வாசிப்பை இயக்கமாக்குவோம்
சந்திப்பு : ச.தமிழ்ச்செல்வன்
இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ் மாநிலச்செயலாளர் தோழர் பி.சண்முகம் அவர்களை வாசிப்பு குறித்த சில கேள்விகளோடு சந்தித்தோம்.
இந்திய மாணவர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டச்செயலாளராக ஆவதற்கு முன்பிருந்தே ஒரு தீவிர வாசிப்புக் கலாச்சாரத்துக்குள் நீங்கள் இயங்கியதை அறிவோம். உங்கள் இளம்பருவத்து வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாமா?
என்னுடைய சொந்த ஊரான, திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் பெருவளநல்லூர் கிராமத்தில் நானும் என் வயது இளைஞர்களும் சேர்ந்து “இளைஞர் நற்பணி மன்றம்” ஒன்றை நடத்தி வந்தோம்.பலரிடமும் உதவிபெற்று எல்லா தினசரி, வார, மாத இதழ்களையும் அங்கு வரவழைத்து வாசிக்கத் துவங்கினோம்.
அப்போதே எங்கள் கிராமத்தில் ஒரே ஒரு கம்யூனிஸ்ட் இருந்தார். எம்.கே.தங்கராஜ் என்கிற அந்த சர்க்கரை ஆலைத்தொழிலாளி வீட்டுக்கு வரும் தீக்கதிர், செம்மலர் இதழ்களை அவர் வாசிக்கும் முன்பே நான் முதலில் வாசித்து விடுவேன்.
எங்கள் கிராமத்தின் அருகமை கிராமமான பூவாளூரில் ஒரு கிளை நூலகம் இருந்தது.பராமரிப்பில்லாத இருள் சூழ்ந்த அந்நூலகம் எனது வாசிப்புத் தாகத்துக்கு நீர் வார்த்தது. அங்கு கிடைத்த நூல்களையெல்லாம் வாசித்தேன்.
பள்ளிக்காலம் முடிந்து காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் சேர்ந்த பிறகு கல்லூரி நூலகத்தை முழுமையாகப் பயன்படுத்தினேன்.பின் தங்கிய கிராமப்புறத்திலிருந்து வரும் மாணவன் ஆர்வமாக வாசிப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்த அந்நூலகத்தின் நூலகர் திரு.ஞானசேகரன் அவர்கள் எனக்கு எத்தனை புத்தகங்கள் கேட்டாலும் கொடுப்பார். ஒரே நேரத்தில் பத்து நூல்களைக்கூட எடுத்த வந்து என் விடுதி அறையில் வைத்துப் படிப்பேன்.
கலைக்கல்லூரிக்குச் செல்லாமல் காரைக்குடித் தமிழ்க்கல்லூரிக்குச் செல்ல நேர்ந்தது எப்படி?
பள்ளிக்காலத்திலேயே தமிழ் மீதான ஆர்வம் மிகுந்திருந்தது. தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச்சங்கம், மதுரை செந்தமிழ்க்கல்லூரி என பல தமிழ்க்கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்திருந்தேன்.காரைக்குடி கல்லூரியிலிருந்துதான் முதல் அழைப்பு வந்தது. அதனால் அதில் சேர்ந்துவிட்டேன்.
கல்லூரிக்கால வாசிப்பு..?
மு.வரதராசனாரின் செந்தாமரை, கள்ளோ? காவியமோ?, அந்த நாள், பெற்ற மனம், கரித்துண்டு, தம்பிக்கு, தமிழ் இலக்கிய வரலாறு உள்ளிட்ட அனைத்து நூல்களையும் வாசித்தேன்.பின்னர் மு.வ.விடமிருந்து ஜெயகாந்தனுக்கு வந்தேன். சில நேரங்களில் சில மனிதர்கள், ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள், ஒரு மனிதன், ஒரு வீடு ஓர் உலகம் உள்ளிட்ட அவருடைய எழுத்துகளைத் தேடித்தேடி வாசித்தேன். பின்னர் அண்ணாவின் நூல்கள், பிளேட்டோவின் குடியரசு போன்ற நூல்களுக்கு வந்து சேர்ந்தேன். அப்போது எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. மு.வ. என்று எடுத்தால் ஒரே பிடியாக அவருடைய நூல்களையெல்லாம் வாசிப்பது. ஜெயகாந்தனை எடுத்தால் அதையே விடாமல் வாசிப்பது என்று செட் செட்டாக வாசிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தேன்.அப்பழக்கம் எப்படி வந்ததோ தெரியவில்லை.ஆனால் அப்படித்தான் வாசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரி நூலகத்தில் இருந்த 4000 -5000 நூல்களையும் வாசித்துவிட வேண்டும் என்ற வேகத்துடன் வாசித்துக்கொண்டிருந்தேன்.
ஏற்கெனவே சங்க இலக்கியம் பாடத்திட்டத்திலேயே இருந்தது.ஆனாலும் சங்க இலக்கியத்தை வரலாற்றுப்பின்னணியோடு எழுதிய கலாநிதி கைலாசபதி,கா.சிவத்தம்பி,நா.வானமாமலை போன்றோரின் எழுத்துகளை அறிந்திருக்கவில்லை.அவற்றை அறிமுகம் செய்ய ஆளும் இல்லை.அவற்றையெல்லாம் பின்னர் கட்சியில் சேர்ந்த பிறகுதான் அறிந்துகொண்டேன்.இந்தக்கட்டத்தில் தேவரம்பூர் மாணிக்கம் போன்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தோழர்களோடு பரிச்சயம் ஏற்பட்டது. என் வாசிப்பின் திசையும் மாறியது. காரைக்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் நடக்கும் தமுஎச கூட்டங்களில் பங்கேற்கத் துவங்கினேன்.
இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்தது எப்படி?
நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனாக இருந்தபோது என்னுடைய சீனியரான ஒரு மாணவியை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. அதை எதிர்த்து நானே ஒரு போராட்டத்தைத் துவக்கினேன்.மாணவர்களை இணைத்துக்கொண்டு இரண்டு மூன்றுநாள் போராட்டத்தை நடத்தினேன்.அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போதுதான் காசிநாதன் போன்ற மார்க்சிஸ்ட் கட்சித்தோழர்களைச் சந்தித்தேன். அவர்கள் இந்திய மாணவர் சங்கத்தலைவர்களோடு என்னை இணைத்தார்கள்.தோழர் சித்திரவேலு இந்திய மாணவர் சங்கத்தலைவர் ராமலிங்கத்தை அழைத்து வந்தார்.அப்போது தோழர் பாலாஜி மாநிலச்செயலாளராக இருந்தார், எஸ்.எப்.ஐ. வழிகாட்டலில் போராட்டம் வெற்றியடைந்தது.அந்த மாணவி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை துவக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் கிளைகளைத் துவக்கினோம்.அரசுப்பள்ளி விடுதி மாணவர் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடினோம்.அதுவரை மாநகரங்கள் சார்ந்தும் பெரிதும் அறிவுத்துறை சார்ந்துமான இயக்கமாக வளர்ந்து வந்த மாணவர் சங்கத்தில் முதன் முறையாக கிராமப்புற மாணவர்கள் பெருந்திரளாகச் சேர்க்கப்பட்டது எங்கள் முயற்சியில்தான்.தோழர் பி.ராமச்சந்திரன் மாணவர் சங்கத்துக்குப் பொறுப்பாக இருந்து வழி காட்டியது இந்த வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தது.
இடையில் ஒரு கேள்வி.எந்த அரசியல் பின்புலமும் இல்லாத நீங்கள் தன்னந்தனியாக ஒரு போராட்டத்தை கல்லூரியில் துவக்க எது தூண்டுதலாக இருந்தது?
என்னுடைய பின்னணியை ஒரு சம்பவத்தின் மூலம் சொன்னால் சரியாக இருக்கும்.என்னுடைய குடும்பம் காலம் காலமாக ஒரு விவசாயத்தொழிலாளர் குடும்பம். அப்பா அம்மா இருவருமே விவசாயத்தொழிலாளிகள்தான். எங்கள் கிராமத்தில் பெரும்பான்மையாக வாழ்ந்தது தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்தாம்.சிறுபான்மையான ரெட்டியார் சமூகமே நில உடைமைச் சமூகமாக இருந்தது. நான் எட்டாது படிக்கும்போது 1971-72 இல் எங்கள் உறவில் ஒரு மரணம் நிகழ அதற்கு இழவு சொல்ல நான் பக்கத்து ஊரான மால்வாய் கிராமத்துக்குச் சைக்கிளில் சென்றேன். அங்கே எனக்கு மருதமுத்து என்றொரு அண்ணன் இருந்தார்.அவர் அங்கு திராவிட முன்னேற்றக்கழகக் கிளைச்செயலாளராக இருந்தார். நான் போனபோது அண்ணன் ஊரில் இல்லை.வயலுக்கோ எங்கோ போய்விட்டிருந்தார்.தகவலைச்சொல்லிவிட்டு அந்த ஊரிலிருந்த சிறிய உணவு விடுதியில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது எதிர் பெஞ்சில் வந்து அமர்ந்த சிலர் என்னைப்பார்த்து நீ யார் ? எங்கு வந்தாய்? என்று விசாரித்தார்கள்.நான் விவரம் சொன்னதும் அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. “நீ யெல்லாம் பெஞ்ச்சில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது. எழுந்திரு” என்றார்கள். “ஏன் நீங்கள் கொடுக்கிற அதே பணத்தை நானும்தானே கொடுக்கிறேன். நான் ஏன் உட்காரக்கூடாது” என்று எதிர்த்துப் பேசினேன். பேசிக்கொண்டே சாப்பாட்டை முழுதாகச் சாப்பிட்டும் முடித்துவிட்டேன்.அவர்கள் என்னை அடிக்க வந்தார்கள். மருதமுத்து பேரைச் சொன்னதாலே உன்னை அடிக்காமல் விடுகிறோம்.ஓடிப்போயிரு என்று என்னைத் துரத்தி விட்டார்கள்.அத்தோடு கதை முடியவில்லை.
மறுநாள் துக்க வீட்டுக்கு வந்த மருதமுத்து அண்ணன் என் பெற்றோரிடம் புகார் சொல்ல வந்துவிட்டார். “எங்க ஊருக்கு சண்முகத்தை அனுப்பும்போது எங்க ஊர் நடைமுறை என்னான்னு சொல்லி அனுப்புறதில்லையா? ஊரிலே இவனாலே எனக்குப் பிரச்னை” என்று கோபமாகச் சொன்னார். என் அப்பாவும் என்னைக் கடிந்து கொண்டார்.ஒரு திமுக செயலாளராக இருந்தும் சாதி ஒடுக்குமுறைக்கு அடங்கிப்போகிறாரே என்று அண்ணன் மீதும் திமுக மீதும் எனக்குக் கோபம் வந்தது.அப்போதிருந்து அநியாயத்துக்கு எதிரான கோபம் எனக்குள் இருந்துகொண்டெ இருந்தது.அதுதான் கல்லூரியிலும் போராடக் காரணமாக இருந்தது.
தோழர் பி.எஸ்.தனுஷ்கோடியின் வாழ்க்கையில் நடந்ததுபோலவே இருக்கிறதே…?
ஒவ்வொரு தலித்தின் வாழ்க்கையிலும் இப்படி ஓர் அத்தியாயம் இருந்துதான் தீரும் போல..
மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரானது எப்போது?வாசிப்பு தொடர்ந்ததா?
1980இல் இராமநாதபுரம் மாவட்ட மாநாடு நடைபெற்றது. அதில் நான் மாவட்டச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டேன். அந்த நாட்களில் காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இலக்கிய நிகழ்வுகளிலும் தவறாமல் பங்கேற்பேன். இலக்கிய ஆளுமைகளான சத்தியசீலன், சா.கணேசன் போன்றவர்களின் உரைகளையெல்லாம் கேட்கும் வாய்ப்பு எனக்குக்கிட்டியது.4 மணிக்குக் கூட்டம் என்று போட்டால் யார் வந்தாலும் வராவிட்டாலும் 4.01க்கு கூட்டத்தைத் துவக்கி விடுவார்கள்.
அந்த நாட்களில் தோழர் எஸ்.ஏ.பெருமாள் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தார். அவர் தோளில் தொங்கும் ஜோல்னாப்பையில் ஒரு சிறிய நூலகமே இருக்கும். என் வாசிப்பின் திசையையும் வேகத்தையும் மாற்றியதில் தோழர் எஸ்.ஏ.பிக்கு பெரிய பங்கு இருக்கிறது. புத்தகங்களை வாரி வழங்குவார். என்னை மட்டுமல்ல, எத்தனையோ தோழர்களை வாசிப்பாளர்களாக மாற்றிய பேராசான் தோழர் எஸ்.ஏ.பி.தான். அவர் மூலமாகவே கட்சியிலும் இணைந்தேன்.அப்போது மாணவர் சங்கத்திலேயே 4 கட்சிக்கிளைகள் இருந்தன. பாரதி கிருஷ்ணகுமாரைப் பலரை மாணவர் விடுதிகளுக்கு அழைத்துச் சென்று பேச வைப்பேன். அது ஒரு எஸ்.எஃப்.ஐ.பொற்காலம்தான்.
அந்நாட்களில் நீங்கள் வாசித்ததில் மறக்க முடியாத புத்தகங்கள் சிலவற்றைச் சொல்ல முடியுமா?
ரா.கி.ரங்கராஜனின் மொழிபெயர்ப்பில் வந்த “பட்டாம்பூச்சி”(ஹென்ரி ஷாரியர் பிரஞ்சு மொழியில் எழுதியது)என்கிற 1000 பக்க நாவல் என் மனதைக் கொள்ளை கொண்ட முதலிடத்தில் நிற்கும் விறுவிறுப்பான நாவல். இன்னொரு பக்கம் சாண்டில்யனின் கடல்புறா, மஞ்சள் நதி போன்ற அதி புனைவுகளையும் வாசித்துக்கொண்டிருந்தேன். பாரதி, பாரதிதாசன்,பட்டுக்கோட்டை, பாவலர் வரதராசன் பாடல்கள் எனக் கவிதைப்பக்கமும் கவனம் இருந்தது, கவிதைகள் சில எழுதிக் கல்லூரிப் போட்டிகளில் பரிசுகளும் பெற்றிருக்கிறேன். கந்தர்வனின் “துண்டு” கதையை வாசித்துக் கண்ணீர் விட்டிருக்கிறேன்.அது என் அப்பாவின் சொந்தக்கதைபோல நான் உணர்ந்தேன். கி.ராவும் இதேபோல ஒரு துண்டு கதை எழுதியிருக்கிறார். அதையும் வாசித்திருக்கிறேன்.
அந்த சமயத்தில் எங்கள் கல்லூரியின் தாளாளர் பிறந்த நாளைக் கல்லூரியே கொண்டாடும் பழக்கம் இருந்தது. மாணவர்களின் அதற்காகப் பணம் வசூலிப்பதும் நடப்பில் இருந்தது.அதை நான் கேள்வி கேட்டேன். உங்க பிறந்த நாளை உங்க வீட்டில் கொண்டாடுங்கள். நாங்கள் ஏன் கொண்டாட வேண்டும் என்று பிரச்னையை எழுப்பினேன். அந்த ஆண்டுக்குப் பிறகு தாளாளர் பிறந்தநாள் கொண்டாடுவதையே நிறுத்திவிட்டார். அவர் என்மீது பகைமை பாராட்டவில்லை. மாவட்ட,மாநில அளவிலான போட்டிகளில் நான் வெற்றி பெற்றபோது என்னை வீட்டுக்கு அழைத்து மனதாரப் பாராட்டவும் செய்தார்.
இப்போது நான் மாநிலச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கேகூட எங்கள் கல்லூரி நிர்வாகம் கல்லூரியில் பெரிய பாராட்டுவிழாவை நடத்தி நெகிழச் செய்தார்கள்.
உங்கள் மனங்கவர்ந்த நூலகங்கள் பற்றி…
எனக்கு அறிமுகமான முதல் நூலகம் பூவாளூர் கிளை நூலகம், பிறகு காரைக்குடியில் எங்கள் கல்லூரி நூலகம். சென்னை வந்தபிறகு கன்னிமாரா நூலகம் கவர்ந்தது, தேவநேயப்பாவாணர் நூலகத்தைப் பயன்படுத்துவேன். பிறகு கட்சி நூலகங்களைப் பயன்படுத்தத் துவங்கினேன். இபோது என் வீட்டிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகம் அமைந்துவிட்டது.
இந்த இடத்தில் ஒன்றைச்சொல்ல வேண்டும்.தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகமும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகமும் தமிழ்ச்சமூகம் கொண்டாட வேண்டிய முயற்சிகள். பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி நூல்கள், சிறார் நூல்கள் என அனைவருக்குமான நூலகங்களாக இவை அமைந்துள்ளன.
ஆனால் கிராமப்புற நூலகங்கள் கவனிப்பும் பராமரிப்பும் இன்றிச் சிதைந்துகொண்டிருக்கின்றன. இதை அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று வளர்ச்சி காண வேண்டும். இவைதானே எளிய மக்களுக்கான நூலகங்கள்?
கம்யூனிஸ்ட்கள் என்றால் அவர்கள் வாழ்விலிருந்து புத்தகங்களைப் பிரிக்க முடியாது.இன்று மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களின் வாசிப்பு எப்படி இருக்கிறது?
மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது. முன்னர் எந்த ஒரு கட்சித் தோழரைப் பார்த்தாலும் கையில் ரெண்டு புத்தகத்தோடுதான் இருப்பார்கள். வாசிக்கவும் செய்வார்கள். இன்று அந்த நிலை இல்லை. புத்தக வாசிப்பு வெகுவாகக் குறைந்திருக்கிறது. மிகப்பெரிய வாசிப்பு இயக்கத்தை கட்சிக்குள்ளும் வெளியேயும் நாம் முன்னெடுக்க வேண்டும்.வாசிப்பை ஓர் இயக்கமாக்க வேண்டும்.அதற்கான சரியான திட்டமிடலும் நடைமுறைப்படுத்தும் மன உறுதியும் நமக்குத் தேவை.
கட்சியின் அகில இந்திய மாநாட்டைத் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள்…
ஆம்.அது ஒரு பெரிய கடமை. கம்யூ கட்சியின் முதல் மாநாடு கான்பூரில் சிங்காரவேலர் தலைமையில் நடந்தது. அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்-இன்றைக்கும் பொருத்தமுடையனவாக இருக்கின்றன. சமூக நீதி, சமத்துவம் போன்ற அன்று முன் வைக்கப்பட்ட லட்சியங்கள் இன்னும் எட்டப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கட்சியைப்பொறுத்தவரை அதன் உச்சபட்ச ஸ்தாபன அமைப்பு என்பதே அகில இந்திய மாநாடுதான். மக்கள் சந்திக்கும் பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிப் பரிசீலனை செய்து வருங்காலத்துக்கான செயல்திட்டத்தை வடிவமைக்கும் இடம் இந்த மாநாடுதான். இன்று மக்களைப் பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியல் உச்சத்தில் நிற்கும் காலம்.இதை எதிர்கொள்ளத் திட்டமிடுவோம்.
ஒவ்வொரு அகில இந்திய மாநாடும் அதைத்தான் செய்கிறது. 1953இல் அகில இந்திய மாநாடு இதே மதுரையில் நடைபெற்றது.அம்மாநாட்டில் தேசிய இனப்பிரச்னையும் மொழிவழி மாநிலங்களின் தேவையும் பேசப்பட்டது. மொழிவழி மாநிலங்கள் என்கிற ஒன்றுக்காகப் போராடியவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே அல்லவா?
1992இல் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் சோசலிசத்தின் எதிர்காலம் பற்றிப் பேசப்பட்டது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகான மாநாடு அது. உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டை சி.பி.எம். முன்னெடுத்து நடத்தியது இக்காலத்தில்தான்.
23ஆவது அகில இந்திய மாநாட்டின் முடிவுதான் இந்தியா கூட்டணியாக வடிவம் பெற உதவியது.
தமிழ்நாட்டில் ஏன் நடத்துகிறீர்கள்?
அகில இந்திய மாநாட்டை நடத்தும் அளவுக்குப் பலம் உள்ள கட்சி அமைப்பு இங்கு இருப்பதால் இங்கு நடத்தத் திட்டமிடுகிறோம். மதசார்பற்ற அணி இங்கு வலுவாக இருப்பதும் ஒரு கூடுதல் காரணமாகக் கொள்ளலாம்.ஏற்கெனவே நான்கு முறை இங்கு நடத்தியிருக்கிறோம். இது ஐந்தாவது முறை.1953 மதுரையில், 1972 மீண்டும் மதுரையில், 1992 சென்னையில், 2008 கோவையில் இப்போது 2025. மீண்டும் மதுரையில்.
இந்த மாநாட்டை நடத்தித் தருமாறு கேட்டவர் தோழர் சீத்தாராம் யெச்சூரி. இம்மாநாடு நடக்கும்போது அவர் இல்லையே என்கிற பெரும் துயர் மனதில் இருக்கிரது.
மாநிலச்செயலாளர் ஆனபிறகு புத்தகம் வாசிக்க முடிகிறதா?
நேரம் ஒதுக்குவதும் தனிமை கிடைப்பதும் சிரமமாக இருந்தாலும் வாசிப்பை விடவில்லை.பயணங்களில் வாசிக்கிறேன். ஆனாலும் என் விருப்பத்துக்கு ஏற்ற நூல்களை வாசிக்க முடியவில்லை. தேவைகள் வாசிப்பின் முன்னுரிமையைத் தீர்மானிக்கின்றன.
சமீபத்தில் என்ன வாசித்தீர்கள்?
மார்க்ஸ் பற்றி தோழர் இ.எம்.எஸ். எழுதிய இரு நூல்களை வாசித்தேன். சக்தி சூர்யாவின் நாவல் “சந்தாலி” வாசித்தேன். l