நம் மனதும் நம் சிந்தனையும் தனக்கு இருக்கும் மெய் சிறகுகளை மறந்துவிட்டு, மிகப்பெரிய கற்பனைச்சிறகுகளை வாங்கி மாட்டிக்கொள்ளும். அந்தச் சிறகுகளைக்கொண்டு வானம் அளக்கும். சமுத்திரங்களை தாண்டும். சிகரங்கள் ஏறி முடிக்கும்… துருவங்களில் துள்ளியாடும்.நட்சத்திரங்களோடு கண்ணாமூச்சி ஆடும்.இறுதியாய் நிலவை முத்தமிட்டுவிட்டு திரும்பும்.கற்பனைச் சிறகைக் கட்டிக்கொண்ட நம் மனதுக்கு எல்லைகள் என்பதே கிடையாது. அது ஒளியின் வேகத்தைவிட பல மடங்கு வலியது.
உலகின் அத்தனை அதிசயங்களும் கண்டு வியக்கக் காத்திருக்கும் நம் கற்பனைகள் நிஜத்தில் நம்மைச் சுற்றி இருக்கும் அத்தனை அதிசயங்களையும் கண்டுகொள்ளாமல் கடந்து போய் விடுகிறோம். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள், நம்மைச் சுற்றிக் கிடக்கும் மரங்கள், பறவைகள், எறும்புகள், ஊர் வயல், கம்மா, இன்னுமாய் நமது வீட்டு முற்றம், சமையலறை என இவற்றில் எல்லாம் நாம் கலைநயத்தோடு பார்க்காத அதிசயிக்க வைக்கிற ஒருதனி பக்கம் உண்டு. வாழ்க்கையின் வேகத்தில் நாம் யாரும் அதைக் கண்டுகொள்வதே இல்லை. சிகரத்தையும் நிலவையும் பாடுவதைக் காட்டிலும் என் வீட்டில் ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்பையும், அருகில் பறந்துகொண்டிருக்கும் பறவையையும் கிளைபரப்பில் பூப்பூத்து அழியா ஓவியமாய் இருக்கும் மரங்களையும் தனது கலைக் கண்ணோடு பார்த்து கவிதையாக்கினால் எப்படி இருக்கும் என்று யோசித்ததின் விளைவுதான் இந்த தெருக்காரனின் கிறுக்கல்கள். தொடர்வண்டிப் பயணத்தில் ஜன்னலுக்கு வெளியே விரிகிற உலகத்தை ரசித்துப் பார்க்காமல் ஒரு தனி அறையில் அமர்ந்து கொண்டிருக்கும் கைதிபோல இருந்துவிட்டால், அந்தத் தொடர் வண்டியின் ஜன்னல் கம்பிகள் நம்மை சபிக்காதா என்று கேள்வி எழுப்பும் கவிஞர் எப்பொழுதும் நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை ரசித்து வாழ்வதுதான் வாழ்க்கை என்று சொல்கிறார்.
அப்படி அவர் ரசித்த சின்னச் சின்ன நிகழ்வுகளின் தொகுப்புதான் இந்தக் கவிதை நூல். தன்னைச் சுற்றி இருக்கும் சுற்றுச்சூழலை கவிதையால் நிரப்பி இருக்கிறார். நண்பர் விமலன் அவர்கள் ஒவ்வொரு கவிதையையும் தனக்கே உண்டான பாணியில் அழகாகச் செதுக்கி வைத்திருக்கிறார். முதல் வரிகளில் பக்குவமாய் நடைபயிலும் அவர் இறுதி வரிகளில் வாசிப்பவர் இதயத்தில் புகுந்து வர்ணஜாலம் செய்கிறார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு வாசிக்கத் தொடங்கி அனைத்தையும் வாசித்து முடித்து வைத்த ஒரு சில புத்தகங்களில் இதுவும் ஒன்று. l