மஹாஸ்வேதாதேவி – ஒதுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்தவர்.
தமிழில் தொடர்ந்து க்யூப மொழி இலக்கியங்களை ஆங்கிலம் வழி தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் சிறந்த மொழி பெயர்ப்பாளர்களுள் ஒருவர், தோழர் அமரந்த்தா. இரு தினங்களுக்கு முன்னால் மறைந்த கூகிவாதியாங்கோவின் ‘சிலுவையில் தொங்கும் சாத்தான்‘ என்ற அர்ஹெந்தினா நாவல், ‘சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்‘ என்ற லத்தீன் அமெரிக்கச் சிறுகதைத் தொகுதி, ‘விலைக்கு வந்த வாழ்வு‘ என்ற, கொ.குடும்பராவ் எழுதிய தெலுங்கு மொழிச் சிறுகதைகள் – என ஏராளமான மொழிபெயர்ப்புகளை அமைதியாகத் தமிழில் மொழிபெயர்த்து வருபவர் அமரந்த்தா. சேகுவேராவின் ‘பொலிவிய நாட்குறிப்பு‘, ‘கியூபா: மேற்குலகின் விடிவெள்ளி‘, ஃபிடல் காஸ்ட்ரோ: ‘நேருக்கு நேர்‘ – நேர்காணல் உள்ளிட்ட பல நூல்கள், கியூப நாட்டினர் நடத்திவரும் ஏகாதிபத்திய அமெரிக்க ஆதிக்க எதிர்ப்புப் போரின் பல அம்சங்களைத் தமிழ் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வருபவை. இவரும். லதா ராமகிருஷ்ணனும் இணைந்து உருவாக்கிய ‘தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்‘, குறுகிய காலமே இயங்கினாலும் சில நல்ல முன்னெடுப்புகளைச் செய்த ஓர் அமைப்பாகும். பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது பெற்றவர்.
மேற்கு வங்கத்தில். வங்காளி மொழி இலக்கிய முன்னோடிகளுள் முன்னணிப் படைப்பாளியான மஹாஸ்வேதா தேவியின் ஐந்து கதைகளைத் தமிழில் தந்திருக்கிறார் அமரந்த்தா. இவை ஐந்தும் குறுநாவல்களாக நெடுங்கதைகளாக உள்ளன. தௌலி, ஷானிசாரி, ஜோஸ்மினா, சித்தா, வேட்டை ஆகிய இந்த ஐந்தில் தலைப்புகளே சுட்டுவதுபோல, பழங்குடிப் பெண்களின் மீது நிலப் பிரபுத்துவப் பண்ணையார்களும் ஆதிக்கச் சாதியினரும் தொடுக்கும் படுமோசமான பாலியல், உழைப்புச் சுரண்டல் தாக்குதல்களைக் காண்கிறோம்.
இக்கதைகளை வங்க மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்திருப்பவர் சர்மிஸ்தா தத்தா குப்தா. அவர் குறிப்பிடும் இந்தக் கருத்துகள் நம் கவனத்திற்கு உரியவை: “தௌலி, ஷானிசாரி, ஷோஸ்மினா, சிந்த்தா ஆகிய நான்கு பெண்களை ஒரே தொகுப்பினுள் கொண்டு வருவதென்று முடிவெடுப்பது மிகக் கடினமாயிருந்தது. இந்தியச் சமூகத்தில் புரையோடிப்போய்க் கிடக்கிற கொடூர ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் ஆளான பெண்களைக் காட்சிப்படுத்தும் இத்தொகுப்பு சிலருக்கு மிகுந்த சோர்வூட்டுவதாகத் தோன்றக் கூடும்… ‘சிந்த்தா‘ என்ற தலைப்பிடப்பட்ட கதைகளை மொழி பெயர்க்கத் தொடங்கியபோது, முதல் இரண்டு வாக்கியங்களைக் கடந்து முன் செல்லவே எனக்குச் சில நாட்கள் பிடித்தன. அவற்றைப் படித்த ஒவ்வொரு முறையும் ஏதோவொன்று என் குடலைப் பிடுங்குவது போலிருந்தது. ஒவ்வொரு முறை படிக்கும்போதும் என் மத்திய தர வர்க்க மனோநிலை ஆட்டங்கண்டு அச்சுறுத்தியது….” ஆம்; மஹாஷ்வேதா தேவியின் அனைத்துப் படைப்புகளும், ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட வர்களின் தரப்பில் நின்று அவர்முன் வைக்கும் வாதங்களும் ஆளும் வர்க்கத்தினரை மட்டுமன்றி, நடுத்தர வர்க்கத்தினரையுமேகூடத் தொந்தரவு செய்வனவாகவே இருக்கும்.
‘சோளகர் தொட்டி‘, ‘டைகரிஸ்‘ போன்ற சிறந்த நாவல்களைப் படைத்தவரும். வழக்கறிஞரும், மனித உரிமைப் போராளியுமான ச.பாலமுருகன் ஓர் அணிந்துரையையும். தமிழ்நாடு பழங்குடிகள் சங்கத்தலைவரான தோழர் வி.பி.குணசேகரன் ஒரு நீண்ட முன்னுரையையும் எழுதியுள்ளனர். “மஹாஸ்வேதாதேவியின் படைப்புகளில் உள்ள அந்தப் பழங்குடிப் பெண்கள் பாலியல்ரீதியாகச் சுரண்டப்படுகின்றனர். கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். சித்திரவதைகளை அனுபவித்து, சொந்தக் கணவனே தங்களைப் பாலியல் தொழிலில் தள்ளும் அளவுக்குத் துயரத்தின் உச்சங்களையும் தொடுகின்றனர். மேலும் ஆதரவற்ற விதவைகள் நிலை கூடுதல் மோசம். ஆனால் அவர்கள் நம்பிக்கைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை. இந்தச் சிறப்புப் பண்பு பழங்குடி வாழ்வின் ஒரு தனித் துவமான வடிவம்” என்கிறார் ச.பாலமுருகன்.
வனங்களோடும், வன விலங்குகளோடும் இயற்கை வளங்களோடும் ஒன்றிக் கலந்து வாழ்ந்து வருபவர்களே பழங்குடி மக்கள். காடுகளைப் பாதுகாத்து நிற்பவர்களும் அவர்களே. ஆனால். அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் தொடுக்கும் அரசுகளும், காவல் துறையும், வனத்துறையும், கார்ப்பரேட் வணிக நிறுவனங்களும் அந்தப் பழங்குடி மக்களால் தாம் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு விடுவதாகக் குற்றம் சாட்டுகின்றன. பல நூறு ஆண்டுகளாகக் காடுகளில் வாழும் அந்த மக்களை வனங்களைவிட்டு விரட்டுகின்றன!
பழங்குடி மக்களுடைய வாழ்க்கைகளின் கொடுமையான சித்திரங்களை, மஹாஸ்வேதா தேவியின் பல படைப்புகளில் காண முடியும். இந்தத் தொகுப்பின் ஐந்து கதைகளிலும் அந்தச் சித்திரங்கள் நம்மை மனம் பதை பதைக்கச் செய்கின்றன. ‘வேட்டை‘ கதை இதில் ஒரு வித்தியாசமான கதை. மேரி என்ற பழங்குடிப் பெண்ணும், தோஹ்ரி சந்தையில் சிறு வியாபாரிகள் சங்கத் தலைவனான ஜாலிம் என்ற புத்திசாலி இளைஞனும் காதலர்கள். ஜாலிம் ஓர் இஸ்லாமியன்! கதை போகும் போக்கில் ஓர் எதிர்பாராத திருப்பம் நேர்கிறது. வாசிப்போரை அதிர்ச்சியில் ஆழத்தக்கூடியது அது. கதையின் நிறைவு வரிகள் இவை:
“வசந்த விழாக் கணப்பின் நெருப்பு ஆங்காங்கே தெரிகிறது. மேரிக்குப் பயம் இல்லை. நடக்கும்போது எதிர்ப்படும் மிருகங்களைக் கண்டு அவளுக்குப் பயமில்லை. நட்சத்திர ஒளியில் ரயில் தண்டவாளம் தெரிகிறது. சாதாரணமாக ரத்தத்தை உறைய வைக்கும் நாலு கால் காட்டுப்பிராணிகளைக் கண்டால் ஏற்படும் பயம் இன்று இல்லை. ஏனென்றால், எல்லா வற்றையும்விடப் பெரிய மிருகத்தை அவள் கொன்று விட்டாள்.”
-மேரி கொன்றுவிட்ட அந்த ‘மிருகம்‘ எது? மஹாஸ்வேதாதேவியின் கதைகள். நமது நடுத்தர வர்க்க மனநிலையை உலுக்கி அதிரச் செய்பவை. இந்தத் தொகுப்பின் பின்னிணைப்பாக அவர் எழுதியுள்ள இரண்டு கட்டுரைகள் தரப் பட்டுள்ளன. “ஒப்பந்த ஊழியர்களா? கொத்தடிமைகளா?” என்ற கட்டுரை, ராஞ்சி பகுதியில், ஒரு முதலாளியின்கீழ் 22 ஆண்டுகள் கொத்தடிமைகளாகப் பணி செய்த கல் உடைக்கும் தொழிலாளர்கள் பற்றிய மனம் பதற வைக்கும் செய்திகளை விவரிக்கிறது. ‘வீரபூமி பஞ்சாப்‘ என்ற கட்டுரை பஞ்சாப் விவசாய அடிமைக் கூலிகளின் சோகக் கதையை விவரிக்கிறது. அந்தக் கட்டுரை இப்படி முடிகிறது:
“நமது ரேஷன் கடைகளில் விற்கப்படும் பஞ்சாப் கோதுமை மணி ஒவ்வொன்றிலும் அடிமைக் கூலிகளின் ரத்தம் கலந்திருக்கிறது. பஞ்சாப்பின் விவசாய வளர்ச்சி என்பது அடிமை உழைப்பாளிகளின் ரத்தத்தால் விளைந்தது. அவர்கள் ஏன் அடிமைகளாக உழைக்கச் செல்கிறார்கள்? ஏனென்றால். சொந்தக் கிராமங் களின் வறுமை இவர்களை விரட்டுகிறது…”
- நமது அண்டை வீட்டார்தாம் – பீஹார், பஞ்சாப், மேற்கு வங்கம்… நாம் எந்த அளவுக்கு அவர்களைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறோம்? இத்தகைய மொழிபெயர்ப்புகளிலிருந்து, நாம் ஓரளவுக்கேனும் அறிந்துகொள்ள வழியுண்டு. அதைக் கருத்திற் கொண்ட தொடர்தான் இது. தொடர்ந்து அறிவோம்… l