படித்துக்கிடப்பதும், வாசித்துக் கடப்பதுமான பொழுதுகள் வாய்க்கப் பெறுவது பெரும் பாக்கியம் சுமந்த பொழுதுகள்தான். அந்த பாக்கியத்தை பாண்டியன் கிராம வங்கி ஊழியர் சங்கமும், பாண்டியன் கிராம வங்கி அலுவலர் யூனியனும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், எழுத்தறிவு இயக்கமும், அறிவொளி இயக்கமும், த.மு.எ.ச. வும் எனது வங்கிப் பணியும் அதில் பிணைவு கொண்ட மண்ணும் மனிதர்களும் எனது வீடும் அறிமுகம் செய்வித்தார்கள் என கூறுவது மிகையில்லா உண்மை. அந்த மிகையில்லா உண்மையினூடாக நேரமில்லை என்கிற நொண்டிச்சாக்கு தாண்டி காமராஜ் அவர்களின் “வெயிலின் நியதி” படிக்க வாய்த்தது. தொகுப்பிலுள்ள பதிமூன்று சிறுகதைகளும் கிராமத்து மண்ணில் உழவோடிய கதைகளாகவே உள்ளது. தான் பிறந்து வளர்ந்து விளையாடித் திரிந்த மண்ணின் ஈரத்தையும் அம்மண்ணின் மனிதர்களையும், அவர்களின் பாடுகளையும் வாழ்க்கை யையும்,படம் பிடித்துள்ளார்.
கிராமத்து உழைப்பாளி மக்களது வாழ்க்கையின் உள்ளீடுகளை அசல் கிராமத்துக்காரராகவே வாழ்ந்து அனுபவித்து எழுதியிருக்கிறார். அக்கதைகளின் ஊடு பாவாயும் நெசவிட்டுமாய் ரத்தமும் சதையுமாய் நடமாடும் எளிய கிராமத்து மனிதர்களும் மனுசிகளும் அவர்களது எளிய பேச்சும் உரையாடலும் அவர்களின் பழக்க வழக்கங்களும் வெகு இயல்பாய் காணக்கிடைக்கிறது இந்நூல் முழுவதும். ஓர் அரசனுக்குண்டான தோற்றத்துடன் காட்சிப்படுகிற கிராமத்து மனிதரான அம்மிடியான். அவரைப்பற்றி படிக்கையில் சற்று வியப்பு மேலிடுகிறதுதான். “பத்தாள் வேலையை ஒத்தாளாகச் செய்கிற உழைப்பின் பெருமகன்” எனவும் கூலி வேலைக்குச் சென்ற இடத்தில் தானும் உடன் வேலைக்கழைத்துச் சென்றவர்களும் ஏமாற்றப்பட்டதை எதிர்த்து வெகுண்டெழும் போர்க் குணம் சாமான்யர்களுக்கும் உண்டு என்பதை “ஆதியிலே” வெகு இயல்பாகவே சொல்லிச்செல்கிறார். ஊருக்குள் வருகிற போலீஸ் ஜீப்பின் புழுதி அடங்கும் முன்னமே கென்னடியும், வசந்தியும், விஜயாவும் உயிர் உருவாய் நம்முடன் கைகோர்த்து வருகிறார்கள். கதை முழுக்கவும்.இதில் கென்னடி, விஜயா, வசந்தி மூவரின் பாடுகளும், பேச்சும், பகடியும் உரையாடலும் நம்முடனேயே வருவதும், மனம் தங்கிச் செல்வதும் “பாதைகள் நெடுகிலும்” வறுமையின் பிடுங்கலில் உள்ள தாய் படிக்கிற புத்தகங்களை எடைக்குப் போடுவதை தடுத்து பாத்திரத்தை அடகு வைத்து வாங்கித்தந்த பணத்தில் என்.சி.சி.யில் சேர்ந்து விடுகிற மகன் சீருடையுடன் ஊருக்குள் வருகிற பொழுது நடக்கிற அலப்பறைகள் “வறுமையின் கொண்டாட்டங்களாய்” கல்லுடைக்கும் வேலைக்குச் சென்ற சுந்தரராஜ் தன் சுயம் காயப்பட வேலையிலிருந்து சொந்த ஊர் திரும்பி வந்து டீக்கடை முன் சரித்திரம் படைக்கிறார் “இரண்டும் இரண்டும் ஒன்றில்” இக்கதையில் வருகிற மனிதர்களின் உரையாடல்கள் அவர்களின் வாழ்நிலை ஒட்டியதாய், அவர்களின் வாழ்நிலை நாம் பார்த்தும் கேள்விப்பட்டும் அறிந்ததாய்.
இதுபோக இன்னமும் இருக்கிற கதைகளில் கதை மாந்தர்களும் அவர்களின் வாழ்வும், அவர்களின் பாடும் அவர்களின் பேச்சும் பழக்கவழக்கங்களும் அவர்களுக்குள்ளான உறவும் வெகு இயல்பாய் பதிந்து கிடக்கிறார்கள். கல் கிடங்கு, ஊரணி, நாணல்புல் என்கிற அடையாள உருவாக்கம் லாஞ்சணை, தலமாடு, கால்மாடு, என்கிற சொல்லுருவாக்கம். வறுமைக்கு வாக்கப்பட்டவர்களின் உணவான கம்மங்கஞ்சி, கூழ், கருவாடு என்கிற உணவுப் பழக்கம், அவர்களின் காதல், ஊடல், கூடல், சண்டை என இன்னும் இன்னுமாய் கிராமத்து மானுட வாழ்வியலை வெகு அழகாய் சித்தரித்திரிக்கிறார். எளிய மக்களின் பாடும்,வாழ்வும் சமுத்திரத்திலும் பெரிது என்பார்கள். அம்மக்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை தன் மறைவு காலம் வரை சிறுகதைகளாக, கட்டுரைகளாக, நாவலாக எழுதி வெளி சமூகத்திற்கு உணர்த்திய “சாகித்திய அகாடமி” விருது பெற்ற எழுத்தாளர் எங்களின் முன்னத்தி ஏர் திரு.மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களைத் தொடர்ந்து வெம்மை மிகுந்த அதே கரிசல் நிலத்திலிருந்து திரு.எஸ்.காமராஜ் சாமான்யர்களின் பாடுகளை கரிசல் மண் உழைப்பாளின் குணத்துடன் பகிர்ந்திருக்கிறார் தன் வெயிலின் நியதி சிறுகதைத் தொகுப்பு மூலமாக ஒரு தைல வண்ண ஓவியம். போலவும், ஒரு சிற்பியின் கைநேர்த்தி கொண்டும் வெகு நேர்த்தியாய் தொகுக்கப்பட்டு இருக்கிற “வெயிலின் நியதி” சிறுகதைத் தொகுப்பு தமிழ் இலக்கிய பரப்பால் கொண்டாடப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. இத்தனையாண்டு பழக்கத்தில் காமராஜ் அவர்களிடம் நேரடியாகக்கூட நான் சொன்னதில்லை. இப்பொழுது சொல்லலாம் என
நினைக்கிறேன். அவரின் அனுமதி உடன் உங்களுக்குள் மனம் பூத்து வேர்விட்டிருக்கும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை இன்னும் இன்னும் நிறையச் சொல்லுங்கள்! l
previous post