‘நூற்றாண்டு கண்ட பெண் இலக்கிய ஆளுமைகள்’ என்ற 29 பெண் இலக்கிய ஆளுமைகள் பற்றிய தொகுப்பை பேராசிரியர் இரா.பிரேமா தொகுத்திருக்கிறார். தொகுப்பாசிரியராக மிக நேர்த்தியுடன் இந்த நூலை வடிவமைத்திருக்கிறார். 29 பெண் இலக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்புகளும் அவர்களுடைய இலக்கிய படைப்பாக்கத்திலிருந்து ஒரு பகுதி அல்லது அவர்கள் எழுதிய சிறுகதைகளில் ஒன்று என்று சான்றுகளுடன் அவர்களுடைய இலக்கிய வீச்சை இந்த நூலில் காட்டியிருக்கிறார் பேராசிரியர் இரா.பிரேமா அவர்கள்.
இந்த நூலில் இதுவரை அறியாத பெண் ஆளுமைகள் பலர் குறிப்பிடத்தக்க இலக்கியப் பங்களிப்பைத் தமிழுக்குச் செய்திருப்பது வெளிப்பட்டிருக்கிறது. மேலும் இந்த நூல் மூலம் பெண்ணியத்தின் தோற்றம் தமிழில் எப்படி உருவானது என்பதற்கான அடிப்படை தெளிவாகிறது. பெண்ணியம் என்ற கோட்பாட்டாக்கதிற்கு முன்பே பல பெண்களிடமும் பெண் மையச் சிந்தனை உருவாகியிருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த அவர்கள் தேர்ந்தெடுத்த ஊடகம், இலக்கியமாக இருந்திருக்கிறது.
அதனால் அவர்களின் பெண் மையச் சிந்தனை குறித்த புரிதலை தொகுப்பாசிரியர் சரியாகக் கண்டுகொண்டு இந்த நூலில் எடுத்துக் காட்டியிருக்கிறார். ஏற்கெனவே பல பெண்ணியம் குறித்த நூல்களை அவர் எழுதியிருப்பதால் பழம் பெரும் இலக்கிய ஆளுமைகள் பெண் மையச் சிந்தனையை எப்படி உருவாக்கினார்கள் என்று பின்தொடர்வது அவருக்கு எளிமையாக இருந்திருக்கிறது. இந்த நூல் பழம் பெரும் பெண் இலக்கிய ஆளுமைகள் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கும் ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கிறது.
இந்த நூலின் பெண் இலக்கிய ஆளுமைகள் உருவாக்கிய படைப்பாக்கங்கள் மூலம் தருவித்துக் கொள்ளும் பெண் மையச் சிந்தனைகளைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்:
பெண்ணியச் செயற்பாடு சார்ந்த படைப்புகள் பெண் மையச் சிந்தனை சார்ந்த படைப்புகள் பெண் எதிர்வினை சார்ந்த படைப்புகள் பெண்ணியச் செயற்பாடு சார்ந்த படைப்புகள் நூலில் எடுத்தாளப்பட்டுள்ள பல பெண் இலக்கிய ஆளுமைகள் ஏதாவது ஓர் இயக்கம் சார்ந்த செயற்பாட்டாளர்களாக இருந்திருக்கிறார்கள். காந்தியம், பெண் உரிமை, தாசி குல ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான சமூகத்தில் பெண்களுக்கு எதிரான போக்குகளை எதிர்ப்பவர்களாக அவற்றைப் பற்றிய செயற்பாடுகளை மேற்கொள்பவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் ஆவார். அவருடைய தாசி குல ஒழிப்பு முறையின் முன்னெடுப்புதான் அந்த வழக்கத்திற்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வந்து அந்த வழக்கத்தையே ஒழிக்கும் அளவுக்குக் காரணமாக இருந்தது. மூவலூர் ராமாமிர்தம் எழுதிய ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற புதினத்தை எழுதினார். அது அவருடைய செயல்பாட்டுக்கான அடித்தளத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது.
செயற்பாட்டாளராக மட்டுமின்றி இலக்கிய ஆளுமையாகவும் அவர் அறியப்பட அந்தப் புதினம் காரணமாக இருந்தது. மேலும் இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் பற்றி முதல் குரலாக மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் அவர்களின் குரல் ஒலித்திருக்கிறது. அதுதான் தமிழ்நாட்டின் முதல் பெண்ணியக் குரலாக அடையாளம் காணப்பட வேண்டிய ஒன்றாகவும் அமைந்திருக்கிறது.
பெண்ணியம் என்ற கோட்பாடு செயல்பாடாக மாறி இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டனில் பரவிய போது தமிழ்நாட்டில் தன்னிச்சையாக ஒரு குரல் பெண்ணியக் குரலாக ஒலித்திருக்கிறது. மூவலூர் இராமாமிர்தம் அம்மாளின் இந்த வகையான முன்னெடுப்பு பல பெண்களுக்கும் அவர்களுடைய நிலையை அறிவதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
பெண் மையச் சிந்தனை சார்ந்த படைப்புகள் பெண்களை மையமிட்டு புதினங்கள், சிறுகதைகள் படைத்தல் என்ற நிலையை இந்த நூலில் குறிப்பிடப்படும் 29 பெண் இலக்கிய ஆளுமைகளும் கைக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. அவர்களில் பெண் மையச் சிந்தனையைத் தன் படைப்புகளில் அழுத்தமாகப் பதியச் செய்தவர் வை.மு.கோதைநாயகி அம்மாள். அவருக்கும் தொடக்கத்தில் பலத்த எதிர்ப்பு இருந்தபோதும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் தன் பணியைச் செவ்வனே செய்ததுடன் பல பெண் இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்ய ‘ஜகன்மோகினி’ என்ற இதழை நடத்தி அதன் மூலம் அவர்களை வளரவும் வழிவகை செய்திருக்கிறார் என்பதும் இந்த நூல் வழி புலனாகும் மற்றொரு செய்தியாக உள்ளது. அவருடைய படைப்புகளில் 115 புதினங்கள் இரு சிறுகதைத் தொகுதிகளும் அடங்குகின்றன.
பேராசிரியர் இரா.பிரேமா அவரைக் குறித்த முன்னுரையில் எல்லா இலக்கிய ஆளுமைகளுக்கும் தந்திருக்கும் அறிமுகம் போலவே ஆழமான தகவல்களை எழுதியிருக்கிறார். அவருடைய சிறுகதை ஆண்-பெண் இடையிலான காதலில் ஆண் வழி தவறுவதும் பெண் ஒரே இலக்குடன் இருப்பதும் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. பெண்ணுடைய தீவிரமான மனப்போக்கும் ஆழமான பற்றும் பெண் எப்படி ஆணிடமிருந்து வேறுபடுகிறாள் என்பதையும் ஆணுடைய பலவீனம், நிலையற்ற தன்மை உள்ளிட்டவற்றைத் தெளிவாக்குகிறார். இதன் மூலம் பெண்ணை மையமிட்ட அவருடைய சிந்தனை இந்தக் கதையில் துல்லியமாக வெளிப்படுகிறது.
பெண் எதிர்வினை சார்ந்த படைப்புகள் – பெண் செயற்பாடுசார்ந்து வீட்டிலிருந்து வெளியேறி பல இலக்குகளை நாட முடியாமல் இருக்கலாம்; பெண் மையச் சிந்தனையை வெளிப்படுத்தி பலருடைய எதிர்ப்புகளைச் சம்பாதிக்க அச்சப்படலாம்; ஆனால் பெண்ணின் எதிர்வினை ஒவ்வொரு பெண் குறித்து இதுவரையிலான பெண்மைக் குணாம்சமாக வரித்திருந்த பல அம்சங்களைக் கேள்வி கேட்பதாக பெண் எதிர்வினை சார்ந்த படைப்புகள் அமைந்திருக்கின்றன என்பதை இந்த நூலில் உள்ள பல பெண் ஆளுமைகளின் படைப்புகள் காட்டுகின்றன. சாவித்திரி அம்மாள், குகப்பிரியை, குமுதினி, டி.பி. இராஜலட்சுமி, கமலா விருத்தாச்சலம் போன்ற பெண் ஆளுமைகளின் படைப்புகள் இந்த வகையில் அமைருந்திருக்கின்றன. சாவித்திரி அம்மாளின் சிறுகதை ‘சரசுவின் கல்யாணம்’ இளம்பெண்கள் முதியவர்களுக்கு வாழ்க்கைப்பட வேண்டியிருந்ததற்கு எதிர்வினையாக எழுதப்பட்ட கதை. அந்தப் பெண் தனக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்பதை வெளிப்படுத்தும் இடத்தில் அழுத்தமான எதிர்வினையைக் காட்டும் பாத்திரமாகப் படைத்திருக்கிறார். குகப்பிரியை எழுதிய ‘தேவகி’ என்ற சிறுகதையில் இரு பெண்கள் ஓர் ஆண் மீது ஈர்க்கப்படுவதும் ஒரு பெண்ணுடைய கணவன் அவன் என்பது வெளிப்படுவதும் மிகவும் நுட்பமாக எழுதப்பட்டுள்ளது. இந்தக் கதையில் ஒரு பெண் மீது மற்றொரு பெண்ணுக்கு வரும் பொறாமை உணர்வைத் தவிர்த்து ஒவ்வொரு பெண்ணின் ஆளுமையும் முதிர்ச்சி அடைந்திருப்பதைக் காட்டும் வகையில் எழுதப்பட்ட கதையாக உள்ளது. அந்தக் காலகட்டத்தில் பெண்களின் குணாம்சங்களை அறியாத சமூகத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் கதையாக இந்தக் கதை உள்ளது. அடுத்து கமலா விருத்தாச்சலம் எழுதிய ‘திறந்த ஜன்னல்’ கதையில் பெண்ணின் குணாம்சத்தை இதைவிட நுட்பமாக எழுதவே முடியாது என்ற அளவில் எழுதப்பட்ட கதை. இந்தக் கதையில் கணவன் வேறொரு பெண்ணிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறான் என்பதைக் குறிப்பால் உணர்ந்து அவனிடமிருந்து விலக எண்ணும் பெண்ணின் நடவடிக்கை குறித்து மிகவும் உணர்திறன் சார்ந்து எழுதப்பட்ட கதையாக உள்ளது.
டி.பி.இராஜலட்சுமி எழுதிய புதினத்தின் ஒரு பகுதியில் தன் மனைவி வேறொருவனைக் காதலித்திருக்கிறாள் என்பதை அறிந்து அவனுக்கே திருமணம் செய்து கொடுப்பது போன்ற காட்சி வருகிறது. இன்றும்கூட இது போன்ற செயல்கள் அரிதாக நடக்கும் சூழலில் இதுபோன்ற மேம்பட்ட நவீன சிந்தனைகளை உடைய எழுத்துகளைப் பெண்கள் எழுதியிருக்கிறார்கள் என்பதை தொகுப்பாசிரியர் இரா.பிரேமா அவர்கள் தேடித் தேடி எடுத்து தொகுத்திருக்கிறார்.
முடிவாக, இந்த நூல் பெண் எழுத்தாளுமைகளின் பல்வேறு இலக்கிய ஆக்கங்களை முன்னெடுக்கிறது. அவற்றைக் குறித்த துல்லியமான தகவல்களைத் தருகிறது. அவர்களின் படைப்பாக்கங்களை அறிவதற்கு வழிகோலுகிறது. அது மட்டுமல்லாமல் அவர்கள் பெண் மையச் சிந்தனையை எப்படி முன்னெடுத்தார்கள் என்பதை மிகவும் தெளிவாக வலியுறுத்துகிறது.
இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ள 29 பெண் இலக்கிய ஆளுமைகளும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தது எழுதியவர்கள். கிருபை சத்தியநாதன், சித்தி சுனைதா பேகம், வசுமதி ராமசாமி, அநுத்தமா, கிருத்திகா, லட்சுமி, ஹெப்சிபா ஜேசுதாசன் என்று பல சிறந்த படைப்பாளர்களைப் பற்றிய குறிப்புகளுடனும் படைப்புகளின் சான்றுகளுடனும் இந்த நூல் வெளிவந்திருக்கிறது. ஆண்களின் எழுத்து உலகத்தில் பெண்களின் இலக்கியத்தை மீட்டுருவாக்கம் செய்து பெண்களுக்கான படைப்பாக்கத்தைத் தொடர்வதற்கு ஆக்கமும் ஊக்கமும் இந்த நூல் வழங்குகிறது. இந்த நூலில் பெரும்பாலும் குடும்பம் சார்ந்த சிக்கல்களில் பெண்கள் படும்பாட்டைக் காட்டும் சிறுகதைகள் சான்றாக எடுத்தாளப்பட்டுள்ளன என்றாலும் குடும்பம்தான் பெண்கள் எதிர்வினையாற்றக் கோரும் முதல் அலகு என்பதால் அதிலிருந்து அடுத்தடுத்த படிகளைத் தாண்ட இந்த நூலின் இலக்கிய ஆளுமைகளின் படைப்பாக்கம் உதவும் என்பதில் ஐயமில்லை. இந்த நூலைப் பதிப்பித்திருக்கும் ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் தொடர்ந்து பெண்கள் பற்றிய படைப்பாக்கங்களை, தொகுப்புகளை வெளிக் கொண்டு வருவது இன்றைய தேவையை உணர்ந்து செய்யும் சேவையாக உள்ளது. இந்த நூலும் அத்தகைய சேவைகளில் ஒன்று என்பதை இந்த நூலை வாசிப்பவர்கள் உணரக்கூடும். l
previous post