நாட்டுடைமை என்னும் கருத்தாக்கத்துக்கும் செயற்பாட்டுக்கும் இரண்டு நோக்கங்கள் உள்ளது என்று சொல்லலாம். ஓர் எழுத்தாளரின் நூல்களை நாட்டுடைமையாக்குவதன் மூலமாக அவரது நூல்களைப் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லலாம். ஒரே பதிப்பகமே அந்த எழுத்தாளரின் நூல்களைப் பதிப்பிப்பது என்ற நிலை மாறி, பல பதிப்பகங்களும் அந்த நூல்களைப் பதிப்பிக்கும் நிலை வரும்போது இந்தப் பரவலாக்கம் நிகழ்கிறது. இத்தகைய வாய்ப்பை வணிக நோக்கம் கொண்ட, பெரும் முதலீடு செய்யும் பதிப்பகங்களில் இருந்து, வணிக நோக்கமற்ற சிறு பதிப்பகங்கள் வரை பயன்படுத்திக்கொள்கின்றன.
நாட்டுடைமை என்னும் செயற்பாட்டின் இன்னொரு முக்கிய நோக்கம் எழுத்தாளர்களுக்கான பொருளாதார மேம்பாடு. தமிழ்நாடு அரசு ஓர் எழுத்தாளரின் நூல்களை நாட்டுடைமை செய்யும்போது அந்த எழுத்தாளருக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. நாட்டுடைமை செய்யப்படும் நூல்களின் எழுத்தாளர் இறந்துவிட்டால், அத்தகைய நூல்களுக்கான பதிப்புரிமையை வைத்துள்ளவர்களுக்கு அந்தத் தொகை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் எழுத்தாளர்களின் பதிப்புரிமையை அவரின் குடும்பத்தினரே வைத்திருப்பதால் அவர்களுக்கே அரசு வழங்கும் உரிமத்தொகை சென்று சேரும் வாய்ப்பு அதிகம்.
பொதுவாகத் தமிழ்ச்சூழலில் நூல்களை எழுதிப் பொருளீட்டும் எழுத்தாளர்கள் மிகக்குறைவு. குறிப்பாக நவீன இலக்கியம் மற்றும் ஆழமான ஆய்வு நூல்களை எழுதும் எழுத்தாளர்களின் நூல்கள் உடனடியாக விற்றுத்தீர்வதில்லை. பதிப்பகங்களும் எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிய முறையில் ராயல்டி வழங்குவதில்லை. எனவே நாட்டுடைமை செய்யப்படுவதன் மூலம் அரசு வழங்கும் தொகை அந்த எழுத்தாளருக்கோ அல்லது எழுத்தாளரின் குடும்பத்துக்கோ வழங்கப்படுவது பொருளாதார ரீதியில் பயன்படக்கூடும்.
தமிழில் முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் பாரதியின் எழுத்துகளே. 12.03.1949ல் அன்றைய தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் பாரதியாரின் எழுத்துகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதாக அறிவித்தார். அதுவரை பாரதி எழுத்துகளுக்கான உரிமம் ஏ.வி.எம். நிறுவனத்திடமே இருந்தது. ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களிலேயே பாரதியின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டன.
தமிழ்நாடு அரசு பாரதியாரின் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்குவதாக அறிவித்தவுடன் ஏ.வி.மெய்யப்பர் எந்தவித பணமும் பெறாமலே பாரதி எழுத்துகளுக்கான உரிமையை அரசிடம் ஒப்படைத்தார். தமிழ் நவீனத்துக்கும் அரசியலுக்கும் மைல்கல்லாக இருந்த பாரதியார், வெகுமக்களிடம் சென்று சேர்ந்தது திரைப்படங்கள் வழியாகவே. அந்தவகையில் ஏ.வி.எம். நிறுவனத்துக்குத் தமிழ்ச்சமூகம் நன்றி சொல்லவேண்டும்.
தமிழ்நாடு அரசு பாரதியின் எழுத்துகளை நாட்டுடைமை ஆக்கியதும் அது இன்னும் பரவலாகியது. பாரதியின் நூல்களைப் பல பதிப்பகங்களும் பதிப்பிக்கத் தொடங்கின. பாரதியின் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை அடுத்தடுத்து பதிப்பு வடிவம் பெற்றன. ஏ.வி.எம். நிறுவனம் மட்டுமல்லாது பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களும் பாரதியின் பாடல்களைத் தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்தத் தொடங்கின. எளிய நடையிலும் இசை வடிவத்துக்கு ஏற்றவகையிலும் இருந்ததால் பாரதியின் பாடல்கள் மிக எளிதில் வெகுமக்களிடம் சென்று சேர்ந்தன. ‘சின்னஞ்சிறு கிளியே’ என்ற பாடல் தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களை அடைந்திருப்பது ஓர் உதாரணம். அதேபோல் பாரதியின் பதிப்பிக்கப்படாத எழுத்துகள் தேடித்தேடி தொகுக்கப்பட்டன. ஏராளமான பாரதி ஆய்வாளர்கள் உருவாயினர். இதற்கான தொடக்கப்புள்ளி தமிழ்நாட்டு அரசின் நாட்டுடைமை ஆக்கமே.
இது ஓர் உதாரணம். நாட்டுடைமை ஆக்கம் என்னும் செயல்பாடு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு பாரதியின் பரவலாக்கமே நம் கண்முன் நிகழ்ந்த சான்று இயக்கம். படங்கள் முதல் பட்டிமன்றங்கள் வரை இன்று பாரதி பாடல்கள் பயன்படுத்தப்படுவதற்கும் பாரதி என்னும் பின்னொட்டைத் தாங்கிய ஏராளமான எழுத்தாளர்கள் உருவாகுவதற்கும் நாட்டுடைமையாக்கம் காரணமாக அமைந்தது.
பாரதியின் நூல்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன என்றால் பாரதிதாசனின் நூல்கள் அவருடைய நூற்றாண்டில் தி.மு.க தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. ம.பொ.சிவஞானத்தின் ‘விடுதலைப்போரில் தமிழகம்’ என்ற ஒரே ஒரு நூல் மட்டும் 1984ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டு, பிறகு 2006ஆம் ஆண்டு அவருடைய அனைத்து நூல்களும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுத்துகள் 1995ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டன. அதற்கு அடுத்து தேவநேயப்பாவாணரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. சுதந்திரதினப் பொன்விழா ஆண்டான 1997ஐ முன்னிட்டு, 1998ல் தேசிய எழுத்தாளர்களான கவிமணி தேசிய வினாயகம், நாமக்கல் கவிஞர், ராஜாஜி, வ.உ.சி., ஜீவா, சுத்தானந்த பாரதி, அகிலன், பரலி
சு.நெல்லையப்பர், வ.வே.சு. ஐயர் ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதாக முதல்வர் கலைஞர் அறிவித்தார். ராஜாஜி, அகிலன் குடும்பத்தினர் மட்டும் நாட்டுடைமை செய்யப்படுவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
ராஜம் கிருஷ்ணன், புலவர் ராசு, செ.திவான், விடுதலை ராசேந்திரன் என்று பலதரப்பட்ட எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. பேரறிஞர் அண்ணாவின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமை செய்யப்பட்டபோதுதான் 75 லட்சம் என்ற பெருந்தொகை வழங்கப்பட்டது.
தமிழில் நாட்டுடைமை செயற்பாட்டில் கலைஞரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அவருடைய ஆட்சிக்காலத்தில்தான் 108 எழுத்தாளர்களின் நூல்களை நாட்டுடைமை செய்துள்ளார். அதற்காக 7 கோடியே 70 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். ஓர் எழுத்தாளர் அரசுப் பொறுப்பேற்றதன் பயன் இது என்று சொல்லலாம். சமீபத்தில் அதே கலைஞர் மு.கருணாநிதியின் நூல்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குவதாக அவரது மகன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். எந்தவித தொகையும் பெறாமல் கலைஞரின் நூல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் காரணமாக கலைஞரின் 178 நூல்கள் நாட்டுடைமை ஆகியுள்ளன. இன்னமும் தொகுக்கப்படாத கலைஞரின் எழுத்துகள், உரைகள் ஆகியவையும்கூட நூல்வடிவம் பெறலாம்.
2024 வரை 179 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆகியுள்ளன. 14.42 கோடி தொகை எழுத்தாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டுள்ளன. அறிவு பரவலாக்கம், பொருளாதார மேம்பாடு என இரண்டுக்கும் இது உதவியுள்ளது. 1967 முதல் தி.மு.க. அ.தி.மு.க. என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே ஆண்டு வந்துள்ளன. இதில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் அதிகம் நாட்டுடைமை நிகழ்ந்திருக்கிறது. திராவிட இயக்க எழுத்தாளர்களைத் தாண்டி தேசிய இயக்க எழுத்தாளர்கள், பொதுவுடைமை இயக்க எழுத்தாளர்கள், தமிழ்த்தேசிய எழுத்தாளர்கள் என பாரபட்சமில்லாமல்தான் நாட்டுடைமை நிகழ்ந்துள்ளன.
சில எழுத்தாளர்களின் நூல்கள் எல்லாம் நாட்டுடைமை செய்யப்படும் அளவுக்கு முக்கியமானவையா என்கிற விமர்சனப் பார்வையும் சில எழுத்தாளர்களின் நூல்கள் இன்னும் நாட்டுடைமை ஆக்கப்படவில்லையே என்கிற ஆதங்கமும் இருக்கக்கூடும். யாருடைய எழுத்துகள் தகுதி வாய்ந்தவை என்பதில் பார்வை வேறுபாடுகள் இருக்கும். அதேபோல் அவசியம் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டிய எழுத்துகளும் காலப்போக்கில் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும்.
ஓர் எழுத்தாளரின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும்போது பதிப்பகங்கள்தான் அதிகம் உற்சாகமடைகின்றன. உடனடியாகப் பதிப்பகங்கள் வெவ்வேறு வடிவங்களில், விற்பதற்கு அதிகம் சாத்தியமுள்ள எழுத்தாளர்களின் புத்தகங்களை அச்சிடுகின்றன. உற்சாகம் இருக்கும் அளவுக்குப் பதிப்பகங்களுக்குப் பொறுப்புணர்வும் அவசியம். ஓர் எழுத்தாளரின் புத்தகங்களைப் பதிப்பிக்கும்போது அச்சுப்பிழை போன்றவற்றைத் தவிர்ப்பதும் கருத்துகள் திரிக்கப்படாமல் இருப்பதும் மிக முக்கியம்.
நாட்டுடைமையாக்கம் என்பது ஒரு ஜனநாயக நடவடிக்கை. எல்லா ஜனநாயக நடவடிக்கையும் பொறுப்புணர்வையும் கோருகின்றன என்ற புரிதல் அனைவருக்கும் தேவை. l
previous post
