கமலாலயன்
‘சிலந்தியும் ஈயும்’ என்றொரு சிறு நூல். வில்ஹெல்ம் லீஃப்னெஹ்ட் எழுதியது. தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் இரா. கிருஷ்ணய்யா. ரஷ்யாவிலேயே பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து, ரஷ்ய மொழியில் தேர்ச்சியும் புலமையும் பெற்றுத் தமிழுக்குத் தனது மொழி பெயர்ப்பு நூல்களின் வழியே அவர் சேர்த்திருக்கும் வளம் அளப்பரியது. இந்தச் சிலந்தியும்,ஈயும் நூலின் மொத்தப் பக்கங்களே 16 + 4 தாம்! ஒவ்வொரு பக்கத்திலும் ஓர் ஓவியத்தின் பின்னணித் திரை பரவியிருக்க, சற்றே பெரிய வடிவில் எழுத்துகள் வாக்கியங்களாகப் பரவுகின்றன. மிஞ்சிப்போனால் பத்து நிமிட வாசிப்பு. ஆனால், இந்தக் குறுகத்தறித்த வாமன வடிவத்திற்குள், மனித குலம், என்றைக்கு உழைப்பவர் எனவும், உழைப்பைச் சுரண்டுபவர் எனவும் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்தனவோ அன்றிலிருந்து இன்று வரை உலகில் நடந்து கொண்டிருக்கும் ஓர் அநீதி மிகுந்த சுரண்டல் வேட்டையை, அதற்குக் காரணகர்த்தாக்கள் யார் யார் என்பதை இந்தச் சிறு நூல் தெள்ளத்தெளிந்த நடையில் இரத்தினச் சுருக்கமாக விவரிக்கிறது. இந்த நூலை, சமீபத்தில் பாரதி புத்தகாலயம் மறு அச்சுப் போட்டுக் கொணர்ந்திருக்கிறது. இன்று, இந்தத் தொடரை எழுத உட்கார்ந்தவுடன் அந்த மறு பதிப்பைப் படித்தேன். என்ன ஓர் அனுபவம்!
லீஃப்னெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்ததாகும் என்கிறார் லெனின். ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் சக தோழர். ஜெர்மன் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாலும் அன்றைய உலகளாவிய தொழிலாளி வர்க்கத்தின் தலை சிறந்த போராட்டத்தலைவர், பரப்புரையாளர்.
“சிலந்தியும் ஈ யும் என்ற இந்தச் சின்னஞ்சிறு பிரசுரம், அது வெளிவந்த காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் வெகுவாக வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. ஒடுக்குமுறைத்தளைகளை முறிக்க வேண்டுமாயின் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒரு சேரப்பாடுபடுவது ஒன்றுதான் வழி என்பதைத் தெளிவு படுத்துகிறார்” என்கிறது நூலின் அறிமுகக்குறிப்பு.
“ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால் யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி அப்படி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகி விடமுடியும். வாழ்வே நீங்கள்தான். உலகமே நீங்கள்தான். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின், எல்லாமே நீங்கள்தான். நீங்கள் ஒன்றுபட்டால், உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சி னாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்து விடலாம். வறுமையையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக்கட்டி விடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்! ஆகவே, விரும்பக்கற்றுக் கொள்ளுங்கள்!”
மேற்கண்ட கடைசி வாக்கியத்தில், ‘மெய்யாகவே நீங்கள் விரும்பினால்’ என்ற செய்தி மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஆம், விருப்பம்தான் வாழ்க்கை! புத்தகங்களை, சக மனிதர்களை, இந்த உலகை, இயற்கையை, நிலவை, விண்மீன்களை, ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்தை விரும்பு வோம். அப்படி உண்மையிலேயே விரும்பும்போதுதான், நம்மைச் சுற்றிலும் கண்களுக்குப் புலப்படாத வண்ணம் நம்மைப் பின்னிப் பிணைத்துள்ள சிலந்தி வலைகளை அறுத்தெறிந்து விட்டு, நாம் சுதந்திரமாக வாழ முடியும்!
‘அசோகர்’ – ஒரு தத்துவவியலாளர் – அரசரின் சொல்லோவியம் என்ற தலைப்பில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நூல் எதிர் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. ஆங்கிலத்தில் இதை எழுதியிருப்பவர் பேட்ரிக் ஆலிவெல். தமிழில் ஸ்ரீநிவாச ராமானுஜம் மிக நேர்த்தியாக மொழி பெயர்த்திருக்கிறார். ஏற்கெனவே ‘தீப்பற்றிய பாதங்கள்’, ‘சதத் ஹஸன் மாண்ட்டோ கதைகள்’, ‘ஸ்ரீநிவாச ராமானுஜம் கட்டுரைகள்’ போன்ற பல நூல்களில் ராமானுஜத்தின் மொழிபெயர்ப்புத் திறணைனையும், எழுத்து வன்மையையும் நாம் நன்கு அறிந்திருக்கின்றோம். இப்போது, இந்த நூலின் வழி அவரின் மொழிபெயர்ப்பினூடே மிக ஆழமான ஆய்வுப் புலமையையும் அறிகிறோம். இந்த நூலைப் படிக்கையில், எவ்வளவு கடினமான விஷயங்களை இந்த ஆய்வு மூல மொழியில் முன் வைத்து அலசி ஆராய்கிறது என்பதை நன்கு உணர முடிந்தது. இது மொழிபெயரப்புதான் எனினும், மொழிபெயர்ப்பாளரும் கிட்டத்தட்ட ஓர் ஆய்வாளராகவே தொழிற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
அசோகர் என்னும் மாமன்னரின் வாழ்க்கை வரலாற்றைச் சுற்றிப் புனையப்பட்டிருக்கும் கதைகளையும், அவை முன்வைக்கும் நிகழ்ச்சிகளையும் அசோகரின் கல்வெட்டுகள் சொல்லும் செய்திகளின் வெளிச்சத்தில் அலசுகிறது நூல். ஆனால், இந்த நூலின் நோக்கம், அசோகரின் கதையைக் கூறுவதல்ல. மாறாக, நமக்கு இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள், தூண்கள், ஸ்தூபிகள் போன்ற தூலமான ஆதாரங்களையும், பவுத்த ஓகி வாழ்க்கை நூல்கள், இலங்கை உள்ளிட்ட வெவ்வேறு பிரதேசங்களின் மகாவம்சம் போன்ற நூல்களில் கிடைக்கும் இலக்கிய ஆதாரங்களின் அடிப்படையில், அசோகர் என்ற மாமன்னர், எப்படி ஒரு தத்துவவியலாளராக மாறினார் என்ற புதிரை விடுவிக்க முயல்வதுதான் இந்த நூலின் நோக்கம்.
அசோகரின் பாறைப்பொறிப்புகள், கல்வெட்டுகள் பிற தூலமான ஆதாரங்களின் மூலம், அவருடைய செய்திகள், தன் நாட்டின் கடைசிக் குடிமகன் வரையிலும் போய்ச்சேர வேண்டுமென்பதில் அவர் காட்டியிருந்த அளவற்ற ஆர்வம் பளிச்சென்று புலப்படுகிறது. தனது பேரரசின் அதிகாரிகள் தனது ஆணைகளை முக்கியமான விழாக்கால நாள்களில் பொது இடங்களில் உரத்து வாசித்து விளக்க வேண்டும் என்றுகூட அவரின் ஆணை புலப்படுத்துகிறது. கலிங்கப் போருக்குப் பின், அசோகரின் மனமாற்றம் குறித்து இந்த நூல் மிக ஆழ்ந்து ஆராய்கிறது. மருத்துவப் பண்புள்ள மூலிகைகள், தாவரங்களை, அவை எங்கெல்லாம் அரிதாக இருந்தனவோ அங்கெல்லாம் பயிர் செய்து பரவலாக்கியிருக்கிறார் அசோகர். குடிநீருக்காகக் குளங்கள், கிணறுகள் வெட்டினார்; நெடுந்தூரப் பயணிகள் தங்குவதற்குச் சத்திரங்கள் கட்டினார் – இன்ன பிற செய்திகளை நாம் பல காலமாகப் பாடப்புத்தகங்களில் படித்துக் கொண்டிருக்கிறோம் ஆனால், இந்த ஒவ்வொரு காரியத்திற்குப் பின்னும் அசோகர் செய்யப் புகுந்த மாற்றங்கள் எவை என்பதையே இப்புத்தகம் பேசுகிறது.
மொத்தமே 4160 சொற்களே அசோகரின் அரசாணைகள், கல்வெட்டுகள், பாறைப் பொறிப்புகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த அளவுக்குத்தான் நம்மிடம் கிடைத்துள்ள ஆதாரங்கள் கொண்டிருக்கின்றன. அந்தச்சொற்களின் உள்ளார்ந்த அர்த்தங்கள், அவற்றின் இடையே அசோகர் சொல்ல விரும்பிய, சொல்லாமற் போன, மௌனம் சாதித்த இடங்களையெல்லாம் ஏராளமான நூல்கள், ஆய்வுகளின் துணை கொண்டு புலன் விசாரணை மேற்கொண்டிருக்கிறார் பேட்ரிக் ஆலிவெல். நானூறு பக்கங்களுக்கு மேல் உள்ள இந்தப்புத்தகம் பேசும் செய்திகள் அனைத்தும், அசோகரின் நான்காயிரத்துச் சொச்சம் வார்த்தைகளின் மெய்ப்பெருள் காணும் முயற்சியின் விரிவாக்க விளைவே. மூல நூல் ஆசிரியர் இந்த நூலை யாருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறார் என்று நாம் பார்த்தால், ஆசிரியரின் அடிப்படையான கரிசனம் யார் மீது, எதன் மீது என்பது நமக்குப் புலனாகும்: “தங்களுடைய கடும் உழைப்பின் வியர்வையின் மூலம், 22 நூற்றாண்டுகளுக்குப் பிறகு அசோகருடைய செய்திகளை நாம் படிக்கும் சாத்தியப்பாட்டை உருவாக்கிக் கொடுத்த சபடாவுக்கும், அவருடைய சக எழுத்தர்கள், சிப்பியர்கள், கல் தச்சர்கள் ஆகியோருக்கும்” என்கிற பேட்ரிக்கின் குறிப்பு, நான் இதுவரை படித்த நூல்களில் வெகு அரிதாகவே தென்படும் செய்தியாக இருக்கிறது. நூல் முழுக்கப் பரந்து ஊடாடி இழையோடும் ஒரு பார்வையின் வெளிப்பாடு இது. நாம் முயன்று கற்க வேண்டிய ஒரு பண்பு, இந்த நூலின் தமிழ் நடையில் வெளிப்பட்டிருப்பதாக என் வாசிப்பில் தோன்றியது. அது, அசோகர் ஆட்சிக் காலத்தில் வேறு பல முற்போக்கான முன்முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், பெண்களைப் பற்றிய அவரின் பார்வை அன்றைய, ஏன், இன்று வரையில் நிலவும் ஆண் மையப் பார்வையாகவே இருந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டும் ஒரு விமரிசனப் பார்வைதான்!
நமது சமூகத்தில், நீண்ட காலமாகப் புரையோடிக் கிடக்கும் பல அநீதிகளில் ஒன்று, உடல் – மனரீதியாக மாற்றுத்திறன் படைத்த சக மனிதர்களைப் பற்றிய ஓர் ஏளனப் பார்வைதான். வெறுமனே கேலியாகவும், ஏளனம் செய்து விட்டுத் தம் போக்கில் போகும் பார்வையாக மட்டும் அது இருப்பதில்லை; மாறாக, அத்தகைய மாற்றுத்திறனாளிகளின் மனம் ஒடிந்து சுக்குநூறாக உடைந்து போகும் அளவுக்கு முகத்துக்கு நேரே இழிவுபடுத்திக் கடும் வார்த்தைகளைப் பிரயோகிக்கும் இயல்பாகவும் அது இருக்கிறது. இவ்வாறு இழிவுபடுத்துவதில், படித்தவர்கள் – படிக்காதவர்கள், நகரவாசிகள் – கிராமவாசிகள் என்று எந்தப் பாகுபாடும் இருப்பதில்லை. இந்த நுட்பமான ஒரு சமூக உளவியல் சார்ந்த பிரச்னைகளையே மையக் கருவாகக்கொண்டு எழுதப் பட்ட ஒரு மலையாள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு, ‘நாங்களும் மனிதர்கள்தானே?’ என்பது.
நம் அண்டைவீட்டாரின் மலையாள மொழியில், விமலா மேனன் ஒரு பிரபலமான சிறார் எழுத்தாளர். ஏற்கெனவே அவர் எழுதிய ‘நான் மந்தாகினி பேசுகிறேன்’ என்ற இன்னொரு சிறார் நாவலையும், இப்போது இங்கு நான் அறிமுகம் செய்யவுள்ள ‘நாங்களும் மனிதர்கள்தானே’ நூலையும் தமிழுக்குத் தன் சரளமான மொழியாக்கம் மூலம் அறிமுகம் செய்தவர் அம்பிகா நடராஜன். ஒரு பெண்குழந்தைக்கு, தனக்கு ஏன் இந்த மந்தாகினி என்ற ஒரு பெயரைச் சூட்டினார்கள் என்று கடுமையான ஒரு கோபம் இருக்கிறது. அந்தக் குழந்தையின் மனநிலையிலிருந்து வளரும் சுவையான, நகைச்சுவை ததும்பும் அருமையான கதை அது. இப்போது ரோகித், ஜோஸ் ஆகிய இரு மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைகள், அவர்களின் கடுமையான உடற்குறைகளால் எப்படியெல்லாம் அழைக்கழிக்கப்படுகின்றன, அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வந்து சாதனை படைக்கிறார்கள் என்பதைப் பற்றிய மனதை நெகிழ வைக்கும் ஒரு சோகம் இழையோடும் படைப்பு. ரோகித்தின் அப்பாவும், ஏனைய உறுப்பினர்களும் எவ்வளவு பரிவோடும், பொறுப்போடும் அவனுடைய மாற்றுத்திறன் குறையைப் பொருட்படுத்தமல் இயல்பான ஒரு பையனாக அவன் வளர்வதற்கு உதவுகிறார்கள் என்பதை ஒரு சிறு செடியின் படிப்படியான வளர்ச்சியைப் படம் பிடித்துக் காட்டுவதைப் போல விமலா மேனன் எழுதியிருக்கிறார். அம்பிகாவின் தமிழாக்கம் அதை வெகு சரளமாக விவரிக்கிறது. ஜோஸ், ரோகித் இடையே மலரும் நட்பும், ரோகித்தின் குடும்பத்தினர் ஜோஸ் மீது காட்டும் அன்பும், இருவரும் ஒரு தாய்ப் பிள்ளைகளாக மாறும் சம்பவங்களும் மறக்க முடியாத சித்திரங்களாகப் பரி ணமிக்கின்றன. இது ஒரு நாவல்தானே, இதுவே நிஜமான சமூக எதார்த்தமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஓர் ஏக்கம், நெஞ்சை அலைக்கழிக்கிறது – நாவலைப் படித்து முடிக்கும்போது!
நம் அயல் வீட்டாருள் நமக்கு மிக நெருக்கமானவர்கள் இலத்தீன் அமெரிக்கப் படைப்பாளிகள். அங்கிருந்து நம் மொழியில் கணிசமான அளவுக்கு நாவல்கள், கட்டுரைத்தொகுதிகள், கவிதைகள் மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளன. இப்போது ஒரு புது வரவு: ‘கடலோடியின் மனைவி’ என்பது. சிலி, பிரேசில், மெக்சிகோ, கியூபா உள்ளிட்ட பதினேழு இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து 20 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை நெஞ்சையள்ளும் தமிழில் மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார் எழில் சின்னதம்பி. ஏற்கெனவே அயல் மொழிக் கதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியீட்டிருக்கிறார். தமிழில் சிறுகதைகளுக்கென்றே கடந்த மூன்றாண்டுகளுக்கு மேலாக வெளியாகிக் கொண்டிருக்கும் ‘சிறுகதை’ இதழில் வெளியான கதைகளின் தொகுப்பு இப்போது நமக்கு வாசிக்கக் கிடைத்துள்ளது. மிக அழகிய வடிவமைப்புடன் காண்பவரின் கண்களையும், கருத்தையும் கவரும் வடிவமைப்பில் இதை வெளியிட்டிருப்பவர் ‘நூல் வனம்’ மணிகண்டன்.
தொகுப்பில், ஒரு வாசகன் என்ற முறையிலும், மொழிபெயர்ப்பாளன் என்ற முறையிலும் இரண்டு அம்சங்கள் மிகவும் கவரக்கூடியவையாக அமைந்துள்ளன. ஒன்று, இவர் பயன்படுத்துகிற பல தமிழ்ச்சொற்கள், மிக இனிய அழகான சொற்கள். தனித்தமிழ் ஆர்வலரோ என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவை தனித்தன்மை வாய்ந்தவை. எடுத்துக்காட்டுக்காக, குழைமா வடிசாறு, பேதுறுகின்ற, மறைசாடல் பகடி, கவி நடைப் புனைவு, அயன வலயப் பாதை – இப்படி நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். இவற்றைப் படிக்கும்போது முதற் பார்வையில் கொஞ்சம் நெருடுவதுபோல தோன்றக்கூடும். ஆனால், தொடர்ந்து வாசிக்க வாசிக்க இத்தகைய சொற்கள் ஓர் இனிமையாய் நமக்குள் நிரம்புகின்றன. இவை எதைக்குறிக்கின் றன என்று அறிய முற்படும் ஆவலைக் கிளர்த்துகின்றன. தென்னமெரிக்க நிலவியல், அந்தப் பகுதி மக்களின் பண்பாடுகள், உணவுப்பழக்கங்கள், மன உணர்வுகள், சமூக அரசியல் பொருளாதார நிலைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இந்தக் கதைகள் சம்பவங்களினூடே இயல்பாக நிலத்தடி நீரின் இழையோட்டத்தைப்போல நமக்குக் கடத்துகின்றன. இரண்டாவது அம்சம், கதைகளின் தேர்வு. மிக நுட்பமும், கூர்மையும் மிக்க கதைகள் இவை.
களவாடப்பட்ட விருந்து, ஒரு சிறுவன் – ஒரு நாய் – ஓர் இரவு, கடலோடியின் மனைவி, உயிர் மரம் போன்ற கதைகள் மறக்கவே முடியாதவை. ‘குழைமா வடிசாறு’ கதை மெக்சிகோவின் எளிய மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் சிறப்பான கதை. சுத்தம் செய்யப்பட்ட சிகரெட்டுச் சாம்பல் தட்டு என்ற கதை, ஒரு கவிதையைப்போல நம் மனதில் சிந்தனை அலைகளை எழுப்புகிறது. ‘வார்த்தைகளால் கோக்கப்பட்ட அணிகலன்களின் தொகுப்பு’ என்ற தலைப்பில் எழில் சின்னதம்பி எழுதியுள்ள முன்னுரை மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. “லத்தீன் அமெரிக்கா முழுமைக்கும் பரவிக்கிடந்த அரசியல் முரண்பாடுகள் சர்வாதிகாரர்களை உருவாக்கி எழுத்துரிமையைப் பறித்தன. புலம் பெயர்ந்து சென்று தங்களது கருத்துகளைப் பதிவு செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டனர் பலரும். எழுபதுகளில் தோன்றிய லத்தீன் அமெரிக்க எழுத்துலக மறுமலர்ச்சியில் ஆண் எழுத்தாளர்களே ஆதிக்கம் செய்தனர். அதற்குச் சிறிதும் குறைந்திராத பெண் எழுத்தாளர்களின் படைப்புகள் பரவலாய் வாசிக்கப்படவில்லை. அந்த இலக்கியத்தை மொழிபெயர்த்த பிற மொழிகளும் ஆண் எழுத்தாளர்களின் மாய எதார்த்தத்திலேயே மயங்கிப் போயின. அத்தகைய மொழிபெயர்ப்புகளைப் படித்துப் பயன்படுத்திக்கொண்ட தமிழ் எழுத்துலகமும் ஆண் எழுத்தாளர்களுடன் தங்களது தேடுதல்களை முடித்துக் கொண்டது“ என்று குறிப்பிடுகிறார் எழில். எவ்வளவு கூர்மையான விமரிசனம்!
இந்த முன்னுரையின் இறுதிப்பத்தி, இசபெல் அயாந்தேயின் ஓர் அற்புதமான மேற்கோளுடன் நிறைகிறது. அதை இங்கே முழுமையாகத் தரலாம் எனத் துடிக்கிறது மனம். எனினும், இக்கட்டுரை ஏற்கெனவே நீண்டுவிட்ட உணர்வு என் துடிப்புக்கு அணை போட்டு விட்டது. வாசகர்கள் தாங்களே படித்து இன்புறுவதே சரியாயிருக்கும். ஒரே ஓர் இடம். அது ஒரு சிறுவன், ஒரு நாய், ஓர் இரவு கதையில் வரும் ஒரு காட்சி. ஒரு சுரங்கத்தொழிலாளி தனது ஒரு நாள் உழைப்பு முடிந்ததும், களைப்புடன் வீடு நோக்கிச் செல்கிறான். அங்கே வருகிற வரிகள்: “நாள் முழுவதும் அவன் காதுகளுக்குள் ஒலித்த விசில் சத்தங்களும் எச்சரிக்கைச் சங்கொலிகளும் இன்னும் அவனுக்குள் ஒலித்துக்கொண்டிருக்க, பெருமூச்சு விட்டபடி நடந்தான். சுருக்கம் விழுந்த கனிமத்தாதுவைப்போலச் சுருங்கியிருந்த அவனது வாலிப முகம், நொடிப்பொழுதில் சுருக்கம் நீங்கி மென் கனிவின் வெடிப்பு அவன் முகத்தில் தோன்ற, தனது குடும்பம் தனக்கு அளித்த நல்வரவையும் அன்பையும் ஏற்றுக்கொண்டு வீட்டினுள் நுழைந்தான்.“ என்ன ஓர் எதார்த்தமான, ஆனால் கவித்துவம் இழையும் சித்தரிப்பு! இந்தத் தொகுப்பைப் படித்தவுடன், நாம் சந்தித்து நட்பு பாராட்ட வேண்டிய, பின்பற்ற வேண்டிய அயல் வீட்டார் இன்னும் ஏராளமான பேர் இருக்கிறார்களே என்ற உணர்வே மேலோங்கியது! அண்டை வீட்டாருங் கூடத்தான்! l