ராபர்ட் கிளைவ் தன் 17ஆவது வயதில் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவைத் தன் நாட்டோடு இணைக்கத் துடித்த டூப்ளேயை தோற்கடித்து, ஆற்காடு கோட்டையை கைப்பற்றி ‘ஆற்காட்டு நவாப்’ என்ற பெயரும் பெற்றார்.
கும்பினிப் பையன்களை மணக்க இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்த பதினொரு பெண்களில் ஒருவரான மார்க்கரட் மஸ்கரலினைக் காதலித்து திருமணம் செய்ததை சொல்லும் கதை. தீனின் நாவல்கள் தொடங்கும்போது அருமையான இயற்கை வர்ணனைகளோடு தொடங்கும். போகப் போக அவர் கதைக்குள் போய் விடுவதாலோ, இல்லை நாம் கதைக்குள் மூழ்கி விடுவதாலேயோ அதை ரசிக்கத்தவறி விடுவோம். அதனாலேயே நாம் நாவலின் முதல் அத்தியாயத்தை இரண்டு முறை வாசிக்கலாம்.
“பொன் துகளாய் கிடக்கும் நீண்ட கடற்கரையை பார்த்தான்” “கடலலை வெள்ளி நுரைக் கோடு தீட்டிக்கொண்டு கரையை நோக்கித் தாவி வந்து கொண்டிருந்தது” “அவன் சிவப்புத் தொப்பி தன் சிவந்த இறக்கையை விரித்த பறவையைப்போல பறந்து கீழ்த்தரை படிக்கட்டில் உட்கார்ந்தது. ‘இந்த மணல் துகள்கள் சூரியனால் புடம் போடப்பட்ட தங்கப்பரல்கள்போல மினுங்கின.’ இவை எல்லாம் நாவலின் தொடக்கத்தில் வாசகனை ரசனைக்குள் ஆழ்த்தும் வரிகள்.
கிளைவும் எட்மண்டும் நண்பர்கள். எட்மண்டு ஒரு பெண்ணின் சாயலோடு கிளைவுக்கு அறிவுரை சொல்வான். அவனுக்கு பெண்களைவிட கிளைவை பிடித்திருந்தது. எல்லா ராணுவக் குழுக்களிலும் வயதானவர்களை அனுபவத்திற்காகவும், இளைஞர்களை வேகமான செயலுக்காகவும் இணைத்து இருப்பார்கள். இளைஞர்கள் கனவுப் போதையில் மிதக்க, வயதானவர்கள் பலான ஜோக்குகளோடு வலம் வருவார்கள். தன் அப்பாவும் சித்தப்பாவும் வழி அனுப்பி வைக்க கிளம்பி வந்த ஏழை கிளைவ் பல இன்னல்களுக்கு உள்ளாகிறார். அவன் வந்த கப்பலும் விபத்துக்குள்ளாகி ஒன்பது மாதங்கள் தாமதமாக, கையில் உள்ள பணமும் செலவழிந்து பரிதாபமாக நிற்பதை வாசிக்கும்போது இதிலிருந்து அவர் ஆற்காட்டு நவாப்பாக ஆனது வரையிலான அவர் வளர்ச்சியைப் படிக்க ஆர்வம் கூடுகிறது.
கிளைவ் லோப்மாஸ் இனப்பெண் ஒருத்தியை சந்திப்பதாக வருகிறது. லோப்மாஸ் இனம் என்பது ஆங்கிலோ இந்தியர்போல, போர்ச்சுக்கீசியர் இந்தியர் கலந்ததால் உருவானது என்கிறார் ஆசிரியர். பெண்கள் கிளைவின் அழகினாலும் கம்பீரத்தினாலும் மட்டுமல்ல அறிவினாலும், துணிச்சலினாலும் கவரப்பட்டு இருப்பார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணிடம் “எல்லா நேரத்தையும் தனது ஆக்கிக் கொள்கிறவன் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பான்” என்பார்.
இதற்கு ஓர் உதாரணம் எப்போதாவது தன் எதிர்ப்பாலினத்திடம் ஒரு ஈர்ப்பு வருகிறபோது அவனோ அவளோ அதில் கரைந்து போய் காணாமல் போய் விடுகிறார்கள். அந்த நேசத்திற்காக எதையும் இழக்கவும் செய்யவும் துணிந்து விடுகிறார்கள் இது கதைக்கு இடையே ஆசிரியரின் கருத்து. பல காதல் வெற்றி பெறுவதற்கு இந்த உணர்வு இருவரிடமும் சமமாக இருப்பதுதான் காரணம் ஆகிறது.
சினிமா பார்த்து சில சமயங்களில் கொடுத்த காசு இந்த ஒரு சீனுக்கு சரியாப் போச்சு என்று சொல்வோமே அதுபோல கிளைவ் ஜாகியூஸ் என்ற பெண்ணிடம் விடைபெறும் நிகழ்ச்சி வாசிக்கும் போது தோன்றியது என்ன ஓர் அழகான விடைபெறல். “உன்னை என் வளர்ப்புத் தாய் போல் பார்த்துக் கொள்வேன்” என்று கிளைவ் சொல்லுவார். வெறும் உடல்சார்ந்து மட்டுமின்றி ஒரு தாய் மீது காட்டும் அன்பும் அக்கறையும் ஒத்ததுதான் உண்மைக் காதல்.
ஒன்றிரண்டு உடைகளோடு கப்பல் ஏறிய கிளைவ் அந்த உடைகளும் கிழிந்த நிலையில் தன் சித்தப்பாவின் நண்பர் செய்த உதவியோடு வாழ்க்கையை தொடங்குகிறார். அந்த எளிய நிலையிலிருந்து ஆற்காட்டு வீரரான வளர்ச்சி நமக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது.
கிளைவ் மாபெரும் வீரனாக இருந்தாலும் இடையிடையே கப்பலில் ஏறியபோது இருந்த ஏழ்மையை சொல்லும்போதும் நலிந்தவனுக்கும் நன்றாகி விடலாம் என்ற நம்பிக்கை வரும். இந்தியா வந்தபோது தன் அப்பாவுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுகிறார். எதற்கும் பதில் வரவில்லை. பின் தன் சித்தப்பாவுக்கு எழுதுகிறார். பின் இரண்டு மாதங்கள் கழித்து தன் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு எழுதுகிறார். கடிதம் எழுதுவதற்கு பதில் வராதபோதிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு எழுதுகிறார். எனக்கு இந்தக் கடிதத்தை படிக்காமலேகூட ஒரு வார்த்தை எழுதினால் போதும் மனம் இதம் கொண்ட நட்பை உணர்த்திவிடும் என்று எழுதி இருக்கிறார்.
கடற்காற்று கப்பலை அலைக்கழிக்க பாய் மரங்களை விரித்து பலரும் அதன் மேல் ஏறி நிற்கிறார்கள். அவர்களுள் ராபின்யங் என்ற கைதியும் ஒருவன். கடற்காற்று அமைதியானதும் அவன் இரு கைகளையும் விரித்து ஆரவாரிக்கும் போது திடீரென்று மறுபடியும் அந்தக் கடல் காற்று அவனை அடித்து இழுத்து கடலில் போடுகிறது. நுரைப் பூக்களின் மேல் அவன் தலை தெரிந்தால் காப்பாற்றி விடலாம் என்ற நிலையில் தெரியாது போக, அவனை அங்கேயே விட்டபடி கப்பல் நகர்ந்து விடும். இந்த நிகழ்வை தீன் எழுதினால் வாசிக்கும்போது நாமே கப்பலில் பயணித்த உணர்வு. ஆம், அச்சம் தரும் உணர்வு வரும்.
கொன்சால்வஸ் என்ற கேப்டன் கடலில் எப்படி திசை கண்டு பயணிக்கிறோம் என்று பள்ளிப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லிக்கொடுப்பார். நமக்கும் அது பாடமாகும். அந்தக் காலத்தில் கிராஸ்டாப் என்ற குழல் போன்ற கருவியையும் வானவெளிக் குறியீடுகளையும் வைத்துத்தான் கப்பலில் பயணத்திருக்கிறார்கள். சில சமயம் அவை தப்பாகிவிடும்போது உலகைச் சுற்ற வேண்டி வரும்.
மலர்கள் இரவில் கண்களை மூடிக்கொண்டு பகலில் கண் விழிப்பது அங்கு நடக்கும் குடியையும் கும்மாளத்தையும் காணாமல் இருப்பதற்குத்தானோ என்று ஓர் இடத்தில் எழுதி இருப்பார் ஆசிரியர். எவ்வளவு அழகான கற்பனை. மலர்கள் மென்மையானவை அல்லவா? இதுபோல, கதைக்கு இடையே ஆசிரியர் நம்மோடு பேசிக்கொண்டே இருப்பார். கதை வாசிக்கத் தொடங்கிய கொஞ்சம் பக்கங்களிலேயே கிளைவுக்கும் எட்மண்டுக்கும் இடையிலான நட்பை பற்றிய என் சந்தேத்துக்கான விடை கதையின் கடைசிப் பக்கத்தில் இருந்தது. அது கிளைவ் மார்கரெட்டை விரும்பி திருமணம் செய்வதற்கான வித்தியாசமான காரணமாக இருந்தது. ஆம், காதல் அசுரன்தான் கிளைவ். நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் இந்தப் புத்தகம்.
நான் ரசித்தவற்றுள் ஒரு சில வரிகள்: ‘காற்று மெழுகுவர்த்தியை ஆட்டுவதுபோல அவன் மனம் வேறொரு அசைதலை செய்து கொண்டே இருப்பதும் அவனுக்கு விளங்கியது.’ அலை பாயும் மனதை காற்றுக்கு அலைக்கழியும் மெழுகுத் திரியின் சுடருக்கு ஒப்பிட்டுச் சொன்னது ரசிக்க வைத்தது. ‘அன்பாகப் பேசும் பெண்கள், ஆண்களை புதிய உலகத்திற்கு அழைத்துப் போகிறார்கள்.’
‘கிளைவ் கிடுகிடுவென நடுக்கொடி மரத்தில் ஏறி பாய் மரத்தை விரித்துக் கட்டினான். கடல் அங்கிருத்து பார்க்க பொங்கி எழும் வட்டத் தொட்டிபோல இருந்தது. வெண் மேகங்கள் விர்ரென்ற சத்தத்துடன் குளிர் காற்று போல போய்க் கொண்டிருந்தது’ ‘எல்லா பாய் மரங்களையும் விரித்து விடும்போது கப்பல் பூப்போல மலர்வதைப் பார்க்க அழகாக இருந்தது.’
‘மனிதன் மிகுந்த மகிழ்விலோ மிகுந்த வெறுமையிலோ இருக்கும்போது பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் போகிறான்’ அனுபவங்கள் நிறைந்த ஒரு நல்ல நாவலைப் படித்த திருப்தி வாசிப்போருக்கு அமையும் என்பது உண்மை. l