சிறுகதைகள் காலங்களின் கதவுகளை திறந்து வைக்கின்றன. ‘அப்பத்தா’ நூலைப் படித்தபோது அப்படித்தான் தோன்றியது. மாற்றம் ஒன்றே மாறாத நிலையில், பத்துத் தலைப்புகளில் அமைந்த இச்சிறு நூலில், அன்புக்கு ஆதாரமான குடும்ப உறவுகள் காலத்தின் நிர்பந்தத்திற்குள் சிக்கி சோதனைக்கு உட்படும்பொழுது ஏற்படுகின்ற துன்பத்தின் ஆழமே, அவ்வுறவுகளின் அன்பின் ஆழமாக வெளிப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் சிறுகதைகளின் தொகுப்பு என்றாலும், கதை சொல்லியாக பயணிக்கின்ற ஒரு பாத்திரம் வரைந்த ஒரே கதையாக உணர வைக்கும்படி, அம்மாவில் ஆரம்பித்து, அத்தை, அப்பத்தா, அக்கா எனத் தொடர்ந்து, பள்ளித் தோழியோடு நிறைவடைகிற ஒரு முழு நீள நாவலாகவே காண முடிகிறது. முதல் கதையில் தன் தாயின் மறைவால் தந்தை படும் பாட்டை சிறகொடிந்த இளம் பறவையான மகனின் பார்வையில் நுண்ணிய உளிகளைக் கொண்டு கச்சிதமாக இக்கதையை ஆசிரியர் செதுக்கியிருக்கிறார்.
அடுத்த கதையான அறம் வளர்த்த நாதனில், பெயரை உச்சரிப்பதால் உள்ளம் பூத்துக் குலுங்குவதை சொல்வதாக இருக்கிறது. நமது மண்ணின் ஒவ்வொரு இடப்பெயருக்கும் பின்னால் வரலாறு இருப்பதுபோல ஒரு மனிதனின் பெயரும் அவ்வளவு முக்கியமானதாக உணர வைக்கிறது. அது அவர்களுக்கு பிடித்தமானது என்றால் அதிர்ஷ்டசாலிகள் அவர்களாகத்தான் இருக்க முடியும். மண்ணில்தான் அத்தனை உணவுப் பொருள்களும் விளைகின்றன என்றாலும் அந்த மண்ணை நம்மால் உண்ண முடியாது அல்லவா? ஆனால் சுவைக்க முடியும். அப்படி சுவை பார்த்தே அந்த மண்ணுக்கு அடியில் நீரோட்டம் இருக்கிறதா என்பதை அறியும் வல்லமையை நமது முன்னோர்கள் பெற்றிருந்தார்கள். இதன் அடிப்படையில் அமைந்த கதை ‘ஊற்று’. பசுமாடு அசைபோட்டு அமைதியாக படுத்திருக்கும் இடத்திற்கு அடியில் நீரூற்று இருக்கலாம் எனும் விலங்குகளின் இயல்பையும் அறிந்திருந்தோம்.
கடிகாரத்தைக் காணாமலேயே அதிகாலையில் கூவிய சேவல்கள் இப்பொழுது நகரத்தில் இல்லை. நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து இயற்கையை துண்டித்துக் கொண்டிருக்கும் நமக்கு இயற்கையின் மொழியும் இப்பொழுது புரிவதில்லை. ஒவ்வொரு நாளும் ஓயாமல் எதையோ தேடிக்கொண்டே முன்னேறுவதாக எண்ணும் நாம், இழக்கக்கூடாத நம் முன்னோர்களின் அரிதான அனுபவங்களையும் அதற்குப் பின்னால் இழந்து கொண்டே இருக்கிறோம் என்பதை சிந்திக்க வைத்து விடுகிறது இந்தக் கதை.
கதாபாத்திரங்களின் உரையாடல்கள் நேரடியாக எங்குமே இடம்பெறாத இந்த நூலில், ‘தெய்வநாயகம் சார்’ எனும் ஒரே ஒரு கதையில் மட்டும் மழலையின் உரையாடலாக நான்கு வரிகள் இடம் பெற்றிருக்கின்றன. வீட்டிற்குள் சிறகடித்துப் பறக்கும் பட்டாம்பூச்சியைக் கண்டு, மனமும் அப்படியே ஆவதை குழந்தையும் அப்பாவும் உணர்கிறார்கள். அது உணவாகிப் போவதை தன் உள்ளங்கைகள் வியர்க்க மகளிடம் மறைக்கின்ற அப்பாவை இந்தக் கதையில் காண்கிறோம். ஓர் உயிருக்கு பசியையும் கொடுத்து அதற்கு மற்றொரு உயிரை உணவாக்கிய இறைவனே கொடியவன். இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற மலைவாழ் மக்களும், உண்பதற்காக அன்றி, தான் காணும் யாவற்றையும் கொல்லும் இயல்புடைய விலங்குகளையே, அழிவு சக்தியாகக் கொண்டு அவற்றை அழித்திருக்கிறார்கள். இப்படியாகவே நம் மனதை தேற்றிக் கொண்டு அந்தக் கதையை கடக்க வேண்டியிருக்கிறது.
கிறிஸ்துவின், ‘காணாமல் போன ஆடு’ போல இங்கு ஒரு கதையானது, காணாமல் போன லுங்கியைப் பற்றி பேசுகிறது. பைபிள் கதையில் ஆடு மீண்டும் கர்த்தரிடம் வந்து சேர்த்திருக்கலாம். ஆனால் இந்த லுங்கி போனது போனதுதான். கால ஓட்டத்தில் புதியதாக தொழில்கள் முளைக்கும் பொழுது, அதற்கு ஒப்பான பழைய தொழில்கள் இறக்கம் பெறுவதையும், அதனைச் சார்ந்து மானத்தோடு வாழ்ந்த நடுத்தர மக்கள் வேறு தொழிலுக்கு மாறுகின்ற சக்தியின்றி வறுமையில் தள்ளாடுவதையும் இந்த காணாமல் போன லுங்கி நமக்கு அறிவித்து விடுகிறது. அப்படிப் பார்த்தால் சிறு திருட்டு நடத்தும் திருடர்கள், அப்பகுதி அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறார்கள். இதனைக் களைய வேண்டியவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள். சில அயல்நாடுகளில் உணவுப் பொருள்களை கடைகளில் திருடுகின்ற மக்களை குற்றவாளியாகக் கண்டு பழி சுமத்தாமல், விட்டுவிட வேண்டுமென்பது இன்று சட்டமாகவே இருக்கிறது என்பதையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது.
இன்றைய காலத்தில் நாற்பது வயதைக் கடந்திருக்கும் பேரப்பிள்ளைகளது தாத்தாக்களின் அதிகாரத்திற்கு அங்கீகாரமாக ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் பழங்காலங்களில் இயல்பாக நடந்ததுண்டு. அடுப்படிக்கு ஒருவரும், அந்தப்புரத்திற்கு மற்றொருவரும், வயல்களில் களையெடுக்கும் உழைப்பிற்கு இன்னொருவருமாக மனைவிகள் இருந்ததுண்டு. ஆனால் ஒரு தலைக்காதலாக, தான் விரும்பிய பெண்ணை அவளது வீட்டார், பண வசதியின்மையை காரணம் காட்டி இன்னொருவருக்கு மணமுடித்து வைத்ததால், தன் வாழ்வில் மண வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துக் கொண்ட ஒருவர், அப்பத்தா கதையில் பாத்திரமாகிறார். ஈருடல் ஓருயிராக இல்வாழ்க்கையில் வாழ்கின்றபோதும், இறுதி நாளில் உயிர் பிரியாமல் உணர்வற்று இருக்கும் தன் மனைவியின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் கணவன் வானத்தைப்போல உயர்ந்து நிற்கிறார். இங்கு மொழிகளுக்கு ஒரு துளியும் இடமில்லாமல் நகருகின்ற கதையின் காட்சிகள், கண்ணீர் துளிகளை வரவழைத்து வாசிப்பவர்களின் கன்னங்களை நனைத்து விடுகிறது. அப்பத்தா கதையின் முடிவு மனதைத் தொடுகிறது. இலஞ்சி, பொய்கை, சுனை, தடாகம், ஓடை, மடு, ஊருணி, கிணறு போன்ற சொற்களெல்லாம் நீரின் இருப்பை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துபவை. ஊருக்குப் பொதுவாக இருந்த பலவகையான நீர் ஆதாரங்கள் ஒவ்வொன்றாக மறைந்த காலங்களில், குடியிருப்புப் பகுதியில் குடிநீருக்காக மட்டும் இருந்த கிணறும் கேட்பாரற்று தூர்ந்து போகின்ற நிலையை, ‘கிணறு’ எனும் தலைப்பிலான கதை பேசுகிறது.
இந்த நூலின் முதல் கதையில் முக்கியப் பத்திரமாக இருக்கும் அம்மா, தன் வாழ்க்கை முடியும் நாட்களில் நிறைய நீரை அருந்தினாலும் தீராத தாகத்தில் தவிக்கிறாள். “கிணறு” கதையின் முடிவில், கிணறு தூர்ந்துபோன சில நாட்களில், காவிரியின் மகளான அன்னை மறைந்து போனதைக் குறிப்பிட்டிருப்பதால், ஒன்றோடொன்று பிணைந்த ஒரே கதையின் பகுதிகளாகவே ஒவ்வொரு சிறுகதையும் உணர வைக்கிறது. ‘மௌனம்’ என்பதற்கு பொருளாக வார்த்தைகளற்று இருப்பது என்று பொருள் கொள்ளலாம். பல சூழ்நிலைகளில் மௌனம் என்பது ஆளுமைமிக்க மொழியாக இருந்து விடுகிறது. ஒரு புத்திசாலியின் மௌனம், பிரச்சனைகளைத் தவிர்த்து காரியங்களை கச்சிதமாக நடத்த உதவுகிறது. காயப்படுத்துபவனுக்கு நன்மை செய்து கடந்து செல்லும் மௌனம் எதிராளியை நாணச் செய்து விடுகிறது. இப்படியாக, மௌனமானது சொற்களை விட கூர்மையானதாக வெல்லும் தன்மையைக் கொண்டதாக இருக்கிறது. இந்தக் கதையில் தொப்புள் கொடி உறவைத் தேடி வந்த மகளை, தந்தையும் அண்ணனும் வரவேற்காமல் வாய்மூடி நின்ற மௌனமானது, “எப்பொழுதுமே சட்டையை உரிக்காத அழுக்கு படிந்த பாம்பைப் போல வீட்டை விழுங்கிக் கொண்டே இருந்தது” என்பதாக இந்த நூலின் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். இது முற்றிலும் புதுமையானது. பொதுவாக ஒரு காட்சியை விவரிப்பதற்கு ஓர் ஓவியம் போதுமானது. ஆனால் திரையில் ஒரு வினாடி அசையும் காட்சிக்கு முப்பது ஓவியங்கள் தேவைப்படுகின்றன. இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் ஒரு கதையை சொல்ல வேண்டுமென்றால் ஒரு நிமிடத்தில் சொல்லிவிடலாம்.
ஆனால் காட்சிப்படுத்த வேண்டுமெனில், ஒவ்வொன்றிற்கும் முப்பது நிமிடங்கள் இருந்தாலும் போதாது. ‘கோடி’ எனும் கதையில், பிறந்த வீட்டின் கோடி போடும் அந்த நொடியில், “அறையெங்கும் பரவிக் கொண்டிருந்த சிறிய ஓசைகளெல்லாம் அடங்கி, கண்ணிமைக்கும் நேரத்திற்கும் குறைவான நொடியின் இடைவெளியில், மௌனங்கள் வெடித்துக் கிளம்பியது” என்று இந்த நூலில் இடம்பெறும் வரிகளானது, அங்கு அதுவரை சிந்திய அத்தனைச் சொற்களையும் முழுமையாக வேட்டையாடி விழுங்கி விடுகின்ற மௌனமாக, வீரியமிக்கதாக கதையின் ஓட்டத்தில் வெளிப்படுகிறது.
இழந்த அன்பை யாசித்துப் பெறுவதைப் போல இரண்டு கைகளையும் நீட்டி புடவையை பெற்றுக் கொண்ட அத்தையையும், அவளது அண்ணன் மகனை அண்ணனாகவே பார்த்த தங்கையையும் ஒருசேர நெஞ்சில் நிறுத்தி நெகிழ வைத்திருக்கிறார் நூலின் ஆசிரியர் பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள். கோடி எனும் இந்தக் கதைக்கு கோடிப் பணமும் ஈடாகாது. அன்பு எல்லாவற்றையும் விஞ்சி நிற்கிறது.
‘துறவு’ எனும் கதையில், தனக்கு மட்டுமே உரிய அன்பை பிறிதொரு பெண்ணுக்கும் பகிர்ந்து கொடுத்த கணவனோடு வாழ விரும்பாதவள், மனைவி எனும் அடையாளத்தையே மனதளவில் துறந்து விட்டு, முப்பது அனாதைக் குழந்தைகளுக்கு அன்னையாகிறாள். வாழும்பொழுதே மாயமாக மறைந்து போவதை கண்கட்டி வித்தையாக அல்லாமல் உண்மையென்று ஏற்றுக்கொள்ள வைக்கிறது இந்தக் கதை. தனது முந்தைய வாழ்க்கையை முற்றிலுமாக துறந்துவிட்ட அவளை, தேடியும் கிடைக்காதபோது, அதை சொல்லுபவரின் வழியாக, “தேடுகிறவர்கள் அன்னபூரணியைத்தானே தேடுகிறார்கள்” என்கிறது கதை.
பெயர் விட்டு அழைப்பதில் வெளிப்படும் உரிமையை நெருக்கமாகக் கொண்டு, உடலுக்குள் ஓடும் உதிரமும் சற்று நின்று அதனை கவனித்தபடி மகிழ்ந்து கொண்டதாக உணர வைக்கிறது ‘கல்பனா’ என்னும் இறுதிக்கதை. இடைவெளியே இல்லாமல் படித்து முடிக்கத் தூண்டுகின்ற இப்புத்தகத்தின் கதைகள் யாவும் அவ்வப்போது கண்களை கலங்க வைத்து, வாசிக்க முடியாமல் இடைவெளியை, தானே ஏற்படுத்திக் கொடுத்து விடுகின்றன. இந்த நூலின் முதல் பதிப்பு 2011 ஆம் ஆண்டாக இருந்தாலும், 2025ஆம் ஆண்டான இன்றும் ‘அப்பத்தா’வில் உள்ள சிறுகதைகளின் ஓட்டமானது, சுவர்க்கடிகாரத்தின் ஊசல் தனது வீச்சு குறையாமல் ஓயாமல் இயங்குவதைப்போலவும், கதைகளின் இடையே நிலவும் மௌனங்களானது, நில்லாத கரையோர கடல் அலைகளின் ஓசையில்லாத இடைவெளிகளைப்போலவும் இன்றும் பசுமையாக உயிர்ப்போடு இருக்கின்றன. அன்பிற்கு அழிவும் இல்லை, அடைக்கும் தாழ்ப்பாளும் இல்லை என்பதையே என்றும் வாழும் இந்த நூலும் காட்டுகிறது. l
previous post