சமூக உற்பத்திகளுள்; சமூக விளைபொருள்களுள் மிகுந்த அவதானிப்புக்கு உரியது இலக்கியம். சமூகச் செல்நெறிகளை, சமூக அசைவியக்கங்களைப் புரிந்துகொள்ள இலக்கியம் பெரிதும் துணை செய்யக்கூடியது. இதனால்தான் தமிழ்ச் சமூகத்தில் இலக்கிய உற்பத்தி என்பது இடையறவுபடாமல் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே வந்துள்ளது. சங்கஇலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நவீனஇலக்கியங்கள் எனக் காலந்தோறும் இலக்கிய உருவாக்கம் அந்தந்தக் காலச்சூழலை, சமூக இயங்கியலை அனுசரித்து நிகழ்ந்து வருகின்றது. இவ்வாறு காலச்சூழலு்கேற்ப வடிவம், உள்ளடக்கம் சார்ந்து இலக்கிய ஆக்கங்கள் வேறுபடினும் இலக்கியத்தின் அடிப்படை குணாம்சமாக அமைந்திருப்பது ‘சமூகம் குறித்த நோக்கு’ மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. இதனினும் சமூகப்பிரக்ஞை, மானுடநேசிப்பு எனும் இயல்புகள் வாய்க்கப் பெற்றோர் படைப்பாளியாகப் பரிணமிக்கும்போது அந்தப் படைப்புச் சமூகம் மேன்மையை நோக்கிப் பயணிக்கத் தடம் அமைத்துத் தந்துவிடுகின்றது.
குறிப்பாக, நவீன இலக்கிய வடிவங்களில் ஒன்றான புதினம் இந்தப் பணியைத் தொய்வின்றிச் செய்துவருவதைக் கவனிக்க வேண்டியுள்ளது.
இலக்கியம் எப்போது சமூகக் கவனம் பெறுகிறது? எப்போது சாகாவரம் பெற்றதாகின்றது? எனும் வினாக்களை முன்வைத்தால், ‘‘எளிய மனிதர்களின் குரலை வெளிப்படுத்தும்போது, எளிய மனிதர்களின் குரலாய் வெளிப்படும்போது’’ இலக்கியம் நிலைபேற்றை அடைகின்றது என விடை கூறிவிட முடியும். சமூகம் என்பது அதன் உறுப்பினர்கள் அனைவருக்குமானதுதான். ஆனால், நடைமுறை வாழ்வில் அது சாத்தியமற்றதாகி விடுகின்றது. சமூகத்தை வட்டமாகப் பார்க்கும்போது விளிம்பும், செங்குத்தாகப் பார்க்கும்போது அடித்தட்டும் சமூக நீரோட்டத்தில் எளிதில் கலந்துவிட முடிவதில்லை. இவர்களுள்ளும் இருக்க இடமின்றி, உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றிக் கவனிப்பாரற்று வானத்தையே கூரையாக்கிக்கொண்டு வாழும் ஏதிலிகளின் வாழ்வு அவலமானது; பொதுச்சமூகத்தின் பார்வைக்கு அழுக்கு நிறைந்தது. இந்த அவல வாழ்வின் மீது படைப்பாளிதான் முதலில் கவனம் செலுத்துகிறார். இத்தகைய கவனத்தின் காரணமாக எழுந்ததே நிழலியின் ‘மழை ஓய்ந்த பொழுது’ எனும் குறும் புதினம்.
அப்துல்அஹத் குறுநாவல் போட்டி 2024இல் பரிசுபெற்ற இக் குறும் புதினம் ‘குரலற்றவர்களின் குரலாய்… வாழ வழியற்றவர்களின் வலியாய்ப் பரவி இத்தகையோர் மீது கரிசனம் காட்டவேண்டிய தேவையைப் பிரச்சாரமின்றி, பகட்டின்றி வெகு இயல்பாக எடுத்துரைக்கிறது. ராசாகிழவி, பரட்டச்சி, சாக்குப்பொறுக்கி எனும் சாலையோர மனிதர்களின் அவலம் நிறைந்த வாழ்க்கைதான் இந்தக் குறும் புதினத்தின் கரு. இவர்களுடன் அப்துல்அஹத் எனும் மானுடம் பேணும் மனிதரும் அவரின் தாயும் இந்தக் கதையில் உயிர்ப்புடன் பயணிக்கின்றனர். சாதியால் காதல் கணவனை இழந்து, காதலனின் சகோதரர்களால் வன்புணர்வுக்காளாகி வாழ்க்கையைத் தொலைத்துச் சாலையோர வாழ்க்கைக்குக் தூக்கி வீசப்பட்ட ராசாகிழவி, இவளைப்போன்றே பூர்வீகமற்றுச் சாலையோரத்தில் சங்கமிக்கும் பரட்டச்சி, இவர்களைப்போன்றே யாருமற்ற சாக்குப்பொறுக்கி ஆகியோரின் அன்றாட வாழ்வை உண்மைக்கு நெருக்கமாக இந்தக் குறும் புதினம் எடுத்துரைக்கின்றது.
மனித வாழ்க்கையின் தொடக்கமும் துய்ப்பும் காமத்தில்தான் உறைந்து கிடக்கின்றன. ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையில் காமம்தான் பிரதான இடம் வகிக்கிறது என்பது விளங்குகின்றது. காமப்பசி என்று வந்துவிட்டால் மனிதர்களின் நடவடிக்கை எப்படி இருக்கும் என்பதைப் பரட்டச்சியைப் புணர்ந்து கர்ப்பமாக்குவதன் வழியாகவும், பாலூட்டும் பெண்ணெனவும் பாராமல் பரட்டச்சியைப் பள்ளி மாணவர்கள் பங்கிட்டுக்கொள்வதன் வழியாகவும் இப்புதினம் விவரிக்கின்றது. சாக்குப்பொறுக்கி ஆண்தான் என்றாலும் அவனும் வல்லுறவுக்கு ஆளாகிறான். ராசாகிழவியின் வாழ்வு காதலால், காமத்தால் சிதைக்கப்படுகின்றது. பரட்டச்சி, சாக்குப்பொறுக்கி இருவரும் காமத்தால் சிதைக்கப்படுகின்றனர். இப்படி ஏதிலிகளாக இருப்பதால் சிதைவுக்குள்ளாகும் மூவரும் இருக்க இடமின்றி மழைநாளில் துயருறுவதையும் சீந்துவாரின்றிச் சாவதையும் எளிதில் கடந்துவிட முடியாது. என்றாலும் பொதுச்சமூகம் மூக்கைப்பொத்திக் கொண்டு கடந்து போவதைப் படைப்பாளி சமரசமின்றிப் பதிவு செய்கின்றார். இந்த அவலத்தினூடே மானுடப் பற்றுக்கொண்டு உழைக்கும் அப்துல்அஹத் மனிதம் முழுவதும் சாகவில்லை என்பதற்குச் சாட்சியாகின்றார்.
மழைநீரில் மூழ்கிப் பிணமாகி நாறிக் கிடக்கும் ராசாகிழவி, கைக்குழந்தையுடன் மழையில் மூழ்கி மரணிக்கும் பரட்டச்சி, என்னவானான் என்றே அறிய முடியாமல் தொலைந்துபோன சாக்குப்பொறுக்கி ஆகியோர் இந்தச் சமூக உறுப்பினர்கள்தாம். என்றாலும், இவர்களின் இந்தக் கதிக்குக் காரணம் என்ன? எந்தப் பின்புலமும் அற்ற, எளிய மனிதர்கள் என்பதைத் தவிர வேறு காரணம் இருக்கமுடியாது என்பதைப் படைப்பாளி இப்புதினத்தின் வழி வாசகர்க்கு உணர்த்தி விடுகிறார். இந்தியாவைப் பொறுத்தவரை இந்தச் சாலையோர மனிதர்களின்– ஏதிலிகளின், எண்ணிக்கை கணிசமானது. இவர்களின் குரல் நம்மில் யாருக்கும் எட்டாது. நம்மைப் போன்றோரின் குரல்களும் இவர்களுக்காக ஒலிக்காது என்பதுதான் உண்மை. ஒரு மழைநாளில் நடக்கும் நிகழ்வுகளை இழை இழையாகப் பின்னி, புறக்கணிக்கப்பட்ட எளிய சாலையோர மனிதர்களுக்குக் கூரையமைத்துள்ளார் என்று கூறுவதுதான் சரியாக இருக்கமுடியும்.
மழை ஓய்ந்த பின்னும் ராசாகிழவி, பரட்டச்சி, அவளின் குழந்தை, சாக்குப்பொறுக்கி ஆகியோர் தங்கள் மரணத்தின் வழி இந்தச் சமூகத்தை நோக்கி வடிக்கும் கண்ணீர் பெருமழையாக நனைத்து நம்முடைய அழுக்கையெல்லாம் அகற்ற முயல்வதை உணரமுடிகின்றது.
குறும் புதினம் எனும் அளவில் படைப்பாளி படைப்புக்கான நியாயத்தை மீறாது சிறப்பாக இந்தப் புதினத்தைப் படைத்துள்ளார். சிக்கலற்ற; தெளிவான கதை சொல்லல், உறுத்தாத மொழிநடை, கதையோடு இயைந்த உவமைகள், அளவான பாத்திரங்கள் என வெகுசிறப்பாக இந்தக் குறும் புதினத்தைக் கட்டமைத்துள்ள நிழலி தேர்ந்த படைப்பாளியாகத் தெரிகின்றார். அவரைப் பாராட்டுவோம். வாழ்த்துவோம். l
