சமூக முன்னேற்றம் என்பது அறிவியல் தொழில்நுட்பம்.. வேலை வாய்ப்பு இவற்றையெல்லாம் கடந்து அறிவுத்தேடல் என்கிற குறியீட்டினால் அளக்கப்பட வேண்டும். ஒரு சமூகத்தின் வாழ்க்கை செம்மையாக இருக்கிறது என்றால் அங்கே புத்தக வாசிப்பும். எழுத்தறிவும், நூலகத்துறையும் எப்படி செயல்படுகிறது என்பது ஒரு குறியீடு ஆகும்.
- நோபல் அறிஞர் டோனி மாரீசன் (PLAYING IN THE DARK)
தமிழ்நாட்டின் சமீபத்திய அற்புத சாதனை நான் முதல்வன் என்கின்ற அந்த பயிற்சி பாசறையின் மூலம் ஏறத்தாழ அறுபது பேர் ஐ ஏ எஸ் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிகழ்வு. இந்த பயிற்சி அனைத்துமே தமிழகத்தின் முன்னணி நூலகங்களில் வைத்து தரப்பட்ட அற்புதமாகும். இதற்காக நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் எழுத்தாளர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சமீபத்தில் தமிழக அரசு எடுத்திருக்கும் சில முடிவுகள் உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும். தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படும் விருதுகளின் உடைய விருது தொகை எழுத்தாளருக்கு ₹10,000 வழங்கப்பட்டு வந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 30 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. வரும் ஆண்டில் இருந்து சிறந்த நூல் ஆசிரியருக்கு இது அய்யாயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். அதே போல பதிப்பாளர்களுக்கு ₹20,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அறிவிப்புகள் எழுத்தாளர்களையும் பதிப்பாளர்கள் என அனைவரையும் ஊக்கப்படுத்துகின்ற அற்புதமான விஷயங்கள் ஆகும்.
ஆனால் அதே சமயம் நூலகத்துறை தொடர்பான விஷயங்களில் அரசு மெத்தனமாக உள்ளதோ என்று சந்தேகமாக இருக்கிறது இரண்டு ஆண்டுகளுக்கு முன் நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன 2018-19 ஆம் ஆண்டு வெளியான நூல்கள் பதிப்பாளர்களிடமிருந்து நூலகத்துறையால் கொள்முதல் செய்யப்பட்டது. 2020-21… 2021-22, 2022-23ம் ஆண்டுகளில் வெளியான புதிய நூல்களுக்கு நூலக ஆணை வழங்குவதற்கு மாதிரி பிரதிகள் கூட இதுவரை பெறப்படவில்லை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதிக்குள் முந்தைய ஆண்டு வெளியான புத்தகங்களில் மாதிரி பிரதிகள் பெறப்பட வேண்டும். ஆனால் இந்த 2024 -25 நூலகத்துறை எதையும் வாங்கியதாக செய்தி இல்லை… புரட்சிகரமான பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன இந்த மாற்றங்கள் பதிப்பாளர்கள் இடையே எழுத்தாளர்களிடையே மேலும் குழப்பத்தையே உருவாக்கியுள்ளது.
ஒரு புத்தகம் வெளி வரும் போதே, அது குறித்த விபரங்களை அனுப்பினால் உடனே வாங்குவோம் என்று நூலகத் துறை கூறுகிறது தற்போது உள்ள சூழலில்… அனுப்பப்பட்டால் அந்த புத்தகம் உடனே வாங்கப்படுமா இப்படி மாதாமாதம் புத்தகங்கள் வாங்குவார்களா அல்லது வாராவாரம் வாங்கப்படுமா அல்லது அந்த ஆண்டுக்கு மொத்தமாக வாங்கப்படுமா என்பது குறித்து தெளிவு இல்லை. கடந்த நான்காண்டுகளாக புத்தகங்கள் வாங்கப்படாமல் இருக்கின்ற ஆண்டுகளில் புத்தகங்களை பெற்றுக்கொண்டு நூலக ஆணை வழங்கி விட்டு புதிய முறை குறித்து பதிப்பாளர்கள் கூட்டம் ஒன்றைக் கூட்டி ஆலோசனை பெறலாமே
எப்படி இருந்தாலும் இந்த புதிய சட்ட திட்டங்கள் குறித்து இன்னொரு விபர அறிக்கை தெளிவு அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பது அனைவரின் ஒரு வருடகால கோரிக்கையாகும்.. பொதுவாக பெறப்படுகின்ற மாதிரி பிரதிகள் அனைத்திற்குமே நூலக ஆணை வழங்கப்படுவது இல்லை அதற்கென்று உருவாக்கப்பட்ட குழு தான் புத்தகங்களை தேர்வு செய்கிறது.
ஆனால் பதிப்பாளர்கள் எழுத்தாளர்களால் வழங்கப்படுகின்ற மாதிரி புத்தகங்களில் ஒவ்வொரு தலைப்பிலான புத்தகத்தையும் கீழ்க்கண்ட ஏழு நூலகங்களுக்கு அனுப்பி விட்டு அதற்கான ரசீதுடன் தான் மாதிரி புத்தகத்தை சமர்ப்பிக்க முடியும் அந்த ஏழு நூலகங்களை கன்னிமாரா நூலகம் ராஜாராம் மோகன் ராய் கொல்கத்தா பாராளுமன்ற நூலகம் டெல்லி தமிழ்நாடு சட்டமன்ற நூலகம் சென்னை மும்பையின் மத்திய நூலகம் மதுரை தமிழ்ச்சங்க நூலகம் மற்றும் புது டில்லியின் பொது நூலகம். இப்படி சமர்ப்பிக்கப்படுகின்ற இந்த நூல்களை அந்த நூலகத்தை என்றென்றும் அலங்கரிக்கின்றன. இதில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இணைக்கலாமே
கல்வியாளர்கள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் மட்டுமின்றி உலக அளவில் வாழக்கூடிய தமிழ் அறிஞர் பெருமக்கள் அனைவரும் தமிழ் நூல்களை பயன்படுத்தும் வகையில் நூலக ஆணை சட்டங்களை மாற்றப்பட வேண்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக நூல்கள் வாங்கப்படாமல் இருப்பதால் பெரும்பாலான நூலகங்கள் பழைய புத்தகக் கடைகளைப் போலத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இலக்கியத்திற்காகவும் வாசிப்புக்காகவும் பொது ஜனங்களினுடைய புத்தக விற்பனைக்காகவும் எத்தனையோ விஷயங்களை செய்யும் தமிழக அரசு நூலகங்களை இப்படி கிடப்பில் போட்டது மிகுந்த வருத்தம் தரக்கூடிய விஷயமாகும். கடந்த ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு நூல் கொள்முதலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்டது ஆனால் இன்று காகிதத்தின் விலை பல மடங்கு ஏறிவிட்டது.. அதற்கேற்றார் போல விலையேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது அண்ணா நூற்றாண்டு நூலகம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என்று அற்புதங்களை இந்த அரசு படைத்து வருகிறது.
மாவட்ட நூலகங்கள் கிளை நூலகங்கள் நடமாடும் நூலகங்களை ஊர்ப்புற நூலகங்கள் பகுதி நேர நூலகங்கள் என்று தமிழ்நாட்டில் மொத்தம்3446 நூலகங்கள் உள்ளன. ஆனால் புத்தகங்களில் உடைய எண்ணிக்கை எப்போதுமே 600 ஆக இருக்கிறது கூடுதல் எண்ணிக்கையில் புத்தகங்களை வாங்க வேண்டும் என்று பதிப்பாளர்கள் மற்றும் தமிழ்நாட்டினுடைய முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உட்பட பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட வேண்டும் நூலக ஆணைக்குழுவுக்கு புத்தகங்கள் சமர்ப்பித்துவிட்டு எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் இந்த புத்தக சமர்ப்பிப்புக்காகவே ஏராளமாக செலவு செய்து விட்டு காத்திருக்கும் அவலம் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும். ஆகும்.
புத்துயிர் பெறட்டும் தமிழ்நாட்டின் நூலகத்துறை. – ஆசிரியர் குழு l