காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கன், வரலாற்று நாவலாசிரியர் புவனா சந்திரசேகரனின் ‘பராந்தகப் பாண்டியன்’ என்னும் நாவலைத் தொடர்ந்து எழுதப்பட்டுள்ள நூல் இது. மிகத்தேர்ந்த கல்வெட்டுகளையும், கட்டுரைகளையும் கொண்டு புனையப்பட்ட நாவல் என்பதால் இதை புனைவாக்கப்பட்ட ஆவணம் என்றே கூறலாம். வரலாற்றை ஆய்வு செய்து நூலாக்கியவர்களின் நூலை ஆய்வு செய்து நாவலாக்கியது பாராட்டுதலுக்குரியது.
அன்னை மீனாட்சியின் அருளால் செழித்து நிற்கும் மதுரை மாநகரானது சோழ மன்னன் குலோத்துங்க சோழனால் முற்றுகையிடப்பட்டுள்ளது. சோழ மன்னனின் புரவிகளும் யானைகளும் தாக்குவதற்கு தயாராக நின்றன. பாண்டிய நாட்டின் வீரர்களும் போருக்கு அஞ்சியவர்கள் அல்லர். யுத்தம் என்று வந்துவிட்டால் நெஞ்சுறுதியோடு எதிர்த்து நின்று போர் புரியும் வல்லவர்கள். ஆனால், போர் நடந்தால் அது தரும் பேரழிவுகளையும், உயிரிழப்புகளையும் பார்க்க சகிக்காத மதுரை மக்கள் குழப்பத்தில் பரபரப்போடு காணப்படுகின்றனர். சோழன் குலோத்துங்கன் தற்போது பாண்டிய நாட்டிற்கு படையெடுத்து வருவது மூன்றாம் முறை. இதற்கு முன்பு குலசேகர பாண்டியனின் மகனான விக்ரம பாண்டியன் தன்னிடம் தஞ்சமென வந்ததால் அவனுக்கு உதவி செய்ய மதுரை மீது போர் தொடுத்தார்.
அந்தப் போரில் மதுரையை ஆண்டு கொண்டிருந்த வீரபாண்டியனை வென்று விக்ரம பாண்டியன் முடிசூட உதவினார். தோல்வியுற்ற வீரபாண்டியன் சேரர்களின் உதவியோடு இரண்டாவது முறையாக குலோத்துங்க சோழனை எதிர்த்து நின்றான். இம்முறையும் வீரபாண்டியன் தோல்வியுற்றான். வீரபாண்டியனின் மனைவி வேளத்திற்கு அனுப்பப்பட்டாள். வேளம் என்பது அரசர், அரசிக்காக சேவகம் செய்யும் பணியாட்களை கொண்ட அமைப்பாகும். தோல்வியுற்ற வீரபாண்டியனும், சேர மன்னனும் குலோத்துங்க சோழனிடம் மன்னிப்பு வேண்டினர். இருவரையும் மன்னித்த குலோத்துங்கர் பாண்டிய நாட்டின் ஒரு பகுதிக்கு வீரபாண்டியனை மன்னனாக்கிவிட்டு நாடு திரும்பினார். வீரபாண்டியன் அதற்கு நன்றிக் கடனாக தனது மகனுக்கு ‘பரிதி குலபதி’ என பெயரிட்டார். குலோத்துங்கனின் உதவியோடு இரு முறை போரில் வெற்றி பெற்ற விக்ரம பாண்டியன் இறந்தவுடன், அவனது மகனான குலசேகர பாண்டியன், அரியணையில் அமர்ந்தான். அவன் சில சதி வேலைகளில் ஈடுபட்டதால் குலோத்துங்கர் பாண்டிய நாட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக மூன்றாவது முறையாக பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வருவதாக நாவல் துவங்குகிறது.
இம்முன்கதையை குழப்பங்கள் இல்லாமல் மிகத் தெளிவாக ஆசிரியர் கூறியுள்ளார். மதுரை நகரத்தை தமிழறிஞர்கள் சிறப்பிக்கும் பெயர்களையும், சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டிற்கு வரும் வழியில் இருக்கும் சிற்றூர்களையும் கூறியிருப்பது உண்மையான வரலாற்றை நினைவுபடுத்துகிறது. பாண்டிய நாட்டின் கோட்டைக் கதவுகள் இறுக்கமாக மூடப்பட்டுள்ளதால் சோழர் படையானது உள்ளே நுழைய முடியாமல் இருக்கிறது.
முற்றுகை அதிக நாட்கள் நீடிப்பதை குலோத்துங்க சோழர் விரும்பவில்லை. இங்குதான் காடவர் குலத்தை சேர்ந்த வீரமிக்க நமது நாவலின் நாயகன் கோபெருஞ்சிங்கன் அறிமுகம் ஆகிறான். மேலும் அவனின் நண்பனான வாணகோவரையன் மற்றும் இவர்களின் ஆசிரியர் சேனை மீகாமன் என சிறப்பிக்கப்படும் ராசராசச் சேதிராயரும் அறிமுகம் ஆகிறார்கள். குழப்பமான நேரத்தில் அதை தீர்க்க நாயகனை அறிமுகப்படுத்திய இடம் மற்றும் பாங்கு சிறப்பானது.
பாண்டிய நாட்டினரின் போர் வியூகங்கள், அதைத் தகர்க்க சோழ வீரர்கள் செய்யும் ஆயத்தங்கள், பலவகை போர் படைப்பிரிவுகளின் பெயர்கள், போருக்கான சூழலை மிக நேர்த்தியாக உருவகப்படுத்துதல் என ஒரு போர்க்களம் நம் கண்முன்னே விரிகிறது. இடையிடையே புலவர்களின் பாடல் அடிகளை கோர்வையாக்கி கதாபாத்திரத்தின் வழியாக ஆசிரியர் பேசியிருப்பது மேலும் அழகு சேர்க்கிறது. போர் முடிந்த பின்பு நிகழும் விழாக்களையும், பட்டமளிப்புகளையும், போரினால் உண்டான அழிவுகளையும் பட்டியலிட்டுக்கொண்டே ஆசிரியர் கதையை நகர்த்துகிறார்.
புனைவான போர் என்றாலும் சங்க கால விசேஷங்கள், அன்றைய பட்டங்கள், கொடுக்கப்படும் தண்டனைகள், கருவூல ஆபரணங்கள் என ஒவ்வொன்றையும் காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. நாவல் ஆசிரியர் தனக்கே உரித்தான ஒரு பாணியை கையாளுகிறார். அதுதான் ஒவ்வொரு அத்தியாயம் முடியும்போதும் ஏதோ ஒரு மர்மத்தை நம்மிடையே விதைத்துவிட்டு அடுத்த அத்தியாயத்திற்குள் நுழைவது. அதை இந்த நாவலிலும் நம்மால் கண்டு மகிழ முடிகிறது. மாமல்லபுரத்தின் கலை நுணுக்கங்களையும் அதைக் கோப்பெருஞ்சிங்கன் ரசிக்கும் வர்ணனைகளும் அழகானது. கோப்பெருஞ்சிங்கனுக்கும் அம்மங்கா தேவி என்னும் இளவரசிக்கும் இடையே நிகழும் காதல் அலைகள் நம்மையும் சற்று கிறங்கடிக்கச் செய்கிறது.
சிங்கனின் பெற்றோர் மற்றும் தங்கை உடனான உரையாடல்கள் அவர்களின் பாசத்தைக் காட்டினாலும், போர் என்றவுடன் எழும் வீரத்தையும் ஒருங்கே காட்டுகிறது. ஆசிரியர் சில வரலாற்று சிறப்புமிக்க போர்களையும் பட்டியலிட்டு காட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
தன்னுடைய தங்கையை தனது நண்பன் காதலிப்பதை அறிந்து அதை நிறைவேற்றி வைக்கும் அண்ணனும், தனது அண்ணன் தன்னுடைய காதலுக்கு அனுமதி தந்த நிமிடங்களும், தனது நண்பனின் தங்கையை, தான் காதலிப்பது தெரிந்திருந்தாலும் அதை அவன் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டதும் என கதை நெகிழ்ச்சியான தருணங்களாக நகர்கிறது.
குலோத்துங்க சோழனின் வெற்றி விழாவில் அவனை கொண்டாடும் பெயர்களாக குறிப்பிடப்படுபவை அனைத்தும் நாவலின் ஆசிரியருக்கே உண்டான தனி உத்தி. பதிமூன்று வகையான யாழ்களின் பெயர்களை பட்டியலிட்டு காட்டியுள்ளார். கோப்பெருஞ்சிங்கனின் திருமண வைபவம் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மணமகனின் தோற்றமும், நடையும், ஆபரணங்களும், மணமகளின் ஆபரணங்களும், அவளின் நளினமும், நாணமும் அணிந்திருந்த அணிகளும், மலர்களின் வகைகளும் என சங்க கால திருமணத்தை நம் கண் முன்னே ஆசிரியர் கொண்டு வந்திருக்கிறார்.
திருமணத்தில் பரிமாறப்பட்ட உணவுகளின் வகைகளாக ஆசிரியர் பலவற்றை குறிப்பிட்டுள்ளது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். பூந்தொடை விழா என்னும் சங்ககால விழாவினை ஆதாரத்துடன் காட்சிப்படுத்தி இருப்பது தனிச்சிறப்பு. மகள் வழி வம்சாவளிகள் நாட்டை ஆளும் தகுதி பெற்றவர்கள் என்னும் புரட்சி மிகுந்த எண்ணங்களை வரலாற்றின் பட்டியலோடு இணைத்துக் கூறும் இடங்கள் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.
கோப்பெருஞ்சிங்கன் அருந்தும் பானத்தில் விஷம், பட்டத்து இளவரசனுக்கும் வாணகோவரையனுக்கும் உண்டான மல்யுத்தம், ஆற்றங்கரையில் காயங்களோடு கிடந்த இளம் பெண் என திக் திக் நிமிடங்களை ஒரு புள்ளியில் கொண்டு வந்து குழப்பத்தை தீர்த்திருப்பது சிறப்பானது. இளவரசரின் மனைவியும் வாணகோவரையனின் தங்கையுயான கோப்பெருந்தேவியின் சூழ்ச்சிகள் தான் கதையின் முக்கிய திருப்பங்கள். பெண்ணின் வீரத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். குறுவாள் ஏந்துவது, தனியே அடர்ந்த காட்டுக்குள் பயணிப்பது, ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தும் அளவிற்கு துணிவு கொண்டிருப்பது என ஒவ்வொரு இடத்தையும் ஆசிரியர் செதுக்கி உள்ளார் என்றே கூறலாம். தகுதியில்லாத ஒருவர் நாட்டை ஆள்வதும், மன்னரின் மரணமும், உள்நாட்டு மோதலும், படிப்பவரை சீட்டின் நுனிக்கு அழைத்து வரும் பகுதிகள்.
இறுகிய நெஞ்சமும் கரைந்து, கனன்ற கண்களும் கண்ணீர் சிந்திய ஒரு தருணம்தான் கோப்பெருஞ்சிங்கனின் தங்கை இளநிலாவின் மரணம். இள நிலாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தின் முடிச்சுகளை ஆசிரியர் மிக நேர்த்தியாக படம் பிடித்துக் காட்டியுள்ளார். பெண்களின் வீரத்தை மட்டுமே பேசிக் கொண்டிருந்த வேளையில், மானத்திற்காக உயிரையும் கொடுப்பார்கள் என்னும் இடங்கள் நம்மை நெகிழச் செய்கின்றன. சங்க இலக்கியங்கள் தோழி என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தை உருவகப்படுத்தி இருப்பது போல, இந்த நாவலில் இளநிலாவின் பணிப்பெண்ணாக ஓர் இளம் பெண்ணை உருவகப்படுத்தி தனது தலைவிக்காக அந்த இளம் பெண் உயிர்விடும் தியாகியாக அடையாளப்படுத்தி இருப்பது போற்றத்தக்கது.
இளநிலாவை கொன்றது யார்? குற்றவாளி என நினைக்கும் அந்த நபர் தன் பக்கம் உள்ள நியாயங்களை கூறி எவ்வாறு, தான் குற்றம் செய்யவில்லை என வாதிடுகிறார், அவரைச் சார்ந்தவர்கள் அதற்கு எவ்வாறு வழி மொழிகிறார்கள் என இறுதிக் கட்டம் பரபரப்புடன் நகர்கிறது. மேலும் கதையின் திருப்புமுனையாக உள்ளே வரும் ஒரு நபர் கதையில் இதுவரை உறங்கிக் கொண்டிருந்த மர்மங்களுக்கு விடை சொல்பவராக இருக்கிறார். அவரை காட்சிப்படுத்தி விவரித்திருக்கும் தருணங்கள் ஆழமானது. புதியவனையும் அவனைப்போன்று உருவ ஒற்றுமையில் இருக்கும் அவன் அண்ணனையும் அடையாளம் காண எடுக்கும் யுத்திகளில், வரலாற்று நாவலாசிரியர் ஒரு துப்பறியும் நாவலாசிரியராக மாறியுள்ளார் என்றே கூறலாம்.
தனது தலைவிக்காக உயிரைவிட்ட ஒரு சேடிப் பெண், தனது மனைவிக்காக உயிரை விட்ட கணவன், பெண்கள் பலரைக் கொன்றான் என்பதற்காக அவனின் தலையை கொய்து காளியாக மாறிய ஓர் இளம்பெண் என உக்கிரங்கள் நீண்டு நெகிழ்வுகள் சூழ்ந்து நாவல் முழுமை பெறுகிறது.
நாவல் முழுவதிலும் சங்க இலக்கிய பாடல்களைக் கூறியும், வரலாற்று நூல்களை ஆதாரமாக்கியும், நாவலுக்கும் வரலாற்றுக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்தியும், ஹொய்சாளர் என்றால் என்ன என்பதற்கு நாட்டுப்புறக் கதைகள் வழியாக உலவி வரும் உண்மையை எடுத்துக்காட்டி இருப்பதும் வரலாற்றின் மேல் ஆசிரியர் கொண்ட காதலை காட்டுகிறது. மேலும் மேலும் இவரின் தீவிர வரலாற்றுப் பார்வை, அதைக் கொண்டு இவர் பேனா உருவாக்கி இருக்கும் புனைவுகள் நம்மை சங்க காலத்திற்கே கூட்டிச் செல்வதாக தோன்றுகிறது. போர்க்களத்தில் பாதம் தொட்டு, ஆபரணங்களில் கைகள் பட்டு, புரவிகளோடு உறவாடி, வாள் வேல்களோடு மன்றாடி ஒரு யுத்த களத்தையே நேரில் காட்டியிருப்பது மிகச் சிறப்பானதாக உள்ளது. l