வித்தியாசமானது நூலின் பெயர் மட்டுமல்ல; உள்ளடக்கம், உருவம், உத்தி அனைத்தும்தான். “காதை” என்பது சிலப்பதிகாரக் காப்பியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள தமிழ்ச்சொல். இன்று உரைநடை இலக்கியங்களில் “அத்தியாயம்” என்று பிரித்து எழுதப் படுகிறது அல்லவா? அதுபோன்ற பாடுபொருள் காட்சிகளைப் பிரித்துக் காட்டும் இலக்கணச் சொல்லாடல். சிலப்பதிகாரத்துக்கு முன்போ அதற்குப் பின்போ இச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரியவில்லை.
“காதை” என்ற சொல்லை நவீன இலக்கியத்தில் பயன்படுத்தித் தனித்துவம் காட்டுகிறார் கதாசிரியர். மூதூர்க்காதை என்ற சொல் வாசிக்கத் தொடங்கும் வாசகனை உள் இழுத்துக் கொள்கிறது. தலைப்புச் சொல்லே வாசிப்பு வளாகத்துக்குள் வாசகனை இழுத்துக் கொள்வதால் உள் அமுங்கி சுவாரசியமாய் நீச்சலடிக்க முடிகிறது. நூலின் தொடக்கமே கலையழகின் முன்னெடுப்பாய் அமைந்திருப்பதைப் பாராட்டித்தான் ஆகவேண்டும்.
தொகுப்பின் தலைப்பு, பழைமையின் அடித்தளம் புதுமையின் மேல் கட்டுமானமாய் மாறியிருப்பது பாராட்டுக்குரியது. வழிபடு கோயில்கள் சென்ற கால கட்டுமானத்தின் அஸ்திவாரத்தைக்கொண்டு இலங்குவதுபோல. இன்னொரு வார்த்தையில் சொல்வதென்றால் பழைய வாழ்க்கை முறையை நினைவுபடுத்துவதன் மூலம் புதுமை நோக்கிய நமது வாழ்வியல் பயணத்தில் தடங்கலின்றிப் பாதம் பதிக்க முடியும் என்று ஆசிரியர் முடிவு செய்திருப்பதை உணர முடிகிறது. மட்டுமல்ல; என் மூதாதையர் கொண்டிருந்த யதார்த்த வாழ்க்கையும் ஆன்மிக நம்பிக்கைகளும் சில முறைகளில் இன்றையவற்றைவிட மேம்பட்டிருப்பதை நினைவு படுத்துவதாகவும் இருக்கிறது. எந்தக் கண்கொண்டு வாசித்தாலும் அய்யனார் ஈடாடி, நவீன கதையாடலை பழைமையுடன் இணைத்து மேலும் நவீனப்படுத்தியிருக்கிறார். ஜாதியாலும் (மூட) நம்பிக்கைகளாலும் மூடுண்டு கிடந்த ஆத்மார்த்தமானதொரு சமுதாயத்தை இன்றைய சமூக இளைஞர்களுக்கு அறிமுகப் படுத்துகிறார். அதனால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு நாம் சொல்லலாம்; இன்றைய அரிசி உணவாளர்களுக்கு நேற்றைய கேப்பை உணவின் பயன் எத்தகையது எனச் சொல்வதுபோல் என. இந்தக் கதைகளில் ஜாதி ஒட்டு இல்லாத பாத்திரங்கள் மிகவும் குறைவு. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் பெயர்கள் மட்டுமே ஜாதி இல்லாமல் அறிமுகப் படுத்தப்படுகின்றனர். ஜாதி இருந்தாலும் ஜாதி பேதமில்லாமல் வாழ்ந்தார்கள் என்பது முக்கியப் பதிவு. பள்ளர்கள் என்று மற்ற சமூக மக்களால் பிற்படுத்திச் சொல்லப்படுகிற கதை மாந்தனைக் குடும்பன் என்று குறிப்பிடுவது போலவே (செவனாண்டிக் குடும்பன்) கோனாரைக் கந்தக்கோன் என்றும் செட்டியாரை சின்னவன் செட்டி என்றும் அடையாளப் படுத்துகிறார். இதில் அவர்களுக்குள் எந்த பேதமும் இல்லாமல் இயல்பாக வாழ்கின்றனர்.
அந்த மக்களின் இலக்கு பசியற்ற மனித வாழ்வு என்பதாக மட்டுமே இருந்தது. ‘முட்டியில் பொங்கல் வைத்து மூடி வைக்கும் மோடப்பய நாட்டுல பானையில் பொங்கல் வைத்துத் தானமிடும் தானத்தும்’ என்பது மட்டுமே அவர்களின் வாழ்வியல் அறம். குறிப்பாகக் ‘கணவனை இழந்த கைம்பெண்களுக்கும் சோறு பொங்காத சுற்றுவட்டார மக்களுக்கும் ஓலக் கொட்டானிலும் தூக்குச்சட்டியிலும் பொங்கலைத் தானமாக அள்ளிக் கொடுத்துவிடுவார்கள்’ வேறு வார்த்தையில் சொல்வதென்றால் பசியில்லாத சமுதாயம்தான் ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தின் அஸ்திவாரம் எனக் குறிப்பால் உணர்த்துகிறார் ஆசிரியர். ஒருவகையில் பசியைப் போக்கும் உழைப்பு சாமான்ய விவசாயக் குடிமக்களை இயக்குகிறது என்றால் இன்னொரு வகையில் பயம்; பேய் பயம். அகமனம், புறமனம் பற்றிய விளக்கவுரைகள் எத்தனை இருந்தாலும் ஜீவராசிகளுக்கென்று இருக்கிற உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளுக்கான வேர் எங்கே பதிந்திருக்கிறது? நூலாசிரியர் அய்யனார் ஈடாடியின் தேடலில் கிடைக்கிற விடை இயற்கை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அந்தி முடிந்த இருட்டு வேளையில் கிட்டுமணி மீன்பிடிக்கப் போகிறான். ஏற்கனவே அங்கு மீன்பிடிக்கச் சென்ற செல்லம் இறந்திருந்தான். முனியடித்துதான் அவன் செத்ததாக ஊரில் பேச்சு உண்டு. அவன் பலரையும் பயமுறுத்திக் கொண்டே இருந்தான். ஆனால் அவன் இறந்தது கம்மாய்க்குள் நிறைந்து கிடந்த சகதியும் அங்கு முளைத்துக் கிடந்த தாமரைக் கொடியும் கால்களை இழுத்துக் கொண்டன என்பதுதான் நிஜம் எனக் குறிப்புக் காட்டுகிறார் கதாசிரியர்.
செல்லம் இறந்த ஆவிப் படிமத்தைக் கிட்டுமணி மனசில் நிறுத்தியபடி மீன் பிடித்தான். வெரா சிக்கியது. அதைத் துண்டில் கட்டிக் கொண்டு புறப்பட்ட்டான். “கிட்டுமணிக்கு செல்லம் செத்த கதைதான் கண்ணெதிரே நின்றது. பறவைகளின் ரீங்காரம் விகாரமாய் ஒலித்தது. காத்தும் மழையும் பிடிக்கத் தொடங்கியது.
பாலுக்கு அழுகிற பிள்ளைச் சத்தம் புளியமரங்களில் இருந்து கேட்டது. துண்டுல வெராவை இறுக்கிக் கட்டி நழுவாம கையில் பிடித்துக்கொண்டு கரையில ஏறுகிறான். ஒத்தைப் பனைமரத்தைத் தாண்டும்போது சூறாவளிக் காற்று கிட்டுமணியைக் கீழே தள்ளுகிறது. கண்மாய்க்கரையில் இருந்து உருண்டு பனைமரத் தூருக்கு வந்துவிட்டான் கிட்டுமணி. ஒருவழியாகக் கண்மாய்க்கரை வழியாக வீடு வந்து சேர்ந்தான். இந்த வர்ணனையில் புளிய மரத்திலிருந்து கேட்கும் பிள்ளைச் சத்தம் பேய் பயத்தின் முக்கிய அடையாளம்.
ஆக, செல்லம் இறந்த சூழலின் பயம் ஒருபுறம் என்றால் நிலைகுலையச் செய்த சூறைக் காற்றின் வேகம் இன்னொருபுறம். சூறைக்காற்று உடலை நிலைகுலையச் செய்கிறபோது மனம் தள்ளாடுகிறது. பயம் என்ற ஆன்மிக உணர்ச்சி உடலை பலவீனமாக்கி, ஜீவத்துடிப்பைத் துண்டித்துவிடுகிறது. இந்த இடத்தில்தான் அறிவியலும் அக(உள)வியலும் ஒன்றிணைந்து செயல்படும் உறவுத்தாக்கத்தைப் பதிவிடுகிறார் ஈடாடி. பசி என்ற உடலியில் உணர்ச்சியும் பேய், கடவுள் என்ற உள்மன நம்பிக்கைகளும் ஒன்றுகலந்துதான் சமுதாயத்தை இயக்குகின்றன என்பது கதாசிரியரின் முடிவு எனத் தோன்றுகிறது. பல கதைகளில் விபூதி போட்டுப் பேய் விரட்டும் சம்பவங்கள் நிகழ்கின்றன. திடகாத்திரமான உடல் பேய்கண்டு அஞ்சுவதில்லை. தான்ய அறுவை நாட்களிலும் வேறுபல கொண்டாட்டக் காலங்களிலும் ஊர்மக்கள் ஒன்றுகூடி விழா எடுப்பது கிராமிய மரபு. ஊர் நாட்டாமை வீட்டிலிருந்துதான் பொங்கச் சர்வமும் அரிசி முதலிய பொருட்களும் கொண்டு வந்து ஊர் மயானத்தில் பொங்கலிட்டுப் பகிர்வது வழக்கம். சிலவேளைகளில் ஒருசிலர் போட்டியாளர்களாகி தனியாகப் பொங்கல் வைப்பது என்று மல்லுக்கு வருவதும் உண்டு. ‘உனக்கு நான் விட்டவனா?’ என்று கோதாவில் இறங்கி போட்டிப் பொங்கல் வைக்க முயற்சிப்பார்கள். அந்த மாதிரியான நேரங்களில் தெய்வங்களே அவர்களைத் தண்டிக்குமாம். ஆசிரியர் எழுதுகிறார். ‘யாரெல்லாம் பெரிய வீட்டுக்கு எதிராக நின்று, பொங்கப்பானை இறக்குவதை எதிர்க்கிறார்களோ அவர்கள் யாரும் மறு ஆண்டு, ஊர்ப்பொங்கலுக்கு ஊரிலும் இருப்பதில்லை; உலகத்திலும் இருப்பதில்லை’ இந்த ஆன்மிக நம்பிக்கைதான் ஊர் ஒற்றுமையை உறுதிப்படுத்துகிறது.
கைம்பெண் இரண்டாங்கல்யாணம் செய்வது இன்றைய பார்வையில் புரட்சிகர நடைமுறை. அனால் மூதூர் கிராம வாழ்க்கையில் அது ஒரு யதார்த்த நிகழ்வு. ‘பழி’ என்ற கதையில் திருமயி என்ற பெண், இரண்டு குழந்தைகளின் தாய். அவள் கணவன் செவனக்குடும்பன் சக சேக்காளிகளால் அடித்துக் கொல்லப்பட்ட பிறகு தன் கொழுந்தனை, அதாவது செவனக் குடும்பனின் தம்பியை மறு திருமணம் செய்துகொள்கிறாள். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்தக் கல்யாணம் நடந்து முடிகிறது. அதாவது, புரட்சிகர நடவடிக்கை என்ற இன்றைய கணிப்பு அன்றைய யதார்த்தமாய் இருந்தது என்பதை அடையாளப்படுத்துகிறார் ஆசிரியர். இந்தத் தொகுப்பு பற்றி இன்னும் நிறையச் சொல்ல முடியும்.
புளியம்பழத் திருட்டு, பெண்பித்துக்கொண்ட காமத்திருட்டு, குத்தகைதாரரை விரட்டிவிட்டு, நிலத்தைப் பறிமுதல் செய்யும் அதிகாரத்தின் ஆணவத் திருட்டு, மனவளர்ச்சி குன்றிய மாணவனை அரவணைக்கும் வத்தலா டீச்சரின் மனிதப் பண்பு என்று ஏராளமான பொக்கிஷங்களைக் கொண்டிருக்கிறது இந்த நூல். புதிய மொழி, புதிய சொல்லாடல், புதிய உத்தி என புதிய வரவாக அய்யனார் ஈடாடி கொடி உயர்த்தி நிற்கிறார். செயற்கைத்தனம் இல்லாத யதார்த்த வாழ்வே கதையாக, கலையாகப் பரிமாணம் கொண்டிருக்கிறது. தமிழ் இலக்கிய உலகத்துக்குப் புதுவகைத் தீனி கிடைத்திருக்கிறது. சுவை மிகுந்த உணவைச் சுவைத்து அனுபவிக்க வேண்டியது தமிழ் வாசகக் கடமை. இலக்கிய நிலப்பரப்பில் புது தீவு ஒன்றை அறிமுகப் படுத்தியுள்ள எழுத்தாளர் அய்யனார் ஈடாடி வாழ்க. l
previous post