புனைவுலகின் தூண்டுதல்கள் வியப்புக்குரியவை. வரம்புகள் மற்றும் சூழல்கள் படைப்புலகிற்கு தடையாக இருப்பதில்லை. வேலைப்பளு மிக்க வங்கிப் பணியிலிருந்தவாறே அன்பாதவன் இத்தகைய சாதனைகளைச் செய்துள்ளது கவனம் கொள்ளத்தக்கது. பொதுவில் வரலாறு தழுவிய படைப்புகள் எளிய வாசகனை ஈர்க்கும் வகையில் சுவாரசியமான கற்பனைகளை தழுவியதாக இருக்கும். மாற்றாக வரலாறு குறித்த இடங்களுக்கு சென்று தரவுகளைச் சேகரித்து அவற்றை படைப்பாக்குவது ஒரு சிலருக்கே வாய்க்கும். அவ்வகையில், அன்புசிவமான அன்பாதவன் வரலாற்றுப் பின்ணனி கொண்ட “கர்நாடகா கதைகள்” என்னும் ஒரு சிறுகதைத் தொகுப்பினை நமக்கு அளித்துள்ளார்.
நான்கு சிறுகதைகள், இரு குறுநாவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவை ஆசிரியர் வரலாற்றின்பால் கொண்டுள்ள உள்ளார்ந்த ஈடுபாட்டினை நமக்கு உணர்த்துகின்றன. தமிழில் வரலாற்றுப் புனைவுகள் நிறைய இருந்தாலும் இவை நிகழ்வுகளை அடிநாதமாகக் கொண்டிருப்பபதே இதனை வேறுபட்டதாகக் காட்டுவது குறிப்பிடத்தக்கது. முதல் கதையான உலக்கை ஒபாவ்வா பெண்களின் மாறுபட்ட பரிமாணத்தைக் காட்டுவதுடன் பெண்ணினத்திற்கு சிறப்பினைச் செய்கிறது. மலராக இருக்கும் பெண்மை சீறும் வேங்கையாக கணநேரத்தில் மாறுவதுடன் நாட்டிற்காக உயிரையும் இழக்கத் துணிவதனை அழகான புனைவாக்கி இருக்கிறார் அன்பாதவன். கி.பி. 1500லிருந்து 1779 வரையிலான சித்ரதுர்கா கோட்டையின் வரலாறு விரிவாக இக்கதையில் விவரிக்கப் படுவதுடன், கோட்டையின் கட்டுமானம் மற்றும் அப்பகுதியின் புவியியல் அமைப்பினையும் தெளிவாகக் கூறுகிறார் நூலாசிரியர்.
கூடுதலாக, இந்த நூலிற்கான முன்னுரை யினை அளித்துள்ள அன்பாதவனின் இளவலான தயாள் பத்மநாபன் வீரமங்கையான ஒபாவ்வா குறித்து பகிர்ந்துள்ள செய்திகளும் இப்படைப்பிற்கு மேலும் வலுசேர்க்கின்றன. நட்சத்திரக் கோட்டை கதை திப்பு சுல்தானின் பலவகைப்பட்ட பரிமாணங்களை நமக்குக் காட்டுகிறது. குறுநாவலாக விரியும் இப்படைப்பு கர்நாடகத்தின் நிலவியல் அமைப்புகளை விரித்துச் சொல்கிறது. நட்சத்திரக் கோட்டையை நிர்மாணிக்க சக்லேஷ்பூர் என்னும் இடத்தினை திப்பு எதற்காக தெரிவு செய்தார் என்பதற்கான காரணங்களை அன்பாதவன் சிறப்பாக பட்டியலிடுகிறார். அதுபோன்றே நட்சத்திரக் கோட்டையின் அமைப்பும், சிறப்பும் தெளிவாக இக்கதையில் விவரிக்கப்படுகின்றன. தமிழகத்தைச் சேர்ந்த தீரன் சின்னமலை, திப்புவுடன் போரில் பங்கேற்றது குறித்த செய்தி இதுகாறும் வாசகன் அறியாததது. திருவெள்ளறை தலத்தில் சிலுவை வடிவத்தில் அமைந்துள்ள குளம் குறித்த செய்தியும் புதுமையானது என்பதில் ஐயமேதுமில்லை.
இக்கதையில் விவரிக்கப்படுகின்ற மற்றுமொரு குறிப்பிடப்பட வேண்டிய செய்தியாக திப்பு சுல்தானின் இனம், மொழி கடந்த பண்பாக சிருங்கேரி மடத்தினைப் பாதுகாக்கவும், போஷிக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகள். பிற மதத்தினரை மதிக்கும் பண்பாளனாக அவர் இருந்ததனை அன்பாதவன் பல்வேறு கடிதங்களின் வாயிலாகவும், அவற்றினை கடித எண், ஆண்டு களுடன் சிறப்பாக விளக்கியுள்ளார். சதக் என்னும் சொல் கன்னட மொழியில் இடம் பெற்றுள்ளதற்கான காரணம் குறிப்பாக மட்டுமல்லாது, சிறப்பான தரவாகவும் விளங்குகிறது. வழங்கு மொழியினைக் கைகொள்ளாது வரலாற்றுப் படைப்பிற்காக இலக்கிய நயத்துடன், எதுகை, மோனைத் துணையுடன் பிரவாள நடையழகுடன் கூடிய வாக்கியங்களின் வாயிலாக அன்பாதவன் இக்கதைகளை அளித்துள்ளார். சமகாலத்தில் இத்தகைய மொழி நடையினை பெரும் பாலான கதையாசிரியர்கள் கையாள்வது கிடையாது என்பது எதார்த்தம்.
இத்தொகுப்பில் மாறுபட்ட படைப்பாக இருப்பது பசி என்னும் கதை. இக்கதை யினை வெறும் சம்பவமாக வாசிப்போர்க்கு கிளர்ச்சியளிக்கும் படைப்பு. ஆயினும் இக்கதை நுட்பமான உளவியலை வாசகன் முன்வைக்கிறது. பெரும்பாலான தருணங் களில் தருக்கங்களும், காரணங்களும் காரியங்களுக்கான காரணிகளில் அடங்குவ தில்லை.
இக்கூற்றினை இக்கதை மெய்ப்பிக்கிறது. மனித மனத்தின் ஆழமும், பரிமாணமும் அளவிட வியலாதவை. கணப்பொழுதில் நிகழ்ந்தேறும் சம்பவங்களும் அவ்வாறானவை. ஆசை வெட்க மறியாது என்று கூறிவிட்டு நம்மை ஆசுவாசப் படுத்திக் கொள்ளலாம். நிறைவாக்கிட நூலெங்கும் பெட்டிச் செய்திகளும், கவிதைகளும் ஊடாடி வருகின்றன. குறிப்பாக திப்பு சுல்தான் கதையும், வெப்பச்சலனம் கதையும் இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டுகளாகும். இந்த நூலினை பெங்களூரைச் சேர்ந்த புஸ்தகா நிறுவனம் பதிப்பித்துள்ளது.
சிறிதென்பதே அழகு. அன்பாதவன் இம்முறை சின்னஞ்சிறு கதைகளோடு வாசக உலகத்தை சந்திக்கிறார். நடைமுறை வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகளே இக்கதைகள். (அறிமுக உரையில் பா.உதயகண்ணன்). இலக்கியத் தளத்தில் நாவல்களுக்கான களம் விரிந்து பரந்தது. சிறுகதைகளுக்கும் களம் உண்டு. ஆயினும் குறுங்கதைகள் பெரிய அளவில் தொடப்படுவதில்லை. அவை மின்னல் கீற்றின் வீச்சினையும், அடர்வினையும் உள்ளடக்கியவை. சிறிய வடிவங்கொண்டு பெரும் பொருளினை உரைப்பவை. இத்தகைய குறுங்கதைத் தொகுப்பாக அன்பாதவனின் ‘நேத்திராவதியின் கடவுள்‘ என்னும் குறுங்கதைத் தொகுப்பு எழுதப்பட்டுள்ளது. தையல் மெஷின் கதை அழகுற பெண்மையின் நுட்பங்கள், அவர்களது எதிர்பார்ப்புகள் குறித்துக் கூறுகிறது. தையல் – பெண் இயந்திரமாகக் கையாளப்படுவதை மொழியழகுடன் விளக்குகிறது. பெண்கள் நிலை குறித்த எண்ணற்ற கதைகள் இதுகாறும் எழுதப்பட்டிருந்தாலும் இக்குறுங்கதை கூறப்பட்ட பாங்கு மிகச்சிறப்பாகிறது. தையலை மெஷினாக உருவகப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. குறுங்கதைக்கு இது ஓர் இலக்கணமாகத் திகழ்கிறது. புடவை கதையும் அவ்வாறானதே. பெற்றோர்களின் கனவுகளுக்கும், அவர்கள் சமூகத்தில் பெருமை சாற்றிக் கொள்ள பலிகடாவாக்கும் பிஞ்சுகளின் மனநிலையினை ஒரு கதை கூறுகிறது. சமகால பெற்றோர்களின் மனப்போக்கினை இக்கதையில் காணலாம். நம் பிள்ளை சகலகலாவல்லவனாய், அஷ்டவதானியாய் ஒரே நாளில் மாறி ஏற்றம் பெறவேண்டும் என்ற பேராசையினை இக்கதை உணர்த்துவது குறிப்பிடத்தக்கது. குற்றமும் தண்டனையும் இதனையே கூறுகிறது.
கானகம் சொன்ன கதையில் வேதாளத்திடம் வினாவெழுப்பி மறைய வைத்தது சிறப்பு. மறைமுகமாக இக்கதை அதிகார வர்க்கத்தின் போக்கினைச் சுட்டிக் காட்டுகிறது. நவிலை மீட்ட சுந்தரபாண்டியன் கதையும் இதனையொத்ததே. நேத்திராவதியின் கடவுள் கதை நவீன உலகின் குழந்தைகளின் பார்வையில் கடவுள் என்பது என்ன? என கூற முயன்றிருப்பது மாறுபட்டதாக உள்ளது. வழமையான போதிக்கப்பட்ட மரபு களிலிருந்து குழந்தைகள் கடவுளை எவ்வாறு சித்தரிக்கின்றனர் எனவும் கொள்ளலாம் அல்லது குழந்தைகளின் வழி ஆசிரியர் கடவுளை எவ்விதம் வாசகனுக்கு முற்றிலுமொரு மாறுபட்ட பரிமாணத்தில் காட்ட விழைகிறார் எனவும் கொள்ளலாம். இவ்வாறு இக்கதை பலவிதமான சாத்தியப்பாடுகளை நமக்கு அளிக்கிறது.
ஓநாய் கதை குடும்ப அரசியலையும், வாரிசு அரசியலையும் சமகால நாட்டு நடப்பையும் நையாண்டி செய்கிறது. பின்தொடரும் நிழலோடோர் உரையாடல் அரசியல் சூழல்களை, சாமானிய மனிதனின் கையறு நிலையை வேதனையுடன், ஆதங்கத்துடன் நுட்பமாகப் பதிவு செய்வது சிறப்பு. காவா எனும் கதையும் ஆள்வோரின் தந்திரங்கள், திட்டங்களை சாமானியரால் ஊகிக்கவியலாது என்றெண்ணி செயல்படுவோரின் நம்பிக்கைகளினை உடைத்தெறிகிறது. எம்பாவாய் ஆண்டாளின் திருப்பாவையைக் கொண்டு பின்னப்பட்டது. அறுபத்தொரு குறுங்கதைகளுமே நுட்பமான நடைமொழியினைக் கொண்டுள்ளன. பல இடங்களில் மெல்லியதொரு அங்கதத்தினை உள்ளடக்கியுள்ளதுடன், வாசகனுக்கு அவை முன்வைக்கும் கருத்துகளுக்கு புதுவடிவத்தினைக் கோடிட்டுக் காட்டுகின்றன. வெறும் கதைகளாக அவற்றை வாசிக்காது, அதன் நுட்பங்களை உள்வாங்கி வாசிப்போருக்கு இவை சிறந்ததொரு சுவாரசியத்தினை அளிக்கும் என்பது உறுதி. குறுங்கதைகள் குறித்த கட்டுரை குறுவடிவத்தில் இருப்பதே ஏற்புடையது. எவ்வாறெனில் எல்லாக் கதைகளையும் விவரித்துவிடின் வாசகனுக்கு நூல் குறித்த எதிர்பார்ப்பும், அவற்றை வாசிக்கும் ஆர்வமும் குன்றிவிடுமென்பதால் கட்டுரையின் அளவுமே குறுக்கப்பட்டுள்ளது.
இக்குறுங்கதைகள் நூலினை இருவாட்சி (இலக்கிய துறைமுகம்) வெளியிட்டுள்ளது. அன்புசிவம் என்னும் அன்பாதவனின் இலக்கியதளம் விரிவானது. பன்னிரண்டு கவிதை நூல்கள், பதினோரு கதைத் தொகுப்புகள், பதினோரு கட்டுரைப் புத்தகங்கன், பதினோரு தொகுப்பு நூல்கள் என அவரது படைப்புலகம் பரந்தது. தலித் சாகித்ய அகாடமி வழங்கிய அண்ணல் அம்பேத்கர் பெல்லொஷிப் விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகள் அவருக்கு உரித்தானவை என்பதே அவரது எழுத்துலகின் வீச்சினை நமக்கு உணர்த்தும்.
l
previous post