நேர்காணல்: எம்.ஏ. பேபி
சந்திப்பு : ச.வீரமணி
பாடப்புத்தகங்கள் கடந்து புத்தக வாசிப்பு எப்போது தொடங்கியது?
நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே புத்தக வாசிப்பு தொடங்கிவிட்டது. ப்ராகுலம் ஃப்ரண்ட்ஸ் கிளப் நூலகத்தில்தான் முதலில் படிக்க ஆரம்பித்தேன். பின்னர், அருகில் இருந்த பஞ்சாயத்து நூலகத்திற்குச் சென்று புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். உண்மையில் வாசிப்புப் பழக்கம்தான் என் உலகப் பார்வையை மாற்றிக்கொள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. நான் சர்ச்சுக்கு என் அம்மாவுடன் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். என் குடும்பத்தில் நான் கடைக்குட்டி குழந்தையாக இருந்ததால் என்னை சர்ச்சுக்கு அழைத்துச் செல்வதை என் அம்மா விரும்புவார். அப்போதெல்லாம் அங்கேயுள்ள புத்தகங்களைப் படிப்பது பழக்கம். பின்பு நாட்கள் செல்லச் செல்ல பொது அறிவியல், இலக்கியத் திறனாய்வு என வாசிப்பு விரிவானது. பகுத்தறிவு தொடர்பான புத்தகங்களுடன் நான் நெருக்கமாகத் தொடங்கினேன்.
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் மற்றும் இங்கர்சால் எழுதி மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களைப் படித்தேன். பின்பு இரண்டு மலையாள எழுத்தாளர்கள் என்னை மிகவும் கவர்ந்தார்கள். அவர்களுள் ஒருவர் எம்.சி. ஜோசப், அவரை கேரளப் பகுத்தறிவாதத்தின் போப் என்று குறிப்பிடலாம். அவருடைய ‘யுக்தி பிரகாசம்’ என்று தலைப்பிடப்பட்ட புத்தகம், பார்வையின் ஒளி என்று பொருள். அடுத்து சுதந்திரமான மார்க்சிஸ்ட் அறிவுஜீவி, குட்டிபிள்ளா கிருஷ்ணபிள்ளை, இவருடைய புத்தகமும் என்னுள்ளே அறிவியல் மனோபாவத்தையும் பகுத்தறிவுச் சிந்தனையையும் ஏற்படுத்தியது.
இவர்களது நூல்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா?
நீங்கள் எனக்கொரு அற்புதமான கருத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். இவர்களது நூல்கள் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா என்று நான் கண்டறியவேண்டும். நான் இந்நூல்களை மலையாளத்தில்தான் படித்தேன்.
இயக்கத்திற்கு வரும் இளைஞர்கள் தங்களது கம்யூனிச சிந்தனையை வளர்க்க நீங்கள் எந்த புத்தகங்களை பரிந்துரைப்பீர்கள்?
நான் முதன்முதலில் குறிப்பிட விரும்புவது, கம்யூனிஸ்ட் மானிஃபெஸ்டோ, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை. அனைத்து தோழர்களும் இதனை அவசியம் படிக்கவேண்டும். மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் என அனைவரின் எழுத்தும் அதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவைதான். மார்க்சிய நோக்கில் எழுதப்பட்ட ஆயிரக்கணக்கான இலக்கியங்கள், திறனாய்வுகள், கவிதைகள் என பல்வேறு விதமான எழுத்துகளும் கலை வடிவங்களும் இதிலிருந்து எழுதப்பட்டவைதான்.
காரல் மார்க்சின் மூலதனம்கூட, அதன் மூன்று பகுதிகளும் இதன் அடிப்படையில் எழுதப்பட்டதுதான். இதனை எங்கெல்சே குறிப்பிட்டுள்ளார். எனவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை அனைத்து தோழர்களும் அவசியம் படிக்க வேண்டும்.
நாடகம், கலை மற்றும் இலக்கியத்துறையில் உங்களது அனுபவங்கள் பற்றி கூறமுடியுமா?
மேடை நாடகத்தில் எனக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவம் உண்டு. நான் பள்ளியில் படிக்கும்போது நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு அதில் பெண் வேடம். புடவை கட்டி விட்டார்கள். நான் மேடையேறியபோது, பார்வையாளர்கள் கொல் என்று சிரித்துவிட்டார்கள். ஒரே விசில் சத்தம். அதில் நகைச்சுவை என்னவென்றால் நான் கட்டியிருந்தது புடவை. கால் தடுக்குகிறது என்று லுங்கியை மடிப்பதுபோல் செய்துவிட்டேன். புடவை கட்டி ஒத்திகை பார்க்கவில்லை. இப்படி செய்யக்கூடாது என்று நினைக்கிற வயதும் எனக்கு அப்போது இல்லை. எல்லோரும் சிரித்ததும் ரொம்ப தர்மசங்கடாக போய்விட்டது. ஆனால் இன்று வரை அந்த நினைவுகள் நீங்கவில்லை.
பின்னர் கட்சிப்பணிக்கு வந்தபோது நிறைய நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறோம். கேரளாவில் தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, நான் கல்வி மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தேன். அப்போது நாங்கள் உலக தியேட்டர் மாநாட்டை நடத்தினோம். பரத் முரளி என்னுடைய நெருங்கிய நண்பர். அவர் தேசிய விருது பெற்ற சிறந்த நடிகர். சங்கீத நாடக அகாதமியின் தலைவர் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். ஆசிய தியேட்டர் விழாவை நடத்தவேண்டும் என்று அவர் ஆலோசனை கூறினார். உங்களைப்போன்ற சிறந்த நடிகர் உலக தியேட்டர் விழாவை அல்லவா நடத்த வேண்டும் என்று நான் ஆலோசனை கூறினேன். பின்னர் அந்த ஆலோசனை செயல்வடிவம் பெற்று கேரளாவில் சர்வதேச தியேட்டர் விழாவை நடத்தினோம். பள்ளியில் வெகுளித்தனமாக ஆரம்பித்த என் நாடக வாழ்க்கை, சர்வதேச தியேட்டர் விழாவை முன்னின்று நடத்தும் அளவிற்கு பரிணாம வளர்ச்சி பெற்றது.
உங்களுக்கு செவ்வியல் இசையில் ஆர்வம் உண்டு என்று நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அது குறித்த உங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
மரபியல் இசையானது இந்துக்கோவில்களின் பிரதிபலிப்பாக உள்ளது. இந்தியாவில் நெருக்கடி காலம் அமலில் இருந்த நேரம் அப்போது. மாணவர் இயக்கத்தில் இருந்த நான் மிசா சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சில மாதங்கள் சிறையில் இருந்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி மிகவும் தாராளமனம் கொண்டிருந்தார். நீங்கள் அனைவரும் மாணவர்கள். இந்திய பாதுகாப்பு குறித்த ஒரு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள். இருப்பினும் நீங்கள் அனைவரும் மாணவர்கள் என்பதை கருத்தில்கொண்டு நீங்கள் இதுவரை சிறையில் இருந்த காலங்களையே தண்டனை காலமாகக் கருதி உங்கள் அனைவரையும் விடுவிக்கிறேன் என்று தீர்ப்பு வழங்கினார். இந்தச் சம்பவம் என்னில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை நிகழ்த்தியது.
எனக்கு இசையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சென்னையில் எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு கோவிலில் பத்மஸ்ரீ பாலக்காடு கே.வி. நாராயணசாமி கச்சேரி செய்யவிருக்கிறார் என்று என்னுடைய மூத்த அண்ணன் தெரிவித்தார். எல்லா வழிபாட்டுத்தலங்களுக்கும் செல்லும் பழக்கம் எனக்கு இருந்தாலும் கர்நாடக இசை அறிமுகமாகிய பிறகு இசையையும் நான் வழிபட ஆரம்பித்தேன். அன்றைய கச்சேரியில் வயலின் வாசித்தவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் வடக்கஞ்சேரி
வி. சுப்ரமணியம். அன்று மிருதங்கம் வாசித்தவர் உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற மிருதங்க வித்வான் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உமையாள்புரம் கே.சிவராமன். அதுவரை எனக்கு அவர்களைப் பற்றி தெரியாது. ஆனால் அன்றைய தினம் நடந்த கச்சேரி என்னை மிகவும் ஈர்த்தது. எவ்வளவு பெரிய வித்வான்கள். இவர்களுள் கே.வி. நாராயணசாமி மட்டும் இப்போது உயிருடன் இல்லை. அன்றிலிருந்து நான் இவர்களின் பக்தனாக மாறிவிட்டேன். எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நமது நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். என் தந்தைக்கு இசை மீது ஆர்வம் உண்டு. அவர் என்னை கர்நாடக இசை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்றார். ஒவ்வொரு சனிக்கிழமையும் இசை வகுப்புகள் நடக்கும். நான் கடைசிக் குழந்தை என்பதால் என்னை அழைத்துச் செல்ல அவர் விரும்பினார். எனக்கே தெரியாமல் என்னுள் இசை ஆர்வம் இருந்துள்ளது. அது பின்னர் வளர்ந்தது. என் அப்பாவிற்கும் இதில் பங்கு உள்ளது.
உங்களது கவிதைகளின்பால் ஏற்பட்ட ஆர்வம் குறித்து சற்று கூறவும்.
வாசிப்பில் ஈடுபட்ட எவராலும் கவிதைகளின் பால் பரவசம் அடையாமல் இருக்கமுடியாது. பள்ளிப் பருவத்தில் எனக்கு மிகவும் பிடித்த மலையாளக் கவிஞர் சங்கம்புழா கிருஷ்ணபிள்ளை. அவர் ஒரு முற்போக்கு கவிஞர். இடதுசாரிகளுக்கு ஆதரவாகவும் எழுதியிருக்கிறார். கடுமையாக விமர்சனமும் செய்துள்ளார். அவர் ஒரு பட்டாம்பூச்சி போன்றவர். இங்கேயும் அங்கேயும் தாவிக்கொண்டிருப்பார். ஆனால் மிகச் சிறந்த கவிஞர். சிறுவயதில் என்னை ஈர்த்தவர் சங்கம்புழா கிருஷ்ணபிள்ளைதான். பின்னர் குமாரன் ஆசானின் கவிதைகள் ஈர்த்தன. வாசிப்பு விரிவடையும்போது பாப்லோ நெருடாவின் கவிதைகள் பிடித்தவை. தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு வாசிப்பு எந்த அளவிற்கு முக்கியம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.
நம் உடல் உறுதியாக இருக்க வேண்டுமானால் நல்ல உணவு, உடற்பயிற்சி தேவை. நமது அறிவுசார் வாழ்க்கை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கலைகளில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். வாசிப்பு, இசை கேட்டல், திரைப்படங்கள் பார்த்தல் எல்லாம் இதில் அடங்கும். வாசிப்பின் மூலம்தான் நீங்கள் உங்களை அறிவாளியாக வளர்க்க முடியும். வாசிப்பின் மூலம்தான் அறிவுசார் உலகம் எவ்வாறு சிந்தனை வளர்ச்சி பெற்றுள்ளது, உலக சிந்தனை எங்கு சென்று கொண்டிருக்கிறது என்று புரிந்துகொள்ள முடியும். அரசியல் செயற்பாட்டிற்கிடையில் வாசிப்பதற்கு கிடைக்கும் நேரம் மிகவும் குறைவு. ஆனால் வாசிப்பிற்கும் நேரம் ஒதுக்கிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்களது அரசியல் பொறுப்பினை உங்களால் சரியாக நிறைவேற்ற முடியாது.
நீங்கள் மிகவும் பக்திவயப்பட்ட குடும்பத்தில் பிறந்துள்ளீர்கள். புரட்சியாளர்கள் பிறப்பதில்லை. பல்வேறு வாசிப்புகளாலும் நிகழ்வுகளாலும் பரிணாம வளர்ச்சி அடைந்து இயக்கத்தில் இணைகிறார்கள். எம்.ஏ. பேபி என்ற மாணவர் தோழர் எம்.ஏ.பேபியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது எப்படி? உங்களை ஈர்த்த அரசியல் ஆசான்கள் யார்?
இது மிகவும் சுவாரஸ்யமான கேள்வி. உண்மையில், சமூகமும் மாணவர் இயக்கமும் என்னில் அரசியல் சிந்தனையை விதைத்தன. அந்நாட்களில் மாணவர் இயக்கம் எஸ்.எஃப்.ஐ, அல்ல, கேரளா ஸ்டூடண்ட் ஃபெடரேஷன், கே.எஸ்.எஃப். நான் பள்ளியில் படித்தபோது மாணவர் தேர்தலில் கே.எஸ்.எஃப். வெற்றிபெறாது. இப்போது நான் நினைத்துப்பார்க்கிறேன், தோற்போம் என்று தெரிந்தும் போட்டியிட்டது எவ்வளவு சிறந்த முடிவு என்று. என்னுடைய அண்ணனும் மாணவர் இயக்கத்தில் முன்னணி போராளி. மிகவும் முற்போக்கு சிந்தனையுடையவர். நான் வளர்ந்த பகுதியில் கயிறு தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், முந்திரி விவசாயிகள் ஆகியோர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு நிறைய இயக்கங்கள் நடைபெற்றன. இந்த இயக்கங்களும் என்னை ஈர்த்தன. வாசிப்பின் மூலமும் முற்போக்கு சிந்தனைகள் உருவாகின. கே.எஸ்.எஃப்., கல்வி உரிமைக்காக போராடியது. கல்வியை ஜனநாயகமயமாக்க போராடியது. இந்த நடவடிக்கைகள் என்னை இயக்கத்தின்பால் ஈர்த்தது. பின்னர் இயக்கத்திற்காக மாணவர்களை கண்டறிவது சவாலான விஷயமாக இருந்தது.
மதுரை மாநாட்டிற்கு பிறகு எங்கள் ஊரில் உள்ள தோழர் விக்ரமனை சந்தித்தேன். அவருக்கு தற்போது 83 வயது. நான் மாணவராக இருந்தபோது அவர் உள்ளூர் குழுவின் கட்சி செயலாளராக இருந்தார். அவர்தான் எனக்கு கட்சியை அறிமுகப்படுத்தியது. கட்சித்திட்டம், கட்சியின் அமைப்புச் சட்டம் குறித்து எனக்கு கல்விப்புகட்டி என்னை கட்சி உறுப்பினராக மாற்றியவர் தோழர் விக்ரமன்தான்.
உங்கள் அரசியல் ஆசான்கள் யார்?
ஒருவரை மட்டும் கூறமுடியாது. தற்போது குறிப்பிட்ட தோழர் விக்ரமனை கூறலாம். அதன் பின் எங்கள் மாவட்டச் செயலாளராக இருந்த தோழர்ர ஸ்ரீதரன். அவருக்கு கல்லூரிப் படிப்பெல்லாம் அதிகமாகக் கிடையாது. ஆனால் உழைக்கும் வர்க்கத்தின் அற்புதமான தோழர். அவர் முன்மாதிரி கம்யூனிஸ்ட். எங்களை அவர் மிகவும் கவர்ந்தார்.
இந்தியா முழுவதும் ஒருங்கிணைந்த கலாச்சாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். பல்முனை கலாச்சாரம் பன்மொழி கலாச்சாரம் உள்ள இந்தியாவைப்போன்ற ஒரு பன்முக நாட்டில், ஒருங்கிணைந்த கலாச்சாரக் கட்டமைப்பை எவ்வாறு உருவாக்க முடியும்?
இந்தியாவில் பல்வேறு விதமான கலாச்சாரங்களும் மொழிகளும் உள்ளன. ஒவ்வொன்றிற்கும் அதற்கென தனிச்சிறப்பு உண்டு. அதே சமயம் அவற்றுக்குள் ஓர் ஒற்றுமையும் உண்டு. நாம் ஒரு முற்போக்கு, ஜனநாயக கலாச்சார இயக்கத்தை எடுத்துச்செல்ல வேண்டுமென்றால், உண்மையில் அது முற்போக்கு, ஜனநாயக கலாச்சார இயக்கங்களாக, பன்முகத் தன்மை கொண்ட இயக்கங்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்க்கும் முறை ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்க்கும் முறையும் வெவ்வேறானவை. எனவே மனிதாபிமானம், சமத்துவம் இவற்றை உள்ளடக்கிய ஒரு பொது முறை தேவை. ஆண் பெண் சமத்துவம், ஆணாதிக்க சிந்தனையை எதிர்த்து போராட வேண்டிய தேவை இவையெல்லாம் பொது கலாச்சாரத் தேவைகள். இதனை அந்தந்தக் கலாச்சார, மொழிகளுக்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டியுள்ளது.
ஃபிடல் காஸ்டிரோவுடன் உங்கள் அனுபவம் குறித்து கூறவும்.
யுஎஸ்எஸ்ஆர் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசத்திற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. எனக்கு ஃபிடல் காஸ்டிரோவிடம் பரிச்சயம் உண்டு. யுஎஸ்எஸ்ஆர் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் சோசலிசத்திற்கு சற்று பின்னடைவு ஏற்பட்டதற்கும் எனக்கு ஃபிடல் காஸ்டிரோவிடம் உள்ள நட்பிற்கும் என்ன தொடர்பு என்று நினைக்கலாம். அந்நாடுகளில் சோசலிசத்திற்கு பின்னடைவு ஏற்பட்டதால் கியூபாவும் பல்வேறு சிக்கல்களை சந்தித்தது. இந்தியாவில் கியூபா சாலிடாரிட்டி இயக்கத்தை நாம் தோற்றுவித்தோம். நான் அதன் அமைப்பாளராக இருந்தேன். தமிழ்நாட்டில் அதன் தலைவராக இருந்தவர் என்.ராம். தோழர் சுர்ஜித் அதில் உறுப்பினராக இருந்தார் முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகனான வரலாற்றுப் பேராசிரியர் சர்வபள்ளி கோபால் அதில் உறுப்பினராக இருந்தார். தமிழ்நாட்டில் தலைவர் கருணாநிதி அதில் உறுப்பினராக இருந்தார். உமையாள்புரம் சிவராமன் அதில் உறுப்பினராக இருந்தார். நாங்கள் பணம் சேகரித்து ஒரு கப்பல் நிறைய தானியங்களையும் உணவுப்பொருட்களையும் ஹால்தியா துறைமுகத்திலிருந்து ஹவானாவிற்கு அனுப்பிவைத்தோம். அப்போது ஃபிடல் காஸ்டிரோ இந்த இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கியூபாவிற்கு வந்து அந்த உதவிப்பொருட்களை பெற்று அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க நான், தோழர் சுர்ஜித், காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என். சிங் ஆகியோர் கியூபா சென்றோம். அப்போது அவரது அலுவலக அறையில் எங்களிடம் மூன்று மணிநேரம் திறந்த மனதோடு விவாதம் செய்தார். இந்தியாவின் நடப்புகளை அவர் ஆழமாக அறிந்திருந்தார். பாபர் மசூதி விவகாரம் குறித்து சுர்ஜித்திடம் விவரம் கேட்டார். நான் அவரிடம் சுமார் 25 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தேன். எங்களிடையே ஓர் இனிய நட்பு உருவானது. அதன் பின் நான் மூன்று நான்கு முறை கியூபாவிற்கு சென்றுவந்தேன். எங்கள் நட்பு வளர்ந்தது.
நீங்கள் கேரளாவில் மாநிலக் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்தீர்கள் அல்லவா?
ஆமாம். கேரளாவை தாக்கிய பல்வேறு பேரிடர்களில் நான் கல்வி அமைச்சராக பொறுப்பு வகித்ததும் ஒரு பேரிடர்.
தற்போதைய பாஜக அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை, கல்வியில் மதத்தை புகுத்துதல் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனை முறியடிக்க சிபிஎம்மின் திட்டம் என்ன?
முதலில் நாம் நமது இயக்கத்தை சேர்ந்த தோழர்களுக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, மாணவர் இயக்கம், வாலிபர் இயக்கம், ஆசிரியர் இயக்கங்கள் இதன் பாதகங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். கேரளாவில் இடதுசாரிகள் தலைமையிலான அரசாங்கம் உள்ளது. அந்த அரசு மாற்றுக் கல்விக்கொள்கையை முன்வைக்கிறது. புதிய கல்விக் கொள்கையில் உயர்நிலைக் கல்வியிலிருந்து கணிப்பொறி கல்வி புகட்டப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் வெகுநாட்களுக்கு முன்பிருந்த ஆரம்பப் பள்ளி அளவிலேயே கணினி கல்வி தொடங்கி விட்டது. கல்வித்துறையில் கேரளாவின் வளர்ச்சி தேசிய கல்விக்கொள்கையை தாண்டி வளர்ந்துள்ளது. ஆனால் மத்திய அரசு மாநில அரசுக்கு நிதி வழங்குவதில்லை. எங்கள் கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி அளிப்போம் என்று வற்புறுத்துகிறார்கள். தமிழ்நாட்டிலும் இதேபோன்ற சிக்கல் உள்ளது. சமக்கிரஹ சிக் ஷா அபியானுக்கான ரூ.2000 கோடியை தர மறுக்கிறார்கள். எனவே தேசிய கல்விக்கொள்கை குறித்த விழிப்புணர்வை மாணவர் இயக்கங்கள், ஆசிரிய இயக்கங்கள் மத்தியில் நாம விரைவாக கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசிடமிருந்த நிதி பெறும் போராட்டமும் அரசுகளுக்கு உண்டு.
சமூக மாற்றத்தை கொண்டுவருவது அரசியல் இயக்கங்களா அல்லது கலை, கலாச்சார, இலக்கிய இயக்கங்களா?
சமூக மாற்றத்தில் மறுமலர்ச்சி ஏற்பட சமூகக் கலாச்சாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நீண்ட நெடிய உரையைவிட, ஒரு கவிதை மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடியும். ஒரு நாடகத்தால் நல்ல சிந்தனையை விதைக்க முடியும். நல்ல பாடல்களினால் நல்ல மாற்றங்களை கொண்டுவர முடியும். உதாரணமாக, ஹம் தேக்கேங்கே பாடலை குறிப்பிடலாம். ஃபைஸ் அகமதுவை குறிப்பிடலாம். இக்பாலை குறிப்பிடலாம். தற்போது டி.எம். கிருஷ்ணா உருது, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் பாடுகிறார். எனவே சமூக மாற்றத்திற்கு கலை மாற்றமும் தேவை, கலாச்சாரத்தின் பங்களிப்பும் தேவை. இலக்கியத்தின் பங்களிப்பும் தேவை. இவற்றை உள்ளடக்கிய இயக்கங்களும் தேவை. அப்போதுதான் சமூக மாற்றம் ஏற்படும்.
படைப்பாளர்களுக்கு அரசியல் பார்வை தேவையா?
இதில் இரண்டு அம்சம் உள்ளது. ஒன்று தன்னுடைய படைப்பின் மூலம், அதாவது தன்னுடைய கவிதை, நாவல், நாடகங்களின் மூலம் தனது அரசியல் இயக்கத்திற்கு பங்காற்றுவது. இப்சனின் டால்ஸ் ஹவுஸ் நாடகத்தில் அதன் கதாநாயகி நோரா தனது கணவனுக்கு கதவை அறைந்து சாத்துவார். அந்தக் கதவு அடைக்கப்பட்ட சத்தம் ஐரோப்பா முழுவதும் கேட்டது. அதுதான் அரசியல். பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று இப்சன் தெருவில் இறங்கிப்போராட வேண்டும் என்று அவசியம் இல்லை. அவரது படைப்பு அவ்வேலையை செய்துவிட்டது. அவர்கள் தெருவிலும் போராட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது.
சில படைப்பாளர்கள் தெருவில் இறங்கி போராட விரும்பலாம். அது அவர்களின் விருப்பம்.
பெண்களுக்கென்று 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உங்களது சமீபத்திய மாநாட்டில் பங்குபெற்றவர்களில் 20 சதவீதத்தினர் மட்டுமே பெண்கள். அவர்களை உங்கள் இயக்கத்தின்பால் இழுக்க உங்களிடம் என்ன திட்டம் உள்ளது.
நாம் ஓர் ஆணாதிக்க சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெண்களை செயலாற்றல் பெற்றவர்களாக மாற்றுவதற்கான முயற்சியை சிபிஎம் எடுக்கவில்லை என்றால் அதை கம்யூனிஸ்ட் கட்சி என்றே ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை செயலாற்றல் உள்ளவர்களாக மாற்றவும் அவர்களிடம் சமூக விழப்புணர்வு ஏற்படுத்தவும், ஆணாதிக்க சமூகத்தின் எதிர்மறைகளை அவர்கள் உணர வைக்கவும் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் சிபிஎம் எடுத்து வருகிறது. அதற்கு அனைவரின் ஒன்றுபட்ட போராட்டம் அவசியம்.
உங்களின் நெருக்கமான அலுவர்களுக்கு இடையில் எங்களுக்கு நேர்காணல் வழங்கியதற்கு நன்றி. l