எதார்த்தம் பேசும் புனைவுகள் என்றுமே மதிப்பு மிக்கவை என்பது என் கருத்து. ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ள முச்சந்துமன்றம் தோழர்களின் ‘அவள் இவள் உவள்’ சிறுகதைத்தொகுப்பு வாசித்த போது அக்கருத்து மீண்டும் உறுதியானது. எழுத்தாளர்கள் மீரா, காளி, Dr.நாகஜோதி, முனைவர் கோமதி ஆகிய நால்வர் சேர்ந்து எழுதித் தொகுத்துள்ள புத்தகம்.
முச்சந்துமன்றம் என்ற X இணையதள வாசிப்பு அரங்கம் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தொடர்ந்து வாசித்து விவாதித்து வரும் நான்கு தோழர்களின் எழுத்தாளர் பரிமாணம் இந்தப் புத்தகம்.
வெவ்வேறு பின்புலத்தில் வெவ்வேறு வயதினரான பெண்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள கதைகள். ஒவ்வொரு கதையை வாசிக்கும்போதும் நமக்குத் தெரிந்த நாம் பழகிய ஒரு பெண் நினைவில் வந்து போகிறார். தலைப்பைப் பார்த்துவிட்டு யார் அந்த ‘உவள்’ என்ற கேள்வி வராமல் இருக்காது.
தொல்காப்பியத்தில் ‘உவள்’ என்ற சொல்லுக்கு இலக்கண ரீதியான குறிப்புகள் இருந்தாலும் இலக்கியத்தில் பரிபாடல் வரிகளில் ‘உவள்’ என்ற பதம் ‘முன் நடத்திச் செல்பவள்’ அல்லது ‘இடை நின்று காப்பவள்’ என்று பொருள் பட உபயோகிக்கப்பட்டிருப்பது வெகு பொருத்தம். நான்கு எழுத்தாளர்களும் சேர்ந்து பதினாறு கதைகளை எழுதியுள்ளனர்.
எழுத்தாளர் மீராவின் கதைகள்
வருடக்கணக்காக வாழ்ந்த செல்வாக்கான வாழ்க்கை எவ்வாறு ‘மண் குதிரை’யை நம்பி ஆற்றில் போன கதை ஆனது என்பதை, முதல் கதை ஓர் எச்சரிக்கை மணியுடன் சொல்கிறது. அதிலும் உலக அறிவெல்லாம் செறிந்த மனிதர்கள் நடைமுறைச் சிக்கல்களைப் பற்றி யோசிக்காமல் முக்கிய உறவுகளைத் தவிக்க விடுவதைப் படிக்கையில் பெரிய படிப்பினை கிடைக்கிறது நமக்கு. மற்ற கதைகளிலிருந்து மாறுபட்டு ஓர் இரவின் நிகழ்வுகளைப் பரபரப்போடு சொல்லி நம்மை படபடக்க வைக்கிறது ‘நிகழ்தகவுகள்’ ஹெட்போன்கள் மாட்டிக்கொண்டு காதுக்குள் மழையின் இரைச்சல் சத்தம் கேட்பது ஓர் உளவியல் சிகிச்சை முறையாகப் பார்க்கப் படிகிறது. முதலில் அது நிகழ்வுகளிலிருந்து தப்பிக்கும் எஸ்கேபிஸம் போன்று தெரியும். பிறகு சூழலைப் புரிந்துகொள்ளவும், சூழலோடு ஒத்துப்போவதா அல்லது சூழலைத் தகவமைப்பதா என்று தெளிவாக யோசிக்க வைக்கும். இந்த மழைச் சத்தம் கேட்கும் பழக்கமுள்ள ஒரு கதாபாத்திரம் எவ்வாறு அதன் உதவியுடன் தெளிவடைகிறது என்று சொல்கிறது ‘நீயே துணை’
முனைவர் கோமதியின் கதைகள்
தாயனைக் குறைபாட்டையும் பெண்குழந்தைகள் வளர்ப்பில் அந்தஸ்து கௌரவம் பார்த்து எதிர்காலத்தைச் சிறையாக்கும் கொடூரத்தையும் சொல்கிறது ‘திறக்கப்படாத மணிச்சித்திரக் கதவுகள்’. ஒருநாள் உடைபடும் ஆனால் இறுகப் பூட்டப்பட்ட மனக் கதவுகள்? நமக்காக இல்லாவிட்டாலும் உதவி தேவைப்படும் மற்றவருக்காக இவ்வாறு பூட்டப்பட்டிருக்கும் கதவுகளை உடைக்கவேண்டிய அவசியத்தையும் உடைக்கத் தயங்கிய தருணங்களின் குற்றவுணர்வுகளையும் நேர்மையாகச் சொல்கிறது ‘அந்தோனி’ ஒரு பல்கலைக்கழகச் சூழலில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளையும் மறைமுகமாகவும் சில சமயம் வெளிப்படையாகவும் கடைப் பிடிக்கப்படும் சாதியப் பாகுபாடுகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது இந்தக் கதை.
Dr. நாகஜோதியின் கதைகள்
ஆசையாகக் கிளி வளர்ப்பவர்கள் அதனைக் கூண்டில் அடைத்து அன்பு என்ற பெயரில் மூட்டை மூட்டையாக மாம்பழம் கொடுத்து அந்தக் கிளியைச் சித்திரவதை செய்வதைப்போல் உடன் இருப்பவர்களைப் பேச விடாமல் அன்பு என்ற பெயரில் துன்புறுத்தும் பெரும்பாலான வீடுகளில் நடப்பது ‘இடைவேளைக்குப் பிறகும்’ உடைபடும் அந்தக் கூண்டுகளின் பேரோசை சொல்கிறது ‘மகிழ் இனி’ வாழ்வில் ஒரே முறை சந்தித்திருந்த மனிதர்கள் நம் குணங்களிலும் செயல்பாடுகளிலும் கொண்டுவரும் மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறது ‘சாவித்திரியும் நானும்’ பலர் வாழ்வில் இத்தகு ரயில் சிநேகங்கள் என்றுமே நினைவுச் சோலையில் இனிய தென்றலாய் உலவும் அனுபவம். மதமோ சாதியக் கட்டமைப்போ குடும்ப அமைப்பின் அடிப்படைகளோ மீறப்படும் போது சுற்றிலும் கிளம்பும் ஆரவாரங்களையும் எதிர்ப்புகளையும் உடைத்தால்தான் விடியல் தெரியும் என்பதை தைரியமாகச் சொல்கிறது ‘வான் பிறழ்வு’. பெண் என்று பிறந்தாலே ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் பெற்றோர், கணவர், சமூகம் என அவளது வளர்ச்சிக்குப் போடும் முட்டுக்கட்டைகளையும் அவளது அங்கலாய்ப்பையும் உள்ளுக்குள் அவள் அனுபவிக்கும் வேதனைகளையும் வெளிப்படையாக விளக்கியிருக்கிறது ‘மீண்டும் மீண்டும்’. புராதனப் புராணக் கதை ஒன்றிற்கு புதிய அத்தியாயம் எழுதி, அவ்வாறு ஒரு புரட்சி நடந்திருந்தால் ஆணாதிக்கத்தின் அத்தனை பக்கங்களும் திருத்தி எழுதப்பட்டிருக்கும் என்பதை பயமின்றிப் பேசுகிறது ‘அவளும் அவர்களும்’.
எழுத்தாளர் காளியின் கதைகள்:-
பள்ளிக்காலத்தில் நமக்குக் கல்வியின் அருமையைப் புரிய வைக்கும் பொருட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுகையில் பரிசு தரும் ஆசிரியரையோ உறவினரையோ நினைவுபடுத்துகிறார் ‘பெரியப்பா’. இன்றைய திரைப்பட இயக்குநர்கள் கடைப்பிடிக்கும் உத்தியான சினிமேடிக் யுனிவர்ஸ் போல ஒரு கிராமச் சூழலில் சொல்லப்பட்ட நான்கு கதைகளில் ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதை மாந்தர்களின் பார்வையில் சூழலை விளக்குகிறது ‘மக்குவின் தங்கமீன்’, ‘பொடிப்பாட்டி’, ‘மாராயி’ மற்றும் ‘துளசி.’
சிறுகதைத் தொகுப்பில் இத்தகைய உத்தி வாசகர்களுக்கு அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தும். அதிலும் ஒருவர் பார்வையில் மற்றவரை மதிப்பிட்டுக் கூறுவதும் ஒவ்வொரு கதா பாத்திரமும் அவ்வளவு நேர்த்தியோடு சொல்லப் பட்டிருப்பதும் சிறப்பு. கோயிலுக்குள் நெரிசலில் கடவுளைத் தேடுபவர்களுக்குத் தெரியாது தனித்த தியானத்தில் உள்ளொளியில் தென்படும் கடவுள் உணர்வு. அதுபோல்தான் வாழ்க்கையும்.
‘செல்ஃப் லவ்’ எனப்படும் சுயக்காதல் அல்லது தன்விருப்பம் வளர்ப்பதின் ஒரு பகுதியான ‘மீ டைம்’ எல்லாருக்கும் கைவரும் கலையில்லை. தேர்ந்த சுய காதல் அனுபவம் பெற வைக்கிறார் ‘துளசி’! பூஜ்யத்திலிருந்து சாம்ராஜ்யத்தை எழுப்பும் உழைப்பையும் தன்மானத்தையும் பேசுகிறார்கள் ஈசுவரிப் பாட்டியும் மாராயியும். நான் பழகிய பல பெண்களில் மாராயியின் நெஞ்சுரம் பார்த்து வியந்திருக்கிறேன். ஆண்களே பிரதானம் எனப் பழக்கப்பட்ட சமூகத்தில் துளிகூட பயமில்லாமல் தனக்குத்தானே அரணாகவும் ஆதாரமாகவும் கொண்டு தன்னைத்தானே செதுக்கி கம்பீரமாக வாழும் பெண். அவ்வளவு நேர்த்தியான பாத்திரப்படைப்பு. ஈசுவரி பிற்காலத்தில் ‘பொடிப்பாட்டி’ ஆன பின் அவர் வைத்திருக்கும் சுருக்குப்பை சொல்லும் வாழ்வியல். அப்பத்தாக்களின் சுருக்குப்பை, அம்மாக்களின் கைப்பை(ஹேண்ட் பேக்), நாம் இன்று உபயோகிக்கும் யூபிஐ. இவை அனைத்தும் பெண்ணின் பொருளாதாரத் தன்னிறைவு கூறும் சாட்சிகள். தன் பொருளாதாரத்தை, தானே மேலாண்மை செய்ய பெண்கள் பழகியதின் முதல் அடி அந்த சுருக்குப்பை. சுருக்குப்பை என்பது சத்தமில்லாமல் நிகழ்ந்த புரட்சி.
சாதி என்பது சமூகத்தைப் பீடித்த புற்றுநோய். அதன் வீரியத்தையும் சாதிய அடுக்குகளில் தன்னை வலியவனாகக் கருதிக்கொள்பவன் அவனைவிட மேலெனச் சொல்லிக்கொள்ளும் இன்னொருவனால் ஒடுக்கப்படுவதும், கடைநிலையில் குரலற்றுப் போய் இருப்பவன், பெயரற்றுப்போய் இருப்பவன், தன் சந்ததி இந்தச் சகதியிலிருந்து விடுபட்ட தங்கமீனாய்ப் பிறக்க வேண்டும் என்று கனவு காண்பதுமே ‘மக்குவின் தங்கமீன்’ கதை. சமீபத்தில் வெளிவந்த விடுதலை திரைப்படத்தில் கருப்பன் என்கிற கதாபாத்திரம் சொல்லும் வசனம் “நீ கூப்புடுறது என் பெயரில்ல.. என்ன நீ எப்படிக் கூப்பிடணும்னு நான் தான் சொல்லணும்” என்பது. பெயர் அரசியல் மிகப் பெரும் அரசியல். அந்தப் பெயர் அரசியலைப் பேசி இந்தச் சனாதன சமூகத்தின் வக்கிரங்களைத் தோலுரித்துக் காட்டியுள்ளது இந்தக் கதை. அந்த மீனுக்கு சமுத்திரம் கிடைக்கும் என நம்புவோம்.
இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை எழுதியுள்ள எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித் அவர்கள் குறிப்பிட்டுள்ள மகாகவியின் வரிகளும் புத்தரின் போதனைக் குறிப்புகளும் புத்தகத்தை வாசிக்கும் முன்னரே அதன் தன்மையை விளக்கி நமக்கு வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகிறது. மேலும் முச்சந்துமன்றம் தோழர்களுக்கு அவர்களது சக சமூக வலைத்தள நண்பர்கள் எழுதியுள்ள வாழ்த்துச் செய்திகள் மிகுந்து நெகிழ்ச்சியளிக்கின்றன.
இந்தச் சிறுகதைத் தொகுப்பு கல்வியின் முக்கியத்துவம், பெண் விடுதலை, சாதி மற்றும் சனாதனத்தால் நிகழும் கொடுமைகள் எனப் பல முக்கிய விஷயங்களை உடைத்துப் பேசியிருக்கிறது. பெண்கள் சேர்ந்தால் உபயோகமில்லாமல் அரட்டை அடிப்பார்கள், சண்டையிட்டு விரைவில் பிரிந்து போவார்கள் என்ற பொதுச் சமூகத்தின் பொய்க் கற்பிதங்களைத் தகர்த்து, நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசிப்பரங்கங்களால் மக்களுக்குச் சேர்த்து, இப்போது தாங்களே முதல் புத்தகத்தை எழுதியிருக்கும் முச்சந்துமன்றம் உவள்களுக்கு எனது வாழ்த்துகள். தொடர்ந்து பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்து, பெண்ணியம் பறைசாற்றும் படைப்புகளைப் பிரசுரிக்க பிரம்மாண்ட உழைப்பைக் கொட்டி இத்தகு முத்தான நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டுவரும் ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தாருக்குப் பேரன்பும் நன்றியும்.
கட்டை விரல்களைப் பறிகொடுத்த ஏகலைவன்கள் பற்றிக் கவலைப்பட இந்த முற்போக்கு சமூகம் எப்போதும் இருக்கிறது. ஆனால் பேனாக்களைத் தவறவிட்டு கரண்டிப் பிடித்த பெண்களின் கரங்களைப் பற்றித்தான் கேட்பாரில்லை. வாசிக்கும் பெண் ஆபத்தானவள் என்பது சனாதனத்தின் கற்பிதம். அதை உடைக்கும் விதமாகச் சத்தமில்லாமல் புரட்சி செய்துவரும் முச்சந்துமன்றம் தோழர்கள் இன்னும் உறுதியாக வளர, செயல்பட, இன்னும் பல புத்தகங்கள் எழுத என் நல்வாழ்த்துகள். l
previous post