ஒரு கதைத் தொகுப்பை வாசித்து அந்தக் கதையின் முதலும் முடிவும் நம்மை பாதித்த தாக்கத்தை எதிர்மறையாகவோ நேர்மறையாகவோ விமர்சனம் எழுதுகிறோம். அப்படியான விமர்சனங்களை வாசித்து அந்த நூலை ஆதி அந்தத்தை புரிந்து கொள்ளுதலுக்கு தேவையானது அது சரியான விமர்சனமாக அமைந்திருப்பதே…
அப்படியான விமர்சனங்களுக்கு விமர்சனம் எழுதுதல் எளிதே.. நூறு பக்கங்களை வாசித்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றை ஐந்து பக்க விமர்சனத்தில் புரிந்துகொள்ள முடியுமெனில் அது அந்த விமர்சனதாரரின் ஆழமான பார்வையாலே சாத்தியமாகும்.
‘வரிகளுக்கு இடையில்’ என்ற இந்த நூலின் வரிகள் அனைத்தும் விமர்சனங்களால் நிறைந்ததாகும். பொதுவாக வாசிப்பு ஆர்வம் உள்ளவர்கள் சில புத்தகங்களின் விமர்சனத்தை வாசித்து ஈர்க்கப்படும்போது தானாகவே அந்த நூலைத் தேடிப் பிடித்து வாசிக்கின்றனர். ஒரு நூலின் வெற்றி என்பதே அதற்கான சிறந்த விமர்சனமே.. அந்த வகையில் இந்த நூலில் இடம்பெற்றுள்ள முப்பது நூல்களின் விமர்சனங்களும் அந்த முப்பது நூல்களையும் ஒரு படி முன்னோக்கி நகர்த்தியிருக்கிறது.
நான் சிறுவயதில் சந்தைக்கு அம்மாவோடு சென்றிருக்கிறேன். வாரச்சந்தை புதன்கிழமை வரும். அந்தப் புதன்கிழமைக்காவே மற்ற ஆறு நாட்களும் காத்துக்கிடந்த காலமுண்டு. பேருந்து வசதியற்ற அந்த நாளில் ஆற்றுப்பாதையில் நடந்தே வருவோம். காலை முதல் இரவு வரை திருவிழா போல இருக்கும். இப்போதிருக்கும் சூப்பர் மார்க்கெட்டைவிட ஏகப்பட்ட பொருட்களால் நிறைந்திருக்கும். அதை வேடிக்கை பார்ப்பதற்கென அன்று சந்தைக்கு வரமுடியாத நண்பர்களின் கண்களைக்கூட கடன் வாங்கிச் செல்ல வேண்டும். அத்துணை ஆராவாரமும் கூச்சலும் விசாரிப்பும் இன்றி ஒரு வண்டியைத் தள்ளிக்கொண்டு அந்தப் பல்பொருள் அங்காடியின் குளிர் காற்றில் வலம் வருதலில் ஒன்றுமில்லைதான். அதை விவரித்துச் சொல்ல ஒரு தனிக்கதை தான் எழுத வேண்டும். அந்தக் கதையின் ஒட்டுமொத்த பிரதியாக ‘சந்தை’ என்ற நாவலின் விமர்சனம் அமைந்திருக்கிறது. இந்த நாவல் இப்படித்தான் நகரும். சந்தையின் அத்துணை கதாபாத்திரத்திலும் நம் நினைவுகள் எங்காவது உயிர்ப்பித்து பூக்குமென்று யூகத்தை உணர முடிகிறது. சந்தை என்பதன் ஆரம்பமும் அதன் வீழ்ச்சியும் கதையின் மையமாக இருக்கிறது என்பதை வரிகளுக்கு இடையில் உணர முடிகிறது.
ஆசிரியர் தேர்ந்தெடுத்திருக்கும் ஒவ்வொரு நூல்களும் சிறந்த நூலென அவரது விமர்சனங்கள் வெளிக்காட்டுகின்றது. குயில் தோப்பிலிருந்து ஒரு குரலென இயற்கையின் அதிசயங்களை கவிதையாக்கி தந்துள்ளது பிரேமா அவர்களின் விமர்சனம். ‘பிரசவிக்கும் இயற்கை வலி மானுடருக்கு மட்டுமா?’ என்று நூலின் கவிதை வரி காட்டும் அன்பு நிறைந்த வலிகளை வாசகர்களுக்கு கடத்துகிறார். குமிழிப்பாடுகள் வாழ்வின் அத்துணை நிலைகளையும் கடந்து செல்கிறது.
சத்தம் போடாமல் கிளை அமரும் கிளி தனிமை சுவைக்கிறது என்கிறார் நடராஜன் பெருமாள். தனிமை என்பது பெரும் தவம். தன்னைத்தானே உணர்வதற்கும், தன்னிலிருந்து தன்னை வேறுபடுத்திக் தெரிந்துகொள்ளவும், தனிமை அவசியமாகிறது. நாம் எதை இழக்கிறோம் எதை தேடுகிறோமென்பதன் தீர்வை தருவதே தனிமைதான். ஐன்ஸ்டீன் சொன்ன ஆற்றல் நிறை சமன்பாடு E=MC2. இது ஆற்றல், நிறை, ஒளியின் திசைவேகத்தை குறிக்கும். ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஆனால் அது இன்னொரு வகை ஆற்றலாக மாறும். நிலக்கரி ஒருவகையான ஆற்றல். அதை எரிக்கும் போது பெட்ரோலாக மாறுகிறது. அந்த அறிவியலைப்போலத்தான் வாசிப்பு. வாசிப்பினாலேதான் அறிவியல் தன்னை விரிவுபடுத்திக்கொள்கிறது. மீண்டும் மீண்டும் முயற்சித்தலும் தோற்றலுமே அறிவியல் உண்மைகளாக உள்ளன.
ஒரு நூலை வாசிப்பதாலே ஒரு விமர்சனம் உருவாகிறது. அப்படித்தான் எதனால் e=mc2? என்ற அறிவியல்சார்ந்த கட்டுரை நூலின் தெளிவான பார்வையை நாம் அறிய முடிகிறது. ஆயிஷா நடராசன் அவர்கள் இந்த நூலில் அறிவியல், கணிதம், அரசியல் என அனைத்தையும் ஆராய்ந்து எழுதி இருப்பது விமர்சனம் வழி தெளிவற தெரிகிறது. அறிவியல் சமன்பாடுகளும் , இயந்திர உலகின் வளர்ச்சியும் எழுத்தின் ஊடே பெண்கள் இதுபோன்ற அறிவியல் துறையில் வெளியே தெரிந்தாலும் மறைக்கப்படுவதும், அவர்களுக்கான அங்கீகாரத்தை புறக்கணிப்பதையும் சொல்லிச் செல்கிறார்.
இந்தப் பிரபஞ்சத்தை எவ்வளவு ஆராய்ந்தாலும் இன்னும் இன்னும் புதிய அதிசயங்களையும் அறிவியல் சார்ந்த உண்மைகளையும் இந்த உலகம் தந்து கொண்டே இருக்கிறது. மலை என்பதே சுரண்டுவதற்காக என்ற கோட்பாட்டை இப்போது மனிதன் உருவாக்கி விட்டான். அதே போல மலைவாழ் மக்களின் வாழ்வையும் உழைப்பையும் அவன் சுரண்டிக்கொண்டுதான் இருக்கிறான்.
கூப்புக்காடு அப்படியான மலைவாழ்வியலைத்தான் சொல்லியிருக்கிறது. ஒரு வரலாற்றின் ஆவணத்தை இந்நூல் தந்திருப்பதாகவும், கதை நடக்கின்ற காலத்தை ஆசிரியர் திறமையாக கையாண்டு கொண்டுவந்திருப்பதையும் பிரேமா இரவிச்சந்திரன் அவர்களின் எழுத்துகள் வழி காணலாம். முதலாளிகள் மட்டுமல்லாமல், தங்கள் பொருட்களை விற்கும் வியாபாரிகளும் அம்மக்களின் அறியாமையால் அவர்களின் உழைப்பை தின்று விழுங்குகிறார்கள். அம்மக்கள் எத்துணை ஏழ்மையான வாழ்வை மேற்கொண்ட போதும் இன்பமான திருவிழாக்களையும், வழிபாட்டையும், பொழுதுபோக்கையும் தங்கள் அடையாளங்கள் அழியாமல் கடைபிடித்து வாழ்கின்றனர். இன்றளவும் எவ்வளவு நவீன வளர்ச்சியை உலகம் அடைந்தபோதும் மலைவாழ் மக்கள் தங்கள் சடங்கு சம்பிரதாயங்கள், வழிபாடு அனைத்திலும் முனைப்போடு இருப்பது உண்மை.
என் தாத்தாவும் பாட்டியும் தேயிலை பறிக்கும் தொழிலை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு விடுமுறைக்கு நான் சென்றபோது அட்டை உறிஞ்சிய என் காலின் சிறு புண்ணுக்கு என்னை மீண்டும் அம்மாவிடம் அனுப்பினார்கள். அவர்கள் உடல் திசுக்கள் எங்கும் அட்டை ஊறிய வடுக்களை அவர்கள் பெரிதாக கருதியதே இல்லை. அவர்களின் வாழ்வென்பதே வலிகளோடு விடியலை எதிர்கொள்வதுதான் என்பதை ஆசிரியர் தன் சொற்களால் காட்டியுள்ளார்.
பாரதி கிருஷ்ணகுமாரின் ‘அப்பத்தா’ சிறுகதை தொகுப்பு பத்து தலைப்புகளில் அமைந்த அன்பின் ஊற்றான குடும்ப உறவுகளின் பிம்பத்தை காட்டுவதாக ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு தலைப்பிலான கதையும் என்றோ இழந்த வரலாற்று நினைவாக பதிவாகியுள்ளது. நமது முன்னோர்கள் வானத்தைப் பார்த்து நேரத்தைக் கணித்தார்கள். மழைப்பொழிவின் காலத்தை சரியாக சொன்னார்கள். அன்றைய மக்களின் வாழ்வு இயற்கையோடு இணைந்திருந்தது. அதுபோல நிலத்தில் நீரோட்டம் பார்ப்பவர்களும் உண்டு. அவர்களைப் பற்றிய கதையை ‘ஊற்று’ சிறுகதை சொல்லியிருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
கிணறு என்ற நீர் அமைப்பின் அழிவும், ஒரு பெண்ணின் உள உணர்வும், நடுத்தர மக்களின் தவிப்பும், ஒரு பெண்ணின் மனத் திட்பமும், இறப்பின் இறுதி உணர்வுகளையும், மௌனத்தின் எதிரொலியையும் கதையின் வெவ்வேறு கோணங்களில் இருந்து நமக்கு விளக்கியுள்ளார். காத்திருப்பு என்பது காலங்களால் நிகழ்வது. அந்தக் காத்திருப்பு யாருக்கானது, எதற்கானது என்ற அடிப்படையிலே அதன் அடர்த்தி அமைகின்றது.
வித்யா மனோகரின் காத்திருப்பு கவிதைத் தொகுப்பானது நீண்ட காலத்தின் நிழலாக இருக்கலாம். இந்த நூலின் சில கவிதைகளை ஆசிரியர் குறிப்பிட்டு காட்டியிருப்பதிலிருந்து அது தெளிவுறுகிறது.
குருவி தன்/ பாதச்சுவடுகளில்/ இசைக்குறிப்புகளை/இறைத்துவிட்டுப் பறக்கிறது – என்கிறது கவிதை வரிகள். இயற்கை எப்போதும் இசையால் நிரம்பியது தான். சேவல் கூவும் இசைதான் விடியலை திறக்கிறது. பறவைகளின் கீச்சொலி காலைப் பொழுதின் வண்ணங்களை வரைகிறது. குயிலின் குரலுக்கு திசை தேடி ஓடுபவர்கள் உண்டு. அருவிகளின் பேரிரைச்சலும், ஆற்றின் சிறு சலசலப்பும், இசையின் பல்வேறு வடிவங்களாய் நம்மில் நிறைகிறது. அப்படி இயற்கை அளித்த இசைக்குறிப்புகளால்தான் மனிதன் இசையை உருவாக்குகிறான்.
இசையோடு வாழவும் செய்கிறான். பெண்கள் எப்போதும் மறைக்கப்படுகின்றவர்கள். அவர்களின் தியாகமும், உழைப்பும் எப்போதும் அனுபவிக்கப்படுகின்றதே தவிர அங்கீகரிக்கப்பட்டதில்லை. அதுபோலத்தான் விடுதலைக் களத்தில் வீர மகளிர் என்ற தொகுப்பை நான் பார்க்கிறேன். ஆண்கள் மட்டுமே உயிர் நீத்தும், போராடியும் சுதந்திரம் என்ற ஒன்றை பெற்றிருக்க முடியாது. பெண்களின் துணையும் கட்டாயம் இருந்திருக்கும். அப்படி வரலாற்றில் மறந்து போன பெண்களின் சுந்திர வேட்கையையும், துணிவையும் இந்நூல் நிலைநிறுத்துகிறது. குடும்பம் கட்டுப்பாடு அனைத்திற்கும் உட்பட்டு சமூகத்தில் பண்பை இழக்காமல் போராடிய பெண்களை இந்நூலில் அறிய முடிகிறது. விடுதலைக்குப் போராடிய பெண்களின் தியாகமும், ஈடுபாடும் பல்வேறு நிலைகளில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளையும் ஆசிரியரின் எழுத்து வழி அறிய முடிகிறது.
போரிலே ஆயிரம் யானைகளை வெற்றிக் கொண்ட வீரனின் மீது பாடுவதே பரணி இலக்கியமாகும். அதை அடிப்படையாகக் கொண்டு ஈரோடு தமிழன்பனின் பரணி பாடலாம் நூல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறு வயதில் இருந்தே வளரும் குழந்தையினை வீரத்தின் காட்சிகளால் பாராட்டி சீராட்டி வளர்க்கும் நிலையில் பரணி எழுதப்பட்டுள்ளது சினப் புலி வளர்க்கும் ஒற்றைச்/ சிறுபுலி என வளர்ந்தான் என்ற வரிகள் மூலம் ஒரு குழந்தையின் வளர்ப்பு காட்டப்படுகிறது. அத்தனை வீரமாக ஒரு புலிக்குட்டியைப் போல மகன் வளர்க்கப்படும் அழகியலை கவிதையாக தந்துள்ளார் என்பதும் , குழந்தை வளர்ப்பின் தன்மையாலே அவர்களது எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் பிரேமா இரவிச்சந்திரன் அவர்களின் வரிகளால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு நூலின் மிகப்பெரும் வெற்றி வாசகர்களால் கொண்டாடப்படுவது. அந்த வகையில் இந்த நூலில் இடம்பெற்றுள்ள அத்துனை தொகுப்பும் வெற்றியை தான் கண்டிருக்கிறது. விமர்சனங்கள் எப்போதும் ஒருவரை உயர்த்தவே செய்கின்றன. நேர்மறையான விமர்சனங்களும் எதிர்மறையான விமர்சனங்களும் ஒருவரை சமுதாயத்திற்கு அடையாளப்படுத்துகிறது. அந்த வகையில் இந்நூல் சமூகத்தின் அடையாளச் சிறகாகவே இருக்கிறது. ஒருவரைப் பற்றி மேலோட்டமாக தெரிந்த பின்னே அவர்களோடு பழகி முழுவதும் புரிந்து கொண்டு நட்பைப் பேணுவது போல, ஒரு நூலின் மேலோட்டமான கருத்துக்கள் அதனை வாசிக்க தூண்டுகோலாக அமையும்.
வரிகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்நூல் வாசிப்பவர்களின் மனதிற்கு பெரும் சிறகொன்றை தருவதற்காக காத்திருக்கிறது. வரிகளுக்கு இடையில் நீங்களும் வாழ்ந்து பாருங்கள். l
previous post
