ஜனநாயகம் என்று போற்றப்படும் மக்களாட்சி மாண்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. வாக்கு அரசியலில் பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்படுவர்களே மக்கள் பிரதிநிதியாக உள்ளாட்சித் தொடங்கி சட்டமன்றத்திற்கும்,பாராளுமன்றத்திற்கும் செல்கின்றனர். அதனால்தான் அண்ணல் அம்பேத்கர் ஜனநாயகத்தின் மதிப்பைக் கூறுகையில் ஒரு மனிதன் + ஒரு வாக்கு = ஜனநாயகம் என்று கூறினார். சிதறடிக்கப்பட்ட மக்கள், கிராம குடியரசுக்கு வெளியே தள்ளப்பட்ட மக்கள், விளிம்புநிலை மக்கள் அனைவரையும் அரசியல்மயப்படுத்தி மையநீரோட்ட அரசியல் களத்திற்குக் கொண்டுவருவதற்கு உகந்த பாதை ஜனநாயகம் என்று நம்பினார். அடித்தள மக்களை அரசியல் சட்ட அமைப்பின் மூலம் பாதுகாப்பை உறுதிப்படுத்தினார் (Constitutional Guaranty). அதனால் தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்துகையில் நான் ஓர் அதீத ஜனநாயகவாதி என்று திரும்ப திரும்பப் பதிவு செய்தார்.
இந்திய ஜனநாயகத்திற்கு எதிரான வலதுசாரி கருத்துகள் புராண இதிகாச கூறுகளாகவும், அரசியல் செயல்பாடாக இருந்தாலும் அவை அடிநிலை மக்களின் பொதுஉரிமைக்குப் பங்கம் ஏற்படும்போது அதனைத் தன் முற்போக்குக் கருத்தியல் பலம் கொண்டு செய்கை எதிர்ப்பாக (Active resistance) வெளிப்படுத்தியவர்களில் முதன்மையானவர்கள் அண்ணல் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர் மற்றும் தந்தை பெரியார்.
சமஉரிமைக்கு எதிரான பிற்போக்குக் கருத்தியல் கட்டமைப்பை சமூக களத்தின் ஊடாக எழுத்து, கற்றல், கற்பித்தல், போர்க்குண மக்களை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட எதிர்விசை மூலம் உடைபட வைத்தனர்.
இந்தியாவில் ஜனநாயகம் எனக் கூறப்படும் மக்களாட்சி மாண்பு என்பது ‘அனைவரும் சமமாக மதிக்கப்படும், அனைவருக்கும் சமமான உரிமைகள் இருக்கும் நிலை’ என்று அகராதி விளக்கம் தருகிறது. ஆனால் கள எதார்த்தம் வேறுவிதமாக இருக்கிறது. வலிமை மிகுந்தவர்கள் வலிமை குன்றியவர்களை ஆதிக்கம் செலுத்துகிற கட்டமைப்பை இந்த ஜனநாயகம் கொண்டிருக்கிறது. இதற்கான காரணத்தை அண்ணல் அம்பேத்கரிடமும் கேட்க வேண்டியதாகிறது. அவர் கூறுகையில், நம் நாடு ஜனநாயக நாடு என்று கூறுகிறோம். அது எப்போது முழுமையாகிறது என்றால், உயர்பதவியில் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு ஊழியர்களிடம் ஜனநாயகம் குறித்துப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
மேலும் எளிய மனிதர்களிடமும் அவர்கள் ஜனநாயகப்பண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் நாடு முழுமைபெற்ற ஜனநாயக நாடாக இருக்கும்.அது தோல்வியுறும்போது ஜனநாயகம் என்பது வெறும் பெயரளவில் இருக்கும் என்று கூறினார். மக்கள் நல அரசின் பார்வையில் இருந்து இந்த சிந்தனையை வெளிப்படுத்தினார். புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பிறகு ஜனநாயகத்தின் பண்பு வேறு விதமாக மாறி வருகிறது. சிதைவை நோக்கி செல்வதாகத் தெரிகிறது. ஜனநாயகத்தின் தூண்கள் மீது ஒருவித அவநம்பிக்கை ஏற்படுகிறது. பிற்போக்குவாதம், சனாதனம், கூட்டாண்மை நிறுவனங்களின் அரசியல் தலையீடு, தனியார் மயம், பாசிசம், அதீத உற்பத்தி, மூலதனத் துரத்தல் முதலியன மக்களாட்சிக்குரிய மாண்புகளை அரித்து வருகின்றன.
தற்போதைய டிஜிட்டல் காலனியாதிக்கத்தை உள்ளடக்கிய சர்வாதிகாரம் எல்லாவிதமான இருப்பையும் காலிசெய்து வருகிறது. வலதுசாரி கருத்தியலைப் புதுவித பாய்ச்சலாக நிகழ்த்தி வருகிறது. பலவீனமானவர்களையும் உள்ளடக்கி இருக்கக் கூடிய ஜனநாயகம் கேள்விக்குறியாக மாறி அரசின் வடிவத்தை உருமாற்றம் செய்கிறது. வலிமை கொண்டவர்கள் சொகுசாக வாழ்வதற்கு களத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. செல்வம் உடையவர்களை மேலும் செல்லவளம் உடையவர்களாக ஆக்குகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத் தியைவிட(GDP)தனிநபர் வருமானம் அதிகமாக இருக்கிறது. இதன் விளைவாகச் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது.
மக்களை அரசியல்மயமாக்கும் அரசியல் கட்சிகள் பணக்காரத் தன்மையைப் பெறுகிறது. இத்தகு இயங்கியலை வலதுசாரி கருத்தியாளர்கள் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். மக்கள், கட்சித் தலைமைக்கு உயிர் மூலதனமாக இருக்கின்றனர். மனித வளத்தைக் கட்சிகள் லாபமாகப் பார்க்கின்றன. தலைவர்கள் மக்களை சீரழிப்பதும், மக்கள் தலைவர்களை சீரழிப்பதுமான பணநாயக வாக்கு அரசியல் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சமூகத்தின் அனைத்து நற்பண்புகளான சமத்துவம், சூழலலியல், மதிப்புக் கல்வி, மனிதநேயம், அறிவுக் கூட்டுறவு, உணர்வு அனைத்தும் முற்றுப்புள்ளியை நோக்கி நகர்கின்றன.இத்தகைய போக்கு இந்தியாவிற்கு மட்டுமல்ல, வளரும் நாடுகள் யாவும் இத்தகு சிக்கல்களை எதிர்கொள்கின்றன.
இயந்திர வளர்ச்சி, தொழில்நுட்ப மேலாதிக்கம் உள்ளிட்டவை வேலைப் பளுவை எளிதாக்கி மனிதர்களின் சுயசிந்தனையையும், படைப்புத் திறனையும் மேம்படுத்த வேண்டும்.பணவீக்கத்திற்கு ஏற்ப தனிநபர் வருமானம் உயர வேண்டும். ஜனநாயக அரசு என்பது பலவீனமானவர்களுக்கும் உரிய வாய்பை ஏற்படுத்தி சமூகத்தில் அதிகாரமயமாக்கல் செய்ய வேண்டும். ஆயின் கள எதார்த்தம் அவ்வாறு இல்லை. மாறாக பலவீனமானவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. ஜனநாயத் தன்மை கொண்ட அரசாக சொல்லப்படுவது சனாதனக் கருத்தியலோடு கைக்கோர்க்கும்போது மக்களாட்சி கட்டமைப்பு உடைந்து விழுகிறது. இதைத்தான் எழுத்தாளர் நிகழ் அய்க்கண் தனது ‘ஜனநாயகமும் சனாதனமும்’ எனும் நூலில் ஒவ்வொரு கட்டுரையாக விவரிக்கிறார். ஜனநாயக அமைப்பு தோல்வியடையும்போது பெண்கள் மீதான வன்முறை தொழில்நுட்ப யுகத்திலும் அதிகரிக்கிறது. வேலைவாய்ப்பின்மை மற்றும் திடீர் வேலையிழப்பு ஏற்படுகிறது.
ஊடகத்தின் அத்துமீறல் மற்றும் அதிகாரத்தின் பக்கம் சாய்வு நடக்கிறது. நீதியின் கோட்பாடு சில தருணங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அமைகிறது. சமத்துவமின்மை அனைத்துத் தளங்களிலும் நிகழ்கிறது. அரசு தேர்வாணையப் பணி கேள்விக்குள்ளாகிறது. பணிநியமனங்களில் வேலைவாய்ப்பு ஒப்பந்த அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது. கட்டுப்பாடு அற்ற வணிகம் மற்றும் கொள்ளை மனித வளங்களை கடன் வலைக்குள் சிக்க வைத்து சீரழிக்கிறது. நிலமானிய உற்பத்திமுறை காலவதியாகி சர்வாதிகார முதலாளித்துவ சமூகம் கிராமங்களில் கால்பதிக்கிறது.
பள்ளி மற்றும் உயர்கல்வி பாடத்திட்டத்தில் சனாதனம் முறை புகுத்தப்படுகிறது. வலதுசாரி அரசியல் ஊடுருவுகிறது. அதீத தனியார்மயம் சமுகத்தை பிளவுபடுத்துகிறது என ஒவ்வோரு கட்டுரையிலும் ஆய்வு நோக்கில் எழுத்தாளர் வெளிப்படுத்துகிறார். கட்டுரையின் எழுத்தாக்கம் புனைவுபோல் இருக்கிறது.மேலும் தரவுகள் மிக வலிமையாக இருப்பது இந்நூலின் பலமாகும். ஒவ்வோரு கட்டுரையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் எழுதப்பட்டாலும் அதன் மையப்புள்ளியாக இன்றைய ஜனநாயகம் எத்தன்மையில் சனாதனத்தை நோக்கி செல்கிறது என்பதை நுட்பாக கூறுகிறார்.
சமூக அவலங்களை மட்டும் தனது எழுத்தில் காட்டுவது மட்டுமல்லாது அதற்கான தீர்வினை வாசகர்களிடம் விட்டுவிடுகிறார். மனித கூட்டு வாழ்க்கையை சந்தை மூலதனமும், டிஜிட்டல் காலனியாதிக்கமும் பிளவுபடுத்துகிறது. மக்களாட்சி எனும் வலுவான கட்டமைப்பை துரு பிடிக்க வைக்கிறது. இந்த நெருக்கடியான சூழலில், ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும், சுதந்திரத்தையும் எவ்வாறு நிலைநாட்டப்போகிறது என்னும் கேள்வியை இந்நூலின் வழி எழுத்தாளர் முன்வைக்கிறார். l
previous post