மருத்துவர் அகிலாண்டபாரதி அவர்கள் எழுத்துலகிற்குப் புதியவரில்லை. பல்வேறு புதினங்கள், சிறுகதைகள் மற்றும் மருத்துவமும் மனித நேயமும் கலந்த கட்டுரைகள் என்று நிறைய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டுள்ளார்.
இவர் எழுதுகிற கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம். கதைகளைப் போன்ற விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் கட்டுரைகளுக்கு இல்லை. ஆனால், கட்டுரைகளை சுவாரசியமாகவும், தொய்வில்லாமலும் கொண்டு செல்வது எளிதான காரியமல்ல. அந்தக் கலை இவருக்கு நன்றாக வருகிறது. கடலில் வீசுகின்ற அலைகளைப்போல மீண்டும் மீண்டும் வந்து நம் மனங்களைத் தொட்டுவிட்டு ஈரப்படுத்திவிட்டே செல்கின்றன இவருடைய கருத்துகள்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பில், தான் வசிக்கும் ஊரான சங்கரன்கோவில் பற்றிய அரிய பல தகவல்களைத் தேடி எடுத்து அவற்றை வெவ்வேறு தலைப்புகளில் தொகுத்து வழங்கியிருக்கிறார்.
சமத்துவ நகரம் என்று தனது ஊரை இவர் அழைப்பதில் இருந்தே, இந்தக் கட்டுரைத் தொகுப்பில் தனது ஊரைப் பற்றி ஆசிரியர், தான் கேள்விப்பட்ட பற்பல வித்தியாசமான தகவல்களை விதவிதமான கோணங்களில் எடுத்து ஆராய்ந்து சமன்படுத்தி நம் முன்னே இந்த நூலில் பரத்தி வைக்கிறார். மனம் நிறைய எதிர்பார்ப்புடன் புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். நேரம் போனதே தெரியவில்லை. உட்கார்ந்த இடத்திலேயே என்னைக் கைது செய்துவிட்டது இந்த வாசிப்பு. பிரமிப்பும், மனநிறைவுமே எனக்குக் கிடைத்த பரிசுகள். புன்னைவனம் பற்றிய கட்டுரையில் சங்கரன்கோவில் எப்படி உருவானது என்பதை வரலாற்று ஆதாரங்களுடன் அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர். உக்கிரபாண்டியரால் ஆரம்பிக்கப்பட்டு அதன்பிறகு என்னவெல்லாம் மாற்றங்களைக் கோவில் எதிர்கொண்டது என்பதை முழுமையாக அறிந்துகொள்ள முடிகிறது. இந்தக் கோயில் உருவான கதையை ஒரு வரலாற்று நாவலாக ஆசிரியர் எழுதி வெளியிட்டிருப்பது உபரித் தகவல்.
கோழிக்குத் தெரிந்தது கோமதிக்குத் தெரியாதா? என்கிற சுவாரசியமான கேள்வியுடன் ஆரம்பிக்கிறது ஒரு கட்டுரை. திருநெல்வேலி அழகிய சொக்கநாதப் பிள்ளை என்கிற கவிஞர்தான் அந்தக் கேள்வியைக் கேட்டவர். ஏன் என்கிற விளக்கம் இறுதியில் கிடைத்தது. ஆடித் தபசு எப்படி மத நல்லிணக்கத்தை உள்ளடக்கியுள்ளது என்பதை அறிந்து கொண்டதும் சிலிர்த்துப் போனது எனக்கு. ஒருபக்கம் மாவிளக்கு போடுவதைப் பற்றியும், புற்று மண்ணின் சிறப்பு பற்றியும் ஆசிரியர் பேசுகிறார். மற்றொரு பக்கம் கோயிலுக்கு சேவை செய்யும் இசுலாமிய நண்பர்கள் பற்றியும், ரமலான் புனித நோன்புக் கஞ்சிக்கான அரிசி கோயிலில் இருந்து செல்வது பற்றியும், மசூதியின் விளக்கிற்காக மூன்று லிட்டர் எண்ணெய், கோயிலிலிருந்து அனுப்பப்படுவது பற்றியும் அனைவருக்கும் தெரிவிப்பதன் மூலமும் தன்னுடைய உன்னதமான சமூக அக்கறையைக் காட்டுகிறார் ஆசிரியர்.
பாம்பாட்டிச் சித்தர் பற்றிய தகவல்கள் எனக்கு முற்றிலும் புதியவையாக இருந்தன என்பதால் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.
அது மட்டுமல்லாமல், அதனை இயற்றிய பாம்பாட்டிச் சித்தர் முதலில் இரத்தினத்தைத் தேடியலைந்ததையும், அதற்குப் பின்னர் தொடர்ந்த அவரது ஆன்மிகப் பயணம் பற்றியும், அகத்தில் ஒளிந்திருக்கும் அற்புதமான தத்துவ இரத்தினத்தை அவர் கண்டுகொண்டதையும் பற்றி அறிந்துகொண்டேன் இந்தக் கட்டுரையின் மூலம். ஒவ்வொரு பாடலிலும் மறைந்திருக்கும் தத்துவார்த்தமான கருத்துகளைப் புரிந்து கொள்ள மீண்டும் காவடிச்சிந்தின் தந்தை என்று அழைக்கப்படும் அண்ணாமலைக் கவிராயர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை அழகாகத் தந்துள்ளார். இதற்கான தகவல்களைச் சேகரிக்க இவர் எவ்வளவு உழைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது மலைப்பாக இருக்கிறது. மறைந்த திருமதி. எம். எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களால் ஐக்கிய நாட்டு சபையில் இவரது பாடல் இசையோடு பாடப்பட்ட தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. சங்கரன்கோவிலில் அமைந்துள்ள அண்ணாமலை ரெட்டியார் பொதுச்சத்திரம் இன்றும் இலக்கியங்களை வளர்த்து, ‘உவப்பத் தலைகூடி உள்ளப் பிரியும் இடமாக’ இருந்து வருவது பெருமைப்பட வேண்டிய தகவல்.
கரிவலம் பற்றிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிடாமல் என்னால் கடக்க முடியவில்லை. ‘கருவைக் களாவின் நறுநிழல் கீழே!’ என்றும் ‘களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்’ என்று அழைக்கப்பட்ட சேரமன்னன் பற்றிய பதிற்றுப்பத்து பாடலும் இலக்கியத் தகவல்கள் என்றால், பல்வேறு புராணக் கதைகள், தகவல்கள் மற்றும் பாண்டிய மன்னர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும் இந்தக் கட்டுரையில் கொட்டிக் கிடக்கின்றன. இந்தக் கட்டுரையை விரித்துத் தனிப் புத்தகமாக எழுதலாம். இல்லையென்றால் ஆசிரியர் இந்தக் குறிப்புகளின் உதவியுடன் கரிவலத்தைத் தனது அடுத்த வரலாற்று நாவலின் கதைக்களமாகத் தேர்ந்தெடுக்கலாம்.
கல்வெட்டுகள் பற்றிய கட்டுரையில் ARE பற்றிய விளக்கமும், ஆசிரியர் சேகரித்த கல்வெட்டுகள் பற்றிய தகவல்களும் அற்புதம். ‘பட்டரில் இருவர், பாண்டியரில் இருவர்’ என்கிற புகழுக்கு உரிய அதிவீரராம பாண்டியர் மற்றும் வரதுங்கராம பாண்டியர் பற்றிய தகவல்கள் அருமை. இரண்டு பாண்டியர்களின் இலக்கியப் புலமையும் போற்றத்தக்கது.
தொடர்ந்து வந்த அத்தியாயங்களில் மலையடிக்குறிச்சி, ஆனையூர், வீரசிகாமணி, திருமலாபுரம், நெசவு, புரட்சிப் போராட்டம் பற்றித் தெரிந்து கொண்டேன். வீரசிகாமணி மற்றும் திருமலாபுரத்தில் இருக்கும் குடைவரைக் கோயில்களை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரைப்போல ஆய்வு செய்து ஆசிரியர் கூறியுள்ள கருத்துகள் என்னை வியக்க வைத்தன. நெசவுக் கட்டுரையில் நெசவுத்தொழில் பற்றிய அரிய தகவல்கள் பல மண்டிக் கிடக்கின்றன. அடுத்து வரும் புரட்சி பற்றிய கட்டுரையில் நெசவுத் தொழிலாளிகளின் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றித் தெரிந்துகொண்டதும் மனம் கனத்துப்போனது. அடுத்தடுத்து வந்த கட்டுரைகளில் செங்களம், உணவு, தட்டச்சு மிஸ்ஸியம்மா, விவசாயம், பால் பண்ணை, இலக்கியப் பொதுநல வட்டம், மக்கள் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அவை வெறுமனே தகவல்களாக மட்டுமில்லாமல் சொல்லப்பட்ட விதத்தில் மிக சுவாரசியமாகவும் அமைந்துள்ளன. இந்தப் பயணத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மனிதர்கள் அதிகம். நேரில் சென்று குடைவரைக் கோவில்களைப் பார்ப்பது போன்ற அனுபவம் வாசிக்கும்போது கிடைத்தது. அந்தக் குடைவரைக் கோவில்கள் தொடர்பாக நிறைய நூல்களை வாசிக்க வேண்டும் என்கிற அவா என் மனதில் எழுகிறது. முற்றிலும் புதிய அனுபவம். ஒரு வரலாற்று நாவலை எழுதியதற்கு நிகராக இந்த நூலுக்கான தகவல்களை நிறைய சேகரித்திருப்பதை என்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
எதை எழுதுவது என்று இருந்த குழப்பம் போய் இறுதியில், அடடா இதை எழுதவில்லையே, அதைப் பற்றி எழுத நினைத்தேனே, முடியவில்லையே என்றெல்லாம் ஆசிரியருக்குத் தோன்றியதாகக் கூறுகிறார். இன்னும் நகரத்தின் திரையரங்குகள், உடலுழைப்புத் தொழிலாளர்களைப் பற்றியெல்லாம் நிறைய தகவல்கள் திரட்டியிருக்கலாம்; நாள்தோறும் தங்கள் விளைபொருட்களைக் கொண்டு வந்து பேருந்து நிலைய வாசலிலும், உழவர் சந்தையிலும் வைத்து விற்கும் விவசாயிகளிடம் ஆளுக்கு நாலு கேள்விகள் கேட்டு ஒரு கட்டுரை எழுதியிருக்கலாம்; அருகிலுள்ள கிராமங்களில் தெலுங்கு பேசும் மக்களிடம் பேசி அவர்களுடைய முன்னோர்கள் பற்றி, அவர்களது வாழ்வியல் பற்றிக் கேட்டிருக்கலாம். அலுவலகங்களில் பணியாற்றும் எண்ணற்ற அரசு ஊழியர்களைச் சந்தித்து அவர்களுடைய அனுபவத்தையும், பெருந்திரளாக அரசுத் தேர்வுகளுக்கு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் பார்வையையும் பதிவு செய்திருக்கலாம். முன்னாள், இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னோடியான அரசியல் தலைவர்கள் பலர் நெருங்கிய நட்பு வட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசித் தகவல்கள் திரட்டியிருக்கலாம். அவ்வப்போது நீறுபூத்த நெருப்பாக ஆங்காங்கே கனன்று கொண்டிருக்கும் ஜாதிச் சண்டைகளை, அதை ஒடுக்குவதற்கு காவல்துறை எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளை, இப்படிப் பலவற்றைக் குறிப்பிடலாம். கருப்புப் பக்கங்கள் சில உள்ளன. எண்ணற்ற குற்றங்களும், கொலைகளும், தற்கொலைகளும் அடிக்கடி நிகழ்கின்றன. அவற்றிற்கான உளவியல் காரணங்களை ஆராய்ந்து எழுதியிருக்கலாமோ என்று சிந்திக்கிறார் ஆசிரியர். அதாவது நூலை முடித்துத் தந்த பின்னரும் படைப்பாளிக்கே உரிய, எழுதுவதற்கான வேட்கை சிறிதளவுகூடக் குறைவதில்லை என்பதை இவருடைய எண்ண ஓட்டம் நிரூபிக்கிறது. எவ்வளவு தகவல்கள், இவற்றைச் சேகரிக்க எவ்வளவு உழைத்திருக்கிறார் என்று நினைத்துப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. கதைகளோ, கவிதைத் தொகுப்புகளோ எண்ணற்றவை வெளி வரலாம். ஆனால், இதைப் போன்ற கட்டுரைத் தொகுப்பு நமக்கு வாசிக்கக் கிடைப்பது மிகவும் அரிது. l
