‘தோழர் செயப்பிரகாசம் இப்போது இல்லை என்ற நினைவே இருப்பதில்லை, நேற்று மீண்டும் அவரது முதல் சிறுகதை தொகுப்பு எடுத்து வாசிக்கிற போது அவர் இருக்கும் உணர்வோடே வாசித்தேன், முதன்முறை வாசித்தபோது ஏற்பட்ட அதே உணர்ச்சிகளை, நெகிழ்ச்சியை நேற்றும் அடைந்தேன், எப்போது வாசித்தாலும் இப்படியான உணர்வுகளை ஏற்படுத்துவதுதானே உலக இலக்கியம்…..’ என்று உணர்ச்சிவசப்பட்டார் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்.
மண்ணெண்ணெய் விளக்கினில் பாட்டுக்கட்டி -,இந்த
மண்ணுக்குக் கொண்டு வந்தேன் – அந்த
மாகவி இங்கெங்கோ மறைந்து நிற்பான் என்று
மனப்பால் குடித்து வந்தேன்
என்ற கவிஞர் பரிணாமன் எழுதிய இசைப்பாடல் நினைவுக்கு வந்தது.
கரிசல் மண்ணின் மகத்தான கதை சொல்லி பா.செயப்பிரகாசம். அவர்களது நினைவில் மார்ச் 15 அன்று சென்னை எழும்பூர் இக்சா அரங்கில் மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலு அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு, ஜே.பி. அவர்களது உணர்ச்சிகரமான நினைவேந்தலாக அமைந்தது. வழக்குரைஞர் பி.வி.பக்தவச்சலம் நினைவு அறக்கட்டளையும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் – தென் சென்னை மாவட்டக் குழுவும் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பா.செ. அவர்களைக் குறித்த நினைவுரை ஆற்றினார் தமுஎகச தென் சென்னை மாவட்டச் செயலாளர் அசோக் சிங். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மறைந்த படைப்பாளியின் பங்களிப்பு குறித்த நினைவுகளோடும், படைப்புகளின் வழியாகவும் தான் பா.செ. அவர்களோடான நினைவுகளைத் தேக்கி வைத்திருப்பதைக் குறிப்பிட்டுப் புகழஞ்சலி செலுத்தினார்.
எழுத்தாளர் மயிலை பாலு தனது தலைமை உரையில் 2022 அக்டோபரில் மறைந்தார் பா.செ, அவரது நினைவேந்தல், அவரது படைப்புகளையும் அவர் மேற்கொண்டிருந்த விழுமியங்களையும் நாமும் கொண்டாடுதல் தான் என்றார்.
‘பா.செயப்பிரகாசம் அல் புனைவுகளில் பெண்ணிய மற்றும் சமூக பங்களிப்புகள்’ எனும் பொருளில் உரையாற்றிய எழுத்தாளர் கமலாலயன், பா.செ அவர்களது இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய குறிப்போடு தொடங்கி, தனது மாணவப்பருவத்தில் தானும் அந்தக் களத்தில் இறங்கி தாக்குதலை எதிர்கொண்டதை நினைவு கூர்ந்தார்.
தெக்கத்தி ஆத்மாக்கள், நஞ்சுண்ட பூமி உள்ளிட்ட தொகுப்புகளில் இருந்து வெவ்வேறு இடங்களை மேற்கோள் காட்டிய கமலாலயன் சமரசமற்ற பாட்டாளி வர்க்க சார்போடு அவர் எழுத்துகள் அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். முடிந்து போன அமெரிக்க கற்பனைகள், பொதுவாக சொர்க்கபுரி என்று வருணிக்கப்படும் அமெரிக்காவின் வேறு தரிசனத்தையும், அமெரிக்க அரசு வேறு அதன் மக்களது கருத்தியல் வேறு எனும் பாகுபாட்டையும் பேசியது என்றார். ஈழக் கதவுகள் தொகுப்பைக் கண்ணீர் சிந்தாமல், உணர்ச்சி வயப்படாமல் வாசித்தல் சாத்தியமில்லை என்று சொல்லிச் சிலவற்றைத் தொட்டுக் காட்டுகையில் சில நொடிகள் சொற்களற்று விம்மி உறைந்து நின்றவரானார் கமலாலயன். உள்ளத்திலிருந்து எழுதும் எழுத்துகளை வாசித்தலே பா.செவுக்கான உண்மையான நினைவேந்தல் என்று நிறைவு செய்தார்.
பா.செ அவர்களது சிறுகதைகளில் பெண் பாத்திரப் படைப்பு எனும் பொருளில் பேச எடுத்துக் கொண்ட முதல் கதையான ‘ஒரு ஜெருசலேம்’ எனும் சிறுகதையை விவரிக்கையிலேயே நாத் தழுதழுத்துப் போன தமிழ்ச்செல்வன், அவரது சொந்த வாழ்க்கைக் கதை தான் அது என்று மேலும் விளக்கலானார். தான் பெற்ற மகள் பிணமாய்க் கிடக்க, பேரக் குழந்தைகளைக் கண்ணீரோடு அணைத்துக் கொள்ளும் பாட்டி, உங்களை அகலமாக வளர்க்க முடியாமல் போனாலும் ஒசரமா வளர்ப்பேன் என்று ஆற்றுப் படுத்தும் காட்சியில் கரைந்து நின்றார். இருளின் புத்திரிகள் கதையோ, அம்பலக்காரர் வீடோ எடுத்துச் சொல்லிக் கொண்டே சென்ற எந்தக் கதையிலும் செயப்பிரகாசம் படைத்த கரிசல் மண்ணின் அச்சு அசலான பெண் பாத்திரங்கள், சங்க இலக்கியங்களில் வரும் ‘ஆள் இல்’ பெண்கள் தான். பெண்களின் நிராதரவான தருணங்களை இலக்கியப்படுத்தியவர் பா செ என்று நெகிழ்ந்து போனார் தமிழ்ச்செல்வன்.
‘சிடுசிடுப்பே வாத்திய இசையாகக் கொண்டிருப்பாள் என்று ஒரு பாத்திரத்தை வருணித்திருப்பார். பிடுங்கிப் போட்ட செடியைப் போலக் குவிந்து கிடந்தாள் என்று வேறொரு கதையில் எழுதி இருப்பார். சிறுகதையை உணர்ச்சி பூர்வமான மொழி நடையில் வார்ப்பதில் சிறப்பானவர் செயப்பிரகாசம், ‘ஒரு ஜெருசலேம்’ சிறுகதை உலக மொழிகளில் கொண்டு செல்லப்படவேண்டியது என்றார்.
நன்றியுரை ஆற்றிய வழக்குரைஞரும், பா செயப்பிரகாசம் மைத்துனர் பிவி பக்தவச்சலம் மகளுமான அஜிதா, பா செயப்பிரகாசம் அவர்களது நேயத்தையும், உன்னத விழுமியங்களையும் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்ந்தவர், வழக்கறிஞர் தொழில் சார்ந்த எழுத்துகளைக் கடந்து படைப்புலக எழுத்திலும் நுழையும் உந்துதலைத் தனக்கு இந்தக் கருத்தரங்கு ஏற்படுத்தி விட்டது என்று எல்லோருக்கும் நன்றி பகன்றார்.
நிகழ்வுக்கான பின்னணித் திரையில் பா செயப்பிரகாசம் அன்று அந்தத் தருணத்தில் அனைவருக்கும் அன்பு கடத்தும் புத்தம் புது புன்னகையோடு காட்சி அளித்தது போலவே தோன்றியது. l
