வெறி பிடித்த வாசகன் ஒருவன் ‘பொன்னியின் செல்வன்’ படித்ததும் தஞ்சை, பழையாறை, கொடும்பாளூர் என்று அலைந்து திரிகிறான். பொன்னியின் செல்வன் வரலாற்றுத் தடங்களை சென்று பார்ப்பதற்காக சுற்றுலா ஏற்பாடுகள் செய்யப்பட்டது சமீபத்திய வரலாறு. ‘மோகமுள்’ படித்ததும் கும்பகோணம் போய் மாமாங்கக் குளம், கும்பேஸ்வரர் கோவில், துக்காம்பாளையத் தெரு என்று திரிந்தவர்கள் உண்டு. பத்தாண்டுகளுக்கு முன் அஜந்தா குகைகளுக்குச்சென்றபோது வண்டியிலிருந்து இறங்கியபோது, ஆயனச் சிற்பியையும், கல்கியையும் நினைத்துக் கொண்டது என் சொந்த அனுபவம்.
இதைப்போல, ஒரு வெறி பிடித்த இசைப் பிரியன் என்ன செய்வான்? அதிகபட்சமாக திருவையாறு போவதுடன் சரி. ஆனால், நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கெல்லாம் இசையை ஒரு போதையாக ஊட்டிய ஒரு தலைமை இசைப் பிரியன் என்ன செய்வான்? அவன் உலகெங்குமுள்ள இசை மேதைகள் வாழ்ந்த இடங்களுக்கெல்லாம் போய் வணங்குவான். அவர்களது இசை தனக்குள் பொங்க வேண்டும் என்று வேண்டுவான். வேண்டுதலோடு நிறுத்த மாட்டான். அதற்காக அல்லும் பகலும் உழைப்பான். தன்னை வருத்திக் கொண்டு, இன்னும் இன்னும் தன் இசையறிவை வளர்த்துக் கொள்வான். எந்த நேரமும் பயிற்சி செய்வான். பின்னொரு நாளில் அவனே அந்த மேதைகள்போல் மாறியும் விடுவான். இசைஞானி இளையராஜாவின் வாழ்வே அதற்கு சாட்சி.
2025 மார்ச் மாதம் 8ம் தேதி லண்டனில் தனது வேலியண்ட் என்ற சிம்ஃபொனியை இசைஞானி இளையராஜா அரங்கேற்றியபோது எனக்கு 30 – 35 ஆண்டுகளுக்கு முன் வாசித்த அவரது சங்கீதக் கனவுகள் நூல் தான் நினைவுக்கு வந்தது. அவரது அந்த சங்கீதக் கனவு நிறைவேறிய பிறகு மீண்டும் அந்த சின்ன புத்தகத்தைப் படித்தேன். கனவுகளைப் பற்றிச் சொன்னவர் அதை தன் வாழ்நாளின் முதிர்ந்த வயதில் அதை நிறைவேற்றியும் காட்டிவிட்ட விடாமுயற்சியை எண்ணி எண்ணி வியந்தேன்.
சாதனையாளர்கள் சிறுவயதிலிருந்தே வித்தியாசமானவர்களாக இருப்பார்கள் என்று படித்திருக்கிறோம். அது வெற்று வார்த்தையல்ல. மெய்யான வார்த்தைதான். இளையராஜா எட்டாவது படிக்கும்போது ஜோதிடர் பழனிச்சாமி என்பவர் ‘இவன் எட்டாவது தாண்ட மாட்டான்’ என்கிறார். இளையராஜா இளங்கோவடிகளை நினைத்துக் கொள்கிறார். 9வது படிக்க பணம் கட்ட வசதி இல்லை. அப்போதுதான் வைகை அணை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அங்கு கூலி வேலைக்குப் போய் சம்பாதித்து படிப்பைத் தொடர்கிறார். நினைத்ததை முடித்தே தீரும் பிடிவாத குணம் அன்று ஆரம்பித்தது இன்று சிம்ஃபொனியில் முடிந்திருக்கிறது.
இசை கற்க 24 மணிநேரம் போதவில்லை. தன்ராஜ் மாஸ்டரிடம் மேற்கத்திய இசை கற்கும் காலத்தில் அந்த சாயி லாட்ஜ் ரூம் நம்பர் 13க்கு பீதோவனும், மொஸார்ட்டும், ஃபாஹ்கும், மேண்டல்ஸனும், பிராம்ஸும், சைக்காவ்ஸ்கியும் அடிக்கடி வந்து போகிறார்கள். தன்ராஜ் மாஸ்டர் மாமேதை. சிலப்பதிகாரத்தில் உள்ள இசைப்பகுதிகள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார். திடீரென்று ‘கோவலன் இந்த இடத்தில் இன்ன ராகம்தான் பாடினான்’ என்று விளக்க ஆரம்பித்து விடுவார். ‘அவர் இல்லையேல் என் சங்கீதக் கனவு வெறும் கனவாகவே போயிருக்கும்’ என்று படு அடக்கமாகச் சொல்கிறார் இளையராஜா.
வெளிநாட்டுப் பயணம் செய்யுங்கள் என்று நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். உள்நாட்டிலேயே கோவில்களுக்கு மட்டும்தான் செல்பவர் அவர். வெளிநாட்டில் எந்தக் கோவிலுக்குப் போகலாம்? என்று நினைத்த போதுதான் ஃபாஹ், பீத்தோவன், பிராம்ஸ், மொஸார்ட், ஹைடின் போன்றோர் வாழ்ந்த இடங்களை எல்லாம் போய்ப் பார்த்தால் என்ன? என்ற யோசனை வர, கிளம்பி விடுகிறார்.
பிரான்ஸில் புகழ்பெற்ற கம்போஸர் பால் மரியாவைச் சந்திக்கிறார் (சிறுவயதில் இளையராஜாவிற்குப் பிரியமானவர் என்று என் நண்பர்கள் கோபால், வாசு இரட்டையர்கள் பால் மரியாவின் வொயிட் கிறிஸ்மஸைக் கொடுத்து எனக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தது நினைவுக்கு வருகிறது) முதலில், நேரமில்லை என்று 5 நிமிடம் மட்டுமே ஒதுக்கிய பால் மரியா இவரோடு பேசப் பேச… மணிக்கணக்காக பேசிக் கொண்டே இருக்கிறார்.
பாரதியின் கண்ணோட்டத்தை சகோதரி நிவேதிதா மாற்றியதாக நாம் படித்திருக்கிறோம் அல்லவா? அதுபோல் இசை பற்றிய ராஜாவின் கண்ணோட்டத்தை பாரீஸில் ஒருவர் மாற்றுகிறார். பால் என்ற புகழ்பெற்ற கம்போஸர். அவரிடம் ராஜா ‘நீங்கள் கமர்ஷியல் மியூசிக் செய்கிறீர்களா?‘ என்று கேட்கிறார். அவர், ‘இல்லை, நான் இசை மட்டுமே அமைக்கிறேன். அது கமர்ஷியலா, இல்லையா என்பது கேட்பவர் மனோபாவத்தைப் பொறுத்தது என்கிறார். ‘வேதம் புதிது’ படத்தில் சத்யராஜ் கன்னத்தில் அறை விழுந்த தருணம்!
அலெக்சாண்டர் என்றொரு கம்போஸர். அவருக்கு ராஜா ‘ஏதோ மோகம்…’ பாடலைப் போட்டுக் காட்ட, அவர் உடனடியாக வானொலிக்காக ராஜாவிடம் ஒரு நீண்ட நேர்காணல் எடுக்கிறார்.
வியன்னா பயணம். மேற்கத்திய செவ்வியல் இசை உருவான பூமி. வியன்னாவில் 30 – 40 பேர் கொண்ட இசைக்குழுக்கள் ரோட்டோரமாக ஒன்று கூடி இசை நிகழ்ச்சி நடத்துவதும், மக்கள் அப்படியே நின்று கேட்பதும் அன்றாட நிகழ்ச்சியாக இருக்கிறது.
ராஜா பீத்தோவன் சிலையை வணங்குகிறார். அவரது பியானோ, கைப்பட எழுதிய இசைக் குறிப்புகளைப் பார்க்கிறார். ஷுபர்ட் என்றொரு இசை மேதை. 31 வயதில் இறந்து விட்டவர். நான் இறந்தால், என்னை பீத்தோவன் அருகில் புதைக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்தவர். அவர் வீட்டு தரிசனம். ஸ்ட்ராவ்ஸ் என்றொரு மேதையின் வீடு. அங்கு அவரும் ப்ராம்ஸும் சேர்ந்திருக்கும் படம் இருக்கிறது. இளையராஜாவிற்கு தியாகப் பிரும்மமும், கோபாலகிருஷ்ண பாரதியும் சந்தித்துக் கொண்டது, தியாகையரின் வேண்டுகோளுக்கிணங்க கோபாலகிருஷ்ண பாரதி ஆபோகி ராகத்தில் சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா? இயற்றிப் பாடிக் காட்டியது நினைவிற்கு வருகிறது. உ.வே.சாவின் என் சரித்திரத்தில் வரும் உணர்ச்சிபூர்வமான பதிவு இது.
நூற்றுக்கும் மேற்பட்ட சிம்ஃபொனிகளை உருவாக்கிய ஹைடின் வீடு. மொஸார்ட் – இவர் பீத்தோவனுக்கே சில இசை நுணுக்கங்களைக் கற்றுத் தந்தவர் – வாழ்ந்த வீடு. பாக் பிறந்த ஈஸ்நாக், வாழ்ந்த லைப்ஸிக். இவை அன்றைய கிழக்கு ஜெர்மனியில். உடன் வந்த யாருக்கும் கிழக்கு ஜெர்மனிக்குள் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. ராஜா மட்டும் பல ஆங்கில நாவல்கள், படங்களில் இடம்பெற்ற, புகழ் பெற்ற செக் பாயிண்ட் சார்லி வழியாக கிழக்கு ஜெர்மனிக்குள் நுழைகிறார். ஏகப்பட்ட இடையூறுகளை மீறி எப்படியோ போய் விட்டுத் திரும்புகிறார். பாக்கிற்கும் ராஜாவிற்கும் ஒற்றுமைகள் நிறைய உண்டு. அவர் ஒரு கச்சேரி கேட்க 200 மைல் நடந்து சென்றவர். ராஜா இசை கற்க தினமும் வடபழனி ராம் தியேட்டரிலிருந்து லஸ் கார்னர் வரை நடந்தவர். பாக் தன் அண்ணனது இசைக் குறிப்பு நோட்டை அவருக்குத் தெரியாமல் (தெரிந்தால் அடிப்பார்) பிரதி எடுத்துக்கொண்டு இசை கற்றவர். ராஜா அண்ணனுக்குத் தெரியாமல் அவரது ஹார்மோனியத்தை வாசித்துப் பழகி இசை கற்றவர். ‘அதற்காக நான் பாக்கின் மறு அவதாரம் என்றெல்லாம் சொல்லவில்லை. பெரிய தலைவர்களின் பிறந்த நாளில் நம் பிறந்த நாள் வந்தால் சந்தோஷமாக இருக்குமே, அது மாதிரிதான் இது’ என்கிறார் ராஜா.
பெர்லின், லண்டன், நியூயார்க் எல்லாம் போய் இசை மேதைகளைப் பார்க்கிறார். கச்சேரிகள் கேட்கிறார். ஒலிப்பதிவுக் கூடங்களைப் பார்க்கிறார். எல்லா இடங்களிலும். ‘எந்த சக்தி உங்களுக்கு இவ்வளவு அரிய பெரிய இசை ஞானத்தை அளித்ததோ, அதே மாபெரும் சக்தி எனக்கும் கொஞ்சம் ‘ஞானப் பிச்சை இடட்டும்,’ என்று வேண்டுகிறார்.
அந்த வேண்டுதலோடு நிற்கவில்லை. மாரத்தான் ஓடுபவர் பயிற்சியின்போது, ஒரே நாளில் மாரத்தான் தூரம் முழுவதையும் ஓடிவிடுவதில்லை. சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்று மாரத்தான் பந்தயத்தன்று முழு தூரத்தையும் ஓடுகிறார். அதுபோலவே, ‘ஹவ் டு நேம் இட்’ வருகிறது. தியாகப் பிரும்மத்தைப் பார்க்க லைப்சிக்கிலிருந்து பாக் வருகிறார். இந்திய செவ்வியலிசையின் துளசிதள கீர்த்தனையை மிருதங்கத்தின் துணையோடு இசைக்கும் ஒற்றை வயலினுக்கு பதில் கூற, மேற்கத்திய வயலின்கள் கூட்டம் கூட்டமாய், அலையலையாய் வருகின்றன. ‘வீட்டில் பாக்கை சந்தித்தேன்’ என்கிறார் ராஜா. ‘காற்றைத் தவிர வேறு இல்லை’ என்கிறார். ‘மொஸார்ட் ஐ லவ் யூ’ என்கிறார். ‘பிச்சைப் பாத்திரம் ஏந்தி, எனது உடலும், உயிரும், பொருளும், சகலமும் ரமணார்ப்பணம்’ என்கிறார். புற்றில் வாழ் அரவும் அஞ்சேன் என்று தேவாரம் பாடுகிறார். ஆழ்வாராக மாறி பல்லாண்டும் பாடுகிறார். மாரத்தான் பயிற்சியின் ஓட்ட தூரம் அதிகரித்துக் கொண்டே போகிறது. மார்ச் 8 முழு மாரத்தானாக வேலியண்ட்டும் அரங்கேறுகிறது.
தியாகப் பிரும்மம் எந்தரோ மஹானுபாவுலு, அந்திரிகி வந்தனமு (எத்தனையோ மகான்கள் இருக்கிறார்கள். அனைவருக்கும் வணக்கம்) என்றார். நம் சமகாலத்தில் இசைத்துறையில் நாம் பார்ப்பது ஒரே ஒரு மகான்தான். அந்த இசைஞானிக்கு நமது வந்தனம். l