
அம்மையார், பரங்கிப்பேட்டை கிறித்துவப் பள்ளியிலும், இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பயின்றவர்கள். அம்மையார், கல்லறைக்குக் கிறித்துவ சபை ஒன்று இடம் அளித்துச் சிறப்பித்த அளவுக்கு மத நல்லிணக்கம் பேணியவர். இவர் இறுதிச் சடங்கில் கிறித்துவர்கள், பவுத்தம் பெரியவர்கள் கலந்து கொண்டு இவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முருகு பாண்டியன் – சித்ரா காதல் சுய சாதிக்குள். மு.சி.அம்பேத்கர், அருந்ததியர் பெண்ணைக் காதலித்து மணந்தவர். இதுதானே முன்னேற்றம், சீர்திருத்தம், புரட்சிப் பண்பாடு என்பது.
அம்மையார் ஓர் இல்லத்தரசி என்கிற வகையில் உரியவர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர். அதற்கு ஒரு மனம் வேண்டும். அது அம்மையாருக்கு இருந்தது. அதுதான் அவர் பெருமைக்கு உரிய அவர் வாழ்க்கை வரலாறு. அது, பாண்டியனுடைய சில பக்கக் கண்ணீர் வரிகளுக்கும் உரியது. ஏன்? இந்த நூலே ஓர் இரங்கற்பா தான். கவிஞர் முருகுபாண்டியன், இந்நூலில், இடையிடையே குறிப்பிட்டுச் செல்லும் அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும், மேற்கோள்களும் நூலை ஓர் அரிய ஆவணமாகவும் மதிப்புயர்த்துகின்றன. அண்ணல் அம்பேத்கர் தன் அருமை மனைவி ரமாபாயை இழந்த போது அம்மையார், அகவை 39. அது, 1935-ஆம் ஆண்டு அண்ணல் எட்டு இரவுகள் தனிமையில் இருந்தார்; மொட்டை அடித்துக் கொண்டார்; காவி உடுத்தினார்.
அரச முருகுபாண்டியனும் கலங்கித்தான் போனார். அன்னைக்கு மகன் அம்பேத்கர், நெற்றியில் முத்தமிட்டான். அன்பு மணவாளன் திருவடிகளில் முத்தமிட்டான்! விதியோ ஊழ்வினையோ அது உண்மையோ எனப் புலம்பினார். அம்மையார், வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர். இந்நூல், முருகுபாண்டியனின் வாழ்க்கை வரலாற்று நூலாகவும் கொள்ளத்தக்கது. அந்த அளவுக்கு விவரங்கள் கொண்டது. அம்மையாரின் பெற்றோர்களைப் போலவே (ஆலவேலி) அய்யனாரின் பெற்றோரும் (நாகப்பட்டினம்) ஆசிரியர்களே, பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்த பெற்றார்கள். முருகு பாண்டியன் தன் துணைவியார் கொடுத்த ஊக்கத்தால் தன் இல்லத்தில் மாடிக் கூட்டங்கள் நடத்தியுள்ளார். போதிக் கூட்டங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தவர்கள். சமகாலச் சமூகச் செயற்பாட்டாளர்கள். இவர்களுள் ஒரு சிலர் விழுப்புரம் புரட்சிப் பண்பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள். தம்பி அங்கனூர் – திருமாவளவன் எனக்கு பக்கத்து ஊர் தான் (குழுமூர்). மருத்துவராகக் கனவு கண்டு மடிந்த செல்வி அனிதாவின் ஊர்! அரியலூர் மாவட்டம். பேரா. சித்ரா, பேரா. கல்விமணியின் தாய்த் தமிழ்ப் பள்ளிக்கு நன்கொடை வழங்கியவர். பேரா. முருகுபாண்டியன் தான் பணியாற்றிய கல்லூரியில் அம்பேத்கர் பணி ஒன்றுக்கு அய்ம்பதாயிரம் வழங்கியவர். செல்வத்துப் பயனே ஈதல் – என்பதும் இவர்கள் நமக்கு வழங்கும் வாழ்க்கைச் செய்தி. இவர்கள் செயற்கரிய செய்த செம்மலோர். நின்ற சொல்லர்; நீடுதோன்று இணையர். l