எழுத்தாளர் முபீன் சாதிகாவின் “கண்ணாடிக் கோட்டை” நாவல் ஆட்டிசம் குறைபாடுடைய நவீன் என்னும் சிறுவனின் குடும்பத்தில் துவங்குகிறது. நவீனுக்கு பிரவீன் என்னும் இரட்டை சகோதரன் உள்ளான். நவீன் குடும்பம் கடற்கரைக்கு செல்கிறார்கள். நவீனுக்குக் கடலைக் கண்டால் பயம் வருகிறது. அதனால் அவன் பயத்தின் உச்சத்தில் அழும்பொழுது அவர்கள் வீட்டுக்கு சென்று விடுகிறார்கள். அவ்வாறு கடற்கரையிலிருந்து திரும்பிய ஒருநாள் இரவு நவீனுக்கு உறக்கம் வராமல் தன் எண்ண அலைகள் மூலம் கடலுக்குள் செல்கிறான். அப்பொழுது கடலின் உள்ளே ஒரு கண்ணாடிக் கோட்டை இருப்பதைப் பார்க்கிறான். அங்கு இருப்பவர்கள் அயல்கிரக மனிதர்கள் என்பது அங்கிருக்கும் விழியாள் என்னும் அயல்கிரக சிறுமி மூலம் அவனுக்கு தெரிய வருகிறது.
அந்த சிறுமி நவீனின் ஆட்டிசம் குறைபாடு இருப்பது பற்றி அறிந்து அவனைத் தங்கள் கிரகத்துக்கு அழைத்துச் செல்வதாகவும், அவனுக்கு பதில் தானே நவீன்போல உருமாறி அவன் குடும்பத்தில் இருக்கப் போவதாகவும் கூறி நவீனைச் சம்மதிக்க வைத்து அது போலவே செய்கிறார்கள்.
அதன் பின் நாவல் அயல்கிரகம், நவீனுக்கான பணிகள், விழியாள் நவீனாக அவனது வீட்டில் கழிப்பது, நவீனுக்கு தானாகவே பேச்சு வருவது, நவீன் நினைத்தவுடன் விழியாள் அவனுடன் நேரில் பேசுவது, கணினித் தொடர்புகள், விழியாள் கிரகத்தின் இனத்தினர் செய்யும் செயல்களுக்கு நவீன் பணியாற்றுவது, கிரிக்கெட் போட்டிகள் ஆடுவது, நவீனின் இரட்டை சகோதரனான பிரவீனுக்கு நவீன் உருவத்தில் இருக்கும் விழியாள் உதவுவது என வேகமெடுக்கிறது.
ஒவ்வொரு அத்தியாயத்திலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றனர். அதில் பூமியைச் சேர்ந்த நவீன் தவிர்த்து பிற அனைவரும் வேறு வேறு கிரகங்களை சேர்ந்த இனத்தினராக உள்ளனர். அவர்களில் சிலர் விழியாள் இனத்தினரின் செயல்பாடுகளுக்கு உதவுபவர்களாகவும், சிலர் எதிரிகளாகவும் உருவாக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும் எதிரியாக அனா எனும் இனத்தின் தலைமை பெண் உள்ளார். அந்தப் பெண் அவர்கள் இனத்தைத் தவிர பிற இனங்கள் அனைத்தையும் அழிக்கும் எண்ணம் கொண்டவளாக இருப்பதால், விழியாள் வேறு பல இனங்களை தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு அனா இனப் பெண் தலைமையை எதிர்த்து போரிடும்படியாக நாவல் நகர்கின்றது.
விழியாள் இனம் அனைத்து இனங்களையும் பாதுகாக்க முயற்சிக்கும் நிலையில், அனா இனம் அனைத்து இனங்களையும் அழிக்கும் எண்ணத்தில் இருப்பது நாவலில் எதிரெதிர் நிலையை உருவாக்குவதால் எந்த இனம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு உருவாக்கப்படுகின்றது.
நாவலில் வரும் இனங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் அனைவரும் தாங்கள் செய்து வைத்துள்ள அதிநவீன விமானங்களில் பறக்கிறார்கள், வெவ்வேறு கிரகங்களுக்குச் செல்கிறார்கள். அங்கு தங்களது முன்னோர் இனத்தினை பார்க்கிறார்கள் என கால எந்திரக் கருத்தும் உருவாக்கப்படுகின்றது. முதல் ஓரிரு அத்தியாயங்கள் மற்றும் விழியாள் நவீன் வீட்டில் இருக்கும் அத்தியாயங்கள் தவிர்த்து பிற அத்தியாயங்கள் அனைத்தும் வெவ்வேறு கிரகங்களிலும், விழியாளின் கிரகத்திலும் நடைபெறுகின்றது. அனா இனம், விழியாள் இனம் உட்பட அனைத்து இனங்களையும் அழிப்பதற்கு செய்யும் முயற்சிகளும் அதற்கு எதிராக விழியாள் இனம் பிற இனங்களுடன் சேர்ந்து செய்யும் தற்காப்பும் என்று நாவல் அண்டத்தில் நடைபெறும் போராக வளர்கிறது.
விழியாள் இனம் உருவாக்கும் பெரிய எந்திர மனிதன், அந்த எந்திர மனிதனுக்குள் உள்ளீடு செய்யும் பிற இனங்களின் தகவல்களுடன், வெவ்வேறு புதிய தகவல்கள், உள்ளீடுகள் என தற்பொழுது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுக்குப் பயன்படும் மற்றும் செயற்கை நுண்ணறிவை வளர்க்க உதவும் உள்ளீடுகள்போலவே அந்த எந்திர மனிதனுக்கு உள்ளீடுகள் செய்யப்படுவது என நாவல் அதி நவீன தொழில்நுட்பம் சார்ந்து நகர்கிறது.
இந்நாவலின் களம் பூமியிலிருந்து விண்வெளிக்கு நகர்ந்து, அங்கிருந்து வெவ்வேறு கிரகங்களுக்கு என காலநேரம் குறிப்பிடப்படாமல் சில நேரங்களில் ஒளிவேகத்தில் நகரும்படியாக இருப்பதால், இந்நாவலை வாசிக்கும் நாமும் ஒளி வேகத்தில் வெவ்வேறு கிரகங்களுக்கு செல்லும் தோற்றமும் உருவாகின்றது. மேலும் பூமி போன்ற கிரகத்தில் ஏற்படும் அதீத சூழல் மாறுபாடுகளால் மனித இனமே அழியும் நிலை உருவாகும்பொழுது, அவர்களை வேறு பாதுகாப்பான கிரகத்துக்கு அழைத்துச் செல்வது மற்றும் அதில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவையும் நாவலில் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெவ்வேறு கிரகங்களை சேர்ந்தவர்களும் தமிழில் பேசுவதால், நாமும் வேற்று கிரக மனிதர்களாக வாசிக்கும்பொழுதே மாறிவிடுகிறோம்.
இவ்வளவு பெரிய எல்லையற்ற விண்வெளியில் இதுவரை மனிதர்களைத் தவிர வேற்றுக் கிரகத்தில் இருந்து ஓர் இனம்கூட கண்டுபிக்கப்பட்டிராத நிலையில், வேற்றுக் கிரகத்தில் வேறு இனங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சில விஞ்ஞானிகள் கருதும் வேளையில், ஒன்றல்ல, இரண்டல்ல பல்வேறு கிரகங்கள், பல்வேறு இனங்கள், பல்வேறு செயல்பாடுகளைக்கொண்ட இனங்கள் என்று அயல் கிரகங்களில் உள்ளவர்கள்கூட தங்களைப் பற்றி தாங்களே அறிந்து கொள்ள முடியாத அல்லது அறிந்திருக்கும் சாத்தியம் இல்லாத சூழல்களையும், நோக்கங்களையும், செயல்பாடுகளையும் இந்நாவலில் முபீன் சாதிகா உருவாக்கியுள்ளார்.
இந்நாவலைப் படித்த இருபது நாட்களில் பத்து நாட்களுக்கு மேல், இரவில் கனவில் அயல்கிரகங்களுக்கு செல்வது போன்றும், அங்கு அயல்கிரக மனிதர்களுடன் தமிழில் பேசி, அவர்களும் தமிழிலேயே பேசுவது போன்ற கனவுகள் வந்தன. அது இந்த நாவலில் நவீன் துவக்கத்தில் உறக்கத்தில் சென்று கண்ணாடிக் கோட்டையில் விழியாளை சந்திப்பதுபோன்றே இருந்தது. அதன் பிறகு இந்நாவலைப் படிப்பதும் கனவுகளைப் படிப்பதுபோலவே இருந்தது. ஒரு கட்டத்தில் படிப்பதும், கனவில் வெவ்வேறு கிரகங்களில் பயணிப்பதுபோல கனவு காண்பதும் என இரண்டுமே ஒன்றுதான் என்பது போல ஒரு மாயத்தோற்றத்தை இந்நாவல் உருவாக்குகின்றது.
பொதுவாகவே எழுத்தாளர்களை அயல்கிரக மனிதர்களாகவே சிலர் பார்க்கும் வேளையில், முற்றிலும் அயல்கிரகங்கள், அயல்கிரக மனிதர்கள், அவர்களது செயல்பாடுகள், தொழில்நுட்பங்கள், நோக்கங்கள், போர்கள், தற்காப்புகள் என அயல்கிரகங்கள் சார்ந்த அயல்கிரக சாத்தியங்கள் அனைத்தையும் பற்றி ஒரே ஆண்டுக்குள் எழுதப்பட்டுள்ள கண்ணாடிக் கோட்டை நாவல் ஆசிரியர் முபீன் சாதிகா அவர்களும் எங்காவது அயல் கிரகங்களுக்கு சென்று வந்திருப்பாரா அல்லது அயல் கிரகத்திலிருந்து வந்தவரா அல்லது பூமியில் இருக்கும் அயல்கிரகத்தவரா என்ற சந்தேகத்தை விலக்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு மிகப்பெரிய அண்ட சுற்றுலா செல்லவும், அங்குள்ள கிரகங்களில் சென்றும் தமிழில் பேசி, தமிழில் பழகி, தமிழிலேயே தொழில்நுட்பங்களுடனும், அறிவியலுடனும் வாழ்ந்துவிட்டு வருவதற்கு நம்முன் உள்ள ஒரே பெரும் நாவல் கண்ணாடிக் கோட்டை. l