புத்தகங்களை வாசித்து நீங்கள் உங்கள் சிறைச்சாலையிலிருந்து வெளியேறுகிறீர்கள்.. வாசிப்பே விடுதலை – ஃப்ரெடரிக் டக்ளஸ்
ஒருவர் புத்தகம் வாசிப்பதற்கான 1000 காரணங்கள் என்று 1000 எழுத்தாளர்கள் சேர்ந்து ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார்கள். அந்தப் புத்தகம் முதலில் வெளிவந்த மொழி ரஷ்ய மொழி. பிறகு அது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. அவற்றில் முக்கியமான ஐந்து காரணிகளாக நாம் பார்க்க வேண்டியது; கல்வி உயர்வுக்காக வாசித்தல்; சமூக மேம்பாட்டுக்காக வாசித்தல்; அறிவியலை அடுத்த படிநிலைக்கு எடுத்துச் செல்வதற்காக வாசித்தல்; அரசியல் புரிதலோடு வரலாற்றில் ஒரு அங்கமாக வாழ்வதற்காக வாசித்தல். எல்லாவற்றுக்கும் மேலாக குடும்பத்தில் ஒரு நூலகத்தை அமைத்து வாசிப்பில் அனைவரும் ஈடுபட்டு புத்தகக் குடும்பமாக வசிப்பதற்கு வாசித்தல். இப்படி அடுக்கிக்கொண்டேப் போகிறார்கள்.
உலகத்தில் வாசிப்பால் உயர்ந்த மாமனிதர்கள், புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் மீதான காதலின் மூலம் வாழ்க்கையையே மாற்ற முடியும் என்பதற்கான உதாரணமாக வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த வகையில் உலகப் புத்தக தினம் என்பது அதிகமானக் குழந்தைகள் மற்றும் குடும்பங்களை வாசிப்பில் இருக்கும் மகிழ்ச்சியை உணர்ந்து கொள்ள ஊக்குவிக்கிறது. நம் தமிழகத்தில் உலகப் புத்தகத் தினத்தை இரு பத்தாண்டுகளாக ஆண்டுவிடாமல் தீவிரமாக கொண்டாடுகின்ற ஒரு மேடையை பாரதி புத்தகாலயம் அமைத்து நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. உலகப் புத்தகத் தினம் முதன்முதலில் 1995ஆம் ஆண்டு ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்பட்டது. முதல் புத்தக தினமே உலக அளவில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைபிடிக்கப்பட்டது என்பது ஒரு சாதனையாகும். UNESCO புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டு இதற்காக உலக அளவில் ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து உலகப் புத்தக தலைநகரத்தை தேர்ந்தெடுக்கின்றனர். அந்த படிநிலையில் இருந்து புத்தகத் தினத்தை நோக்கியப் புத்தகம் குறித்த வாசிப்பு குறித்த மேன்மையை மக்களுக்கு எடுத்துச் செல்லுகின்ற பிரமாண்ட பிரச்சாரத்தையும் அது முன்னெடுத்தது.
ஆனால் உலக புத்தக தினம் என்பது மிகப்பழைய பாரம்பரிய அம்சமாக 1922 முதலே கொண்டாடப்படுவது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த சமூகங்களின் தலை சிறந்த சிந்தனையாளர்களையும் எழுத்தாளர்களையும் கொண்டாடுகின்ற ஒரு வைபவமாக பல நாடுகளில் ஏற்கெனவே அது அமல்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. பல முக்கிய உலக அளவிலான எழுத்தாளர்களின் பிறப்பு மற்றும் இறப்பு நடந்ததாக கருதப்படும் ஏப்ரல் 23ஆம் தேதியை யுனஸ்கோ உலகப் புத்தகத் தினமாக முன்மொழிந்தது. சர்வதேச வெளியீட்டாளர்கள் சங்கம், சர்வதேச நூலக சங்கம் போன்ற பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தகத் தினத்தை அனுசரித்து வருகிறார்கள். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளை நாம் அடுத்த சந்ததிக்கு புத்தகங்களை பரிசளித்து அதன் வாயிலாகவும் பரவலாக புத்தக வாசிப்பை எடுத்துச் செல்லவும், பள்ளி நூலகங்களில் புதிய புத்தகங்களை வாங்கி வைத்து ஆர்வத்தோடு குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கங்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்த வேண்டும். புத்தகங்களைப் படிப்பதற்கும் வெளியிடுவதற்கும் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக வாசிப்பை மாற்றிக்கொள்வதற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்கு ஒருவகை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக உலகப் புத்தகத் தினத்தை தமிழக பள்ளி கல்வித் துறையே முன்வந்து நடத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.புத்தக வாசிப்பை சமூகத்தில் ஓர் அங்கமாக்கிட தமிழக அரசு நிறைய முன்னெடுப்புகளை செய்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூலகம் என்று ஒரு புறம் நூலகங்களை வளர்த்து வரும் அரசு, மாவட்டம் தோறும் புத்தக காட்சிகளை நடத்தி புத்தக வாசிப்பை தமிழகத்தில் ஓர் அங்கம் ஆக்கிட பல வகையான முயற்சிகளை செய்வது இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கான முன்மாதிரி செயல்பாடு என்பதில் யாருக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது.
உலகப் புத்தகத் தினத்தை பள்ளிக்கூடம் தோறும். கல்லூரியின் நூலகங்கள் தோறும் அரசு விழாவாக எடுத்துச் செல்லும்பொழுது அதன் தாக்கம் வாசிப்பு குறித்த ஆர்வத்தை மக்களிடையே மேலும் மேலும் விதைப்பதற்கு பயன்படும். உலக புத்தகத் தினத்தில் பள்ளி மாணவர்களுக்குத் தனியாகவும் கல்லூரி மாணவர்களுக்குத் தனியாகவும், தான் வாசித்த புத்தகங்களை அறிமுகம் செய்கின்ற புத்தக விமர்சக் கூட்டங்களை ஒவ்வொரு பள்ளியும் கல்லூரியும் நடத்த வேண்டும். ஒரு கருத்தரங்கைப்போல அவற்றை செயல்படுத்தலாம்.
இப்படி புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக புக்ஸ் ஃபார் சில்ரன் மூலம் நாம் புதிய ஒரு படிநிலையை எடுத்து வைத்திருக்கிறோம். தமிழகத்தில் 100 பள்ளிக்கூடங்களில் சிறுசிறு புத்தகத் திருவிழாக்களை நடத்தி, அந்தப் பள்ளிக்கூட மாணவர்களையே படைப்பாளிகள் ஆக்கி அவருடைய படைப்புகளை, வெளியிடுவதற்கும் ஒரு புதிய உத்வேகமான உத்தியை நாம் அறிமுகம் செய்திருக்கிறோம். இதுபோலவே கல்லூரிகளிலும் செயல்படுத்த நாம் தயாராக இருக்கிறோம். எனவே உலகப் புத்தகத் தினத்தை திறன்பேசிகளில் வாட்ஸ்அப்பில் வாழ்த்துகளாக மட்டுமே பகிர்வதைவிட இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவும் உலகப் புத்தகத் தினத்தை பள்ளி, கல்லூரிதோறும் அரசு விழாவாக எடுப்பதற்கு நமது தமிழக அரசின் கவனத்தை திருப்பவும் முயற்சி செய்வோம். உலகப் புத்தக தினத்தில் வாசிப்பின் வாசல்களை மேலும் விரியத் திறந்து வைப்போம். – ஆசிரியர் குழு l
previous post