கவிதைத் தொகுப்புகள், குறுங்கதைகள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைத் தொகுப்புகள் என தமிழில் நவீன இலக்கியம் சார்ந்த படைப்புகளை அண்மைக் காலங்களில் தொடர்ந்து வழங்கிவரும் முபீன் சாதிகா தன்னுடைய படைப்புகளில் பின் நவீனத்துவம் மற்றும் பெண்மைய சிந்தனை சார்ந்த கருத்தாக்கங்களையும், உரையாடல்களையும் தொடர்ந்து முன்னெடுத்து வருபவர். முக்கியமாக அவர் படைப்புகளில் வெளிப்படும் கற்பனையும், வினோதமும், அதியதார்த்தமும் மிகுந்த புனைவுத்தன்மையுடன் ஈடுபாடுகளை உருவாக்குபவை. ஓர் இன வரைவியல் தன்மையில் புனையப்பட்ட இந்த ‘மாதேஸ்வரி’ நாவல் கடுமையான வாழ்க்கைச் சூழல்களில் மாதேஸ்வரி என்ற பழங்குடி இனப்பெண் எதிர்கொண்ட மனச் சிக்கல்கள் மற்றும் உளவியல் பாதிப்புகள் ஊடாக அவள் ஒரு தொன்மைப் படிமமாக உருமாற்றம் பெறும் வரலாற்றை சித்தரிக்கிறது.
தங்கள் இனத்தின் நன்மைக்காக மலைப்பெண் மாதேஸ்வரி மேற்கொண்ட ஆண்சிசுக்கொலைகளையும் தொடரும் தலைமுறைகளில் அதன் உளவியல் பாதிப்புகளையும் நாவல் பரிசீலிக்கிறது. பெண் சிசுக்கொலைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய சமூகத்தில் சிசுக்கொலைகள் குறித்த குற்ற உணர்வுகளை தூண்டும்விதமாக இந்த நாவல் புனைவும், பெண்ணிய நோக்கும் கலந்து ஓர் உணர்வுபூர்வமான ஈடுபாட்டை சாத்தியப்படுத்துகிறது. பழங்குடி இனப்பெண் மாதேஸ்வரி மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்று அங்கு பீட்டர் என்ற மருத்துவ மாணவரை காதலித்து மணந்து தாய்மை அடைவதாக நாவல் துவங்குகிறது. இங்கு வந்து பிறந்த ஆண்குழந்தையை குல வழக்கப்படி மாதேஸ்வரி கோவிலில் பாட்டி பலியிட்டதைப் பார்த்து மாதேஸ்வரி அதிர்ச்சி அடைந்து பாட்டியைக் கொன்றுவிடுவதால் சிறையில் அடைக்கப்படுகிறாள்.சில வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கா திரும்பும் மாதேஸ்வரி தன் பழங்குடி வாழ்க்கை நினைவுகளில் பயணிக்கிறாள். மாதேஸ்வரி என்ற அந்தப் பழங்குடி இனப்பெண் மாயன் என்ற பழங்குடி ஆணைக் காதலித்து மணந்து கொள்கிறாள். மலைகளிலும், அருவிகளிலும் களித்துக் கொண்டாடி சுழன்றுகொண்டிருந்த வாழ்க்கைச் சக்கரம் மாயனை ஆபத்துகளிலிருந்து மீட்க அப்போது பிறந்த தங்கள் ஆண்குழந்தையை பலியிடும் சடங்கிலிருந்து தொடங்கி அது அப்பழங்குடி கிராமத்தின் நம்பிக்கையாக வேர்விட்டு தலைமுறைகளாக தொடரும் நிலை உருவாகிறது. தற்போது அமெரிக்காவில் வாழும் மாதேஸ்வரியின் மகள் விடுமுறைக்காக அந்தப் பழங்குடி கிராமத்துக்கு வரும்போது அவளும் காதல் வயப்பட்டு ஆண்சிசுக்கொலை என்ற மாயச்சுழலில் கிக்குகிறாள். அந்த பலியிடலின் வலி தலைமுறைகளின் மனசாட்சிகளை உலுக்கி பாரம்பரியம், பகுத்தறிவு, மனித சுதந்திரம் ஆகியவற்றின் நுண் இழைகளுக்குள் அவர்கள் மீண்டெழும் சூழல் நாவலில் வடிவாக்கம் பெறுகிறது. தங்கள் குலத்தின் நன்மைக்காக என்று தலைமுறைகளாக அவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பலியிடல்கள் வளரும் தலைமுறைகளிடையே மிகுந்த மனவலியையும், வேதனையையும் உருவாக்குகின்றன.
இத்தகைய தொல்குடிப்புராணங்கள் எண்ணற்று மிகுந்துள்ள இந்திய கலாச்சாரச் சூழலில் சிசுக்கொலைகள் சமூக மனநிலைகளில் உருவாக்கும் பல்வேறு மனச்சலனங்களை நினைவுகூர்வதின் மூலம் சிசுக்கொலைகள் குறித்த சமூகத்தின் நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்துவதாக நாவல் வடிவம் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த நாவலில் ஆண்சிசுக்கொலை என்ற படிமத்தை உருவாக்கி அதிர்ச்சி அளிப்பதின் மூலம் ஆண்மைய இந்திய சமூகத்துக்கு சிசுக்கொலைகள் குறித்த பரிசீலனையை நாவல் முன்வைக்கிறது. மிகவும் சரளமாகவும், உயிரோட்டமாகவும் புனையப்பட்டுள்ள இந்த நாவல் பழைமையான நம்பிக்கைகள் மற்றும் மனித உறவுநிலைகள் குறித்த பல்வேறு பரிசீலனைகளை முன்வைப்பதாக அமைந்துள்ளது. அருவிகளும், மலைகளுமாக வசீகரம் கொண்டுள்ள நம்முடைய கிராமிய இயற்கைச்சூழல்கள் வர்த்தக ஆக்கிரமிப்புகளால் சிதைவுண்டு மனித உறவுநிலைகள் நெருக்கடிகளுக்கு உள்ளாவதும் மரணத்தின் பிடியில் பலியிடல்களுக்கான சூழல்கள் பெருகிச் செல்வதையும் நாவல் கவனப்படுத்துகிறது.நம்முடைய பல்வேறு பாரம்பரிய நம்பிக்கைகள் மனித இருத்தலியல் பிரச்னைகள் சார்ந்தே வேர்கொண்டவை என்றாலும் பின்வரும் பகுத்தறிவுச் சமூகம் அச்சூழல்களின் கலாச்சார நம்பிக்கைகளை உரிய மதிப்புடன் பரிசீலனை செய்து முன்னோக்கிச் செல்லும் என்பதே நாவல் முன்வைக்கும் செய்தி எனக் கொள்ளமுடியும். நாவல் முன்வைத்துள்ள புனைவுப்பாதை அதற்குரிய சூழல் வசீகரங்களுடன் கலாச்சார வடிவாக்கங்கள் குறித்த பல்வேறு பயணங்களையும் தலைமுறைகள் ஊடாக அதன் மீள்வடிவாக்கத்துக்கான பரிசீலனைகளையும் தொடர்ந்து முன்வைத்தபடி இருப்பதை நாவலில் பார்க்கமுடியும். வாழ்வும் மரணமும் பெருகிச் செல்லும் ஒரு சூழல் நாவலின் அடித்தளமாக உள்ளது. l
previous post